அவதார் படத்தில் மிகப்பெரிய பறவை வருமல்லவா? இக்ரான். நாயகன் பேண்டாரோ கிரகத்துக்குச் சென்ற பிறகு நாயகி அவனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் அளிப்பாள். குதிப்பது, ஓடுவது, வேட்டையாடுவது என அத்தனையும் அடங்கிய பயிற்சி. பயிற்சியின் இறுதிக்கட்டமாக இக்ரானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்ரான் நாவிகளுக்கு மிக முக்கியம். அந்தப் பறவைதான் நாவிகளைத் தூக்கிக் கொண்டு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.
நாயகன் தனக்கான இக்ரானைத் தேர்ந்தெடுப்பதற்காக மிகச் சிரமப்பட்டு மிதக்கும் மலைகளின் மீது ஏறுவார்கள். அங்கு நிறைய இக்ரான்கள் இருக்கும். ‘எப்படி தேர்ந்தெடுப்பது?’ என்பான்.
‘அதுவே உன்னைத் தேர்ந்தெடுக்கும்’ என்பாள் நாயகி.
‘என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்ற கேள்விக்கு ‘அது உன்னைக் கொல்லவரும்’ என்பாள்.
நாயகன் ஒரு இக்ரானைக் கண்டுபிடித்துவிடுவான். நாயகனும் இக்ரானும் பயங்கர ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள். கடைசியில அது அடங்கிவிடும். இனி வாழ்நாள் பூராவும் அவனோடுதான் அந்த இக்ரான் பறக்கும்.
‘கவிதைக்குள் நுழையவே முடிவதில்லை’ என்று யாராவது சொன்னால் இந்த இக்ரான் கதையைச் சொல்லலாம். தொடர்ந்து நிறையக் கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஏதாவதொரு கவிதை நம்மை தேர்ந்தெடுத்துவிடும். முதலில் ஆக்ரோஷமான சண்டையெல்லாம் வரும். சலிப்பு தட்டும். ஆனால் விடாமல் கீழே தள்ளி அழுத்தி அடக்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் பறக்கலாம். நமக்கான அந்தக் கவிதையை எதிர்கொள்ளும் வரைக்கும் நிறையக் கவிதைகளைப் புரட்டிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.
அப்படியான ஒரு கவிதை இது. சமயவேலின் கவிதை.
பார்த்துக் கொண்டிருக்கிறார். குட்டி மகள் ஓடிக் கொண்டிருக்கிறாள். ‘நில்’ என்று சொல்லச் சொல்ல- அதைக் கேட்காமல் ஓடிய குட்டிமகள் மாடிப்படிகளில் உருண்டு விழுகிறாள். அந்த கணத்தில்- அரைக்கணம் கூட இல்லை- அரைக்கணத்தின் துணுக்கில் அவரால் அவள் விழுவதை பார்க்க மட்டும்தான் முடிகிறது. உயிர் உணர்வு அத்தனையும் அற்றுப் போய்விடுகிறது அந்த மனிதனுக்கு. வெறும் சடலமாக அந்தக் கணத்தில் ஓடுகிறார். நெற்றியில் அடியுடன் வீறிட்டு அழும் அந்தக் குட்டிமகளை அள்ளுகிறார்.
அரைக் கணத்தின் புத்தகம் என்ற அந்தக்கவிதையை வாசித்துவிடலாம்-
ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள்
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான்
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.
கவிதையின் முதல்பகுதியை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் கடைசி நான்கு வரிகள் சற்று திணறடிக்கக் கூடும். ஆனால் திரும்பத் திரும்ப வாசிக்கும் போது ஒருவாறு பிடிபட்டுவிடும். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்பது குறித்து கவிதை வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை. அள்ளுவதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அடுத்த வரியில் ‘என் பிரபஞ்சத்தைச் சேராத’ என்ற வரியிருக்கிறது. அந்த அரைக்கணத்தின் மீது இவருக்கு கசப்பு படிந்து கிடக்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் ஏதோ விபரீதம் நடந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம். அதை ஏன் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்கிறார்? தவிர்க்கவே முடியாத கணம் அது. எந்தவிதத்திலும் மறக்க முடியாத கணமாக மாறிக் கிடக்கிறது. அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையே அந்தக் கணத்தில்தான் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பதான அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம்.
கவிதை அப்பட்டமாக எதைச் சொல்ல வருகிறது என்று ஒரே மாதிரியாகவே எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல். இந்தக் கவிதை உருவாக்கும் சித்திரத்தை நினைத்துப் பார்த்தால் போதும். மனம் கனத்துவிடும். இதுவரை கவிதையே வாசிக்காமலிருந்து இதை வாசித்த பிறகு மனம் கனத்தால் இக்ரானை ஓரளவு அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாக அர்த்தம். இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. விட்டுவிட்டு அடுத்த இக்ரானைத் தேடிச் செல்லலாம்.