Mar 17, 2015

இவன் சரியான கிரிமினல்

Inglorious Basterds என்றொரு படம். சில நாட்களுக்கு முன்பாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஹிட்லர் காலத்துக் கதை. ப்ராட் பிட் நடித்த படம் இது. ஆள் மிரட்டியிருப்பார். ஆனால் அவரைவிடவும் நாஜிக்களின் போலீஸ் அதிகாரியாக நடித்த கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் அட்டகாசம். எதிரிகளை மோப்பம் பிடிக்கும்விதமே அலாதியானதாக இருக்கும். கடைசி வரைக்கும் சிரித்துக் கொண்டே பேசுவார். ஆனால் ஆளை அமுக்கிவிடுவார். படத்தைப் பற்றி எழுதுவதற்காக ஆரம்பிக்கவில்லை. கிரிமினாலஜி பற்றி எழுத வேண்டும் ஆனால் கிறிஸ்டோப் வால்ட்ஸின் கிரிமினாலஜி ஞாபகத்திற்கு வந்துவிட்டது. அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. B.Sc Criminology.

குற்றவியல், தடயவியல் போன்றவற்றிற்கான சிறப்புப் பாடங்கள் தமிழகத்திலேயே சில கல்லூரிகளில் சொல்லித் தரப்படுகின்றன. ஒட்டன்சத்திரத்திலும், கீரனூரிலும், எடப்பாடியிலும் ப்ளஸ் டூ முடிக்கும் மாணவனுக்கு இது பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பிருகிறதா என்று தெரியவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கும். ஒரு கொலை நடந்தால் கண்டுபிடிப்பது போலவும், குற்றச்சம்பவங்களின் தடயங்களைத் தேடுவது போலவும் கற்பனையெல்லாம் செய்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் எப்படி சாதிக்க முடியும் என்று தெரியாது. அதிகபட்சமாக வக்கீல் படிப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கடைசியில் எல்லோரையும் போலவே பொறியியலில் சேர்வார்கள் அல்லது கலை அறிவியல் பாடங்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதற்காக எல்லோரும் இந்தப் பாடங்களைப் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இத்தகைய வாய்ப்புகளும் இருக்கின்றன என்று மாணவர்களுக்குக் நாம் கோடு காட்டலாம். அவர்கள் முடிவு செய்யட்டும்.

ஒரு படிப்பு வித்தியாசமானதாக இருக்கிறது என்பதற்காகவே குருட்டுவாக்கில் அதைப் பரிந்துரை செய்துவிட முடியாது அல்லவா? சில நண்பர்களிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. ஓரளவுக்கு இந்தத் துறையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை வாய்ப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கிடைத்துவிட்டால் பிரச்சினையில்லை. கிடைக்காதபட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தத் துறையில் பேராசிரியர்களாகிறார்கள். சிலர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக வெளிநாடு செல்கிறார்கள். சிலர் வழக்கறிஞர்களாகிவிடுகிறார்கள். இன்னும் சிலர் தனியார் புலனாய்வு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்கிறார்கள். 

இப்பொழுது கார்போரேட் நிறுவனங்களில் குற்றவியல் படித்தவர்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்பவர்கள் பத்திரிக்கை மற்றும் டிவி சானல்களிலும் நுழையலாம். அனுபவத்தின் அடிப்படையில் உள்ளே கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள்தான் இந்தத் துறையில் அதிகம் என்பதால் முறையாகப் படித்துவிட்டு உள்ளே வருபவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புகள் இருக்கும்.

இவை போன்ற தனித்துவமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது ஒரு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உண்மையிலேயே அந்தப் படிப்பின் மீது நமக்கு ஆர்வம இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணமாக சைக்காலஜி படிப்பு வெளியிலிருந்து பார்க்கும் போது மிகுந்த ஆர்வமூட்டக் கூடியதாகத் தெரியும். ஆர்வமூட்டக் கூடியதுதான். ஆனால் நுணுக்கமான படிப்பு. அடிப்படையான ஆர்வம் இல்லையென்றால் நுனிப்புல்தான் மேய முடியும். மேற்சொன்ன குற்றவியல், தடயவியல் படிப்புகளும் கூட அப்படியானவைதான். பொதுவாக ஆர்வமூட்டக் கூடிய துறைகள்தான். ஆனால் ஆழமாகப் படிக்க வேண்டிய பாடங்கள் இவை.

Cyber forensic என்ற படிப்பு கூட இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே சொல்லித் தருகிறார்கள். இந்தப் படிப்பை வைத்துக் கொண்டு பெரிய ஐடி நிறுவனங்களில் நுழைய முடியும். ஓரளவுக்கு பிடிபட்டுவிட்டால் ஆலோசகர்களாக(கன்ஸல்டண்ட்களாக) மாறிவிடலாம். தகவல் திருட்டுக்கள், ஆன்லைன் தில்லாலங்கடி வேலைகள் போன்றவை வருங்காலத்தில் பெருகி பன்மடங்காகும் போது இவர்களின் தேவை மிக அதிகமானதாக இருக்கும். திருட்டு நடக்கும் போதுதான் இவர்களின் தேவை இருக்கும் என்று சொல்ல முடியாது. அதை எப்படித் தடுக்கலாம் என்பதிலும் இவர்களின் ஆலோசனைகள் அவசியமானவையாக இருக்கும். 

ஏற்கனவே சொன்னது போல இவை போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக நமக்கு இருக்கும் ஆர்வம், எதிர்காலத்தில் இந்தத் துறை வல்லுநர்களின் தேவை, வேலை வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொண்டு முடிவு செய்ய வேண்டும். சேர்கிறோமா இல்லையா என்பது இரண்டாம்பட்சம். முதலில் இப்படியான துறைகளைப் பற்றி ஓரளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்பத்தில் பல்வேறு படிப்புகளை உள்ளடக்கிய ஒரு பட்டியலைத் தயாரித்துவிட்டால் அதிலிருந்து நான்கைந்து படிப்புகளை கட்டம் கட்டிவிடலாம். கட்டம் கட்டுவதற்காக அந்தந்தக் கல்லூரிகளுக்கே நேரில் சென்று பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசினாலே பெருமளவு தெளிவு கிடைத்துவிடும். 

யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் சாத்தியமா என்றுதான் தோன்றும். ஆனால் மிக எளிமையான காரியம்தான் இது. ஓரளவுக்காவது களப்பணியாற்ற(Field work) வேண்டும். நம் மாணவர்களிடையே அது சுத்தமாகவே கிடையாது. சற்றேனும் அலைந்து விசாரித்தால்தான் நமது விருப்பம், இருக்கின்ற வாய்ப்புகள் போன்றவை தெளிவாகும். இந்தத் தெளிவு இருந்தாலே வாழ்க்கையின் பாதையை முக்கால்வாசி முடிவு செய்தது மாதிரிதான். தொண்ணூற்றொன்பது சதவீதம் பேருக்கு கல்லூரியில் எதைப் படிக்கிறோமோ அந்தப் பாதையில்தான் வாழ்க்கை நகரும். ஒரு முறைதானே வாழப் போகிறோம்? அதில் பிடித்த மாதிரி வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஏன் பிடிக்காததைப் படித்துவிட்டு பிடிக்காத வாழ்க்கையில் சிக்கிச் சின்னாபின்னமாக வேண்டும்? பணம் முக்கியம்தான் ஆனால் அது மட்டுமே எல்லாமும் இல்லை. ப்ளஸ் டூ முடித்துவிட்டு எடுக்கின்ற முடிவுதான் நாம் விரும்புகிற வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது. அந்த முடிவை எடுப்பதற்காகக் கொஞ்சம் வருத்திக் கொள்ளலாம். தவறே இல்லை.