சாதாரணமாக வாசித்தால் மெளனியின் கதைகளைப் புரிந்து கொள்வது சிரமம். சற்று மெனக்கெட வேண்டும். அப்படியானதொரு கதை அழியாச்சுடர். மெளனியின் சிறுகதைகளுள் அழியாச்சுடர் கதைக்கு தனி இடம் உண்டு என்பார்கள். மொத்தமாகவே இருபத்து சொச்சம் கதைகளைத்தான் எழுதியிருக்கிறார். அதில் இதுவும் ஒன்று.
கதை இதுதான் -
ஒருவன் வழக்கமாக தனது நண்பனைக் காலை நேரத்தில் சந்திப்பான். அன்றைய தினம் வெயில் கொளுத்துகிறது என்பதால் வழக்கத்திற்கு மாறாக மாலை நேரத்தில் சந்திக்கச் செல்கிறான். அவன் ஒன்பது வருடங்களுக்கு முன்பான நிகழ்வு குறித்தான நினைவுகளுக்கு இவனை அழைத்துச் செல்கிறான். அப்பொழுது ஒரு கோவிலில் சந்தித்த யுவதியைப் பற்றி அவன் பேசுகிறான். இவனும் அந்தச் சமயத்தில் அவனோடுதான் கோவிலில் இருந்திருக்கிறான். அப்பொழுது ‘உனக்காக எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்’ என்று அவளிடம் அவன் சொல்கிறான். அது வேறு யாருக்குமே கேட்பதில்லை. அவளுக்கு கேட்டதாக இவன் நம்புகிறான். அப்பொழுது அவள் இவனைப் பார்த்து சிரித்தாளாம்.
அவன் அந்தச் சம்பவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது இவனுக்கும் சிந்தனை ஓடுகிறது. அந்தக் கோவிலின் பிரகாரம், அங்கு பகல் வேளையிலும் பறக்கும் வெளவால்கள் என நினைவு சுழல்கிறது. அவள் யாரென்று இவனுக்கு பிடிபடவில்லை. அவனிடமே விசாரிக்கிறான். அவன் மீண்டும் பேச ஆரம்பிக்கிறான். இவனுக்கு ஆத்திரம் மூள்கிறது.
அவளைப் பின் தொடரச் சொல்லி அவனது உள்மனம் சொன்னதால் அவனும் தொடர்ந்திருக்கிறான். அருகில் சென்றவன் ‘உனக்காக என்ன வேண்டுமானாலும்’ எனத் தொடங்கி மேற்கொண்டு எதுவும் பேசாது திரும்பி வந்துவிட்டான் என்று தனது நினைவுகளைப் பட்டியலிடுகிறான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவன் கோவிலுக்கே செல்லவில்லை. நேற்றுதான் மீண்டும் கோவிலுக்குச் சென்றானாம். அதிசயம் என்னவென்றால் அவளை அதே கோவிலில் பார்க்கிறான். அவளுக்கு அடையாளம் தெரியாது என்றுதான் நினைக்கிறான். ஆனால் கண்டுபிடித்துவிட்டாள். அவளுகு இருபத்தியிரண்டு வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. தியானத்திலிருந்தவள் விழித்து இவனை அடையாளம் கண்டு கொண்டாள். எதிரில் நிற்கும் தூணை உற்றுப் பார்க்கிறாள். அவன் முன்பு சொன்னான் அல்லவா? ‘உனக்காக எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்’ என்று அதைச் சொன்ன போது சாட்சியாக நின்ற யாளி கூத்தாடுகிறது. ஒரு பார்வை பார்த்தவள் அதோடு போய்விட்டாள். குனிந்த தலையை நிமிர்கிறான். அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்கிறாள். கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு விழுகிறது அவளுக்கு என்கிறான்.
வெளியில் இருட்டிவிட்டது. இவன் நடந்து வீட்டுக்கு வருகிறான்.
பிறகு அடுத்த நாள் காலையிலிருந்து அவனைக் காணவில்லையாம். எங்கே சென்றான் என்றெல்லாம் தெரியாது என்று கதை முடிகிறது.
உண்மையிலேயே இந்தக் கதை முழுமையாகப் புரிந்துவிட்டது என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. ‘இந்தக் கதை இதைத்தான் சொல்கிறது’ என்று மேம்போக்காகவும் சொல்லிவிட முடியாது. ஒரு கவிதையை விவரிப்பது போலத்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக புரியக் கூடும்.
இந்தக் கதையில் வரும் அவனும் இவனும் வெவ்வேறு ஆட்கள் இல்லை. இரண்டு பேருமே ஒருவர்தான். ஒன்பது வருடங்களுக்கு முன்பாக பார்த்த அதே பெண்ணை நேற்று பார்த்துவிட்டு அவள் மீது தனக்குண்டான காதல் குறித்து மானசீகமாக தனது மனசாட்சியுடன் உரையாடுவதான கதையாகத்தான் இதைப் புரிந்து கொள்கிறேன். ஒரு சாதாரண காதல்தான் ஆனால் இந்தக் கதையின் மொழிநடையும், விவரிக்கிற வசீகரமும் முக்கியமான கதைகளுள் ஒன்றாக மாற்றிவிடுகிறது என நினைக்கிறேன். 1937 இல் வெளிவந்த கதை. அந்தக் காலத்திலேயே மனிதர் பின்னியிருக்கிறார். நேர்கோட்டில் ஒரு சம்பவத்தைச் சொல்லிச் செல்லும் வழமையான கதைப்போக்கிலிருந்து முற்றிலும் வேறான தொனியில் இந்தக் கதையை மெளனி சொல்கிறார்.
இப்படி சாதாரணமாக பார்த்துவிட்டு அடுத்த கதைக்கு போய்விடலாம்.
அல்லது வேறொரு மாதிரியும் பார்க்கலாம். அதற்கு ‘இப்படியான ஒரு கதையை ஏன் ஒரு வாசகன் கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள வேண்டும்’ என்கிற கேள்வியை எழுப்ப வேண்டும். மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இந்தக் கதை உருவாக்கும் சித்திரத்தை புரிந்து கொள்வது என்பது இன்னொரு மனிதனின் உளவியலைப் புரிந்து கொள்வது போல சுவாரஸியமானது.
அவன் காதலைச் சொல்வது யாருடைய காதிலும் விழவில்லை. ஆனால் அவளுக்கு கேட்டுவிட்டது என்கிறான். அப்பொழுது அவளுக்கு பதின்மூன்று வயது. அதே பெண்ணை இருப்பத்தியிரண்டு வயதுப் பெண்ணாக பார்க்கிறான். அப்பொழுதும் அவள் அவனை அடையாளம் கண்டுகொள்கிறாள். ஆனால் உண்மையிலேயே அதே பெண்தானா? அது இவனுடைய மனப்பிரமை என்று கூடச் சொல்லலாம். இருவரும் வெவ்வேறு பெண்களாகக் கூட இருக்கலாம். கோவிலில் தியானத்தில் பார்க்கும் பெண்கள் மீது விருப்பம் கொள்கிறான். அது ஒரே பெண்ணாக இருக்க வேண்டும் என்கிற அளவுகோல் எதுவும் இல்லை. அப்படியானால் காதல் என்பது அந்தந்த பெண்ணைப் பொறுத்து வருகிறதா? இல்லை அந்தச் சூழல், அந்த நிலையில் பார்க்கும் யார் மீது வேண்டுமானாலும் வருமா? இது காதல்தானா? இல்லை அந்தச் சூழல் உருவாக்கக் கூடிய விருப்பமான மனநிலையா? விருப்பமான மனநிலை என்றால் ஏன் இவன் ஒன்பது வருடங்களாக அந்த கோவிலுக்கே செல்லவில்லை? எவ்வளவோ கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் கதை இது.
விருப்பமிருந்தால் மண்டையைக் குழப்பிக் கொள்ளலாம். இல்லையென்றாலும் கூட ஒரு முறை வாசித்துப் பார்த்துவிடலாம். ஆகச் சிறந்த கதையென்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா?