டிசம்பர் மாதத்திலிருந்து கரிகாலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்- ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று. எனக்கும் உள்ளூர ஆசைதான். ஆனால் ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஆரம்பித்துவிட முடியுமா? அதற்கான அவசியம் என்று ஏதாவது இருக்க வேண்டுமல்லவா? ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை...சாதாரணக் கலந்துரையாடலாக நடத்தலாம்’ என்பதுதான் திட்டம். ஆரம்பத்தில் கடற்கரை அல்லது பூங்கா மாதிரியான இடங்களாகத்தான் யோசித்துப் பார்த்தோம். ஆனால் டிஸ்கவரி புக் பேலஸ்தான் சரியாக இருக்கும் என்றும் யாவரும்.காம் நண்பர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எதைப் பற்றியான கூட்டம் என்பதில் பெரிய குழப்பம் இல்லை. கார்ட்டூனிஸ்ட் பாலாவிடம் ‘நீங்கள் பேச முடியுமா?’ என்று கேட்டதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொண்டார். அவர் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் பற்றி பேசுகிறார். இயக்குநர் கவிதாபாரதியுடன் தனிப்பட்ட அறிமுகமில்லை. ஆனால் அவர் மசால்தோசை 38 ரூபாய் புத்தகம் பற்றிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். அவரிடம் கேட்டவுடன் சரி என்று சொல்லிவிட்டார் என்று கரிகாலனுக்கு ஏக சந்தோஷம். எனக்கும்தான். நாடகக்கலைஞர் தம்பிச்சோழனும் பேசுகிறார். இதுதான் என்றில்லாமல் கலந்துகட்டி பேசுவதாகச் சொன்னார். நல்லதாகப் போயிற்று.
புத்தகங்களைப் பற்றி பேசிவிட்டு நிசப்தம்.காம் தளத்தை விட்டுவிட முடியுமா? அது இல்லையென்றால் எதுவுமே இல்லை. நாகேஸ்வரன் மற்றும் புகழேந்தி இருவரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். நாகேஸ்வரன் வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் சி.ஏ தேர்வில் தேசிய அளவிலான ரேங்க்குடன் தகுதி பெற்றவர். இப்பொழுது மிகுந்த சிரமப்பட்டுத்தான் நடக்கிறார். நிசப்தம் தளத்தைத் தொடர்ந்து வாசித்து கருத்துச் சொல்லிக் கொண்டே இருப்பவர். புகழேந்தி அவர்களும் அப்படியாகத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்தான். அரசு ஊழியர். இவர்கள் இருவரும் இயல்பாகப் பேசக் கூடியவர்கள் என்பதால் மனதில் பட்டதைப் பேசிவிடுவார்கள் என நம்புகிறேன்.
முதல் பத்தியில் குறிப்பிட்டது போல இது ஒரு கலந்துரையாடல்தான். ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் கூட்டம் தொடங்குகிறது. இரண்டு மணி நேரங்கள். மேற்சொன்ன ஐந்து பேரும் தோராயமாக ஆளுக்கு பத்து நிமிடங்கள் பேசினால் ஒரு மணி நேரம் பிடிக்கும். அப்புறம் ஒரு மணி சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்கலாம். இப்படியான கூட்டங்களில் கிடைக்கும் எதிர்வினைகள்தான் அடுத்து நகரவேண்டிய பாதை குறித்தான தெளிவை உண்டாக்குபவை. சம்பிரதாயமான கூட்டங்களில் சகஜமாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் அப்படியான கூட்டங்களில் ஆர்வமுமில்லை.
நன்றாக ஞாபகமிருக்கிறது - கடந்த முறை நிகழ்ந்த இப்படியான யாவரும்.காம் கூட்டம் முடிந்து பேசிக் கொண்டிருந்தபோதுதான் யாரோ ஒருவர் ‘ட்ரஸ்ட் மாதிரி ஏதாச்சும் செய்யலாமே’ என்றார். அவர் சொன்ன போது கலங்கலாகத்தான் இருந்தது. என்ன செய்வது? எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் புரியவில்லை. ஆனால் அவர் சொன்னது ஒரு தூண்டுகோல்தான். பிறகு அது குறித்தான யோசனைகள் ஒரு வடிவத்தைக் கொண்டு வந்து சேர்த்தன.
அதன் நினைவாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். சென்னை மடுமாநகர் பள்ளிக்கு விளையாட்டுச் சாதனங்களை இதே நிகழ்ச்சியில் வழங்கிவிடலாம்.
‘அலைகடலெனத் திரண்டு வருவார்கள் பாருங்கள்’ என்று உசுப்பேற்றினார்கள். ரணகளம் ஆக்கிக் கொள்வதற்கெல்லாம் தயாராக இல்லை. ஆனால் சென்னையில் கலந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் அத்தனை பேரையும் நிச்சயம் எதிர்பார்க்கிறோம். வழிகாட்டுதலும் எதிர்வினைகளும் மிக மிக அவசியமானவை. வெறும் சடங்காக அழைக்கவில்லை. உண்மையிலேயே அவை எனது போக்கு, எழுத்து, செயல்பாடு குறித்தான சோதனையைச் செய்ய உதவும் லிட்மஸ் தாள்.
பொதுவெளியில் இயங்குபவர்கள் இந்தச் சமூகத்தின் நாடியைப் பிடித்துப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன். அந்த வெகுஜன மனநிலையில் சலனத்தை உண்டாக்கி எதிர்திசையில் நகர்கிறோமோ அல்லது அல்லது அந்த மனநிலையின் போக்கிலேயே நகர்கிறோமோ என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இந்தச் சமூகம் என்ன நினைக்கிறது என்பதை நிச்சயம் புரிந்து கொண்டவனாக இருக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த மாதிரியான கூட்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே தாய்மார்களே, பெரியோர்களே, வாக்காளப் பெருங்குடி மக்களே..மறந்துவிடாதீர்கள்...மறந்தும் இருந்துவிடாதீர்கள்! ஏப்ரல் 05 காலை பத்து மணி. டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை.