Mar 5, 2015

கருணையற்ற விதி

ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘சிவஜோதியை உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் உங்களோடு சாட் செய்திருக்கிறார்’ என்றார். உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை. சிவஜோதி மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரில்தான் வசிக்கிறார். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியில் இருக்கிறார். 

‘சரியாக ஞாபகமில்லை. சொல்லுங்க’ என்றேன். 

சிவஜோதியை கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகச் சொன்னார். பெங்களூரில் இருக்கும் சாயா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனை கஸ்தூரி நகரில் இருக்கிறது. 


சிவஜோதிக்கு சிறுநீரகத்தில் ஏதோவொரு தொந்தரவு. அது கிருமித் தொற்றாக மாறி ரத்தத்தில் கலந்து மூளை வரைக்கும் பாதித்துவிட்டது. நினைவு தப்பிவிட்டது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். சிவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டவர். இப்பொழுதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு ஐந்து மாதம்தான் ஆகிறது. மனைவிக்கு பிரசவம், குழந்தை பராமரிப்பு என்று தனது உடல்நிலையை கவனிக்காமல் விட்டுவிட்டார். 

மனைவியின் வீட்டிலும் எந்த உதவியும் இல்லை போலிருக்கிறது. இவர் வீட்டில் சிவஜோதி மட்டும்தான் சம்பாத்தியம்.

அந்தப் பெண் என்ன செய்வார்? பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு அலை மோதுகிறார்.

இப்படியான சமயங்களில் பல நிறுவனங்களின் மருத்துவக் காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிவஜோதிக்கு அந்தக் காப்பீடு திட்டமும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இது மரபு சார்ந்த பிரச்சினையாம். Genetical disorder. சிவஜோதியின் அப்பாவுக்கும் இப்படியொரு பிரச்சினை இருந்திருக்கிறது. அதே பிரச்சினை இவருக்கும் தொற்றியிருக்கிறது. விதி எப்பொழுது வேண்டுமானாலும் மனிதனோடு விளையாடிவிடுகிறது. அதற்கு எந்தக் கருணையும் இல்லை. அவனைச் சார்ந்து யார் இருக்கிறார்கள்? அவனை வழித்துக் கொண்டால் என்ன செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் அதற்கு எந்தச் சிந்தனையும் இல்லை. தனிமனிதனின் ஆசை, கனவு என அத்தனையையும் புரட்டி யாருடைய காலடியிலோ வீசிவிடுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ‘இந்தத் துன்பங்களிலிருந்து நமக்குத் தேவையான வலிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லலாம். ஆனால் நசுங்கிறவர்களுக்குத்தானே தெரியும்? யானைக்காலில் சிக்கிக் கொண்ட சுண்டெலியின் நிலைமைதான்.

மரபு சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மனைவி பணத்துக்காக திணறிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனைச் செலவுகள், மருந்துக மாத்திரை என்று மிகக் கடினமான நிலைமைதான். 

என்னை அழைத்திருந்தவர் வருண். சிவஜோதியின் நண்பர். ‘ஏதாவது உதவ முடியுமா?’ என்றார். ‘அவன் வேலைக்கு போக ஆரம்பிச்சா பணத்தை திருப்பிக் கொடுத்துடுவான்’ என்றும் சொன்னார். அது பிரச்சினையில்லை. எதிர்பார்ப்புடன் செய்வது எப்படி உதவி ஆகும்? அந்த எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

‘எந்தவிதத்திலுமே உதவி கிடைக்காத மனிதர்களுக்குத்தான் உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்’ என்றேன். 

‘அப்படித்தான் செய்யறீங்கன்னு எனக்குத் தெரியும்...ஆனால் இவங்களுக்கும் இப்போதைக்கு வேற வழியே இல்லை’ என்றார். கனவுகளோடு செய்த திருமணம், ஐந்து மாதங்களுக்கு முன்பாக வீட்டிற்குள் வந்த தேவதை அத்தனை ஆசைகளும் இப்பொழுது மருத்துவமனையின் கட்டிலுக்கடியில் கதறிக் கொண்டிருக்கின்றன. 

முதல் வேலையாக அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்தாக வேண்டும். அலுவலகத்திலிருந்து ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள் போலிருக்கிறது. மருந்து மாத்திரைகளால் சரியாக்க முடியாதாம். ஆனால் அதற்கு இரண்டு மூன்று மாதங்கள் அவகாசம் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட  சமயத்தில் தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய வேண்டியது இருக்குமாம். மிகச் சிக்கலான விவகாரம் என்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக சிவஜோதிக்கு நினைவு வந்திருக்கிறது. மூளையில் பாதிப்பு என்பதால் நேற்று மீண்டும் நினைவிழந்துவிட்டார். நினைவு என்றால் கண்ணைத் திறந்து பார்க்கிறார். ஆனால் யாரையும் அடையாளம் கண்டுபிடிப்பதோ அல்லது பேசுவதோ இல்லை.

ஊரில் கொஞ்சம் இடவசதி இருக்கும் போலிருக்கிறது. ஆனால் சில சட்டச் சிக்கல்களினால் அதை விற்பதற்கு சாத்தியமில்லை என்பதால் கையறு நிலையில் இருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. கையில் ஐந்து மாதக் குழந்தை. உதவிக்கென வெளியாட்கள் அதிகம் இல்லை. அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. முடிந்தவற்றையெல்லாம் அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறாராம். அப்படியும் கூட இதுவரை தேவையான பணம் சேர்ந்த பாட்டைக்காணோம். 

‘அவர்களால் புரட்ட முடிகிற அளவுக்கு புரட்டட்டும். மீதம் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கை நாம் புரட்டிக் கொடுத்துவிடலாம்’ என்று வருணிடம் சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமையன்று மருத்துவமனைக்குச் செல்கிறோம். இப்போதைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரியவில்லை. மருத்துவமனையில் சந்தித்துப் பேசி காசோலையைக் கொடுத்துவிட்டு வரலாம். 

(குறிப்பு: பரோடா வங்கியின் கடவுச் சொல்லை மறந்துவிட்டேன். பிப்ரவரி இறுதியில் கணக்கு விவரங்களை எடுக்க முயன்று கணக்கு பூட்டிக் கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் unlock செய்துவிட்டு அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கை பதிவு செய்துவிடுகிறேன்.)

நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் தர விரும்பினால் விவரங்கள் இணைப்பில் இருக்கிறது. ‘இவருக்காக’ என்று குறிப்பிட்டு வாங்குவதில்லை. வருகிற தொகை வரவில் வைத்துக் கொள்ளப்படுகிறது. யாருக்காவது தேவைப்படும் போது இருக்கிற தொகையிலிருந்து எடுத்துக் கொடுப்படுகிறது.