கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதியிருந்தார். ஒரு முறை புதுமைப்பித்தனுடன் அழகிரிசாமியும் தொ.மு.சி.ரகுநாதனும் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது புதுமைப்பித்தன் “இப்ப கதை எழுதறவன்ல எவன் ஒழுங்கா கதை எழுதறான்... நம்ம மூணு பேரைத் தவிர” என்றாராம். அழகிரிசாமியும் ரகுநாதனும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள். “இதைக்கூட முக தாட்சண்யத்துகாகத்தான் சொல்றேன்.. உண்மையில என்னைத் தவிர எவன் ஒழுங்கா எழுதறான் சொல்லு” என்று கேட்டாராம். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படியொரு உரையாடல் நடந்திருந்தால் அழகிரிசாமி மற்றும் தொ.மு.சியின் முகங்கள் எப்படியான பாவனைகளைக் காட்டியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது.
புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையைப் பற்றிய ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்த போது இந்தச் செய்தியை வாசிக்க நேர்ந்தது. சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அற்புதமான கதை செல்லம்மாள்.
செல்லம்மாள் இறப்பதிலிருந்துதான் கதையே தொடங்குகிறது. பிரமநாயகம் பிள்ளை தனது மனைவியின் சடலத்துக்கு இறுதிக் காரியங்களைச் செய்கிறார். கதை சற்று முன்னகர்ந்து பிள்ளையின் அப்பா, அவருடைய சொத்து, மகனை அவர் படிக்க வைத்தது, செல்லம்மாளைத் திருமணம் செய்து வைத்தது என்று நகர்கிறது. அப்பா இறந்தவுடன் பாகப்பிரிவினை நடக்கிறது. அப்பாவின் கடன்களை மூத்தவர் ஏற்றுக் கொள்கிறார். அதனால் பிள்ளையவர்கள் செல்லம்மாளை சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். ஓரளவுக்கு படித்திருக்கிறார் அல்லவா? ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்கிறார். ஒன்றாம் தேதியானால் சம்பளம் வாங்குகிற வேலை இல்லை. எப்பொழுது தேவையோ அப்பொழுது. தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொண்டு கணக்கில் கழித்துக் கொள்ளலாம். இரண்டு ஜீவன்களையும் தாங்கிப்பிடிக்கிற சம்பளம்தான். ஆனால் போதவில்லை. செல்லம்மாளுக்கு வெகு காலமாக நோய்மை பீடித்திருக்கிறது. சம்பளத்துக்கு மீறி கடன் பெருகிக் கிடக்கிறது. குழந்தைச் செல்வங்கள் ஏதுமில்லை. ஆனாலும் செல்லம்மாள் மீது எந்த வருத்தமும் பிள்ளைக்கு இல்லை.
கதை முழுவதும் இழையோடிக் கொண்டிருப்பது ஒரு எளிய மனிதனின் காதல்தான். ஆணின் காதல். அவளால் இந்த மனிதனுக்கு எந்தச் சுகமும் இல்லை. பாரம்தான். ஆனால் அதற்காக முகம் சுளிப்பதில்லை. அவளை கைவிட்டுவிடுவதில்லை. குடும்பச் செலவுக்கு மேலாக மருத்துவச் செலவு கழுத்தை நெரிக்கிறது. ஆனாலும் தாங்குகிறார்.
வாடகை உள்ளிட்ட செலவுகள் குறையட்டும் என்று மின்சார வசதி இல்லாத, ஊருக்கு வெளிப்புறத்தில் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். வேலை செய்யும் கடைக்கும் வீட்டுக்கும் நடந்துதான் சென்று வருகிறார். செலவு மிச்சமாகுமே! ஊரே அடங்கிய பிறகு வீடு திரும்பும் போது சில சமயங்களில் செல்லம்மாள் சோறாக்கியிருப்பாள். பல நேரங்களில் பிள்ளைதான் ஆக்க வேண்டியிருக்கும். பிள்ளை வரும் போது வீட்டில் ஏதாவது சாமானம் இருந்தால் சமையல் உண்டு. ஆனால் எதுவும் இல்லையென்றாலும் செல்லம்மாளை வெறும் வயிற்றோடு படுக்க விட்டுவிட மாட்டார். வெந்நீர் வைத்துக் கொடுப்பார்.
ஆணின் காதலையும் அவனது புற வாழ்வின் சிக்கல்களையும், மனைவிக்கு பணிவிடை செய்யும் போது காட்டும் பொறுமையையும் மிகச் சிறப்பாக பதிவு செய்த கதை இது. செல்லம்மாளின் இறுதிக் காலத்தையும் அவளது ஞாபகம் தப்பிப் போவதையும் தத்ரூபமாக எழுத்தாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
யாருடைய ஆதரவுமில்லாத சாதாரண மனிதன் அவன். உறவினர்கள் இல்லை. குழந்தைகள் இல்லை. நண்பர்கள் இல்லை. மனைவி மட்டும்தான். அவளும் இப்படிக் கிடக்கிறாள். லெளகீக வாழ்க்கை புரட்டிப் போடுகிறது. ஊருக்குச் செல்ல வேண்டும் என மனைவி விரும்புகிறாள். அரிசிச் சோறு சாப்பிட ஆசைப்படுகிறாள். மரணப்படுக்கையில் கிடக்கும் மறுபாதியானவளின் ஆசைகள் நிறைவேற்றவே முடியாத கனவுகளாக பிள்ளைக்குத் தோன்றுகிறது. புலிப்பால் கொண்டு வரச் சொல்லியிருந்தால் கூட முயன்றிருக்கலாம் என்று நினைக்கிறார். அவ்வளவு கடுமையான வாழ்க்கை அந்த மனிதனுக்கு வாய்த்திருக்கிறது.
செல்லம்மாளின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ‘உங்களுக்கு கடையில் துணி கொடுத்துவிடுவார்கள். எனக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்கிறாள். அப்பொழுதும் கூட அவள் நினைவு தெளிவாக இல்லை. தனது இறந்து போன அம்மா குறித்தெல்லாம் பேசுகிறாள். அநேகமாக இந்தப் புடவைதான் செல்லம்மாளின் இறுதி ஆசையாக இருக்கக் கூடும்.
தனது மனைவிக்காக ஒரு புடவை எடுக்க விரும்புவதாகவும் அவளிடம் மாதிரி காட்ட வேண்டும் என்று முதலாளிகளிடம் சொல்லிவிட்டு மூன்று புடவைகளை எடுத்து வருகிறார். அதிலிருந்து செல்லம்மாளின் இறப்பு வேகமாக நெருங்குகிறது. வைத்தியர் வந்து பார்க்கிறார். பலன் இல்லை. மருத்துவரை அழைத்து வருகிறார். பலன் இல்லை. இரவில் பால் கேட்கிறாள். பால் திறைந்துவிட்டது. எலுமிச்சம்பழத்தை வெந்நீரில் பிழிந்து எடுத்து வருகிறார். இரண்டு மடக்குக் குடிக்கிறாள். பெரும் விக்கலுடன் உயிர் அடங்குகிறது. அவள் இறந்தவுடன் பிள்ளை பதறுவதில்லை. கலங்கி வீழ்வதில்லை. அவளுடைய துன்பம் குறைந்ததே என்று கழுத்திலிருந்து இறக்கி வைக்கப்படும் பாரத்தைப் போல உணர்கிறார். அவளுடைய கண்களை மூடி விடுகிறார். வாய் திறந்திருக்கிறது. அதையும் மூடிவிட்டு எடை கூடியிருந்த செல்லம்மாளை புழக்கடையில் அமர வைத்து வெந்நீரில் குளிப்பாட்டுகிறார். புதுப்புடவையைச் சுற்றிவிட்டு சாம்பிராணி புகையைப் போடுகிறார். ஈ ஒன்று சுற்றிச் சுற்றி வருகிறது. விசிறிவிடுகிறார். வெளியில் சென்று பார்க்கிறார் நட்சத்திரங்கள் தெரிந்து கொண்டிருக்கின்றன.
எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் இந்தக் கதையைப் படிக்க வேண்டும். கண்கள் கசிந்துவிடும். எவ்வளவு வலிமையான கதை? புதுமைப்பித்தனின் மொழிநடை வீரியமிக்கது. பிரபஞ்சன் இந்தக் கதையைப் பற்றி தமிழ் இந்துவில் எழுதியிருந்தார். காஞ்சனை கதையை எழுதிக் கொண்டிருந்த போதே செல்லம்மாளை புதுமைப்பித்தன் மனதுக்குள் நினைக்கத் தொடங்கிவிட்டார் என்று எழுதியிருப்பார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதுவரை செல்லம்மாளை வாசிக்காமல் இருந்தால் வாசித்துவிட்டு அடுத்து காஞ்சனையை வாசிக்கலாம்.