ஊர்ப்பக்கத்தில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தோம். அந்த வீட்டில் ஆறு வயதுக் குழந்தை உண்டு. ‘செல்போனை எடுத்து என்ன வேணும்னாலும் செய்வான்’ என்றார்கள். அது அவர்களுக்கு பெருமையான விஷயமாகத் தெரிந்தது. பெரும்பாலான நேரமும் அந்தக் குழந்தை செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் என்றார்கள். இது குழந்தைக்கு ஆரோக்கியமான செயல் இல்லை என்று சொல்லலாம்தான். ஆனால் அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
டிவி, செல்போன் போன்றவற்றின் திரையோடு குழந்தைகளை பிணைத்துக் கட்டுவதனால் கண் கெட்டுப் போய்விடும் என்பதெல்லாம் க்ளிஷேவான வாக்கியம். குழந்தையின் சிந்தனைத் திறன் குறைந்துவிடும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. புத்தகம் வாசிப்பதற்கும் படம் பார்ப்பதற்கும் இருக்கக் கூடிய மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது வரிக்கு வரி மனம் அலை பாயும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பத்தியை வாசித்துவிட்டு யோசிப்போம். ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு அது பற்றி சிந்திப்போம். இப்படி வாசிக்கும் போது மூளையைத் தூண்டுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. பல சமயங்களில் நாம் வாசிக்கும் விஷயத்தைத் தாண்டியும் யோசிக்கிறோம். மூளைக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் காட்சி ஊடகங்களில் இது நிகழ்வதில்லை. ஒரு மணி நேரம் படம் பார்த்தால் நமது புலன்களை மொத்தமாக திரையிடம் அடமானம் வைக்க வேண்டியிருக்கிறது. படம் முடிந்த பிறகு யோசித்தாலும் கூட அது பெரும்பாலும் படம் சார்ந்த ஒரு யோசனையாகத்தான் இருக்குமே தவிர அதைத் தாண்டி யோசிப்பதில்லை. அதனால்தான் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக அரை மணி நேரம் வாசித்தால் கூட போதும். கனவேலை செய்யும்.
பெரியவர்கள் வாசிக்கலாம். குழந்தைகளால் வாசிக்க முடியுமா? முடியாதுதான். அவர்களுக்கு என்ன உபாயம் இருக்கிறது? நம்மால் கதை சொல்ல முடியுமே.
குழந்தைகளின் மனமானது எதையாவது யோசித்துக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டுமே இருக்கக் கூடியது. அதை இப்படி ஒரு திரையோடு பிணைப்பது அவர்களின் சிந்தனைத்திறன் வளர்ச்சிக்கு தடை போட்டுவிடக் கூடியது என்பதை நாசூக்க்காகத்தான் அந்தக் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டியிருந்தது. ஓரளவு புரிந்து கொண்ட மாதிரி தலையை ஆட்டினார்கள். செல்போனைக் கையில் கொடுக்க வேண்டாம் என்று சொல்வது எளிது. ஆனால் அதற்கு மாற்றாக என்ன செய்வது? இந்தக் காலத்துக் குழந்தைகள் அமைதியாக இருப்பார்களா? எதையாவது துறுதுறுவென்று செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றார்கள். அதற்குத்தான் கதை பேசுவது. விளையாடுவது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வனம் பற்றிய கதையைச் சொன்னால் குழந்தைகள் வனம் பற்றி கற்பனை செய்யத் தொடங்குவார்கள். ஒரு விலங்கு பற்றிச் சொன்னால் அந்த விலங்கினை தங்களது கற்பனையில் கொண்டு வருவார்கள். இப்படியான சிந்தனைகள்தான் அவர்களது மூளையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன. அதனால்தான் கதை சொல்ல வேண்டும் என்பது.
இப்படி குழந்தைகளை தொடர்ந்து ஏதாவதொரு விஷயத்தில் engage செய்து கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பழைய செய்தித்தாள்களைக் கொடுத்து அதில் இருக்கும் உருவங்களைக் கத்தரிக்கச் சொல்லலாம். வெள்ளைக்காகிதத்தையும் வண்ணப் பென்சில்களையும் கொடுத்து படங்களை வரையச் சொல்லலாம். இப்படி ஏதாவதொரு வகையில் அவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அவர்களுக்கு பொழுது போகவில்லையென்றால் டிவியில்தான் அடைக்கலம் ஆகிறார்கள். செல்போன்களைத்தான் கைகளில் எடுக்கிறார்கள்.
எத்தனை பேரால் தம் குழந்தையிடம் ஒரு பறவையைக் காட்டி அதைப் பற்றி பேச முடிகிறது? கற்களின் வண்ணங்களைக் காட்டி ஆச்சரியப்பட முடிகிறது? இரவில் நட்சத்திரங்களை காட்ட முடிகிறது? பூக்களின் தன்மைகளையும் அதன் மென்மை குறித்தும் பேச முடிகிறது. மிக மிகக் குறைவானவர்களால் மட்டுமே சாத்தியமாகிறது. பெரும்பாலானவர்களின் பதில் ஒன்றுதான் - நேரமில்லை. நேரமில்லை என்பதைவிடவும் இதையெல்லாம் செய்யலாம் என்பதே கூட பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.
அதிகபட்சம் கதை சொல்கிறார்கள். ஆனால் கதைகளை எப்படிச் சொல்வது என்பதும் பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ‘ஒரே கதைதான் எனக்குத் தெரியும். திரும்பத் திரும்ப அதையே சொன்னால் கண்டுபிடித்துவிடுகிறான்’ என்று ஒரு நண்பர் சலித்துக் கொண்டார். குழந்தைகளுக்கு கதை சொல்வது இரண்டம்பட்சம். அடிப்படையில் ஒரு சுவாரஸியமான மனிதராக நாம் இருப்பதற்கு நிறைய உள்ளீடுகள் அவசியமானதாக இருக்கிறது. விடிந்தால் அலுவலகம் செல்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம் என்று இருந்தால் நம்மிடம் என்ன சுவாரஸியம் இருக்கும்? அடுத்தவர்களின் அனுபவங்கள், புத்தகங்கள், படங்கள், நமது சூழலை கவனித்தல் என்பனவற்றின் வழியாக நமக்குள் இறங்கும் சரக்குகள்தான் நம்மை சுவாரஸியமாக்கிக் கொண்டிருக்கின்றன. நம்மை சுவாரஸியமாக்கிக் கொள்வதற்காகவாவது நமது கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருப்பது அவசியம். ஆனால் அதற்கும் ‘நேரமில்லை சார்’ என்று சொல்லிவிடுகிறோம்.
குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கும் உள்ளீடுகள் அவசியம். நம்மை சுவாரஸியமாக்கிக் கொள்ள வேண்டும். ஏகப்பட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வாசித்துக் கதை சொல்லலாம். சமீபமாக தமிழில் சில நல்ல சஞ்சிகைகளும் வருகின்றன. அவையும் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் மிகப்பெரிய அளவில் பயன்படுகின்றன. சின்ன நதி என்றொரு சஞ்சிகை வருகிறது. குழந்தைகளுக்கான புத்தகம். வழுவழுப்பான காகிதங்கள், வண்ணப்படங்கள், கதைகள், அறிவியல் செய்திகள், சூழலியல் சார்ந்த தகவல்கள், புதிர்கள், விடுகதைகள் என்று அட்டகாசமாக இருக்கிறது. வெறும் பதினைந்து ரூபாய்க்கு இதை எப்படிச் சாத்தியப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. வடிவமைப்பு மட்டுமில்லை உள்ளேயிருக்கும் தகவல்களையும் பாராட்டியாக வேண்டும். அதற்கு காரணமிருக்கிறது. யூமாவாசுகிதான் ஆசிரியர். அவரைப் பற்றித் தெரியும். தன் மீது எந்தவிதமான விளம்பர வெளிச்சமும் விழுந்துவிடாமல் தனது எழுத்தை மிகத் தீவிரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி. அவரது கைவண்ணத்தில் வருவது சலிப்பேற்படுத்திவிட வாய்ப்பில்லை. சிறப்பாசிரியராக ப.கூத்தலிங்கம் இருக்கிறார். அவரும் மிக முக்கியமான ஆளுமை. இரண்டு பேரும் தங்கள் குழுவினரோடு சேர்ந்து கலக்குகிறார்கள்.
ஆண்டுச் சந்தா 150 ரூபாய்தான். ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் மிகச் சரியாக வந்துவிடுகிறது. அதுவும் கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். எப்படி கட்டுபடியாகிறது என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்குத் தகுதியானவர்கள். அறக்கட்டளையின் வழியாக பத்து அரசுப் பள்ளிகளுக்கான சந்தாவை கட்டிவிடலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவு முக்கியமான சஞ்சிகை இது. வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் தைரியமாக சந்தா கட்டிவிடலாம். எதைப் பற்றியும் யோசிக்கவே வேண்டியதில்லை.
முகவரி:
சின்ன நதி.
முதல் தளம்,
புதிய எண்: 5, பழைய எண்: 3/1
முதல் தெரு, போயஸ் சாலை,
தேனாம்பேட்டை
சென்னை- 600 018
அலுவலக எண்: 044- 24352050
மின்னஞ்சல்: info@chinnanathi.com