சேலத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாம் காட்சிக்கு படத்துக்குச் சென்று வரும் போது பழைய பேருந்து நிலையத்தில் மானா பிரியாணி விற்பார்கள். மா for மாடு. உடன் வரும் மாணவர்கள் அதைத் தின்றால் நான் அருகில் இருக்கும் சில்லி சிக்கன் வாங்கிக் கொறிப்பேன். உண்மையில் கோழியை விடவும் மாடு எவ்வளவோ சுத்தமானது. ஆனால் வீட்டில் உண்டு பழக்கமில்லாததால் அதைத் தின்பதில்லை. ஆனால் ஆசாத்துக்கும் தனேஷூம் விடமாட்டார்கள். கண்டபடிக்கும் கலாய்ப்பார்கள். ஒரு கட்டத்தில் ‘அதெல்லாம் பிரச்சினையில்லை’ என்று பழகிக் கொண்டேன். இன்னமும் இந்த விஷயம் வீட்டில் தெரியாது. தெரிந்தால் ‘பசு பாவம்’ என்பார்கள். பாவம்தான். அப்படிப் பார்த்தால் கோழியும்தான் பாவம். ஆடு பாவம் இல்லையா? மீன், காடை, கவுதாரி என அத்தனையுமே பாவம்தான். ஆனால் காலங்காலமாக இதையெல்லாம் தின்றுதானே வருகிறோம்?
குஜராத்திலும், மஹாராஷ்டிராவிலும் மாட்டுக்கறியைத் தடை செய்திருப்பது போன்ற தடையை பிற மாநிலங்களிலும் அமல்படுத்த அறிவுறுத்தும்படியான ஒரு சுற்றறிக்கையை பிற மாநிலங்களுக்கும் அனுப்புவதற்கு மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் ஏதேனும் சட்டச் சிக்கல்க்ள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம். சட்ட அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியவுடன் அநேகமாக பிற மாநிலங்களிலும் மாட்டுக்கறி தடை செய்யப்படக் கூடும். முதலில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமுல்படுத்துவார்களாக இருக்கும். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முரண்டு பிடிக்கக் கூடும். ஆனால் எப்படியும் வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.
பசு வதையைத் தடை செய்வதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? எனக்குத் தெரியவில்லை. புனிதமானது, பாவமானது என்பதையெல்லாம் எந்தவிதத்தில் ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. இந்துக்கள் உட்பட கோடிக்கணக்கானவர்கள் மாட்டுக்கறியை உண்கிறார்கள். லட்சணக்கானவர்களுக்கு இந்தத் தொழிலின் வழியாக பிழைப்பு நடக்கிறது. தடை செய்வதால் எதைச் சாதிக்கிறார்கள் என்று புரியவில்லை. அடிமட்ட மக்களின் வாழ்க்கையப் பற்றி எந்தச் சிந்தனையுமில்லாத மேல்தர வர்க்க மக்களின் பேரன்பை வேண்டுமானால் இந்த அரசு பெற்றுக் கொள்ளும். அதைத்தவிர வேறு எந்த பலனுமிருக்காது.
மாட்டுக்கறியைத் தடை செய்கிறவர்கள் எருமைக்கறியைத் தடை செய்வதில்லை. அதுக்கு முரட்டுத் தோல்தானே? அதனால் பாவமில்லை. ஒருவேளை அது எமதர்மனின் வாகனம் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
மாட்டுக்கறியைத் தடை செய்வதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பெருகும் மாடுகளை விவசாயிகள் என்ன செய்வார்கள்? பசு மாடாவது பால் கறக்கும். காளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? உழவுக்கு ட்ராக்டர் வந்துவிட்டது. அந்தக் காலமாக இருந்தால் கிணற்றில் கவளை கட்டி இழுப்பதற்கு காளைகளைத்தான் பயன்படுத்துவார்கள். இப்பொழுது அதுவும் இல்லை. இந்தச் சூழலில் காளைகளால் என்ன பிரையோஜனம்? ஊர் ஊருக்கு கோ-சாலை அமைத்து அரசாங்கமே பாதுகாக்குமா?
மாட்டுக்கறி கிடைக்காதவனுக்காக இதைப் பேசவில்லை. இது இல்லையென்றால் அது என்று அவன் மாறிவிடுவான். ஆனால் கால்நடைகளை வைத்து பிழைப்பு ஓட்டும் விவசாயியும் மேய்ப்பர்களும் என்ன செய்வார்கள்? ஒரு வருடம் மழை பொய்த்துப் போனால் சோளத்தட்டு பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கத் துவங்கிவிடுகிறது. காடுகளில் தீவனமும் கருகிவிடுகிறது. அத்தகைய சமயங்களில் ஒன்றரையணா விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயி பால் கறந்து ஊற்றித்தான் குடும்பம் நடத்துகிறான். அவன் இந்தக் காளை மாடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? சோளத்தட்டு வாங்கிப் போட்டு சமாளிக்க முடியுமா என்ன?
அதே மாதிரி கிழடு தட்டிப் போகும் பசு மாடுகளை என்ன செய்வது? தீர்க்கவே முடியாதபடிக்கு நோய்வாய்ப்படும் பசு மாடுகளை என்ன செய்வார்கள்? இப்பொழுதெல்லாம் இத்தகைய மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். வருகிற விலை வரட்டும் என்று மாட்டுபுரோக்கர்களுக்குத் தருவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இருக்காது. இனி மாட்டுக்கறியைத் தடை செய்துவிட்டால் இத்தகைய பசு மாடுகளை எவன் வாங்குவான்? காளைளை எவன் சீந்துவான்? சுமையோடு சுமையாக இவற்றையும் விவசாயி தம் தலையிலேயே கட்டிக் கொள்ள வேண்டியதுதான். அவன்தானே இளிச்சவாயன்?
ஒரு கட்டத்திற்கு மேலாக ஒரு விவசாயியிடம் நான்கைந்து காளை மாடுகள் ஆகிவிடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு குறுவிவசாயியால் இத்தனை எண்ணிக்கையிலான காளை மாடுகளைச் சமாளிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டாமா? அரசாங்கம் அவனது சுமையைத் தாங்கிக் கொள்ளும் என்கிற உத்தரவாதமெல்லாம் எதுவும் இல்லை. குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த அக்கப்போர்களைச் சமாளிக்க முடியாமல் பசு மாடுகளையே கைவிடுவதற்கான நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு எருமை மாடுகள் எவ்வளவோ தேவலாம் என்று விலகிப் போய்விடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்காது. இதையெல்லாம் hypothetical thinking என்று ஒதுக்கிவிட வேண்டியதில்லை. இத்தகைய சிக்கல்கள் நிச்சயமாக விவசாயியின் கழுத்தை நெருக்கும்.
இத்தகைய சட்டங்களை அமுல்படுத்துவது வெறும் மதம் சார்ந்த அல்லது நம்பிக்கைகள் சார்ந்த முடிவாக மட்டும் இருப்பதில்லை. பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார வாழ்வாதாரங்களைச் சார்ந்தும் இருக்கிறது. இதைச் சொன்னால் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை உதாரணமாகக் காட்டுவார்கள். ஓரிரு மாநிலங்களில் அமுல்படுத்தினால் பிரச்சினையில்லை. ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமுல்படுத்தினால் என்ன செய்வார்கள் என்பதுதான் கேள்வி.
இந்த வாரத்தில் ஒரு சொந்தக்காரரிடம் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய விவாதம் வந்தது. அவரும் ஒரு விவசாயிதான். ‘ஆமா...இப்படியொரு சிக்கல் வர வாய்ப்பிருக்கு..வேற வழி இல்லைன்னா விஷம் வெச்சுத்தான் கொல்லணும்’ என்றார். அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. கால்நடைகளை ஒரு விவசாயி வளர்ப்பது அவனுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காகத்தானே தவிர அதே கால்நடைகளை தனக்கு சுமையாக்கிக் கொள்வதற்காக இல்லை. மாட்டுக்கறியைத் தடை செய்வது என்பது இந்த தேசத்தின் விவசாயியின் முதுகில் சுமையை ஏற்றுவது போலத்தான். இல்லையென்று யாராவது சொன்னால் எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.