Mar 30, 2015

பசுமாட்டைக் கொன்றவன்

ஊர்ப்பக்கத்தில் மரணம் நிகழ்ந்த வீடுகளில் பாடி அழும் பெண்கள் ‘பார்ப்பானை அடிச்சானோ பசுமாட்டைக் கொன்றானோ’ என்று பாடுவார்கள். அதுவும் இள வயது மரணங்கள், குரூரமான சாவுகளில் இந்த வரி எப்படியும் வந்து வீழ்ந்துவிடும். இந்த இரண்டும் அவ்வளவு பெரிய பாவங்களாம். பார்ப்பனரை நினைவு தெரிந்து அடித்ததில்லை. பாவம் என்பதெல்லாம் காரணமில்லை. அடித்துக் கொள்ளுமளவுக்கு பகைமை பூண்டதில்லை. ஆனால் பசுமாட்டைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டேன். இந்த வாரத்தில்தான்.

சனிக்கிழமையன்று ஊருக்குச் சென்று கொண்டிருந்தோம். வழக்கமான பாதைதான். தொப்பூர் தாண்டியவுடன் வலது பக்கம் திரும்பினால் மேட்டூர் அதன் பிறகு நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை. இந்தச் சாலையில் செல்லும் போது வேகமாகச் செல்ல முடியாது. மணிக்கு அறுபது அல்லது எழுபது கிலோமீட்டர் வேகம் சாத்தியமானால் பெரிய விஷயம். நேரம் ஆவது பிரச்சினையில்லை. ஆனால் பயணம் சலிக்காது. மேச்சேரி வனம், மேட்டூர் அணை, வீரப்பன் வாழ்ந்த மலைகள், மேட்டூரிலிருந்து கூடவே பயணிக்கும் காவிரி ஆறு என பச்சையும் குளுமையுமான பயணம் அது. அதனால் முடிந்தவரை இந்தப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.

தனியாகச் சென்றால் சேலம் வரைக்கும் ஒரு பேருந்து அங்கிருந்து ஈரோடுக்கு ஒரு பேருந்து. அதுதான் வழமை. ஆனால் அந்தப் பாதையில் ஊர்களை நெட்டுக்குத்தலாக கிழித்துக் கொண்டு செல்லும் கரும்பட்டையைத் தவிர ரசிப்பதற்கு எதுவுமே இருக்காது. குடும்பத்தோடு செல்லும் போதுதான் கார் அவசியமானதாக இருக்கிறது. இந்தப் பாதையும் அமைகிறது. அப்படித்தான் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தோம். மாலை ஆறரை மணியைத் தாண்டியிருந்தது. வயல் வெளி முழுவதும் படர்ந்திருந்த பச்சையை இருள் தின்னத் துவங்கியிருந்தது. மகிழ்வுந்தின் விளக்குகள் எரியத் தொடங்கி கால் மணி நேரம் ஆகியிருக்கும். எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னால் ஐம்பதடி தூரத்தில் ஒரு பசுமாடு. அது துள்ளியடித்து ஓடி வந்ததா அல்லது ஆசுவாசமாக நடந்து வந்ததா என்பதை சம்பவம் நிகழ்ந்த அந்த வினாடியிலிருந்து நினைவுபடுத்திப் பார்க்க முயல்கிறேன். ஒன்றுமே பிடிபடவில்லை. அப்பொழுது வெறித்தனமாக ப்ரேக்கை அழுத்தியிருக்க முடியுமா? அல்லது அழுத்தினேனா என்பதும் நினைவில் இல்லை. அந்த சில வினாடிகள் மட்டும் நினைவிலிருந்து துண்டித்த மாதிரியாக இருக்கிறது. ஆனால் மாட்டின் மீது அடித்து வண்டியை நிறுத்தினேன் என்பது மட்டும் நிச்சயம். வீழ்ந்த மாடு அப்படியே கிடக்கிறது. இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த மாட்டுக்காரப் பெண்மணி கத்துகிறார். வண்டியை விட்டு கீழே இறங்கிப் பார்த்துவிட்டு மீண்டும் வண்டியில் ஏறி சற்று பின்புறமாக நகர்த்தி நிறுத்திவிட்டு மீண்டும் கீழே இறங்கிப் பார்த்த போது அந்த மாடு என்னைப் பார்த்தது. என்னையும் அறியாமல் அழுகை வந்துவிட்டது.

நெற்றியை அடித்துக் கொண்டு அழத் தொடங்கினேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தத் துவங்கியிருந்தார். அந்த இடத்தில் ஆட்கள் சேர்ந்திருந்தார்கள். அத்தனை பேருக்கு முன்பாக இதுவரை அழுததில்லை. சுற்றிலும் நிற்பவர்களுக்கு ஒரு ஆண் அழுவது சங்கடமாக இருந்திருக்கக் கூடும். ஒரு பெண்மணி வந்து அந்த மாடு அரை மணி நேரமாக இப்படியே சுற்றிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். ஆனால் அது அப்படியொன்றும் ஆறுதலைத் தந்துவிடவில்லை. மாட்டை நகர்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதன் கொம்பு முறிந்திருந்தது. ஆனால் உயிர் இருந்தது. இன்னொரு முதிய பெண்மணி வந்து ‘துரத்திட்டு வந்தவன் எங்கே’ என்றார். உடனடியாகப் புரியவில்லை. பிறகுதான் எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். கயிறு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அந்த மாடு இன்னொரு தோட்டத்திற்குள் சுற்றியிருக்கிறது. யாரோ தோட்டத்திலிருந்து விரட்டியிருக்கிறார்கள். சாலையை ஒட்டிய தோட்டம் அது. தோட்டத்தில் இருந்து வெளியே வந்தவுடன் சாலைதான். அப்படி துள்ளிக் கொண்டு வந்த மாடு எனது தலையில் பாவத்தை இறக்கியிருக்கிறது.

அடித்தது அடித்தாகிவிட்டது. நான் அழுவதைப் பார்த்து மகி பயந்திருந்தான். வலுக்கட்டாயமாக அழுகையை அடக்கிக் கொண்டிருந்தேன். கூட்டம் சேர்ந்திருந்தது. அங்கிருந்தவர்களில் பலரும் என்னைச் சமாதானம் செய்யத் தொடங்கியபோது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனால் மாட்டைப் பார்க்க முடியவில்லை.  ‘அடிக்க வேண்டும் என்றெல்லாம் உன்னை அடிக்கவில்லை’ என்று மனப்பூர்வமாக சில முறை சொல்லிக் கொண்டிருந்தேன். அது அந்த மாட்டுக்கு நிச்சயமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை.

கால் மணி நேரத்தில் மாட்டுக்கு அடியில் சில உருளைகளை வைத்து சாலையோரமாக நகர்த்திவிட்டார்கள். ‘இனி முடிந்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அங்கிருந்த சிலரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எனக்கு மாடு பற்றிக் கணிக்கும் அளவுக்கு அறிவில்லை. அடுத்த ஐந்து நிமிடங்களில் மாடு எழுந்து கொண்டது. அது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. சுற்றிலும் நின்றவர்கள் கைதட்டினார்கள். அது உயிர் தப்பித்த வரைக்கும் போதும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக பஞ்சாயத்து தொடங்கியது. உள்ளூர் மனிதர் ஒருவர் பேசத் தொடங்கினார்.

‘மாடு முப்பதாயிரம் பெறும்...பணத்தை பொதுவான மனுஷன்கிட்ட கொடுத்துடுங்க...மாட்டுக்கு ஒண்ணும் ஆகலைன்னா பணத்தை திருப்பிக் கொடுத்துடுறோம்...ஏதாச்சும் ஆச்சுன்னா நீங்க மறந்துடுங்க’ என்றார். அப்பொழுது கையில் பணம் எதுவும் இல்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். என்னிடம் நிஜமாகவே பணம் இல்லை. ஆனால் காசோலை இருந்தது. சொன்னேன். நிரப்பிக் கொடுக்கச் சொன்னார்கள். அவர்கள் யாரும் முரட்டுத்தனமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த இடத்தைத் தாண்டுவதற்கு ஏதாவதொரு உபாயம் தேவையானதாக இருந்தது. எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்தபிறகு அந்த மூன்றாவது மனிதரை அழைத்து ‘மாடு எப்படி இருக்குங்க?’ என்ற போது கால்நடை மருத்துவர் வந்து பார்த்ததாகவும் ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருப்பதாகவும் சொன்னார். இனி பிரச்சினை இருக்காது மருத்துவர் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதாகவும் எதற்கும் காலை வரையிலும் பார்க்கலாம் என்றார். தலைக்கு நீரை ஊற்றிவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். சாப்பிடச் சொன்னார்கள். பசி இருந்தது. ஆனால் சாப்பாடு இறங்குகிற மனநிலை இல்லை. ஏதாவதொரு வகையில் அடிக்காமல் வண்டியை நிறுத்தியிருக்க முடியுமா என்றே மனம் அலைகழித்துக் கொண்டிருந்தது. எப்பொழுது தூங்கினேன் என்பதே தெரியாமல் தூங்கியிருந்தேன். 

அடுத்த நாள் காலையில் அழைத்தார்கள். ‘மாடு இறந்துவிடும்’ என்றார்கள். இறக்கவில்லை. ஆனால் அப்படியான நிலைமை என்றார்கள். சங்கடமாக இருந்தது. அதைப் போய் பார்க்க வேண்டுமா என்று குழப்பமாக இருந்தது. ஒருவேளை நேரில் பார்த்து அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிட்டால் அந்த நினைப்பு காலம் பூராவும் கசப்பு படிந்தபடியே கிடக்கும். வண்டியை ரிவர்ஸ் எடுத்து நிறுத்திய பிறகு பார்த்த அதன் கண்கள் காலாகாலத்துக்கும் நெஞ்சுக்குள் உறைந்துவிடக் கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொண்டேன். நான் அசைவப் பிரியன்தான். ஆடு, கோழியெல்லாம் தின்கிறேன். மாட்டுக்கறி கூட உண்டிருக்கிறேன். ஆனால் இந்த விபத்து ஏனோ வெகுவாக சஞ்சலப்படுத்திவிட்டது. அவர்கள் பணத்துக்காக பொய் சொல்வதாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விரும்பினேன். அந்த நம்பிக்கைக்கான செலவு முப்பதாயிரம் ரூபாய்.

‘தயவு செஞ்சு அந்த காசோலையை வங்கியில் போட்டுவிட வேண்டாம்..நானே பத்து நாட்கள் கழித்து வந்து பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்’ என்று மட்டும் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். ஏன் என்று விளக்கம் சொல்லவில்லை. அவர்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் காரணம் எளிமையானது. அந்தக் காசோலை அறக்கட்டளையின் காசோலை. ஒரு நல்ல காரியத்துக்காக கொடுப்பதற்கு எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் அந்த மனநிலை, கூட்டம், வெளிச்சம் மங்கிப் போன இரவில் எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. கையிலும் காசு இல்லை. வங்கிக் கணக்கிலும் தொகை இல்லை. சற்று உரிமை எடுத்துக் கொண்டேன். தவறுதான். அறக்கட்டளையின் காசோலையை சொந்த காரியத்துக்காகக் கொடுத்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று நாட்களாகவே மனநிலை சரியில்லை. ஏதோ சங்கடமாகவே இருக்கிறது. கனவுகளில் பசுமாடுகள் நிறைகின்றன. ஒடிந்த கொம்புகள் நினைவுகளை நிறைக்கின்றன. திடீரென்று ‘தவறு நம் மீதுதானா?’ என்று நினைத்துக் கொண்டு ‘ப்ச்’ என்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியவில்லை. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்துவிடச் சொன்னார் ஒருவர். இரு முகங்கள் கொண்ட ருத்திராட்சத்தை அணியச் சொன்னார் இன்னொருவர். வரவேண்டிய மிகப்பெரிய ஆபத்தை பசுமாடு வடிவத்தில் வந்து ஆண்டவன் தாங்கிக் கொண்டார் என்று இன்னொருவர் ஆறுதல் படுத்தினார்.  இவையெல்லாமும் நாமாக நினைத்துக் கொள்ளக் கூடியவைதானே?

சங்கடங்களின் போது எந்த நினைப்பு ஆறுதலைக் கொடுக்குமோ, எந்த எண்ணம் அமைதிப்படுத்துமோ அதையே மனது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. அதுதான் சரி என்று நம்பத் தொடங்கிவிடுகிறது. ஆனால் உண்மை எப்பொழுதும் தூரமாக நின்றிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நேருக்கு நேர் பார்க்க முடியாத அளவுக்கு அது கண்களைக் கூசச் செய்கிறது. எது உண்மை எது நம் பிரமை என்பதே கூட பிடிபடாத அளவுக்கான கூச்சம் அது. அந்தச் சமயங்களில் எதுவுமே தெரியாதது போல வேறொரு பக்கம் பார்ப்பதற்குத்தான் மனம் எத்தனிக்கிறது. இப்பொழுது அப்படித்தான் இருக்கிறேன். இந்த நினைவுகளிலிருந்து தப்பி எங்கேயாவது ஓடிவிட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் சாத்தியமேயில்லாத ஆசை அது.