Mar 6, 2015

சமூகத்தின் பாலியல் சிக்கல்கள்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஒரு படத்தை தடை செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேசாமல் விட்டுவிட்டால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிடும். ஆனால் இவர்கள் தடை செய்கிறேன் பேர்வழி என்று விளம்பரத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். ஓரிரு நாட்களிலேயே லட்சக்கணக்கானவரகள் பார்த்துவிடுகிறார்கள். நேற்று பிபிசி எடுத்த ‘India's daughter' என்கிற ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் ஆவணப்படம். scoopwhoop என்ற தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு மணி நேர ஆவணப்படம். 

இந்தப் படம் எதற்காக தடை செய்ப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்திலிருந்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் வரை ஏகப்பட்ட பெருந்தலைகள் படத்தில் பேசியிருக்கிறார்கள். அரசாங்கம் நியமித்த கமிட்டியின் உறுப்பினர்களின் பேச்சு இடம் பெற்றிருக்கிறது. டெல்லியின் வன்புணர்வு நடைபெற்ற சம்பவத்தின் இடங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் பிரச்சினையில்லை. திஹார் சிறைச்சாலைக்குள் சென்று குற்றவாளிகளில் ஒருவனை நேர்காணல் செய்தது தவறு என்பதுதான் அரசாங்கத்தின் பிரச்சினை போலிருக்கிறது. அவனும் எந்த அலட்டலும் இல்லாமல் பேசுகிறான். எப்படி வன்புணர்ந்தோம் என்பதில் ஆரம்பித்து அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள்ளிலிருந்து சிறுகுடலை உருவியது வரை எந்தச் சங்கடமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறான். ‘அவ கம்முன்னு படுத்திருந்தா செத்திருக்கவே மாட்டா’ என்கிறான். அவனுடைய வழக்கறிஞர்கள் அதைவிட அற்புதமாக பேசுகிறார்கள். எங்களுடைய பண்பாட்டில் பெண்களுக்கு இடமே இல்லை என்று ஒருவர் மார்தட்டுகிறார். இன்னொருவரோ ஒரு படி மேலே சென்று என்னுடைய மகள் இப்படியெல்லாம் அடையாளம் தெரியாதவனுடன் இரவு நேரத்தில் சினிமாவுக்கு சென்றுவிட்டு வந்தால் இழுத்து வந்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருப்பேன் என்கிறார்.

பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவளுடைய நண்பனொருவன் அவளுடைய புகழ்ந்து மட்டுமே பேசுகிறான். இடையில் மனநல ஆலோசகர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள். அவ்வப்போது பொங்கி வழிந்த தலைநகரின் போராட்டங்களைக் காட்டுகிறார்கள். குற்றவாளிகளின் குடும்பத்தினரும் பேசுகிறார்கள். ‘அவள் மட்டும்தான் இந்தியாவின் மகளா? என் கணவனைத் தூக்கில் போட்டால் நானும் எனது குழந்தையும் என்ன செய்வோம்?’ என்று குற்றவாளி ஒருவனின் மனைவி கேட்கிறாள். அவளுக்கு கைக்குழந்தை ஒன்றிருக்கிறது.

இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் கருத்துக்களை பதிவு செய்யும் ஒரு ஆவணப்படமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த ஆவணப்படம் வெளியாவதில் அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை? சர்வதேச அளவில் நம் தேசத்தின் முகமூடி கிழிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். ஏற்கனவே சர்வதேச அரங்கில் இந்தியாவின் மானம் கப்பல் ஏறுகிறது. ‘அந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று அறிவிக்கிறார்கள். இந்தியாவில் பயணம் செய்பவர்களுக்கான travel advise கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். திரும்பத் திரும்ப இதைத்தான் எழுதுகிறார்கள். இந்த லட்சணத்தில் இந்த ஆவணப்படம் வெளியானால் பிரச்சினை பெரிதாகும் என மத்திய அரசாங்கம் யோசிக்கிறது. தடை செய்துவிட்டார்கள்.

தடை செய்வதால் தேசத்தின் நற்பெயரைக் காப்பாற்றிவிட முடியுமா? சீனாவும், வடகொரியாவும் தங்கள் நாட்டில் நடக்கும் எந்தவிவகாரங்களையும் வெளியில் கசியவிடுவதில்லை. அவர்களுக்கு நற்பெயர் இருக்கிறதா என்ன? இந்தியாவும் அப்படியானதொரு இடத்துக்கு நகர விரும்புகிறதா என்று அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியா போன்ற ஓரளவு நாகரிகமான தேசத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழுமானால் அது பற்றிய பரவலான விவாதம் உருவாக்கப்பட வேண்டும். சாமானிய மனிதர்கள் வரைக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். இது நடந்த சம்பவம்தானே? அதைத்தானே பதிவு செய்திருக்கிறார்கள்? இல்லாததையும் பொல்லாததையுமா படம் எடுத்திருக்கிறார்கள்? 

இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு அவன் ஏன் எந்தவிதத்திலும் குற்றவுணர்ச்சி கொள்வதில்லை. தனது தவறைப் பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் எப்படி பேச முடிகிறது? அவளது காதலனை அடித்து நிர்வாணப்படுத்தி வீசியிருக்கிறார்கள். அவளை குரூரமாக வன்புணர்ந்திருக்கிறார்கள். கண்ட இடத்தில் கடித்திருக்கிறார்கள். இரும்பு ஒன்றை அவளுடைய உடலுக்குள் நுழைத்து வெளியே இழுத்து குடலையும் சேர்த்து உருவியிருக்கிறார்கள். பேருந்து முழுவதும் வழிந்து கிடந்த ரத்தத்தைக் கழுவும் போதாவது உணர்ச்சியுள்ள மனிதர்களாக இருந்தால் வருந்தியிருப்பார்கள் அல்லவா? இவ்வளவு நடந்த பிறகும் வீடியோவுக்கு முன்பாக அமர்ந்து ‘தவறு அவள் மேல்தான்’ என்று பேசுகிறான் என்றால் சிக்கல் எங்கேயிருக்கிறது? வெளியிலிருந்து பேசுபவர்கள் ‘அவர்களைத் தூக்கிலிடுங்கள்’ என்றுதான் பேசுகிறார்கள். தூக்கிலிட்டுவிட்டால் அடுத்த வன்புணர்ச்சியே நடக்காதா? பிரச்சினையின் ஆதாரப்புள்ளியை நோக்கி அரசாங்கம் துளித் துளியாகவாவது நகர வேண்டும்.

அப்படியில்லாமல் நிர்பயா நிதி என்று மத்திய பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதால் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுத்துவிட முடியுமா என்ன? உண்மையிலேயே  புரியவில்லை.

அந்தக் குற்றவாளியைக் கூட விட்டுவிடலாம். படிப்பறிவில்லாதவன், குடிகாரன், முரடன். அப்படித்தான் இருப்பான். அந்த வழக்கறிஞர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? இவ்வளவுதான் நம் தேசம் இல்லையா?

ஒரு பிரச்சினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதானே நாகரிக சமூகமாக இருக்க முடியும்? கற்றுக் கொண்டோமா என்ன? அந்தச் சம்பவத்திற்கு பிறகு கிளர்ந்தெழுந்த போராட்டங்களைப் பார்த்தால் புல்லரித்தது. நமக்கு இவ்வளவு சுரணை என்பதான புல்லரிப்பு அது. பத்து நாட்கள்தான். பிறகு அத்தனையும் மறந்து போனது. ஆளாளுக்கு அவரவர் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைக்கு பிறகு வெளியான ஒவ்வொரு வன்புணர்வு சம்பவங்கள் குறித்தான செய்திகளும் வெற்றிகரமாக இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பதுதான் நிஜம். உத்தரப்பிரதேசத்தில் பெண்களைக் கொன்று ஊருக்கு வெளியில் மரத்தில் கட்டித் தொங்கவிட்டார்களே என்ன ஆனது? கோவாவில் கடற்கரையில் வைத்து வன்புணர்ந்தார்களே என்னவானது? எதுவுமே வெளிவரவில்லை அல்லது வெளிவந்தவுடன் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

இந்தியாவும் தனது குற்றங்களையும் பிரச்சினைகளையும் மறைத்து சீனாவைப் போலவோ அல்லது கொரியாவைப் போலவே தங்களை யோக்கியர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ‘நடந்தது நடந்துவிட்டது..இனி நடக்காமல் பாதுகாப்போம்’ என்று உறுதியளித்துவிட்டு இது போன்ற பிரச்சினைகளில் வெளிப்படையான விவாதங்களும் உரையாடல்களும் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரட்டும். பிரச்சினை எங்கேயிருக்கிறது என்பதைக் கூட நாம் இன்னமும் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். ஒரு பக்கத்தில் இருப்பவர்கள் அவளது தொடை தெரிகிறது என்று பேசினால் இன்னொரு பக்கத்திலிருந்து அவன் ஜிப் போடாமல் அலைகிறான் என்று கத்துகிறார்கள். பிரச்சினை இரண்டு பக்கத்திலும் இருக்கிறது. 

பாலியல் வறட்சி மிகுந்த தேசமாக இந்தியா இருக்கிறது. ஒரு பக்கத்தில் இணையமும் செல்போனும் ஒரு நடிகை குளிப்பது வரைக்கும் கொண்டு வந்து கொடுத்து மூளைக்குள் வேதியியல் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் Fifty of shades of grey போன்ற படங்களைத் தடை செய்து நமது கலாச்சாரத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி தடை செய்தால் விட்டுவிடுவார்களா என்ன? ஒரு வாரத்தில் எத்தனை லட்சம் பேர்கள் இந்தப் படத்தை பார்க்கப் போகிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்க்கலாம். அந்தப் படத்தைவிடவும் குரூரமான பாலியல் சரக்குகள் இந்த தேசம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்று கூட புரியாத அரசாங்கமாகவா இது இருக்கிறது? அம்மணக்குண்டி படங்கள் இல்லாத சிடி கடையே இல்லை. பாலியல் புத்தகங்கள் விற்கப்படாத சாலையோர புத்தகக்கடைகளே இல்லை. ஒருவனுக்கு பாலியல் பற்றிய அத்தனை தகவல்களும் சர்வசாதாரணமாக கைகளில் கிடைத்துவிடுகின்றன. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்கான சூழல்தான் இங்கு இல்லை. 

நாகரிக வளர்ச்சியடையும் தேசத்தில் இது போன்ற பிரச்சினைகளைப் பற்றி விரிவாக பேசுவதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வெறும் திருமணம் மட்டுமே ஒருவனுக்கான பாலியல் தீர்வுகளை உருவாக்கித் தந்துவிடுவதில்லை. இந்த புரிதலின்மையின் காரணமாகத்தான் எங்கேயோ சிக்கல் உருவாகுகிறது. அவை மனோவியல் சிக்கல்களாக உருவெடுக்கின்றன. பணம் படைத்தவன் அதைப் பயன்படுத்தி பாலியல் தீர்வுகளை நாடுகிறான். இல்லாதவர்கள் வேறு வழிகளை நாடுகிறார்கள். ஆனால் எந்தவொரு வழியுமே பெரும்பாலும் பெண்களைத்தான் காவு வாங்குகின்றன என்பதுதான் நிதர்சனம். பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வேகம் என்பதோடு சேர்த்து நமக்கு பக்குவமும் வளர வேண்டிய அவசியமிருக்கிறது. அரசாங்கம் உரையாடல்களை அனுமதிக்கட்டும். வெளிப்படையான நிதானமான பேச்சுக்கள் ஆரம்பத்தில் சாத்தியமில்லாமல் போகக் கூடும். ஆனால் போகப் போக பக்குவம் வந்துவிடும். அதைவிடுத்து சமூகத்தின் குரல்வளைகளை அமுக்க அமுக்க காமமும் வெறியும் அதன் உடலின் வெவ்வேறு அங்கங்களிலிருந்து பீறிட்டுக் கொண்டேதான் இருக்கும்.