அம்மா இறந்து விடுகிறாள். அந்நியோன்யமான அம்மா. சந்தோஷமோ, வேதனையோ- எதிர்கொண்ட எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொண்டவள் அவள். அப்பன் குடிகாரன். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற குணமுடையவன். ஆனால் அவனைக் கட்டிக் கொண்டதால் அம்மாவுக்கு வருத்தம் எதுவும் இல்லை ‘நீங்க ரெண்டு பேரும் கிடைச்சீங்களே’ என்று மகனிடமும் மகளிடமும் ஆறுதல் பட்டுக் கொள்ளும் அற்புதமான ஆன்மாவாக இருந்தவள். மகளும் அம்மாவும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கும் போதே தண்டுவடத்தில் ஒரு கட்டி வந்துவிடுகிறது. எப்படியும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்துவிடுவாள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ம்ஹூம். ‘இத்தனை வருஷங்களா மனைவியாகவும் அம்மாவாகவுமே வாழ்ந்துவிட்டேன்...என்னோட வாழ்க்கையை வாழ இன்னமும் காலமிருக்குன்னு நினைச்சிட்டு இருந்தேன்’ என்று கலங்கிய அம்மா இறந்தவுடன் மகளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. உடைந்து போனவள் ஹெராயின் எடுத்துக் கொள்ளத் துவங்குகிறாள். கண்டவனோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். கணவன் நல்லவன்தான். ஆனால் முகம் தெரியாதவர்களோடு தனது மனைவி படுக்கையறையில் கிடப்பதை எப்படி ஏற்றுக் கொள்வான்? பிரச்சினைகள் பெரிதாகி விவகாரத்து செய்து கொள்கிறார்கள். பரஸ்பரம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிரிகிறார்கள்.
செரில் ஸ்ட்ரேட் (Cheryl Strayed) எழுதிய Wild என்ற புத்தகத்தை சில பேர் வாசித்திருக்கக் கூடும். லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற புத்தகம் அது. அவரது சொந்தக் கதைதான் புத்தகமாகியிருக்கிறது. புத்தகத்துக்கு அப்படியொரு பெயர் வைக்கக் காரணமிருக்கிறது. வெறும் அம்மா மகள் கதை மட்டும் இல்லை. அம்மாவின் மறைவுக்குப் பிறகாக மகள் தன்னந்தனியாக நடக்கத் தொடங்குகிறாள். கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு கிலோமீட்டர்கள். காடு, மலை, பனி என்று பல்வேறு இடங்களைத் தாண்டி Pacific Crest Trail என்ற மலைத்தொடரைத் தாண்டுகிறார் செரில். எல்லோராலும் இந்தக் காரியத்தைச் செய்துவிட முடியாது. மலையேற்றத்தில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களே கூட பாதியில் திரும்பிவிடுவார்களாம். பாலையின் கடும் வெப்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். உயரமான மலைப்பாதைகள், சறுக்கிவிடும் பனி மலைகள், விலங்குகள், சக மனிதர்களின் தொந்தரவுகள் என அத்தனை தடைகளையும் தாண்டுவது என்பது- அதுவும் ஒரு பெண் தாண்டுவது என்பது லேசுப்பட்ட காரியமில்லை. ஆனால் செரில் சாதித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் தொடர்ந்து நடந்திருக்கிறார். அது மிகப்பெரிய அனுபவமல்லவா? அதை அப்படியே புத்தகமாக்கிவிட்டார்.
இந்தப் புத்தகத்தை படமாக்கிவிட்டார்கள். அதே டைட்டிலில். 2014 ஆம் ஆண்டில் வெளி வந்த படம் இது. படம் தொடங்கும் வரைக்கும் சிரத்தையில்லாமல்தான் பார்த்தேன். ஆனால் செரிலாக நடித்த அந்த அம்மிணி முதல் காட்சியில் கதறுவார் பாருங்கள். அடுத்த வினாடியே இந்தப் படத்தை வெகு சாதாரணமாக பார்க்கக் கூடாது என்று முடிவு செய்ய வைத்துவிடுகிறது. ஏதோ ஒரு பெண் கலவியின் உச்சத்தில் கத்துவதாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். ஆனால் காரணம் அதுவன்று. மலையேறி வரும் அவரது கால் விரல் நகத்தில் அடிபட்டிருக்கும். அந்த வலியில்தான் கதறுகிறாள். ரத்தம் கசிந்து கொண்டிருக்கையில் தனது காலணியைக் கழற்றிவிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு நகத்தை பிடுங்கியெறிகிறாள். அப்பொழுது ஷூ உருண்டு கீழே ஓடிவிடும். ஷூ இல்லாமல் அந்த மலையை எப்படித் தாண்டுவது? மிச்சமிருக்கும் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற குழப்பத்தில் அதையும் தூக்கியெறிந்துவிட்டு அவர் கதறுவதை நல்ல ஒலியமைப்போடு பார்த்தால் நமது முதுகுத் தண்டில் சிலிர்த்துவிடும். எனக்கு சிலிர்த்துவிட்டது.

போதையைப் பழகிக் கொண்டவள், காமத்தின் கட்டற்ற போக்குகளில் திசை மாறிக் கிடந்தவள்தான் இப்படியொரு சாகசத்தைச் செய்கிறாள். அந்தச் சாகசத்தின் வழியாக பாசமும் நெகிழ்ச்சியும் தோல்விகளும் பிரிவுகளும் நிறைந்த தனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறாள். அந்த வாழ்க்கையில் அம்மா வருகிறாள். சகோதரன் இடம் பெறுகிறான். கணவனுக்கு இடமிருக்கிறது. முகம் தெரியாத ஆடவர்கள் வந்து போகிறார்கள். இவ்வளவு சுவாரஸியமான கதை சிக்கினால் சினிமாக்காரர்கள் விடுவார்களா?
ரீஸ் விதர்ஸ்பூன் (Reese Witherspoon)- அவர்தான் நாயகி. அம்மா குறித்த நினைவுகள், கணவனுடனான பிரிவு என்ற தனது காயங்களை ஆற்றுவதற்கு நடப்பதுதான் வழி என்று முடிவு செய்கிறார். இவ்வளவு தொலைவையும் நடந்தே கடக்கப்போவதாக முடிவு செய்து பயணத்துக்கு தேவையான சாமான்களை மூட்டை கட்டி அதைத் தூக்கமாட்டாமல் தூக்கி தோளில் சுமக்கும் காட்சியில் ஆரம்பித்து மொத்தப் படத்தையும் தனது முதுகில் தூக்கிக் கொண்டு சுமக்கிறார். அவர் நடக்கும் போது தனது பழைய கதையின் சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டே வருவதுதான் படம் முழுக்கவும். ஆனால் அதைப் பின்னியிருக்கும் விதம்தான் அட்டகாசம். எந்த இடத்திலும் சலிப்பே தட்டுவதில்லை. அடுத்தது என்ன நடக்கும் என்றே தன்னோடு சேர்த்து பார்வையாளர்களையும் பயணிக்க வைத்துவிடுகிறார்.
தனது பாதையில் ஒரு குதிரையைச் சந்திக்கிறாள் செரில். அந்தக் குதிரை தனது அம்மா வளர்த்த குதிரை ஒன்றை நினைவூட்டுகிறது. அம்மா இறப்பதற்கு முன்பாக அந்தக் குதிரையிடம் அன்பாக நடந்து கொள்ளச் சொல்கிறாள். ஆனால் அவள் இறந்த பிறகு செரிலின் சகோதரன் சுட்டுக் கொல்கிறான். அதை இவளும் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். அந்தக் காட்சி எதைச் சொல்லவருகிறது என்று கொஞ்ச நேரம் புரியவில்லை. ஆனால் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. என்னதான் தனது நினைவுகளை அழிக்க முடிந்தாலும் எவ்வளவு தூரம்தான் நடந்து சலித்தாலும் அந்த நினைவுகள் அவளோடுதான் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதான புரிதல் அது. யாரால்தான் நினைவுகளை அழித்துவிட முடியும்? காலங்காலமாக நம்மோடுதானே ஒட்டிக் கொண்டிருக்கின்றன?.

தனது நடையை ஆரம்பிக்கும் முதல் நாள் மாலையிலேயே ‘திரும்பிவிடலாமா’ என்று யோசிக்கிறாள். ஆனால் திரும்புவதில்லை. உறுதியாக இருக்கிறாள். தனது பாதையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். மிகப்பெரிய பாம்பு ஒன்றை பார்க்கிறாள். இரவில் படுத்திருக்கும் போது அந்தப் பாம்பு வந்துவிடுவதாக நினைப்பு வந்து அலறியடித்து எழுகிறாள். யாருமே இல்லாத வனாந்திரத்தின் தனிமையில் ஒரு நரியைப் பார்க்கிறாள். அவளது தனிமைக்கு ஒரு விதத்தில் அது ஆறுதலாக இருக்கிறது. போகாதே என்கிறாள். ஆனால் அது நகர்ந்துவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீரே சிக்காமல் தவிக்கிறாள். ஓரிடத்தில் ஈயும் கொசுக்களும் நிறைந்து கிடக்கும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதை பாட்டிலில் நிரப்பிக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆடவர்கள் வருகிறார்கள். தங்களோடு ஓரிரவைக் கொண்டாடத் தயாரா என்கிறார்கள். அந்த நடுக்காட்டில் இப்படியெல்லாம் கேட்டால் பயம் வரத்தானே செய்யும்? பயந்து போனவள் அந்த இடத்தை விட்டு நகர்வதாக பாவனை காட்டிவிட்டு அவர்கள் சென்றுவிட்டதான நம்பிக்கையில் ஆடை மாற்றுகிறாள். அந்த இருவரில் ஒருவன் அங்கேயேதான் இருப்பான். மீண்டும் அதையே கேட்பான். அவனிடம் உறுதியாகப் பேசிவிட்டு நகர்ந்து செல்வாள். இப்படியாக ஒவ்வொரு காட்சியிலுமே ரீஸ் புகுந்து விளையாடியிருக்கிறார்.
இழந்த உறவுகள் அவளுக்குள் உருவாக்கும் வெற்றிடம், அதை நிரப்புவதற்கு வழி தெரியாமல் எதை எதையோ நாடுகின்ற மனம், வலியைக் கூட பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிற உறுதி என ஒரு பெண்ணின் மனநிலையை எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் படம் நெடுக காட்டியிருக்கிறார்கள். அதுவும் விதவிதமான பரிமாணங்களில். இப்படிப்பட்ட வித்தியாசமான படங்களைப் பார்க்கும் போது ஏதோவொருவிதத்தில் மனம் சலனமடைந்துவிடுகிறது. நமக்குள் எவ்வளவோ கேள்விகள் அலையடிக்கின்றன. இப்படி எழுப்பப்படும் கேள்விகள்தான் ஒரு நல்ல படைப்புக்கான அடையாளம். அந்தக் கேள்விகளுக்கு அந்தப் படைப்பிலிருந்து நேரடியான பதிலை பெற்றுவிட முடியும் என்று நம்ப வேண்டியதில்லை. ஆனால் அதற்கான பதில்களை நமக்குள் நாமே தேடத் தொடங்கியிருப்போம். Wild அப்படியானவொரு படம்தான். அற்புதமான படம்.
(தினமணி.காம் - இல் எழுது தொடரின் இரண்டாவது பகுதி)