Mar 26, 2015

ஜெயமோகன்

எனது மேலாளர் தமிழர். புத்தகங்களைப் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். ஆங்கிலப் புத்தகங்கள் குறித்து அவர் பேசினால் நான் பிதுக் பிதுக்கென முழிக்க வேண்டியிருக்கிறது. அப்படியான மனிதருக்கு ஒரு பழக்கம் உண்டு. கோடி ரூபாய் கொடுத்தால் கூட மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை வேறு எந்த வேலையும் செய்யமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயமோகனின் வெண்முரசு தொடரை வாசிக்கிறார். வாசிப்பதோடு நிறுத்துகிறாரா? முடித்துவிட்டு வந்து அந்த அத்தியாயம் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார். மேனேஜராக வேறு இருக்கிறார். இன்னும் படிக்கவில்லை எனச் சொல்லி பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. அதனால் இப்பொழுது நானும் விடாமல் வாசித்துவிடுகிறேன். 

ஒரே பிரச்சினைதான். ஒருநாள் ஏமாந்தாலும் இரண்டு அத்தியாயங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. நான்கு நாட்கள் விட்டுவிட்டால் அவ்வளவுதான். முன்னால் ஓடிக் கொண்டிருக்கிற குதிரையை துரத்திப் போய் பிடிக்கிற கதையாகிவிடுகிறது. அதுவும் விட்டுப்போன ஒரு அத்தியாயத்தை வரிக்கு வரி வாசித்து அர்த்தம் புரிந்து முடிப்பது என்பது மூன்றாவது செமஸ்டரில் அரியர் வைத்த தேர்வை எட்டாவது செமஸ்டரில் முடித்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக் கொண்ட மாதிரிதான். இத்தகைய தொடர்ச்சிக்கு பயந்தே சிலர் விட்டுவிட்டதாகச் சொன்னார்கள். தொடர்ந்து வாசிப்பதில் சிக்கல்கள் இருப்பினும் இந்தத் தொடரை விடாமல் வாசித்துக் கொண்டிருப்பவர்களைச் சந்திப்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. 

வெண்முரசை தினந்தோறும் வாசிக்கக் கூடிய ஏகப்பட்ட வாசகர்களை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. இவ்வளவு அவசரமான உலகத்தில் ஒரு எழுத்தாளனை ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? அதுவும் அதிகமான உழைப்பையும், சிதறாத கவனத்தையும் கோரக் கூடிய வெண்முரசு போன்ற தொடரை ஏன் வாசிக்கிறார்கள்? அதுதான் ஜெயமோகனின் வெற்றி. அடுத்த தலைமுறையில் தீவிரமாக வாசிக்கக் கூடிய ஒரு பெரிய கூட்டத்தை ஜெயமோகன் உருவாக்கிவருகிறார். மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள், கார்போரேட் ஊழியர்கள் என்று வாசிப்புப் பழக்கத்தின் கண்ணி அறுந்து போனவர்களை ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும் இணையத்தின் வழியாக வாசிப்பு நோக்கி இழுத்து வந்திருக்கிறார்கள். நாம் மறுத்தாலும் இதுதான் உண்மை.

சமீபகாலமாக ஜெயமோகனை வசைபாடுவதற்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று அபிலாஷ் ஜெமோவை மாவு மிஷின் என்று எழுதியிருந்தார். வெறும் சொற்களால் பக்கங்களை நிரப்புகிறார் என்பது அவரது குற்றச்சாட்டு. சமீபத்தில் லட்சுமி சரவணக்குமாரும் அப்படித்தான் சொல்லியிருந்தார். வெண்முரசு குப்பை என்பது அவர் வாதம். அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் இரண்டு பேர் மீதுமே எனக்கு மரியாதையுண்டு. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். அதற்காக ஜெயமோகனின் எழுத்துக்களை பெருமொத்தமாகக் குப்பை என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

பாலகுமாரனின் வாசகர்கள்தான் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதெல்லாம் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத sweeping statements. தன்னை எழுத்தாளன் என்றும் படைப்பாளன் என்று சொல்லிக் கொள்கிறவர்களில்தான் பெரும்பாலானவர்கள் எதையும் வாசிப்பதேயில்லை. ஆனால் எழுத்தாளனைவிடவும் ஆழ்ந்து வாசிக்கக் கூடிய வாசகர்கள் இருக்கிறார்கள். எந்தச் சலனமுமின்றி வெறும் வாசிப்பை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களையும் சந்திக்க முடிகிறது. இத்தகையவர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லையென்றால் தான் ஒரு எழுத்தாளன் என்கிற பீடத்திலிருந்து கீழே இறங்கி சில வாசகர்களிடம் பேசிப் பார்க்கலாம். உண்மை தெரிந்துவிடும்.

வெண்முரசு மிக முக்கியமான முயற்சி. அது வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இப்படியான ஒரு முயற்சியை ஜெயமோகனைத்தவிர இன்றைய எழுத்தாளர்கள் வேறு யாராலும் எடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது. அந்தத் தைரியம் ஜெமோவிடம்தான் இருக்கிறது. அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. எழுத்தாளன் என்றால் ஊதாரி, தேசாந்திரி, பொறுப்பற்றவன், குடிகாரன், ஸ்தீரிலோலன் என்பதான பிம்பங்களையெல்லாம் உடைத்துவிட்டு வாசிப்பு மற்றும் எழுத்துக்கான அர்ப்பணிப்பின் வழியாக தனது அசைக்க முடியாத இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஜெயமோகன். 

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றிவிட்டுப் போய்விடலாம்தான். அதனால் நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்?

ஜெயமோகன் எழுதிக் குவிப்பதுதான் பிரச்சினை. இல்லையா? இது சக எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களைப் பதறச் செய்துவிடுகிறது. ஜெயமோகன் மீது விழக் கூடிய வெளிச்சம் ஏதோவொரு சலனத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது. அதற்கு எதுவுமே செய்ய முடியாது. அவர்களும் எழுதித்தான் தீர வேண்டும். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சோம்பேறிகள். அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். அதற்கு ஒரு சால்ஜாப்பும் வைத்திருப்பார்கள். ‘உள்ளுக்குள்ளிருந்து பொங்கி வரும் போதுதான் எழுதுவேன்’ என்பார்கள். ஆனால் அப்படியானவர்கள் ஒரு கட்டத்தில் பதற்றமடைகிறார்கள். இந்த உலகம் தன்னை மறந்துவிடுமோ என்று நடுங்குகிறார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் அலர்ஜியாகிவிடுகிறார். இது ஒருவிதத்தில் ஆரோக்கியமான சூழல்தான். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுதத் தொடங்கட்டும். குடித்துவிட்டு வெறும் வாய்வழியான உரையாடலை மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருப்பதைத் தாண்டி அதை எழுத்தாக்கட்டும். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு காலகாலத்துக்கு தன்னை ஒரு பீடத்தில் கட்டி வைத்துக் கொண்டு திரிபவர்களுக்கு இதெல்லாம் பிரச்சினைதான்.

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லவில்லை. அவரை விமர்சிக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் அதை விரிவாகச் செய்ய வேண்டும். தரவுகளோடு அத்தகைய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ‘ஜெயமோகன் எழுத வந்த காலத்துலதான் நானும் எழுதினேன்...அவன் ஒரு லிஸ்ட் போட்டான்யா...சிறந்த சிறுகதைகள்னு....என் கதை எதையுமே சேர்த்துக்கல...என்ன அரசியல் பண்ணுறாம்பாத்தியா?’ என்றார். அவருடைய ஆதங்கம் புரிந்தது. ‘உங்க கதை இருந்தா கொடுக்கறீங்களா? வாசித்துவிடுகிறேன்’ என்று கேட்டதற்கு வீட்டிலிருந்து நுனி மடங்காத தொகுப்பின் பிரதியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தார்.  பத்துப் பக்கங்கள் வாசித்ததோடு சரி. நொந்துவிட்டேன். அதே தினத்தில் அவர் ‘இப்போவெல்லாம் அவன் எழுதறத வாசிக்கிறதேயில்ல...குப்பையைத்தான் கொட்டுகிறான்’ என்றார். தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டேன். இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அதே மனிதரைச் சந்தித்தேன். ‘வெண்முரசுன்னு ஒண்ணும் எழுதறானாம்ல...குப்பை..குப்பை’ என்றார். அவர் ஒரு அத்தியாயம் கூட வாசித்திருக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் ஒரு முன்முடிவை வைத்திருக்கிறார். ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு எதிர்ப்படுகிறவனிடமெல்லாம் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

இங்கு சக எழுத்தாளனை நிரகாரிப்பவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஜெயமோகன் மீது வெறுப்பு உண்டாவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. அவரது அரசியல் செயல்பாடு, எழுதிக் குவிப்பது, அவருக்கு உண்டாகியிருக்கும் வாசகர்கள், தன்னை அங்கீகரிக்காதது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதற்காக ஜெயமோகனை நிராகரிப்பதும் அவர் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் குப்பை என்றும் எந்தத் தரவுமில்லாமல் முன் வைப்பதும் அபத்தம். அப்படியொரு வாதத்தை முன் வைக்க வேண்டுமானால் ஒரு விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும். அந்தப் படைப்பில் என்ன பிரச்சினை இருக்கிறதென்று விரிவாக எழுத வேண்டும். பிறகு வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ‘அதை வாசித்தேன்...ஒண்ணுமேயில்ல’ என்பதுதான் சொறிந்துவிடுதல். ஜெயமோகன் மீது வெறுப்பைக் கட்டிக் கொண்டு திரிபவர்களின் முதுகில் சொறிந்துவிடுவது மாதிரி. படைப்பின் ரசனை எதுவுமேயில்லாமல் வெற்று அரசியல் கூச்சல் போடும் வினவு வகையறாக்கள் இதைச் செய்தால் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடலாம். ஆனால் அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் போன்ற படைப்பாளிகள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களின் வழியாக நம் காலத்தின் மாபெரும் படைப்பாளுமையை இடது கையால் தள்ளிவிடுவது ஆரோக்கியமானதன்று.