Mar 12, 2015

சாக்லேட் வேண்டுமா?

ஒரு காகிதத்தைக் இரண்டாக நான்காக எட்டாக பதினாறாக கிழித்துக் கொண்டே போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதைக் கிழிக்கவே முடியாத அளவுக்கு ஒரு சிறுதுகளாக நின்று விடும் அல்லவா? - பல நூறு வருடங்களுக்கு முன்பாக ஒரு அறிவியலாளர் இப்படி யோசித்தாராம். அப்படி பிரிக்கவே முடியாத ஒரு ஐட்டம்தான் Atom- அணு என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது நடந்து ஏகப்பட்ட வருடங்கள் கழித்துத்தான் அணுவை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் அணுவைப் அதற்கு மேல் பிளக்க முடியாது என்ற நம்பிக்கைதான் இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரியுமே? அணுவைப் பிளந்து ஆழ்கடலைத் துளைத்து- ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் நாசக்கேடாக்கியது. அணு என்பது அதோடு முடிந்து போவதில்லை- அதற்குள் ஏகப்பட்ட சரக்குகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். வெறும் எலெக்ட்ரானும், புரோட்டானும், நியூட்ரானும் மட்டுமில்லை அதைவிடவும் துக்கினியூண்டு சமாச்சாரங்களால் ஆனது என்கிற முடிவுக்கு வந்தார்கள். அப்படியான துக்கினியூண்டு சமாச்சாரங்களில் ஒன்றுதான் நியூட்ரினோ.

இயற்கையாகவே நம்மைச் சுற்றி பல கோடி நியூட்ரினோக்கள் இருக்கின்றன. நமது உடலுக்குள் பல கோடி நியூட்ரினோக்கள் சென்று வருகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? எதைச் சாதிக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. வெறும் ஊகங்கள்தான். மருத்துவத்தில் ராணுவத்தில் பயன்படக் கூடும் என்று யூகிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்? அணுவைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் அது இன்னென்ன வேலைகளைச் செய்யும் என்று யாராவது யோசித்திருப்பார்களா? அதே போலத்தான்  நியூட்ரினோவை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்க சில வேலைகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு வேலைதான் தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்.

இந்தத் திட்டத்திற்கு ஒரு பக்கம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் இன்னொரு பக்கம் எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் இந்தத் திட்டத்தின் வழியாகச் செய்யப் போகிறார்கள்? 

ஒரு மிக ஆழமான குகையை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைக்கப் போகிறார்கள். மலை உச்சியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மூன்றாயிரம் அடி ஆழத்தில் மிகப் பெரிய இரண்டு அறைகளை உருவாக்கவிருக்கிறார்கள். அந்த அறைகளில் ஒன்று கட்டுப்பாட்டு அறையாகச் செயல்படும் இன்னொன்றில் நியுட்ரினோவை உணரும் கருவியை வைப்பார்கள். எதற்காக இவ்வளவு ஆழத்தில் வைக்க வேண்டும் என்றால் அப்பொழுதுதான் பிற துகள்களை ஓரளவு வடிகட்ட முடியும் என்கிறார்கள். மலை ஒரு வடிகட்டியைப் போல செயல்படும். இல்லையென்றால் காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவையின் காரணமாக அவ்வளவு தெளிவாக நியூட்ரினோவை அடையாளம் காண முடியாது.

கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்தத் திட்டத்திற்காக ஏறத்தாழ ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தை உள்ளே வைக்கப் போகிறார்கள். இப்படியான மிகப்பெரிய ஆராய்ச்சியினால் ஏதேனும் கண்டுபிடிப்புகள் சாத்தியமானால் நம் நாட்டுக்கு பெருமைதானே என்கிறார்கள் ஆதரவாளர்கள். பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத தேனி மாவட்டத்திற்கு இந்தத் திட்டத்தினால் உலக அளவிலான கவனம் கிடைக்கும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.

சரி இந்தத் திட்டத்தினால் என்ன பிரச்சினை? சூழலியலாளர்கள் நிறையக் காரணங்களைச் சொல்கிறார்கள்.

அவற்றில் முக்கியமானவை என்றால் -
  • தமிழக அரசு ஒதுக்கியிருக்கும் 66 ஏக்கர் நிலமும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பகுதி. இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டித் தள்ளுவார்கள். இதனால் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • மலைகளைத் தோண்டும் போது உடைபடும் கற்கள், தூசிப் படிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
  • வெட்டியெடுக்கும் மலைகளை இவர்கள் எங்கே கொண்டு போய் கொட்டுவார்கள்? அதுவும் பாதிப்பை உருவாக்கும்.
  • இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எங்கேயிருந்து எடுப்பார்கள்? - இந்தத் திட்டத்திற்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கும் என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். அதற்காக மிகப்பெரிய குழாய்களை வனப்பகுதிக்குள் அமைக்க வேண்டியிருக்கும். அதற்காகவும் மரங்களை வெட்டுவார்கள். குழி தோண்டுவார்கள். இப்படி நிறைய சூழலியல் சார்ந்த பிரச்சினைகளை முன் வைக்கிறார்கள்
வெறும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லை- ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் நம் காலத்தின் மிக முக்கியமான இயற்பியலாளர். கடவுளின் துகள் என்று அழைக்கப்படுகிற இன்னொரு நுண்துகளான ஹிக்ஸ் துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதுவும் இப்படியொரு எசகுபிசகான ஆராய்ச்சிதான். கிட்டத்தட்ட அறுநூறு அடி ஆழத்தில் ஒரு கருவியை அமைத்து எதிரெதிர்திசைகளிலிருந்து ஒளியின் வேகத்தில் புரோட்டான்களை அனுப்பி மோதச் செய்து அதிலிருந்து ஹிக்ஸ் துகள்களைக் கண்டுபிடிக்கும் வேலைகளைச் செய்தார்கள். அப்பொழுது ஹாக்கிங் ‘தம்பிகளா இயற்கையாக இருக்கும் துகள்களைக் கண்டுபிடிப்பது வேற...இப்படி நீங்க அளவுக்கதிகமான ஆற்றலின் வழியாகக் கண்டுபிடிப்பது வேற...இப்படியெல்லாம் மோதச் செய்தால் இந்தப் புவிக்கு மட்டுமில்லை இந்த பிரபஞ்சத்துக்கே கேடாக முடியலாம்’ என்றார். 

இதே மாதிரியான ஒரு திட்டம்தான் நியுட்ரினோ திட்டமும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். சாமானியர்களுக்கு இத்திட்டத்தினால் என்ன பலன்  கிடைக்கப் போகிறது என்பதையெல்லாம் அப்புறமாக பேசிக் கொள்ளலாம். நியுட்ரினோ துகள்களைக் கவர்வதற்காக மிகப்பெரிய கண்ணாடிகளுக்கு இடையில் ஒரு வாயுவை நிரப்பி அதன் ஓரங்களை அடைத்து ரெஸிஸ்ட் ப்ளேட்டிங் சேம்பர்களைச் செய்கிறார்கள். அது என்ன வாயு? ஒருவேளை கசிந்தால் என்ன நடக்கும் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.

இத்தகைய மிகப்பெரிய சமாச்சாரங்களில் அவ்வளவு சுலபமாக எந்தப் பக்கமும் சாய முடிவதில்லை. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போது இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும் மக்கள் தொகைக்குமான மின்சாரத்திற்கு எங்கே போவது என்ற கேள்விதான் எழுந்தது. சோலாரில் தயாரிக்கலாம், காற்றாலையில் தயாரிக்கலாம் என்று யானைப்பசிக்கு சோளப்பொறியைக் காட்டினார்கள்.  ‘அதெல்லாம் ஆகிற காரியம் இல்லை சார்’ என்றால் ‘சரி ஏதாவது விபத்து நடந்தால் அதற்கு என்ன உபாயங்களை வைத்திருக்கிறார்கள்?’ என்ற எதிர்கேள்வியைக் கேட்டார்கள். அவர்களின் கேள்வியும் சரியானதுதான். இதுவரை அரசாங்கம் எந்த பதிலையும் சொன்னதாகத் தெரியவில்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறார்கள்.

இப்பொழுதும் அப்படித்தான். இப்படியான ஆராய்ச்சிகள் நிகழ்ந்தால்தானே எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் எதிர்ப்பாளர்களின் கருத்துகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை என்றுதான் நம்ப வேண்டியிருக்கிறது.