Mar 27, 2015

அப்படியே இருக்க முடியுமா?

எங்கள் ஏரியாவில் ஒரு பழைய பேப்பர் கடை உண்டு. பத்துக்கு பத்து சிறிய கடைதான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெரியவர் இருந்தார். அவ்வப்போது கடையைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான தர்மபுரிக்குச் சென்றுவிடுவார். வார விடுமுறைகளில் செய்தித்தாள் கட்டைத் தூக்கித் தோள் மீது வைத்துக் கொண்டு போய் பார்த்தால் ஆள் இருக்க மாட்டார். ஓரிரு முறை இப்படி ஏமாந்த பிறகு அவரது சங்காத்தமே வேண்டாம் என்று மிதிவண்டியில் வருபவர்களிடம் விற்றுவிடுவோம். இருந்தாலும் தாத்தாவிடம் பேச்சுவார்த்தை உண்டு. அந்த பத்துக்கு பத்து கடையிலேயே ஓரமாக ஒரு மேசை வைத்து அதில் சோறாக்கிக் கொள்வார். காகிதக் கட்டுகள் மீதுதான் படுத்துக் கிடப்பார். ஒரு ட்ரான்ஸிஸ்டர் அளவிலான ரேடியோ ஒன்று பாடிக் கொண்டேயிருக்கும்.

பேசிப் பழகிய பிறகு நிறையக் கதைகளைச் சொல்வார். சொந்தக் கதைகள் சோகக் கதைகள்தாம். அவருக்கு குழந்தைகள் உண்டு. எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். ஒண்ணேகால் ஏக்கர் புஞ்சை பூமி குறித்தான சொத்துத் தகராறு பெரிதாகி ஆளாளுக்கு பிரிந்துவிட்டார்கள். சொல்லிச் சொல்லி சலித்துப் போன இவர் அவர்களின் சங்காத்தமே வேண்டாம் என்று கைவசம் இருந்த காசைத் தூக்கிக் கொண்டு பெங்களூருக்கு பேருந்து ஏறிவிட்டார். வந்தவர் கடை பிடித்து பழைய செய்தித்தாள் வாங்கித்தான் அப்படி பேப்பர் கட்டும் ட்ரான்ஸிஸ்டருமாக வாழ்ந்து கொண்டிருந்தார். 

‘அப்புறம் எதுக்கு அடிக்கடி பூட்டிட்டு போறீங்க?’ என்று கேட்டால் ‘நான் நல்லா இருக்கேன்னு ஊருக்குள்ள காட்ட வேண்டாமா?’ என்பார். வாஸ்தவமான கேள்விதான். கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் ஊருக்குச் சென்றுவிடுகிறார். தீபாவளி பொங்கல் என்றால் கேட்கவே தேவையில்லை. காசு தீரும் வரைக்கும் கும்மாளமடித்துவிட்டு தீர்ந்தபிறகு வந்து காகிதக் கட்டுகள் மீது குப்புறடித்துவிடுகிறார். ஊர்க்காரர்களிடம் பெரிய மளிகைக்கடை ஆரம்பித்திருப்பதாக பீலா விட்டு வைத்திருப்பதாகச் சொல்வார்.

தாத்தாவுக்கு அறுபதைத் தாண்டியிருக்கும். மீசை நரைத்துக் கிடக்கும். முறுக்கு மீசை. ஆனால் எதற்காக இப்படி அடுத்தவர்களிடம் நிரூபித்துக் கொண்டு திரிகிறார்? அவர் மட்டும்தானா? எல்லோரும்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் தொட்டில் பழக்கம்தான். ‘பாரு அவன் உன்னைப் பார்த்து சிரிக்கிறான்’ என்று ஒழுகுகிற மூக்கைத் துடைக்கத் தெரியாத காலத்திலேயே அடுத்தவனைக் கைகாட்டி நம் மண்டைக்குள் ஏற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு எல்லாவற்றிலும் சிக்கல்தான். பள்ளியில், வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில் என எல்லா இடங்களிலும் நம்மை நிரூபிக்கவேண்டிய நிர்பந்தம் உருவாகிவிடுகிறது. நம்மைப் பற்றி யாருமே தாழ்வாக நினைத்துவிடக் கூடாது. நினைத்தால் என்ன ஆகும்? குடி மூழ்கிப் போகாதுதான். ஆனால் விட மாட்டோம். 

அடுத்தவர்களிடம் நம்மை நிரூபிப்பதுதான் பெரிய அழுத்தம். ஆனால் கட்டையில் போகும் வரைக்கும் அதுதான் நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. நடை, உடையில் தொடங்கி நாம் பேசிப் பழகுவது வரை எல்லாவற்றிலும் ‘அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?’என்கிற எண்ணம்தான் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்தக் கருமாந்திரத்துக்காக பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. பிதற்ற வேண்டியிருக்கிறது. எதையாவது மறைக்க வேண்டியிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நம் பெரும்பாலான சிக்கல்களுக்கு இதுதான் அடிப்படையான காரணமாக இருக்கிறது.

ஊரைப் பற்றி கவலைப்படாமல் வாழ முடியாதுதான். ஓரளவுக்காகவது அடுத்தவர்களுக்காக சிலவற்றைச் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் நாம் வாழ்வதே அடுத்தவர்களுக்காகத்தான் என்னும் போதுதான் சிக்கிக் கொள்கிறோம். ‘நாங்கள் கணவனும் மனைவியுமாக அந்நியோன்யமாக வாழ்கிறோம்...தெரியுமா?’ என்பது வரை வெளியில் பாசாங்கு காட்ட வேண்டியிருக்கிறது. உள்ளுக்குள் எவ்வளவு புழுத்துப் போயிருந்தாலும் அடுத்தவர்களுக்காக பற்களைக் கெஞ்சிக் காட்ட வேண்டியிருக்கிறது.

நல்லவன் கெட்டவன் என்பது மட்டும் பிம்பம் இல்லை. ‘நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் தெரியுமா?’ என்பது கூட பிம்பம்தான். நன்றாக பழகியவர்களாக இருப்பார்கள். ஆனால் பேசும் போது பிரதாபங்களை அடுக்குகிறார்கள். வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ‘அப்பவே அப்படி’ என்று நீட்டுகிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு ஆட்களைப் பார்க்கிறோம்? நாம் எவ்வளவு இடங்களில் அப்படி நடிக்கிறோம். முக்கால்வாசி சமயங்களில் நாம் போலியாக இருக்கிறோம் அல்லது நம் எதிரில் இருப்பவன் போலியாக இருக்கிறான்.

ஏன் இயல்பாக இருக்க முடிவதில்லை? எதனால் ஈகோ நம்மைத் தடுக்கிறது?

‘Be You' என்றவொரு செமினார் நடந்தது. அலுவலகத்தில் ஒரு பெண்மணி நடத்தினார். அவரே நிறைய அலட்டிக் கொண்டார். ‘எனக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்று காட்டிக் கொள்வதில் அவ்வளவு தயக்கம் அவருக்கு. தனது உச்சரிப்பிலிருந்து பேசுகிற தொனி வரைக்கும் அமெரிக்கப் பெண்மணியைப் போல காட்டிக் கொண்டார். எப்படியோ போகட்டும். ஆனால் அவரது Presentation அட்டகாசமாக இருந்தது.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கின்றன என்று ஆரம்பித்தார். பைத்தியங்கள் பைத்தியங்களாகவே இருக்கிறார்கள். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றன என்று நீட்டினார். ஆனால் நாம் இப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லை. நம்மால் எப்பொழுதும் இயல்பாகவே இருக்க முடியாது. ஆனால் முடிந்தவரை இயல்பாக இருக்க முடியும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். 

இயல்பாக இருத்தல் என்பது மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்த மாதிரி. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. அப்படியே பழகிவிட்டோம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நாம் மட்டும் மாறிவிடுவோமா என்ன? அப்புறம் எப்படித்தான் இயல்பாக இருப்பது?

அவரேதான் பதில் சொன்னார். ‘வீட்டிலிருந்து ஆரம்பித்துப் பாருங்கள். மிக safe என்று நினைக்கக் கூடிய விஷயங்களில் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். பொய் சொல்லாமல், நடிக்காமல் இருந்து பாருங்கள். ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். பிறகு அற்புதமான சுதந்திரத்தை உணர்வீர்கள்’ என்றார். யோசித்துப் பார்த்தேன். வீட்டில் சமாளிக்கக் கூடிய அளவிற்கு safe ஆன விஷயம் என்று எதைக் கண்டுபிடிப்பதற்கு இன்னமும் இரண்டு செமினார்களில் கலந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.