Mar 1, 2015

கம்ப ராமாயணம்

பெங்களூரில் கம்பராமாயண வகுப்பு தொடர்ந்து நடக்கிறது. பணம் கட்டி படிக்கும் வகுப்பு இல்லை. எழுத்தாளர் சொக்கனின் அலுவலகம் சில்க் போர்டில் இருக்கிறது. அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் கூடுகிறார்கள். ஹரிகிதான் ஆசிரியர். ஹரிகிருஷ்ணன் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் ஹரிகி. அவருக்கு கம்பராமாயணத்தில் மிகச்சிறந்த புலமையுண்டு. கலந்து கொள்பவர்களில் ஒருவர் பாடலை வாசிக்க அதன் அர்த்தம் பற்றி உரையாடுகிறார்கள். தொடக்கத்தில் சில வகுப்புகளில் கலந்து கொண்டேன். ஆனால் பெரும்பாலான வார இறுதிகளில் பெங்களூரில் இருக்க முடிவதில்லை என்பதால் அறுபட்டு போய்விட்டது. அந்தவிதத்தில் வருத்தம்தான்.

இப்பொழுது நூறு வகுப்புகளைத் தாண்டியாகிவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம் முடித்து யுத்த காண்டத்தின் முதல் பகுதியில் இருக்கிறார்கள். பத்தாயிரம் பாடல்களை ஒரு குழுவாக அமர்ந்து எந்தவித தடையுமில்லாமல் தொடர்ந்து நிகழ்த்துவது- அதுவும் பெங்களூர் போன்ற அவசரமான ஊரில் நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். பாராட்டுக்குரியவர்கள். 

எப்படியும் இன்னமும் ஒரு வருடமாவது ராமாயண வகுப்புகள் நிகழும் என்று சொல்கிறார்கள். 

இந்த வகுப்புகளின் மிகச் சிறந்த அம்சமே ஒவ்வொரு வகுப்பையும் பதிவு செய்து யூடியூப்பில் ஏற்றிவிடுகிறார்கள். நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடலாம். கம்பராமாயணம் மின்னஞ்சல் குழுமத்தில் நானும் இருப்பதால் அவ்வப்போது நிகழ்வுகள் பற்றித் தெரிந்து கொள்வதுண்டு. நேற்று வகுப்புகளின் பதிவுகளை ஹரிகி குழுமத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். விருப்பமுள்ள வேறு சிலருக்கேனும் பயன்படக் கூடும் என்பதால் இங்கும்..