Mar 31, 2015

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்காவது வருடம் முடியப் போகிறது.  ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்றார்கள். வானம் பிளந்து பூ வாளி சொரியும் என்றார்கள். வாயைப் பிளந்து கொண்டு இரட்டை இலைக்குக் குத்தித் தள்ளினார்கள். நானும்தான். என்ன மாறியிருக்கிறது?

எதுவுமே மாறவில்லை.  மோசமாகியிருக்கிறது.

அமைச்சர்கள் யாராவது வாயைத் திறந்து பேசுகிறார்களா? அமைச்சர்களின் பெயரில் ஒரு அறிக்கையாவது வருகிறதா? பக்கத்து மாநிலம்தான் கர்நாடகா. அமைச்சர்கள் பிளந்து கட்டுகிறார்கள். மேகதூது பிரச்சினை என்றால் ஒவ்வொரு அமைச்சரும் தங்களது கருத்தைச் சொல்கிறார்கள். மாநிலத்தில் ஏதேனும் அக்கப்போர் என்றால் வெளிப்படையாக தீர்வுகளை முன்வைக்கிறார்கள். தங்களது துறை குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது அங்கலாய்ப்பாக இருக்கிறது. 

தமிழகத்தில் ஏன் அந்தச் சூழல் இல்லை? எதனால் இவ்வளவும் சோகமும் அமைதியும் கமுக்கமும்? அத்தனை இடங்களிலும் இனம்புரியாத பயம் விரவியிருக்கிறது. யாருமே வெளிப்படையாக பேசுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் எதுவும் நடப்பதில்லை. ஆளும் வர்க்கத்தினர் செய்தியாளர்களைச் சந்திக்கவே பயப்படுகிறார்கள். ஆளும் வர்க்கம் மட்டுமில்லை ஊடகங்களும் கூட பயந்தபடியேதான் அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட விவகாரங்களிலிருந்து நாசூக்காக நழுவிக் கொள்கின்றன. தாலி, பர்தா, தலாக் என்று பொங்கல் வைக்கும் ஒரு ஜால்ரா சேனலாவது தமிழகத்தின் கடந்த நான்காண்டு நடந்த ஆட்சி பற்றி ஒரு விரிவான விவாதம் நடத்தட்டும். செய்யமாட்டார்கள். விளம்பரம் போய்விடும். தொழில் நடத்த முடியாது. 

தமிழகத்தில் வருமானம் இல்லாததற்கும் உலக பொருளாதார மந்த நிலைதான் காரணம் என்று ஓபிஎஸ் கூச்சமே இல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் நட்டமடைந்த நிறுவனங்கள் எத்தனை என்று பட்டியல் எடுத்துப் பார்க்கலாம். நமக்கே நிலைமை தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் கொழித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏன் வருவாய் இல்லையென்றால் தொழில்கள் நாறிக் கிடக்கின்றன. மின்சாரத் தட்டுப்பாடு பாதிப் பேரை தின்று ஏப்பம் விட்டது. பணப்புழக்கம் வெகுவாக குறைந்திருந்தது. தொழில் நடத்தும் சூழல் இல்லாததால் இருக்கிற பணத்தை பதுக்கி வைக்கிறார்கள். விலைவாசி, தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காதது போன்ற பிரச்சினைகளால் திணறுகிறார்கள். சூழலை நாம் கெடுத்து நாசக்கேடாக்கிவிட்டு உலகப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது என்று சிர்ப்பூட்டிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை குறு தொழில்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கின்றன என்கிற கணக்கு இருக்கிறதா? நடுத்தரத் தொழில்களை விட்டுவிட்டவர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்? திருப்பூரிலும், சிவகாசியிலும் மட்டும் கணக்கெடுத்தாலும் கூட போதும். தொழில் செய்பவர்கள் கதறுகிறார்கள். அப்படியொரு கணக்கு இருந்தாலும் வெளியிட மாட்டோம். ஏனென்றால் நாம்தான் முதல் மாநிலம் என்று மார் தட்டிக் கொள்கிறோமே. தமிழகத்தை எதில் முதல் மாநிலம் என்று சொல்வது? டாஸ்மாக் வருமானம் முப்பதாயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. அதுதான் ஆகப்பெரிய சாதனை. குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதுதான் பெருமைப் படத்தக்க நிகழ்வு.

சமீபத்தில் தமிழக முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்றவொரு குறிப்பைப் பார்க்க நேர்ந்தது. அம்மா வாழ்க, புரட்சித்தலைவி சரணம் உள்ளிட்ட கோஷங்களைத் தாண்டி உள்ளே சென்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க 1.5 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். அடேயப்பா. எவ்வளவு பெரிய தொகை இது? தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எத்தனை லட்சங்களில் இருப்பார்கள்? பொறியியல் படித்தவிட்டு குப்புறப்படுத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே சில பல லட்சங்கள் தேறுவார்கள். பட்டப்படிப்பு முடித்தவன், டிப்ளமோ தேறாதவன், பத்தாம் வகுப்போடு நின்று கொண்டவர்கள், பள்ளிக்கூடமே போகாதவர்கள் என்ற பட்டியல் எடுத்தால் எவ்வளவு பேர் தேறுவார்கள்? 

எல்லோரும் ‘வறுமை நிறம் சிவப்பு’ கமலஹாசன் மாதிரி சாக்கடையில் கிடக்கும் ஆப்பிளை பொறுக்கித் தின்று கொண்டிருப்பவர்கள் இல்லைதான். ஆனால் எவ்வளவு மனிதவளம் இந்த மாநிலத்தில் வீணடிக்கப்படுகிறது என்கிற கணக்கு வழக்கு அரசிடம் இருக்கிறதா? சத்தியமாக இருக்காது. ஏன் அதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இந்த அரசாங்கம் எடுத்துக் கொள்வதில்லை? ஒரு தலைமுறையே வீணாகிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் திசை மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாமானியனுக்குக் கூட தெரிந்த விஷயம். ஆனால் அரசாங்கம் கண்டு கொள்வதேயில்லை.

அரசுப்பள்ளிகளில் நூறு சதவீதம் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது என்று அறிவித்திருக்கிறார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் சந்தோஷம்தான். ஆனால் எத்தனை பள்ளிகளில் முறையான ஆய்வகங்கள் இருக்கின்றன என்பது பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை. எத்தனை பள்ளிகளில் நூலகங்கள் இயங்குகின்றன என்று கடைசியாக அரசாங்கம் எப்பொழுது கணக்கெடுத்திருக்கும்? பள்ளிகளில் இருக்கும் நூலங்கள் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற நூலகங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஏதேனும் கவனமிருக்கிறதா? வெறும் பள்ளிக்கூடங்களைக் கட்டுவதும் நிதி ஒதுக்குவது மட்டுமே அரசாங்கத்தின் வேலை என்று நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தின் மனிதவளம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை எப்படி வளர வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் துளியாவது தொலைநோக்கு பார்வை இருக்கிறதா?

எதற்காக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம்? விரலசைவுக்குக் கட்டுப்பட்டு அத்தனை முடிவுகளும் ஒரே ஆள் எடுப்பதற்கா? அமைச்சர்களுக்கு அடிப்படையான அறிவு இருக்கும் அதனால் முதலமைச்சருக்கு முடிவெடுப்பதில் உதவுவார்கள் என்பதற்காகத்தானே இப்படியொரு அரசாங்க அமைப்பே இருக்கிறது? இதெல்லாம் தேவையில்லையென்றால் இன்னோவா காரும், கூட இரண்டு ஜீப்பும், அரசாங்க பங்களாவும் எதற்கு? 

மேகதூது அணை கட்டுவதைத் தடுப்பதற்கு எல்லாவிதமான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் நதிநீர் இணைப்புக்கென இருநூறு கோடிகளை ஒதுக்கியது குறித்து விரிவான தகவல்களை எப்பொழுது வெளியிடுவார்கள்? ஒதுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? வருடாவருடம் அறிவிக்கிறார்கள். ஆனால் என்ன ரிசல்ட்? ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கென ஒதுக்கப்படும் பதினோராயிரம் கோடி ரூபாயை ஐந்து வருடங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் அந்தத் தொகைக்கான அவசியமே இருந்திருக்காது. நெல்லுக்கிறைத்த நீர்தான் புல்லுக்கு பாய வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலான திட்டங்களில் உல்டாவாகத்தானே நடக்கிறது?

அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வாக்கு அரசியல்தான்.

இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய். இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய். யார் வீட்டுப் பணம்? அள்ளிக் கொடுக்க வேண்டியதுதான். கொடுத்துவிட்டு போகட்டும். உருப்படியான ஆட்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா? கண்களில் படுபவர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொள்வதற்கு யாருக்குமே தயக்கம் இல்லை. எங்கள் அம்மா வாங்கி வைத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னார். எதிர்த்தால் ஒரே வரியில் அடக்குகிறார். ‘ஊரே வாங்குது...நாம மட்டும் ஏன் விடணும்?’. எவ்வளவு கேவலமான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

இப்பொழுதெல்லாம் அரசு ஊழியர், பணக்காரர், பெரும்புள்ளி என்கிற எந்தப் பாகுபாடும் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட இலவசப் பொருட்களை வாங்குவது தங்களது பெருமைக்கு இழுக்கு என்று பேசிக் கொண்டிருந்தவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். இப்பொழுது லட்சணம் பல்லிளிக்கிறது. அத்தனை பேரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் அடுத்த வருடம் இன்னுமொரு ஐந்நூறு கோடி சேர்த்து ஒதுக்க வேண்டும். 

இலவசமே கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் அரசாங்கம் பம்முகிறது. உருப்படியான ஒரு வளர்ச்சித் திட்டம் இல்லை. சட்டசபையை நடத்துவதற்குக் கூட இவ்வளவு பதறுகிறார்கள். நாம் என்ன பேசி என்ன பிரயோஜனம்? இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கிறது. நிலைமை மாறும் என்றெல்லாம் நினைக்கவில்லை. இப்படியேதான் இருப்பார்கள். அடுத்த வருடம் மே மாதம் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் கொடுப்பதா ஆறாயிரம் கொடுப்பதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். வீட்டில் நான்கு வாக்குகள் இருந்தால் ஒரு மாதச் சம்பளம் கிடைத்த மாதிரிதான். இந்த லட்சணத்தில் ‘தமிழகத்தில் யார் அடுத்த முதல்வர் ஆவார்?’ என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் கன்னடக்காரன் கேட்கிறான். கெட்ட கோபம் வந்துவிட்டது. ஆனால் பற்களைக் கடித்துக் கொண்டு ‘கடவுளே அடுத்த முதல்வர் யார்ன்னு வேணும்ன்னா கேட்டுத் தொலையறான்...இப்போ யார் முதல்வர்ன்னு கேட்டுடாம பார்த்துக்கோ’ என்று வேண்டிக் கொண்டேன். நல்லவேளை கேட்காமல் விட்டான். கேட்டிருந்தால் என்ன பதிலைச் சொல்வது? 

கை மாற்றியாகிவிட்டதா?

கிட்டத்தட்ட எல்லோருடைய ஞாபகத்திலும் இருக்கக் கூடிய கேரக்டர்தான். ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் பார்த்திருப்போம். வாத்தியார் என்ன சொன்னாலும் ‘சரிதான் சார்’ ‘கரெக்ட்தான் சார்’ என்று சொல்வதற்கு ஒரு சுண்டைக்காயன் இருப்பான். வாத்தியாருக்கும் அவனை மிகப் பிடித்திருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் அவனிடம்தான் கொடுப்பார். ஓடிப் போய் சாக்பீஸ் எடுத்து வருவதிலிருந்து அடுத்தவன் முட்டியை பெயர்த்தெடுக்க நல்ல மூங்கில் குச்சியாக ஒடித்து வருவது வரைக்கும் சலிக்காமல் செய்வான். ஒரு வினாடி கண்களை மூடிக் கொண்டு யோசித்தால் போதும். நமக்கு அவனது முகம் ஞாபகத்துக்கு வந்துவிடும். யோசித்துப் பாருங்கள். ஞாபகம் வந்ததா? எங்களுடனும் ஒரு பையன் இருந்தான். கிருஷ்ணகுமார். 

அவனைப் பற்றிச் சொல்லக் காரணமிருக்கிறது. The Grand Budapest Hotel. கடந்த ஆண்டு வெளிவந்தபடம். நகைச்சுவை படம் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். அப்படியென்றால் வெறித்தனமாக சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று அதற்கான முஸ்தீபுகளோடுதான் பார்க்கத் தொடங்கியிருந்தேன். முஸ்தீபுகள் என்றால் சிரிக்கிற சிரிப்பில் வீட்டில் இருப்பவர்கள் எழுந்து நான்கு அடி கொடுத்துவிடக் கூடாது என்பதான ஏற்பாடுகள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. மெலிதாக புன்னகை வரவைக்கக் கூடிய காட்சிகள். அமைதியாக பின்னப்பட்ட நகைச்சுவைதான் படம் நெடுகவும்.


ஒரு எழுத்தாளர் கதையைச் சொல்கிறார். அவரது இளம்பருவத்தில் பிரம்மாண்டமான ஹோட்டலில் அதன் முதலாளியைச் சந்திக்கிறார். அந்த முதலாளியின் ப்ளாஷ்பேக்தான் படத்தின் கதை. அவர் அந்த ஹோட்டலில் ஊழியனாகச் சேர்ந்தவர். ஜீரோ என்பதுதான் பெயர். அப்பொழுது அந்த விடுதியின் பொறுப்பாளராக இருந்தவருக்கு வயது முதிர்ந்த பணக்காரப் பெண்கள் சிலரோடு தொடர்பு உண்டு. அப்படியான தொடர்புடைய பெண்ணொருத்தி இறந்துவிடுகிறாள். அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது விடுதியின் ஊழியனான ஜீரோவை அழைத்துக் கொண்டு செல்கிறார் பொறுப்பாளர். ஜீரோதான் தலையாட்டி பொம்மை. விசுவாசமனாவன். அங்கே இறுதிச்சடங்குக்கு முன்பாக அவளது உயில் வாசிக்கப்படுகிறது. மிக பிரசித்தி பெற்ற ஓவியமொன்றை பொறுப்பாளருக்கு எழுதி வைத்திருக்கிறாள். அந்தப் பெண்மணியின் மகன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். வேறு வழியில்லை. பொறுப்பாளரும் ஜீரோவும் அந்தப் படத்தைத் திருடிக் கொண்டு ஓடிவருகிறார்கள். 

ஆனால் இறந்து போனவளின் மகன் லேசுப்பட்டவன் இல்லை. உயில் வாசிக்கும் வக்கீலின் கதையை முடித்துவிடுகிறான். அந்தப் பெண்மணி கூட கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள் என்று அந்தப் பழி பொறுப்பாளரின் மீது விழுகிறது. பொறுப்பாளரைக் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்துவிடுகிறார்கள். ஜீரோவுக்கு ஒரு காதலி உண்டு. மிகச் சிறப்பாக கேக் தயாரிப்பவள். அவளது உதவியுடன் கேக்குக்குள் கருவிகள் ஒளித்து சிறைச்சாலைக்குள் அனுப்பப்படுகின்றன. அந்தக் கருவிகளை வைத்துக் கொண்டு பொறுப்பாளரும் அவரோடு சேர்ந்து இன்னமும் சிலரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் இறந்து போன அந்தப் பெண்மணி இரண்டாவது உயிலை எழுதி வைத்திருப்பதாகவும் அது இவர்கள் திருடிக் கொண்டு வந்த ஓவியத்தின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் பொறுப்பாளருக்கு ஜீரோ எப்படி உதவுகிறான் அந்த உயிலை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையெல்லாம் லாஜிக்கைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பார்க்க வேண்டும். 

இரண்டாவது உயிலின் படி அந்தப் பெண்மணிதான் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது. அவள் விடுதியை பொறுப்பாளரின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு பரலோகத்தை அடைந்திருக்கிறாள். அந்தப் பொறுப்பாளர் தனது வாரிசாக ஜீரோவை நியமிக்கிறார். அந்த ஜீரோதான் எழுத்தாளரிடம் தனது ப்ளாஷ்பேக்கைச் சொல்லும் முதலாளி. ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிட்டார்.

இப்பொழுது கிருஷ்ணகுமாரின் கதையைச் சொல்லிவிடுகிறேன். கிருஷ்ணகுமாருக்கு கணக்கு வாத்தியார் எதிர்வீடுதான். சுமாராகப் படித்த மற்ற மாணவர்கள் எல்லாம் பொறியியல் என்று ஒரே குட்டையில் விழ இவன் வாத்தியாரைப் பின் தொடர்கிறேன் என்று கல்லூரியில் கணிதப் பிரிவில் சேர்ந்தான். பிறகு முதுகலை கணிதம் என்று இழுத்துக் கொண்டே சென்றவன் முனைவர் பட்டம் வாங்கிவிட்டுத்தான் ஓய்ந்தான்.ஒன்றும் மோசம் போய்விடவில்லை. கணிதப் பேராசிரியர் ஆகிவிட்டான். 

ஜீரோவைப் பார்க்கும் போது கிருஷ்ணகுமார்தான் நினைவுக்கு வந்தான். ஜீரோவின் வெள்ளந்தியான உடல்மொழியும் தனது முதலாளியின் வார்த்தைகளுக்காக அவன் காட்டும் விசுவாசமும் நம்மை கதையோடு ஒன்றச் செய்துவிடுகின்றன. பொறுப்பாளர் தனது இறந்து போன முதிய காதலியைப் பார்க்கச் செல்லும் போது எல்லையில் விசாரணை நடத்துகிறார்கள். அப்பொழுது ஜீரோவுக்கு அடி விழுகிறது. அப்பொழுது பரிதாபமாகத் தெரிகிறான். அதே ஜீரோ பொறுப்பாளருடன் சேர்ந்து ஊர் ஊராக ஓடும் போதும் எதிரிகளுடன் சண்டைப் போடும் போதும் ‘அட நம்ம பையன்’ என்கிற நினைப்பை உருவாக்கிவிடுகிறான். பொறுப்பாளர் ஜீரோவின் காதலியுடன் பேசும் போது ‘அவள் எனது காதலி...வழியாதே’ என்று தடுக்கும் போது சிரிப்பை வரவழைத்துவிடுகிறான். அந்தப் பையனாக நடித்த நடிகரின் பெயர் டோனி ரெவோல்ரி. அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்.

படத்தில் கிறுக்குத்தனமான தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லை. ஒரு கொலை, அந்தக் கொலைக்கான சொத்துப் பின்னணி, அதில் சிக்க வைக்கப்படும் விடுதிப் பொறுப்பாளர், சிறைச்சாலை, அதிலிருந்து தப்பித்து ஓடுவது என படம் விறுவிறுப்பாக ஓடுகிறது. சிறைச்சாலையை உடைக்கிறார்கள், துப்பாக்கியில் சுட்டுக் கொள்கிறார்கள், விரல்களைத் துண்டிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள். ஒரு அதிரடித் திரைப்படத்திற்கான அத்தனை சரக்குகளும் இருக்கின்றன. ஆனால் அதிரடித் திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இவற்றில்தான் நகைச்சுவை. கதாபாத்திரங்கள் நடப்பதிலிருந்து அவர்கள் காட்டும் சேஷ்டைகள் வரை அனைத்திலும் வழக்கமான படங்களிலிருந்து வித்தியாசத்தைக் காட்டுகிறார்கள். அதனால்தான் இதை முக்கியமான படம் என்று என்னிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. வெறும் கதையை மட்டும் பார்த்தால் ஒரு சுமாரான திரைப்படம் என்று முடிவு செய்து கொள்ளலாம். அப்படித்தான் முடிவு செய்து வைத்திருந்தேன். அவ்வளவுதான் திரைப்படங்கள் குறித்தான அறிவு எனக்கு. ஆனால் வெஸ் ஆண்டர்ஸனின் படங்களை வெறும் கதையோடு மட்டும் பார்க்கக் கூடாது என்றார்கள்.

இது என்ன வம்பாக இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை பார்க்கத் துவங்கினேன். மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் புலப்படத் துவங்கின. ஜீரோவாக நடிக்கும் பொடியனின் முகபாவனையிலிருந்து காட்சிகளில் இடம்பெறும் கவித்துவமான இடங்கள் வரை அனைத்தையும் சேர்த்து கவனித்தால் ஒரு முழுமையான படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. ஆனால் இரண்டு முறை பார்ப்பதற்கான பொறுமையும் இதிலிருந்து எதைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்கிற மூக்கரிப்பும் அவசியம். 

படம் பார்த்துவிட்டு கிருஷ்ணகுமாரிடம் பேசினேன். இதுநாள் வரையிலும் அவனது குருநாதருக்கு தனிப்பயிற்சியில்தான் கொழுத்த வருமானம். அவருக்கு வயதாகிவிட்டது. இனிமேல் தனிப்பயிற்சி எடுப்பதை நிறுத்திவிடலாம் என்றிருக்கிறாராம். அவர் நிறுத்தியவுடன் தான் தொடரப் போவதாகச் சொன்னான். ‘The Grand Budapest Hotel கைமாறுகிறதா’ என்றேன். அவனுக்கு புரியவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டான். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டுத் இணைப்பைத் துண்டித்தேன். பைத்தியகாரன் என்று நினைத்திருப்பான். நினைத்துவிட்டுப் போகட்டும். எல்லா இடங்களிலும் ஜீரோவும் கிருஷ்ணகுமாரும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இல்லையா?

Mar 30, 2015

பசுமாட்டைக் கொன்றவன்

ஊர்ப்பக்கத்தில் மரணம் நிகழ்ந்த வீடுகளில் பாடி அழும் பெண்கள் ‘பார்ப்பானை அடிச்சானோ பசுமாட்டைக் கொன்றானோ’ என்று பாடுவார்கள். அதுவும் இள வயது மரணங்கள், குரூரமான சாவுகளில் இந்த வரி எப்படியும் வந்து வீழ்ந்துவிடும். இந்த இரண்டும் அவ்வளவு பெரிய பாவங்களாம். பார்ப்பனரை நினைவு தெரிந்து அடித்ததில்லை. பாவம் என்பதெல்லாம் காரணமில்லை. அடித்துக் கொள்ளுமளவுக்கு பகைமை பூண்டதில்லை. ஆனால் பசுமாட்டைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டேன். இந்த வாரத்தில்தான்.

சனிக்கிழமையன்று ஊருக்குச் சென்று கொண்டிருந்தோம். வழக்கமான பாதைதான். தொப்பூர் தாண்டியவுடன் வலது பக்கம் திரும்பினால் மேட்டூர் அதன் பிறகு நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை. இந்தச் சாலையில் செல்லும் போது வேகமாகச் செல்ல முடியாது. மணிக்கு அறுபது அல்லது எழுபது கிலோமீட்டர் வேகம் சாத்தியமானால் பெரிய விஷயம். நேரம் ஆவது பிரச்சினையில்லை. ஆனால் பயணம் சலிக்காது. மேச்சேரி வனம், மேட்டூர் அணை, வீரப்பன் வாழ்ந்த மலைகள், மேட்டூரிலிருந்து கூடவே பயணிக்கும் காவிரி ஆறு என பச்சையும் குளுமையுமான பயணம் அது. அதனால் முடிந்தவரை இந்தப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.

தனியாகச் சென்றால் சேலம் வரைக்கும் ஒரு பேருந்து அங்கிருந்து ஈரோடுக்கு ஒரு பேருந்து. அதுதான் வழமை. ஆனால் அந்தப் பாதையில் ஊர்களை நெட்டுக்குத்தலாக கிழித்துக் கொண்டு செல்லும் கரும்பட்டையைத் தவிர ரசிப்பதற்கு எதுவுமே இருக்காது. குடும்பத்தோடு செல்லும் போதுதான் கார் அவசியமானதாக இருக்கிறது. இந்தப் பாதையும் அமைகிறது. அப்படித்தான் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தோம். மாலை ஆறரை மணியைத் தாண்டியிருந்தது. வயல் வெளி முழுவதும் படர்ந்திருந்த பச்சையை இருள் தின்னத் துவங்கியிருந்தது. மகிழ்வுந்தின் விளக்குகள் எரியத் தொடங்கி கால் மணி நேரம் ஆகியிருக்கும். எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னால் ஐம்பதடி தூரத்தில் ஒரு பசுமாடு. அது துள்ளியடித்து ஓடி வந்ததா அல்லது ஆசுவாசமாக நடந்து வந்ததா என்பதை சம்பவம் நிகழ்ந்த அந்த வினாடியிலிருந்து நினைவுபடுத்திப் பார்க்க முயல்கிறேன். ஒன்றுமே பிடிபடவில்லை. அப்பொழுது வெறித்தனமாக ப்ரேக்கை அழுத்தியிருக்க முடியுமா? அல்லது அழுத்தினேனா என்பதும் நினைவில் இல்லை. அந்த சில வினாடிகள் மட்டும் நினைவிலிருந்து துண்டித்த மாதிரியாக இருக்கிறது. ஆனால் மாட்டின் மீது அடித்து வண்டியை நிறுத்தினேன் என்பது மட்டும் நிச்சயம். வீழ்ந்த மாடு அப்படியே கிடக்கிறது. இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த மாட்டுக்காரப் பெண்மணி கத்துகிறார். வண்டியை விட்டு கீழே இறங்கிப் பார்த்துவிட்டு மீண்டும் வண்டியில் ஏறி சற்று பின்புறமாக நகர்த்தி நிறுத்திவிட்டு மீண்டும் கீழே இறங்கிப் பார்த்த போது அந்த மாடு என்னைப் பார்த்தது. என்னையும் அறியாமல் அழுகை வந்துவிட்டது.

நெற்றியை அடித்துக் கொண்டு அழத் தொடங்கினேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தத் துவங்கியிருந்தார். அந்த இடத்தில் ஆட்கள் சேர்ந்திருந்தார்கள். அத்தனை பேருக்கு முன்பாக இதுவரை அழுததில்லை. சுற்றிலும் நிற்பவர்களுக்கு ஒரு ஆண் அழுவது சங்கடமாக இருந்திருக்கக் கூடும். ஒரு பெண்மணி வந்து அந்த மாடு அரை மணி நேரமாக இப்படியே சுற்றிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். ஆனால் அது அப்படியொன்றும் ஆறுதலைத் தந்துவிடவில்லை. மாட்டை நகர்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதன் கொம்பு முறிந்திருந்தது. ஆனால் உயிர் இருந்தது. இன்னொரு முதிய பெண்மணி வந்து ‘துரத்திட்டு வந்தவன் எங்கே’ என்றார். உடனடியாகப் புரியவில்லை. பிறகுதான் எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். கயிறு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அந்த மாடு இன்னொரு தோட்டத்திற்குள் சுற்றியிருக்கிறது. யாரோ தோட்டத்திலிருந்து விரட்டியிருக்கிறார்கள். சாலையை ஒட்டிய தோட்டம் அது. தோட்டத்தில் இருந்து வெளியே வந்தவுடன் சாலைதான். அப்படி துள்ளிக் கொண்டு வந்த மாடு எனது தலையில் பாவத்தை இறக்கியிருக்கிறது.

அடித்தது அடித்தாகிவிட்டது. நான் அழுவதைப் பார்த்து மகி பயந்திருந்தான். வலுக்கட்டாயமாக அழுகையை அடக்கிக் கொண்டிருந்தேன். கூட்டம் சேர்ந்திருந்தது. அங்கிருந்தவர்களில் பலரும் என்னைச் சமாதானம் செய்யத் தொடங்கியபோது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனால் மாட்டைப் பார்க்க முடியவில்லை.  ‘அடிக்க வேண்டும் என்றெல்லாம் உன்னை அடிக்கவில்லை’ என்று மனப்பூர்வமாக சில முறை சொல்லிக் கொண்டிருந்தேன். அது அந்த மாட்டுக்கு நிச்சயமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை.

கால் மணி நேரத்தில் மாட்டுக்கு அடியில் சில உருளைகளை வைத்து சாலையோரமாக நகர்த்திவிட்டார்கள். ‘இனி முடிந்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அங்கிருந்த சிலரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எனக்கு மாடு பற்றிக் கணிக்கும் அளவுக்கு அறிவில்லை. அடுத்த ஐந்து நிமிடங்களில் மாடு எழுந்து கொண்டது. அது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. சுற்றிலும் நின்றவர்கள் கைதட்டினார்கள். அது உயிர் தப்பித்த வரைக்கும் போதும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக பஞ்சாயத்து தொடங்கியது. உள்ளூர் மனிதர் ஒருவர் பேசத் தொடங்கினார்.

‘மாடு முப்பதாயிரம் பெறும்...பணத்தை பொதுவான மனுஷன்கிட்ட கொடுத்துடுங்க...மாட்டுக்கு ஒண்ணும் ஆகலைன்னா பணத்தை திருப்பிக் கொடுத்துடுறோம்...ஏதாச்சும் ஆச்சுன்னா நீங்க மறந்துடுங்க’ என்றார். அப்பொழுது கையில் பணம் எதுவும் இல்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். என்னிடம் நிஜமாகவே பணம் இல்லை. ஆனால் காசோலை இருந்தது. சொன்னேன். நிரப்பிக் கொடுக்கச் சொன்னார்கள். அவர்கள் யாரும் முரட்டுத்தனமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த இடத்தைத் தாண்டுவதற்கு ஏதாவதொரு உபாயம் தேவையானதாக இருந்தது. எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்தபிறகு அந்த மூன்றாவது மனிதரை அழைத்து ‘மாடு எப்படி இருக்குங்க?’ என்ற போது கால்நடை மருத்துவர் வந்து பார்த்ததாகவும் ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருப்பதாகவும் சொன்னார். இனி பிரச்சினை இருக்காது மருத்துவர் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதாகவும் எதற்கும் காலை வரையிலும் பார்க்கலாம் என்றார். தலைக்கு நீரை ஊற்றிவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். சாப்பிடச் சொன்னார்கள். பசி இருந்தது. ஆனால் சாப்பாடு இறங்குகிற மனநிலை இல்லை. ஏதாவதொரு வகையில் அடிக்காமல் வண்டியை நிறுத்தியிருக்க முடியுமா என்றே மனம் அலைகழித்துக் கொண்டிருந்தது. எப்பொழுது தூங்கினேன் என்பதே தெரியாமல் தூங்கியிருந்தேன். 

அடுத்த நாள் காலையில் அழைத்தார்கள். ‘மாடு இறந்துவிடும்’ என்றார்கள். இறக்கவில்லை. ஆனால் அப்படியான நிலைமை என்றார்கள். சங்கடமாக இருந்தது. அதைப் போய் பார்க்க வேண்டுமா என்று குழப்பமாக இருந்தது. ஒருவேளை நேரில் பார்த்து அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிட்டால் அந்த நினைப்பு காலம் பூராவும் கசப்பு படிந்தபடியே கிடக்கும். வண்டியை ரிவர்ஸ் எடுத்து நிறுத்திய பிறகு பார்த்த அதன் கண்கள் காலாகாலத்துக்கும் நெஞ்சுக்குள் உறைந்துவிடக் கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொண்டேன். நான் அசைவப் பிரியன்தான். ஆடு, கோழியெல்லாம் தின்கிறேன். மாட்டுக்கறி கூட உண்டிருக்கிறேன். ஆனால் இந்த விபத்து ஏனோ வெகுவாக சஞ்சலப்படுத்திவிட்டது. அவர்கள் பணத்துக்காக பொய் சொல்வதாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விரும்பினேன். அந்த நம்பிக்கைக்கான செலவு முப்பதாயிரம் ரூபாய்.

‘தயவு செஞ்சு அந்த காசோலையை வங்கியில் போட்டுவிட வேண்டாம்..நானே பத்து நாட்கள் கழித்து வந்து பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்’ என்று மட்டும் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். ஏன் என்று விளக்கம் சொல்லவில்லை. அவர்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் காரணம் எளிமையானது. அந்தக் காசோலை அறக்கட்டளையின் காசோலை. ஒரு நல்ல காரியத்துக்காக கொடுப்பதற்கு எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் அந்த மனநிலை, கூட்டம், வெளிச்சம் மங்கிப் போன இரவில் எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. கையிலும் காசு இல்லை. வங்கிக் கணக்கிலும் தொகை இல்லை. சற்று உரிமை எடுத்துக் கொண்டேன். தவறுதான். அறக்கட்டளையின் காசோலையை சொந்த காரியத்துக்காகக் கொடுத்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று நாட்களாகவே மனநிலை சரியில்லை. ஏதோ சங்கடமாகவே இருக்கிறது. கனவுகளில் பசுமாடுகள் நிறைகின்றன. ஒடிந்த கொம்புகள் நினைவுகளை நிறைக்கின்றன. திடீரென்று ‘தவறு நம் மீதுதானா?’ என்று நினைத்துக் கொண்டு ‘ப்ச்’ என்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியவில்லை. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்துவிடச் சொன்னார் ஒருவர். இரு முகங்கள் கொண்ட ருத்திராட்சத்தை அணியச் சொன்னார் இன்னொருவர். வரவேண்டிய மிகப்பெரிய ஆபத்தை பசுமாடு வடிவத்தில் வந்து ஆண்டவன் தாங்கிக் கொண்டார் என்று இன்னொருவர் ஆறுதல் படுத்தினார்.  இவையெல்லாமும் நாமாக நினைத்துக் கொள்ளக் கூடியவைதானே?

சங்கடங்களின் போது எந்த நினைப்பு ஆறுதலைக் கொடுக்குமோ, எந்த எண்ணம் அமைதிப்படுத்துமோ அதையே மனது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. அதுதான் சரி என்று நம்பத் தொடங்கிவிடுகிறது. ஆனால் உண்மை எப்பொழுதும் தூரமாக நின்றிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நேருக்கு நேர் பார்க்க முடியாத அளவுக்கு அது கண்களைக் கூசச் செய்கிறது. எது உண்மை எது நம் பிரமை என்பதே கூட பிடிபடாத அளவுக்கான கூச்சம் அது. அந்தச் சமயங்களில் எதுவுமே தெரியாதது போல வேறொரு பக்கம் பார்ப்பதற்குத்தான் மனம் எத்தனிக்கிறது. இப்பொழுது அப்படித்தான் இருக்கிறேன். இந்த நினைவுகளிலிருந்து தப்பி எங்கேயாவது ஓடிவிட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் சாத்தியமேயில்லாத ஆசை அது.

Mar 27, 2015

அப்படியே இருக்க முடியுமா?

எங்கள் ஏரியாவில் ஒரு பழைய பேப்பர் கடை உண்டு. பத்துக்கு பத்து சிறிய கடைதான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெரியவர் இருந்தார். அவ்வப்போது கடையைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான தர்மபுரிக்குச் சென்றுவிடுவார். வார விடுமுறைகளில் செய்தித்தாள் கட்டைத் தூக்கித் தோள் மீது வைத்துக் கொண்டு போய் பார்த்தால் ஆள் இருக்க மாட்டார். ஓரிரு முறை இப்படி ஏமாந்த பிறகு அவரது சங்காத்தமே வேண்டாம் என்று மிதிவண்டியில் வருபவர்களிடம் விற்றுவிடுவோம். இருந்தாலும் தாத்தாவிடம் பேச்சுவார்த்தை உண்டு. அந்த பத்துக்கு பத்து கடையிலேயே ஓரமாக ஒரு மேசை வைத்து அதில் சோறாக்கிக் கொள்வார். காகிதக் கட்டுகள் மீதுதான் படுத்துக் கிடப்பார். ஒரு ட்ரான்ஸிஸ்டர் அளவிலான ரேடியோ ஒன்று பாடிக் கொண்டேயிருக்கும்.

பேசிப் பழகிய பிறகு நிறையக் கதைகளைச் சொல்வார். சொந்தக் கதைகள் சோகக் கதைகள்தாம். அவருக்கு குழந்தைகள் உண்டு. எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். ஒண்ணேகால் ஏக்கர் புஞ்சை பூமி குறித்தான சொத்துத் தகராறு பெரிதாகி ஆளாளுக்கு பிரிந்துவிட்டார்கள். சொல்லிச் சொல்லி சலித்துப் போன இவர் அவர்களின் சங்காத்தமே வேண்டாம் என்று கைவசம் இருந்த காசைத் தூக்கிக் கொண்டு பெங்களூருக்கு பேருந்து ஏறிவிட்டார். வந்தவர் கடை பிடித்து பழைய செய்தித்தாள் வாங்கித்தான் அப்படி பேப்பர் கட்டும் ட்ரான்ஸிஸ்டருமாக வாழ்ந்து கொண்டிருந்தார். 

‘அப்புறம் எதுக்கு அடிக்கடி பூட்டிட்டு போறீங்க?’ என்று கேட்டால் ‘நான் நல்லா இருக்கேன்னு ஊருக்குள்ள காட்ட வேண்டாமா?’ என்பார். வாஸ்தவமான கேள்விதான். கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் ஊருக்குச் சென்றுவிடுகிறார். தீபாவளி பொங்கல் என்றால் கேட்கவே தேவையில்லை. காசு தீரும் வரைக்கும் கும்மாளமடித்துவிட்டு தீர்ந்தபிறகு வந்து காகிதக் கட்டுகள் மீது குப்புறடித்துவிடுகிறார். ஊர்க்காரர்களிடம் பெரிய மளிகைக்கடை ஆரம்பித்திருப்பதாக பீலா விட்டு வைத்திருப்பதாகச் சொல்வார்.

தாத்தாவுக்கு அறுபதைத் தாண்டியிருக்கும். மீசை நரைத்துக் கிடக்கும். முறுக்கு மீசை. ஆனால் எதற்காக இப்படி அடுத்தவர்களிடம் நிரூபித்துக் கொண்டு திரிகிறார்? அவர் மட்டும்தானா? எல்லோரும்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் தொட்டில் பழக்கம்தான். ‘பாரு அவன் உன்னைப் பார்த்து சிரிக்கிறான்’ என்று ஒழுகுகிற மூக்கைத் துடைக்கத் தெரியாத காலத்திலேயே அடுத்தவனைக் கைகாட்டி நம் மண்டைக்குள் ஏற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு எல்லாவற்றிலும் சிக்கல்தான். பள்ளியில், வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில் என எல்லா இடங்களிலும் நம்மை நிரூபிக்கவேண்டிய நிர்பந்தம் உருவாகிவிடுகிறது. நம்மைப் பற்றி யாருமே தாழ்வாக நினைத்துவிடக் கூடாது. நினைத்தால் என்ன ஆகும்? குடி மூழ்கிப் போகாதுதான். ஆனால் விட மாட்டோம். 

அடுத்தவர்களிடம் நம்மை நிரூபிப்பதுதான் பெரிய அழுத்தம். ஆனால் கட்டையில் போகும் வரைக்கும் அதுதான் நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. நடை, உடையில் தொடங்கி நாம் பேசிப் பழகுவது வரை எல்லாவற்றிலும் ‘அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?’என்கிற எண்ணம்தான் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்தக் கருமாந்திரத்துக்காக பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. பிதற்ற வேண்டியிருக்கிறது. எதையாவது மறைக்க வேண்டியிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நம் பெரும்பாலான சிக்கல்களுக்கு இதுதான் அடிப்படையான காரணமாக இருக்கிறது.

ஊரைப் பற்றி கவலைப்படாமல் வாழ முடியாதுதான். ஓரளவுக்காகவது அடுத்தவர்களுக்காக சிலவற்றைச் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் நாம் வாழ்வதே அடுத்தவர்களுக்காகத்தான் என்னும் போதுதான் சிக்கிக் கொள்கிறோம். ‘நாங்கள் கணவனும் மனைவியுமாக அந்நியோன்யமாக வாழ்கிறோம்...தெரியுமா?’ என்பது வரை வெளியில் பாசாங்கு காட்ட வேண்டியிருக்கிறது. உள்ளுக்குள் எவ்வளவு புழுத்துப் போயிருந்தாலும் அடுத்தவர்களுக்காக பற்களைக் கெஞ்சிக் காட்ட வேண்டியிருக்கிறது.

நல்லவன் கெட்டவன் என்பது மட்டும் பிம்பம் இல்லை. ‘நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் தெரியுமா?’ என்பது கூட பிம்பம்தான். நன்றாக பழகியவர்களாக இருப்பார்கள். ஆனால் பேசும் போது பிரதாபங்களை அடுக்குகிறார்கள். வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ‘அப்பவே அப்படி’ என்று நீட்டுகிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு ஆட்களைப் பார்க்கிறோம்? நாம் எவ்வளவு இடங்களில் அப்படி நடிக்கிறோம். முக்கால்வாசி சமயங்களில் நாம் போலியாக இருக்கிறோம் அல்லது நம் எதிரில் இருப்பவன் போலியாக இருக்கிறான்.

ஏன் இயல்பாக இருக்க முடிவதில்லை? எதனால் ஈகோ நம்மைத் தடுக்கிறது?

‘Be You' என்றவொரு செமினார் நடந்தது. அலுவலகத்தில் ஒரு பெண்மணி நடத்தினார். அவரே நிறைய அலட்டிக் கொண்டார். ‘எனக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்று காட்டிக் கொள்வதில் அவ்வளவு தயக்கம் அவருக்கு. தனது உச்சரிப்பிலிருந்து பேசுகிற தொனி வரைக்கும் அமெரிக்கப் பெண்மணியைப் போல காட்டிக் கொண்டார். எப்படியோ போகட்டும். ஆனால் அவரது Presentation அட்டகாசமாக இருந்தது.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கின்றன என்று ஆரம்பித்தார். பைத்தியங்கள் பைத்தியங்களாகவே இருக்கிறார்கள். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றன என்று நீட்டினார். ஆனால் நாம் இப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லை. நம்மால் எப்பொழுதும் இயல்பாகவே இருக்க முடியாது. ஆனால் முடிந்தவரை இயல்பாக இருக்க முடியும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். 

இயல்பாக இருத்தல் என்பது மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்த மாதிரி. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. அப்படியே பழகிவிட்டோம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நாம் மட்டும் மாறிவிடுவோமா என்ன? அப்புறம் எப்படித்தான் இயல்பாக இருப்பது?

அவரேதான் பதில் சொன்னார். ‘வீட்டிலிருந்து ஆரம்பித்துப் பாருங்கள். மிக safe என்று நினைக்கக் கூடிய விஷயங்களில் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். பொய் சொல்லாமல், நடிக்காமல் இருந்து பாருங்கள். ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். பிறகு அற்புதமான சுதந்திரத்தை உணர்வீர்கள்’ என்றார். யோசித்துப் பார்த்தேன். வீட்டில் சமாளிக்கக் கூடிய அளவிற்கு safe ஆன விஷயம் என்று எதைக் கண்டுபிடிப்பதற்கு இன்னமும் இரண்டு செமினார்களில் கலந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எங்கிருந்தோ வந்தவர்கள்

இலாப நோக்கில்லாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் வருமான வரித்துறையில் விண்ணப்பித்து 12A சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். இது கட்டாயம். அதோடு சேர்த்து 80G வாங்கிக் கொண்டால் வருமான வரிவிலக்கு தந்துவிடுவார்கள். நன்கொடை தருபவர்கள் தாங்கள் செலுத்திய தொகைக்கு ரசீது வாங்கி வருமான வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். இதையெல்லாம் செய்வதற்கு அலைய வேண்டியிருக்கும். ‘செலவும்’ செய்ய வேண்டும் என்றார்கள். செலவு என்றால் மேசைக்கு மேலான செலவும் உண்டு. கீழான செலவும் உண்டு. 

இப்பொழுது கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத என்.ஜி.ஓக்கள் தங்களின் ஆண்டு வரவு செலவு விவரங்களை வருமான வரித்துறையில் தாக்கல் செய்வதில்லை என்றொரு புள்ளிவிவரத்தை சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். வருகிற வருமானத்தை வரவில் வைத்துக் கொள்ள வேண்டியது. செலவை யாரிடமும் காட்டுவதில்லை. பெரிய தணிக்கையும் நடப்பதாகத் தெரிவதில்லை. போகிற வரைக்கும் போய்க் கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். கணக்கு வழக்கைத் தாக்கல் செய்யாதது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் அதைவிட பெரிய தில்லாலங்கடி வேலைகள் பரவலாக நடப்பதாகச் சொல்கிறார்கள். 

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்வதற்கு இந்த 80G ஐ பயன்படுத்துகிறார்கள். பத்து லட்ச ரூபாயை அறக்கட்டளைக்குக் கொடுத்தால் அதில் ஐந்து லட்ச ரூபாய்க்கு வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு லட்ச ரூபாயைத்தான் கையில் கொடுப்பார்கள். வருகிற வரைக்கும் லாபம் என்று நாமும் வாங்கி வைத்துக் கொண்டு பத்து லட்ச ரூபாய்க்கு ரசீது கொடுத்துவிட வேண்டும்.  நாம்தான் எந்த வரவு செலவையும் காட்டுவதில்லை அல்லவா? அதனால் நமக்கும் லாபம். பணம் கொடுத்தவனுக்கும் லாபம். 

இருக்கிற அத்தனை அறக்கட்டளைகளும் இப்படித்தான் என்று சொல்லவில்லை. நேர்மையான அறக்கட்டளைகளும் இருக்கின்றனதான். நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருட்டு வேலை செய்வதற்கான அறக்கட்டளைகள்தான் நிறைய இருக்கின்றன என்பதை வங்கியில் கணக்கு தொடங்கும் போதே தெரிந்து கொண்டேன். ‘ட்ரஸ்ட்டுக்கெல்லாம் அக்கவுண்ட் தொடங்கினா நாளைக்கு ஐடி டிபார்ட்மெண்ட்ல இருந்து வங்கியில்தான் ஆவணங்களைக் கேட்பாங்க....தலைவலி சார்’ என்றார்கள். ஐடித் துறையில் பணியாற்றும் குமாஸ்தா ஒருவர் ‘சம்பாதிக்கத்தானே ட்ரஸ்ட் ஆரம்பிக்கிறாங்க...’ என்றார். இங்கு அறக்கட்டளைகள் என்றாலே காசு சம்பாதிக்கும் நிறுவனங்களாகத்தான் கண்ணில் தெரிகின்றன. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என எல்லோரும் அறக்கட்டளை தொடங்கி வைத்திருக்கிறார்கள். அந்த அறக்கட்டளைகள்தான் அந்த நிறுவனங்களை நடத்துகின்றன. எவ்வளவு பணம் உள்ளே வருகிறது என்பதும் எவ்வளவு பணம் வெளியே செல்கிறது என்பது வெளியாட்கள் யாருக்கும் தெரியாது. இப்படித்தான் தங்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக பெரிய தொழிலதிபர்களும், சினிமாக்காரர்களும் வெளியில் தெரியாத ‘நல அறக்கட்டளைகளை’ நடத்துகிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு காரியங்கள் செய்ததாக கணக்கு எழுதி வைத்துக் கொண்டு ஐந்தாறு லட்சங்களை மட்டும் செலவு செய்கிறார்கள். இப்படி எவ்வளவோ திருகல்கள். எவ்வளவோ புதிர்கள். இது வெளிச்சமே விழாத இருண்ட உலகம்.

பாலு வருமானவரித்துறையில் ஆய்வாளராக இருக்கிறார். நேரில் சந்தித்ததில்லை. எப்பொழுதாவது குறுஞ்செய்தி அனுப்புவார். திடீரென்று அழைத்தும் பேசுவார். அப்படி பேசிக் கொண்டிருந்த போது 12A, 80G எல்லாம் விண்ணப்பித்துவிடலாம் என்றார். சாமியே வரம் கொடுப்பது மாதிரிதானே? அதுவும் பெங்களூர் வருமானவரித்துறை அலுவலகத்தில் வெகுகாலம் இருந்தவர். ‘அலுவலகத்தில் நான் பேசிக்கிறேன்...அப்ளை பண்ணுங்க’ என்றார். விண்ணப்பிப்பதும் கூட அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அந்த விண்ணப்பங்களில் இருக்கும் நிறைய வரிகள் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் இருப்பதாகத்தான் தோன்றியது. பாலுவே ஒரு பட்டயக்கணக்கரிடம் பேசியிருந்தார். மோகன். அவர் பெங்களூரின் பெரிய ஆடிட்டர்களில் ஒருவர். தமிழர்தான். ‘நிசப்தம் லின்க் கொடுத்திருக்கேன்...பேசுவார்’ என்று பாலு சொல்லியிருந்தார். மிகப்பெரிய கார்போரேட் நிறுவனங்களுக்கெல்லாம் மோகன் கணக்கராக இருக்கிறார். அவர் இந்த வேலையை எடுத்துக் கொண்டதே பெரிய விஷயம்.

ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தேன். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு கணக்கரிடம் இந்த வேலையை ஒப்படைத்திருந்தார். அந்தக் கணக்கர் பத்து முறையாவது அழைத்துப் பேசியிருப்பார். இவ்வளவு சிரத்தையெடுத்துச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் அவர்களுக்கு இல்லை. ஆனால் செய்தார்கள். அடுத்த நாளே அவரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. அவற்றை அறக்கட்டளையின் லெட்டர்பேடில் அச்செடுத்து கையொப்பமிட வேண்டியது மட்டும்தான் என் வேலை. லெட்டர்பேட், சீல் போன்ற வஸ்துகளைத் தயார் செய்வதற்காக சற்று அலைய வேண்டியிருந்தது. ஆனால் அது பெரிய வேலை இல்லை. எல்லாவற்றையும் முடித்து கூரியரில் அனுப்பி வைத்திருந்தேன். அதோடு என் வேலை முடிந்துவிட்டது.

பக்காவாக முறைப்படுத்தி வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்துவிட்டார்கள். நானும் சென்றிருந்தேன். எங்கள் அலுவலகத்திலிருந்து வருமானவரித்துறை அலுவலகம் பக்கம்தான். ஒரு புரட்டு புரட்டிவிட்டு வேறு விசாரணை எதுவும் இல்லாமல் விண்ணப்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு ஒப்புகை(acknowledgement)கொடுத்திருக்கிறார்கள். இனி அவர்கள் அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அதை பாலு பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். பார்த்துக் கொள்வார்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பாலுவிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘ஆடிட்டருக்கு ஃபீஸ் கொடுத்துடலாம் சார்’ என்று சொல்லியிருந்தேன். 

‘அதெல்லாம் வாங்க மாட்டார்...நீங்க வேணும்ன்னா கேட்டுப்பாருங்க’என்றார்.

மோகனிடம் பேசும் போது ‘ஃபீஸ் எப்போ கொடுக்கணும் சார்?’ என்றேன். சிரித்துவிட்டு வேறு கேள்விக்கு மாறிவிட்டார். வெளியில் விசாரித்தேன். சுமாரான பட்டயக்கணக்கரே கூட பல்லாயிரக்கணக்கான ரூபாயை கேட்பார்கள் என்றார்கள். அது போக வருமானவரித்துறையில் செய்ய வேண்டிய செலவும் இருக்குமாம். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் உதவுகிறார்கள். இப்படியான உதவிகள் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் கிடைத்துவிடுகிறது. நம் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தால் போதும் ஆளாளுக்கு தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.  

Mar 26, 2015

நட்சத்திரம் எப்படி பிறக்கிறது?

குழந்தைகள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. சில கேள்விகளுக்கு பதில் தெரியும்தான். ஆனால் குழந்தைகளுக்கு புரியும்படி விளக்க முடியாது. அதுதான் பிரச்சினை. உதாரணமாக தண்ணீர் எப்படி உருவாகிறது என்றால் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து உருவாகிறது என்று சொல்வதுதான் சரியான பதில். ஆனால் அப்படியா சொல்கிறோம்? மழையினால் உருவாகிறது என்று சொல்லிவிடுவோம். எளிமையான பதில் இது. மழை எப்படி பெய்கிறது என்று அடுத்த கேள்வி வந்தால் மேகத்திலிருந்து என்போம். மேகம் எப்படி உருவாகிறது என்றால் கீழேயிருந்து போகும் புகைதான் மேகமாக மாறுகிறது. அவ்வளவுதான். முடித்தாயிற்று.

இப்படி பதில் சொன்னால் கூட போதும். அதுவே பெரிய விஷயம். ஆனால் முக்கால்வாசி நேரங்களில் ‘அப்பா வேலையா இருக்கேன்ல....அப்புறமா சொல்லுறேன்’ என்று சொல்வதுதான் நடக்கிறது. விருப்பட்டு அப்படிச் சொல்லியிருக்க மாட்டோம். ஆனால் முக்கியமான காரியம் என்று நாம் நினைக்கும் ஒரு விஷயத்தைச் செய்து கொண்டிருக்கும் போது நம்மையுமறியாமல் சொல்லிவிடுவோம். முதல் முறை இப்படிச் சொல்லும் போது குழந்தை சிணுங்கும். இரண்டாவது முறை பரிதாபமாகப் பார்க்கும். மூன்றாவது முறை நம்மிடம் கேட்கவே கேட்காது. ‘இந்த அப்பா பதிலே சொல்லமாட்டார்’ என்று நினைத்துக் கொள்ளும். இப்படித்தான் குழந்தைகளின் கேள்விகள் மெதுமெதுவாக மழுங்கடிக்கப்படுகின்றன. 

குழந்தைகளுக்கு fantasy முக்கியம் என்பார்கள். அதுதான் அவர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்கும் உந்துசக்தி. அதனால் முடிந்தவரைக்கும் முடிந்துவிடாத பதில்களாகச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். முடிந்துவிடாத பதில்கள் என்றால் நாம் சொல்லும் பதிலிலிருந்து அவர்கள் இன்னொரு கேள்வியைக் கேட்க வேண்டும். அதற்கேற்ற பதில்களாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கேள்வி கேட்பதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உற்சாகப்படுத்த வேண்டும். அது எளிமையான காரியம்தான். குழந்தை கேள்வி எதுவும் கேட்கவில்லையென்றால் நாம் கேட்கத் துவங்கிவிடலாம். எல்லாவற்றையும் குறித்து அடிப்படையான கேள்விகளில் ஆரம்பிக்கலாம். காற்று குறித்து, மழை குறித்து, கல், மண், பூமி, சூரியன் என எல்லாவற்றையும் குறித்தான கேள்விகளை நாம் எழுப்பினால் குழந்தைகளின் மூளை விழித்துக் கொள்ளும். அடுத்த முறை அவர்களே கேட்கத் தொடங்குவார்கள்.  ‘வெளவாலுக்கு கண்ணு இருக்குதா?’ என்று குழந்தை கேட்டால் ‘தெரியலையே’ என்று சொல்வதைவிடவும் தேடிப்பார்ப்பதுதான் சரியான அணுகுமுறை. இப்பொழுதுதான் நம்மிடம் இணையம் இருக்கிறதே! கூகிளிடம் கேட்டால் தெரிந்துவிடப் போகிறது. கூடவே மீயொலி பற்றியும் சொல்லித் தரலாம். இப்படித்தான் குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்க முடியும்.

கதை சொல்லும் போது நாம் வெளவாலாக மாறிவிட வேண்டும் அல்லது வெளவாலை கதையின் ஒரு கதாபாத்திரமாக மாற்றிவிட வேண்டும். பறக்கும் போது சுவரில் மோதாமல் இருக்க மீயொலியை எழுப்பிக் கொண்டே பறக்க வேண்டும். மனிதர்களால் இந்த மீயொலியைக் கேட்க முடியாது. வெளவாலாலும் நாய்களாலும் மட்டுமே கேட்க முடியும். அந்தச் சத்தம் சுவரில் பட்டு திரும்ப வருவதை வைத்து இரவிலும் மோதாமல் வெளவாலால் பறக்க முடிகிறது. இப்படி பறந்து போய் வில்லன் ஒருவனை அடிக்கப் போகிறது வெளவால் படை. அந்த வெளவால் படைக்கு ஒரு தலைவன் இருக்கிறான்...... இப்படிக் கதையை நீட்டிக் கொண்டே போகும் போது குழந்தைகளிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் பதில் சொல்லத் தொடங்குவார்கள் அல்லது திரும்பக் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். குழந்தைகளின் அறிவு பிடித்துக் கொள்ளும். ஒரு முறை பதிய வைத்துவிட்டால் போதும். பிறகு அவர்கள் வளர்த்தெடுத்துவிடுவார்கள்.

பி.எஸ்.ராமையாவின் கதை ஒன்றிருக்கிறது. நட்சத்திரக் குழந்தைகள் என்று தலைப்பு.

கதைக்குச் செல்வதற்கு முன்பாக ராமையா பற்றி ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. தமிழில் மணிக்கொடி என்ற இதழ் ஒரு காலத்தில் வந்து கொண்டிருந்தது. தமிழ் இலக்கிய வரலாறைப் படிக்கும் போது மணிக்கொடிகாலம் என்ற குறிப்பு கட்டாயமாக இருக்கும். முப்பதுகளில் வெளியான அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இந்த இதழ் ஒரு சமயத்தில் நின்று போனது. அதை மீண்டும் சிறுகதைக்கான மணிக்கொடியாக சில காலம் நடத்தியவர் பி.எஸ்.ராமையா. அதன் பிறகு அவர் சினிமாவுக்கு சென்றதால் மீண்டும் நின்று போனது.

ராமையா எழுதிய கதைதான் நட்சத்திரக் குழந்தைகள். 1930களில் எழுதப்பட்ட கதை என்பதால் மொழி நடையும் அப்படித்தான் இருக்கிறது. வழுக்கிக் கொண்டு போகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. சற்று மெதுவான நடைதான். ஆனால் அந்தக் காலத்தில் வெளியான கதைகளில் முக்கியமான கதை என்று வரிசைப்படுத்துகிறார்கள். எனவே அந்தக் காலக் கதைகளின் மொழியமைவு, உள்ளடக்கம் போன்றவை குறித்தான ஒரு சாம்பிளாக இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.

ரோகிணி என்னும் குழந்தை வானில் இருக்கும் நட்சத்திரங்கள் பற்றி அவளது அப்பாவிடம் கேட்கிறாள்.  அவளது அப்பா சோமசுந்தரம் பி.ஏ படித்தவர்தான். அந்தக்கால பி.ஏ. ஆனால் அவராலும் எல்லாச் சமயங்களிலும் பதில் சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது உண்மையைச் சொல்லும் போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கும் என்று அப்பா சொல்கிறார். அவள் அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அவர் அலுவலகம் சென்றவுடன் அம்மாவுடன் நட்சத்திரத்தைக் காட்டி விளையாடுகிறாள். ஒவ்வொரு நட்சத்திரம் தெரியத் தொடங்கும் போதும் யாரோ உண்மையைச் சொல்லிவிட்டார்கள் என்று புளகாங்கிதமடைகிறாள். மகளைப் பார்த்து அம்மா உச்சி குளிர்ந்து போகிறாள்.

அப்பா வீடு திரும்பிய பிறகு திடீரென்று குழந்தை அழுகிறாள். அப்பா பதறிப் போய் விசாரிக்கிறார். ஒரு நட்சத்திரம் சரிந்து விழுவதைக் கண்ட ரோகிணி யாரோ பொய் சொல்லிவிட்டார்கள் என்று அழுகிறாள். அது வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாத துக்கம் என்றும் இதயத்தால் உணர வேண்டிய துக்கம் என்றும் கதை முடிகிறது.

வெறும் கதையாக வாசித்தால் அப்படியொன்றும் பிரமாதமான கதை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தையின் மனச்சித்திரம், அந்தக் காலத்து அம்மா, அப்பா என்கிற விஷயங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வாசிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த குழந்தைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். சிறுகதையின் போக்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் இந்தக் கதையை தவிர்க்க முடிவதில்லை. அந்தக் கால மொழி நடை, சித்தரிப்பு, குழந்தையின் அக உலகம் பற்றிய குறிப்புகள் போன்றவற்றால் முக்கியமான கதை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

(அடுத்த பெங்களூரு வாசகர் சந்திப்பில் விவாதிக்கப்படவிருக்கும் இந்தக் கதை ஆன்லைனில் கிடைக்கிறது)

ஜெயமோகன்

எனது மேலாளர் தமிழர். புத்தகங்களைப் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். ஆங்கிலப் புத்தகங்கள் குறித்து அவர் பேசினால் நான் பிதுக் பிதுக்கென முழிக்க வேண்டியிருக்கிறது. அப்படியான மனிதருக்கு ஒரு பழக்கம் உண்டு. கோடி ரூபாய் கொடுத்தால் கூட மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை வேறு எந்த வேலையும் செய்யமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயமோகனின் வெண்முரசு தொடரை வாசிக்கிறார். வாசிப்பதோடு நிறுத்துகிறாரா? முடித்துவிட்டு வந்து அந்த அத்தியாயம் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார். மேனேஜராக வேறு இருக்கிறார். இன்னும் படிக்கவில்லை எனச் சொல்லி பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. அதனால் இப்பொழுது நானும் விடாமல் வாசித்துவிடுகிறேன். 

ஒரே பிரச்சினைதான். ஒருநாள் ஏமாந்தாலும் இரண்டு அத்தியாயங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. நான்கு நாட்கள் விட்டுவிட்டால் அவ்வளவுதான். முன்னால் ஓடிக் கொண்டிருக்கிற குதிரையை துரத்திப் போய் பிடிக்கிற கதையாகிவிடுகிறது. அதுவும் விட்டுப்போன ஒரு அத்தியாயத்தை வரிக்கு வரி வாசித்து அர்த்தம் புரிந்து முடிப்பது என்பது மூன்றாவது செமஸ்டரில் அரியர் வைத்த தேர்வை எட்டாவது செமஸ்டரில் முடித்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக் கொண்ட மாதிரிதான். இத்தகைய தொடர்ச்சிக்கு பயந்தே சிலர் விட்டுவிட்டதாகச் சொன்னார்கள். தொடர்ந்து வாசிப்பதில் சிக்கல்கள் இருப்பினும் இந்தத் தொடரை விடாமல் வாசித்துக் கொண்டிருப்பவர்களைச் சந்திப்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. 

வெண்முரசை தினந்தோறும் வாசிக்கக் கூடிய ஏகப்பட்ட வாசகர்களை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. இவ்வளவு அவசரமான உலகத்தில் ஒரு எழுத்தாளனை ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? அதுவும் அதிகமான உழைப்பையும், சிதறாத கவனத்தையும் கோரக் கூடிய வெண்முரசு போன்ற தொடரை ஏன் வாசிக்கிறார்கள்? அதுதான் ஜெயமோகனின் வெற்றி. அடுத்த தலைமுறையில் தீவிரமாக வாசிக்கக் கூடிய ஒரு பெரிய கூட்டத்தை ஜெயமோகன் உருவாக்கிவருகிறார். மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள், கார்போரேட் ஊழியர்கள் என்று வாசிப்புப் பழக்கத்தின் கண்ணி அறுந்து போனவர்களை ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும் இணையத்தின் வழியாக வாசிப்பு நோக்கி இழுத்து வந்திருக்கிறார்கள். நாம் மறுத்தாலும் இதுதான் உண்மை.

சமீபகாலமாக ஜெயமோகனை வசைபாடுவதற்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று அபிலாஷ் ஜெமோவை மாவு மிஷின் என்று எழுதியிருந்தார். வெறும் சொற்களால் பக்கங்களை நிரப்புகிறார் என்பது அவரது குற்றச்சாட்டு. சமீபத்தில் லட்சுமி சரவணக்குமாரும் அப்படித்தான் சொல்லியிருந்தார். வெண்முரசு குப்பை என்பது அவர் வாதம். அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் இரண்டு பேர் மீதுமே எனக்கு மரியாதையுண்டு. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். அதற்காக ஜெயமோகனின் எழுத்துக்களை பெருமொத்தமாகக் குப்பை என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

பாலகுமாரனின் வாசகர்கள்தான் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதெல்லாம் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத sweeping statements. தன்னை எழுத்தாளன் என்றும் படைப்பாளன் என்று சொல்லிக் கொள்கிறவர்களில்தான் பெரும்பாலானவர்கள் எதையும் வாசிப்பதேயில்லை. ஆனால் எழுத்தாளனைவிடவும் ஆழ்ந்து வாசிக்கக் கூடிய வாசகர்கள் இருக்கிறார்கள். எந்தச் சலனமுமின்றி வெறும் வாசிப்பை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களையும் சந்திக்க முடிகிறது. இத்தகையவர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லையென்றால் தான் ஒரு எழுத்தாளன் என்கிற பீடத்திலிருந்து கீழே இறங்கி சில வாசகர்களிடம் பேசிப் பார்க்கலாம். உண்மை தெரிந்துவிடும்.

வெண்முரசு மிக முக்கியமான முயற்சி. அது வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இப்படியான ஒரு முயற்சியை ஜெயமோகனைத்தவிர இன்றைய எழுத்தாளர்கள் வேறு யாராலும் எடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது. அந்தத் தைரியம் ஜெமோவிடம்தான் இருக்கிறது. அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. எழுத்தாளன் என்றால் ஊதாரி, தேசாந்திரி, பொறுப்பற்றவன், குடிகாரன், ஸ்தீரிலோலன் என்பதான பிம்பங்களையெல்லாம் உடைத்துவிட்டு வாசிப்பு மற்றும் எழுத்துக்கான அர்ப்பணிப்பின் வழியாக தனது அசைக்க முடியாத இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஜெயமோகன். 

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றிவிட்டுப் போய்விடலாம்தான். அதனால் நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்?

ஜெயமோகன் எழுதிக் குவிப்பதுதான் பிரச்சினை. இல்லையா? இது சக எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களைப் பதறச் செய்துவிடுகிறது. ஜெயமோகன் மீது விழக் கூடிய வெளிச்சம் ஏதோவொரு சலனத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது. அதற்கு எதுவுமே செய்ய முடியாது. அவர்களும் எழுதித்தான் தீர வேண்டும். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சோம்பேறிகள். அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். அதற்கு ஒரு சால்ஜாப்பும் வைத்திருப்பார்கள். ‘உள்ளுக்குள்ளிருந்து பொங்கி வரும் போதுதான் எழுதுவேன்’ என்பார்கள். ஆனால் அப்படியானவர்கள் ஒரு கட்டத்தில் பதற்றமடைகிறார்கள். இந்த உலகம் தன்னை மறந்துவிடுமோ என்று நடுங்குகிறார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் அலர்ஜியாகிவிடுகிறார். இது ஒருவிதத்தில் ஆரோக்கியமான சூழல்தான். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுதத் தொடங்கட்டும். குடித்துவிட்டு வெறும் வாய்வழியான உரையாடலை மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருப்பதைத் தாண்டி அதை எழுத்தாக்கட்டும். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு காலகாலத்துக்கு தன்னை ஒரு பீடத்தில் கட்டி வைத்துக் கொண்டு திரிபவர்களுக்கு இதெல்லாம் பிரச்சினைதான்.

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லவில்லை. அவரை விமர்சிக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் அதை விரிவாகச் செய்ய வேண்டும். தரவுகளோடு அத்தகைய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ‘ஜெயமோகன் எழுத வந்த காலத்துலதான் நானும் எழுதினேன்...அவன் ஒரு லிஸ்ட் போட்டான்யா...சிறந்த சிறுகதைகள்னு....என் கதை எதையுமே சேர்த்துக்கல...என்ன அரசியல் பண்ணுறாம்பாத்தியா?’ என்றார். அவருடைய ஆதங்கம் புரிந்தது. ‘உங்க கதை இருந்தா கொடுக்கறீங்களா? வாசித்துவிடுகிறேன்’ என்று கேட்டதற்கு வீட்டிலிருந்து நுனி மடங்காத தொகுப்பின் பிரதியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தார்.  பத்துப் பக்கங்கள் வாசித்ததோடு சரி. நொந்துவிட்டேன். அதே தினத்தில் அவர் ‘இப்போவெல்லாம் அவன் எழுதறத வாசிக்கிறதேயில்ல...குப்பையைத்தான் கொட்டுகிறான்’ என்றார். தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டேன். இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அதே மனிதரைச் சந்தித்தேன். ‘வெண்முரசுன்னு ஒண்ணும் எழுதறானாம்ல...குப்பை..குப்பை’ என்றார். அவர் ஒரு அத்தியாயம் கூட வாசித்திருக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் ஒரு முன்முடிவை வைத்திருக்கிறார். ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு எதிர்ப்படுகிறவனிடமெல்லாம் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

இங்கு சக எழுத்தாளனை நிரகாரிப்பவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஜெயமோகன் மீது வெறுப்பு உண்டாவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. அவரது அரசியல் செயல்பாடு, எழுதிக் குவிப்பது, அவருக்கு உண்டாகியிருக்கும் வாசகர்கள், தன்னை அங்கீகரிக்காதது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதற்காக ஜெயமோகனை நிராகரிப்பதும் அவர் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் குப்பை என்றும் எந்தத் தரவுமில்லாமல் முன் வைப்பதும் அபத்தம். அப்படியொரு வாதத்தை முன் வைக்க வேண்டுமானால் ஒரு விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும். அந்தப் படைப்பில் என்ன பிரச்சினை இருக்கிறதென்று விரிவாக எழுத வேண்டும். பிறகு வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ‘அதை வாசித்தேன்...ஒண்ணுமேயில்ல’ என்பதுதான் சொறிந்துவிடுதல். ஜெயமோகன் மீது வெறுப்பைக் கட்டிக் கொண்டு திரிபவர்களின் முதுகில் சொறிந்துவிடுவது மாதிரி. படைப்பின் ரசனை எதுவுமேயில்லாமல் வெற்று அரசியல் கூச்சல் போடும் வினவு வகையறாக்கள் இதைச் செய்தால் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடலாம். ஆனால் அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் போன்ற படைப்பாளிகள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களின் வழியாக நம் காலத்தின் மாபெரும் படைப்பாளுமையை இடது கையால் தள்ளிவிடுவது ஆரோக்கியமானதன்று.

Mar 25, 2015

சினிமாக்காரன் சகவாசம்

விவேகானந்தன் கிட்டத்தட்ட விவேகாவாக மாறுவதற்குள்ளாகவே சந்தித்துவிட்டேன்.

2000களின் தொடக்கத்தில் சென்னை வந்திருந்த போது ஒரு மிதப்பு இருந்தது. ‘நமது கவிதைகளைக் காட்டினால் போதும் பட வாய்ப்புகள் கொட்டத் துவங்கிவிடும்’ என்கிற அபத்தமான நம்பிக்கை. யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என சகட்டுமேனிக்குச் சந்தித்துக் கொண்டிருந்தேன். எங்கே சந்தித்தேன்? - வாசலில் போய் நிற்க வேண்டியது. வெகுநேரம் கழித்து ‘இப்போ பார்க்க முடியாது’ என்று யாராவது சொல்வார்கள். ‘என்னையே அவமானப்படுத்திட்டீங்களா? இவன் இல்லைன்னா இன்னொருத்தன்..போங்கடா டேய்’ என்று மனதுக்குள் கறுவியபடி அடுத்த அலுவலகத்துக்குச் சென்றுவிடுவதுதான் வாடிக்கை. இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. 

சென்னையில் எனது அறைத் தோழர்களுக்கு சினிமா வாசனையே கிடையாது. தாறுமாறாக உசுப்பேற்றியிருந்தார்கள். ரணகளம் ஆனதுதான் மிச்சம். ஆனால் அவர்களது உசுப்பேற்றலுக்கு தீனி போடும் விதமாக நானும் அவர்களை சொறிந்து விட்டிருந்தேன். அப்பொழுது சினிமாக்காரர்களின் முகவரிகள் நிரம்பிய புத்தகங்கள் நான்கைந்து கைவசம் இருந்தது. தி.நகர் கிளம்பினால் சிவக்குமார் வீட்டிலிருந்து இளையராஜா வீடு வரை. மாம்பலம் சென்றால் பா.விஜய் உள்ளிட்ட ஒரு பட்டியல். கோடம்பாக்கம் என்றால் சேரன் வீடு. மாலையில் அறைக்குத் திரும்பி நண்பர்களிடம் இன்று இன்னாரைப் பார்த்தேன் என்று பெருமையாகப் பீற்றிக் கொள்வேன். உண்மையில் இன்னாரது அலுவலகத்தையும் யாராவது ஒரு அல்லக்கையையும்தான் பார்த்திருப்பேன். ஆனால் பொய்யைக் கேட்டவுடன் அவர்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும். என்ன பேசினார் ஏது பேசினார் என்று விலாவாரியாகக் கேட்பார்கள். பொய் சொல்லவா தெரியாது? அடித்துவிட வேண்டியதுதான்.

இப்படி சகட்டுமேனிக்கு பட்டியல் போட்டு அலைந்து கொண்டிருந்த போதுதான் விவேகா அறிமுகம். அப்பொழுது அவரது பெயர் எந்த முகவரி புத்தகத்திலும் வந்திருக்கவில்லை. பிரபலமும் இல்லை. சுந்தர்.சியைப் பார்ப்பதற்காக வடபழனி சென்றிருந்தேன். ‘சார் வெளியூர்ல இருக்காரு’ என்றார். ‘அப்படின்னா மேடம் இருக்காங்களா?’என்று கேட்டிருக்க வேண்டும். திராணி இல்லை. ‘இந்த ஏரியாவில் வேற யார் இருக்காங்க?’என்றேன். அவருக்கு விவேகாவைத் தெரிந்திருந்தது. அவரது வீட்டுக்குச் செல்லும் வழியைச் சொல்லி அனுப்பி வைத்தார். விவேகாவும் அவருடைய நண்பரும் வடபழனியில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள். அவர்களே சமையல் செய்து கொண்டிருந்தார்கள். கதவைத் தட்டிய சப்தம் கேட்டு வந்து திறந்தவர்கள் என்னையும் நேராக சமையலறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அடுப்புக் கரி படிந்திருந்த ஈயப்பாத்திரத்தில் ரஸம் கொதித்துக் கொண்டிருந்தது. ‘என்னடா இது...இவங்க இப்படி இருக்காங்க?’ என்று நினைத்துக் கொண்டேன். 

அந்தக் காலகட்டத்தில் பாடலாசிரியர்களுக்கிடையே மிகக் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருந்தது. பா.விஜய் கொடி கட்டிக் கொண்டிருந்தார். அவரை எங்கள் கல்லூரியின் தமிழ் விழாவிற்காக அழைத்துப் பார்த்தோம். போய்வர மகிழ்வுந்து வேண்டும். அங்கே தங்கி இளைப்பாற ஒரு நட்சத்திர அறை வேண்டும் அவை போக ஐந்தாயிரம் பணம் வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கிற அளவுக்கு பிரபலமாகியிருந்தார். முத்துக்குமாரும் ஓரளவுக்கு இடம் பிடிக்க ஆரம்பித்திருந்தார். யுகபாரதி, சிநேகன், விவேகா போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் விவேகாவிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடிந்தது. மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது- ஆனால் விவேகா குடும்பப் பின்னணி மிக மிகச் சுமாரானது. கிராமத்துக் குடும்பம். பட்டப்படிப்பு முடிந்தவுடன் பாடல் எழுதுகிறேன் என்று சினிமாவுக்கு கிளம்பிவிட்டார். வந்தவுடனே வாய்ப்பு எதுவும் கிடைத்துவிடவில்லை. சென்னையில் வெறித்தனமாகத் திரிந்துதான் முதல் வாய்ப்பை வாங்கியிருக்கிறார். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் பெரிய வருமானம் இருக்காது அல்லவா? அதனால்தான் அந்தக் கரிப்பிடித்த ஈயப்பாத்திரம்.

இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதில் அவருக்கு சங்கடம் எதுவும் இல்லை. தான் பெரிய ஆள் ஆன பிறகு  ‘நான் அப்படி கஷ்டப்பட்டேன் இப்படி கஷ்டப்பட்டேன்’ என்று சொல்வதில் சிலாகிக்க ஒன்றுமில்லை. ஆனால் தான் கஷ்டப்பட்டிருக்கும் காலத்திலேயே தனது கஷ்டங்களை புதியவர்களிடம் சங்கடமில்லாமல் பகிர்ந்து கொள்வதுதான் பெரிய விஷயம். அதற்கு ஒருவித மனோதைரியம் வேண்டும். விவேகாவிடம் அது இருந்தது. அதனாலேயே என்னவோ அவரோடு நெருங்கிக் கொண்டிருந்தேன். மிஸ்டு கால் கொடுத்தால் திரும்பவும் அழைக்கிற ஒரே சினிமாக்கார ஜீவனாக அவர் இருந்தார். அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கையில் பணம் வைத்திருக்க மாட்டேன். அதனால் கஞ்சப்பயலாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது மட்டும் கஞ்சப்பயல் இல்லையா என்று கேட்கக் கூடாது. அந்தச் சமயத்தில் வறக்கஞ்சன். 

திடீரென்று விவேகா பற்றி எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. நேற்று ஒரு வேலை காரணமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. பகல் நேர அரசுப் பேருந்து. ஈ, காக்கா இல்லை. வெறும் ஏழு பேரை ஏற்றிக் கொண்டு ஓசூரிலிருந்து வண்டி கிளம்பியது. இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் பாடல்கள் கேட்பதேயில்லை. வெறும் தகர டப்பாவாகத்தான் இருக்கின்றன. நல்லவேளையாக இந்தப் பேருந்து விதிவிலக்கு. ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது குடும்பம் குழந்தைகளைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு பாடல் சி.டியை மாற்றச் சொன்னார். பத்திருபது குறுந்தகடுகளை ஒரு பைக்குள் போட்டு வைத்திருந்தார். அதில் ஒன்று ‘விவேகா கலெக்‌ஷன்ஸ்’. ஆச்சரியமாக இருந்தது. பாடலாசிரியருக்கென்று தனிக் கலெக்‌ஷன்ஸ் தயாரிக்குமளவுக்கு பாடல்வரிகளை கவனிப்பவர்கள் இருக்கிறார்களா? அவராகவே பாடல்களைத் தேர்ந்தெடுத்து கடையில் பட்டியல் கொடுத்து பதிப்பித்துத் தரச் சொன்னாராம்.

நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி இப்படி யாரோ ஒரு முகம் தெரியாதவர் பேசினால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? அப்படித்தான் இருந்தது. விவேகாவிடம் இதைச் சொன்னால் நிச்சயம் சந்தோஷப்படுவார். ஆனால் சொல்லவில்லை. ‘இதைச் சொல்வதால் என்ன குறைந்துவிடப் போகிறேன்?’ தெரியவில்லை.  பத்து வருடங்களுக்கு மேலாக அவரைத் தெரியும். அவரது அலைபேசி எண் கூட மனப்பாடமாகத் தெரியும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அவரை வெளிப்படையாக பாராட்டியதாகவே நினைவில் இல்லை. நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களை அவ்வப்போது நாம் பாராட்டிவிட வேண்டும். இப்பொழுதெல்லாம் பாராட்டுவது என்றால் காரண காரியத்திற்காக மட்டும்தானே செய்கிறோம்? அப்படி நாம் நினைக்கவில்லையென்றாலும் அடுத்தவன் சொல்வான். ‘ஏதோ காரியத்துக்கு அடி போடுகிறான்’ என்று.

பதினைந்து வருட காலத்தில் சினிமாவில் அவரது graph படு வேகமாக எகிறிவிட்டது. சிங்கம், உத்தமவில்லன் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் கூட தனி ஆவர்த்தனம் செய்கிறார். சினிமா எத்தனையோ பேரை சுருட்டி எடுத்துச் சென்று கடலில் கலந்துவிடுகிறது. மீறித் தப்பிக்கும் சிலர்தான் ரோல்மாடலாக இருக்கிறார்கள். ‘பாரதிராஜா மாதிரி ஆகணும்’‘பாலச்சந்தர் மாதிரி ஆகணும்’ என்றுதான் வருகிறார்கள். எத்தனை பாரதிராஜாக்களும், பாலச்சந்தர்களும் இன்னமும் க்ளாப் அடித்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த சினிமா உலகத்துக்குத்தான் வெளிச்சம்.

விவேகாவைப் பார்த்து பயப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இந்தச் சினிமா உலகம் காலை வாரிவிட்டால் என்ன செய்வார் என்கிற பயம் அது. ஆனால் அவர் தெளிவாகத்தான் இருந்தார். மிகச் சாதாரண குடும்பச் சூழலிலிருந்து வந்து மிகத் தீவிரமான உழைப்பின் மூலமாகவே தனக்கான இடத்தை விவேகா பிடித்துவிட்டார். ஓரிரு மாதங்களுக்கு முன்பாகப் பேசிய போது கூட ‘ஒரு இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறேன்...சம்பளம் மாதிரி வாடகை வந்துடுது மணி’ என்றார். அதில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம். இன்னமும் அதே மனிதராகத்தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ‘சினிமாவில் என்ன கியாரண்டி?’ என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கான பதில் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் உழைப்பும் திறமையும் இருந்தால் எப்படியும் தம் கட்டிவிடலாம் என்பதற்கு விவேகா மாதிரியானவர்கள் உதாரணமாகத் தெரிகிறார்கள்.  சினிமா ஒரு மாய உலகம்தானே? தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். திறக்கவில்லையென்றாலும் தட்ட வேண்டும். ‘போங்கடா டேய்’ என்றால் அதுவும் ‘போடா டேய்’ என்று சொல்லிவிடும்.

Mar 24, 2015

நட்சத்திரங்கள் சரியில்லை

பெங்களூரில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியுமளவுக்கு புகழ்பெற்ற மருத்துவமனை அது. பங்களாதேஷ், ஆப்பிரிக்க உள்ளிட்ட அந்நிய தேசங்களிலிருந்தும் நோயாளிகள் குவிகிறார்கள். இப்படி வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக மருத்துவமனையைச் சுற்றிலும் நிறைய தனியார் விடுதிகள் உண்டு. முந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் வரைக்கும் அறை வாடகையாகத் தர வேண்டும். அப்படி வந்திருந்த ஒரு பீஹாரி குடும்பத்துடன் அறிமுகமாகியிருந்தேன். மாநில அரசாங்கத்தில் குமாஸ்தாவாக இருந்த அந்த மனிதர் தனது மகள் சஹானாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவளுக்குத்தான் சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது. நோய் முற்றியிருந்ததது. அதனால் சில மாதங்கள் பெங்களூரிலேயே தங்கியிருக்கச் சொல்லிவிட்டார்கள். அந்தக் குடும்பத்தினர் ஒரு விடுதியில் அறை பிடித்திருந்தார்கள். அப்பொழுது அடிக்கடி அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கூடவே அந்த தேவதையையும். 

சஹானாவுக்கு தொண்டையில் புற்று வளர்ந்திருந்தது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளால் அதிகமும் பேச முடியாது. ஆனால் கண்களில் வலியின் வேதனை எந்நேரமும் மின்னிக் கொண்டேயிருப்பதை உணரலாம். அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்தால் பள்ளியொன்றின் மைதானம் தெரியும். அறையில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பெரும்பாலும் அவள் அந்த மைதானத்தைத்தான் வெறித்துக் கொண்டிருப்பாள். அவள் எந்தத் தவறும் செய்யாதவள். இந்த புவியில் நிகழும் அசுர வளர்ச்சியின் மாற்றங்கள் அவளது தொண்டையைப் பதம் பார்த்திருக்கின்றன என்பது அவரது தந்தையின் குற்றச்சாட்டு. அவர் சொல்வதும் சரிதான். காற்று, நிலம், நீர் என சகலத்தையும் மாசடையச் செய்திருக்கிறோம். அது சஹானாவைப் போன்றவர்களை பாதிக்கிறது. 

மொழி தெரியாத இந்த ஊரில் தினமும் மருத்துவமனைக்கும் விடுதிக்குமாக அவர்கள் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அந்த பிஞ்சுக் குழந்தையின் கனவுகள், குடும்பத்தினரின் ஆசைகள் என அத்தனையும் காட்டாற்றில் சிக்கிக் கொண்ட சருகைப் போல திசையற்று அலைந்து கொண்டிருந்தன. அவளது நோய் தீவிரமாகிக் கொண்டிருந்தது. இனி தாக்குப்பிடிப்பது சிரமம் என்று மருத்துவமனையில் கை விரித்திருந்தார்கள். அவர்களது குடும்பம் பீஹாருக்கு கிளம்பும் முன்பாக சஹானாவை பார்க்க வேண்டும் என விரும்பினேன். அவளோடு அதிகம் பேசியதில்லை. ஆனால் கடைசியாகப் பார்த்த போது தனது அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு ஒரு வினாடி சிரித்தாள். அந்தச் சிரிப்பு இன்னமும் மனதுக்குள் உறைந்து போய்க் கிடக்கிறது.

பிறகு புற்றுநோய் குறித்து எதை எதிர்கொண்டாலும் சஹானாவின் அந்தப் புன்னகையை தவிர்க்க முடிவதேயில்லை. சமீபத்தில் ஒரு படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. Fault in our stars.

படத்தின் நாயகி ஹெய்சல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவள். தைராய்டில் புற்று. அவளுக்கு நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எந்நேரமும் ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கிக் கொண்டேதான் அலைய வேண்டும். இல்லையென்றால் மூச்சுவிடுவதில் சிரமமாகிவிடும். ஹெய்சலின் பெற்றோருக்கு அவள் ஒரே மகள். அம்மாவுக்கு மகளைப் பற்றிய வருத்தம் பெருகுகிறது. திரும்பத் திரும்ப ஒரே புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவரிடம் புகார் தெரிவிக்கிறாள். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய புத்தகம் அது. நோயைப் பற்றிய நினைவுகளிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஹெய்சல் உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று மகளிடம் சொல்கிறார்கள். உதவி மையத்தில் வேறு சில புற்று நோயாளிகள் தினமும் கூடுகிறார்கள். சக நோயாளிகளுக்கு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். நோயாளிகளுக்கு அது ஒருவிதமான ஆறுதலைக் கொடுக்கிறது. அந்தக் கூட்டத்தில்தான் அகஸ்டஸைச் சந்திக்கிறாள் ஹெய்சல். அவன் மிகச் சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரனாக இருந்தவன். இப்பொழுது புற்று நோயின் காரணமாக ஒரு காலை நீக்கிவிட்டார்கள். ஆனால் தனது புன்னகையால் ஹெய்சலை வசீகரிக்கிறான். அவனும் ஹெய்சலும் தாங்கள் விரும்பிய புத்தகங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். ஹெய்சலுக்கு பிடித்தமான புத்தகம் அகஸ்டஸூக்கும் பிடித்துவிடுகிறது. ஹெய்சலும் அகஸ்டஸூம் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் பீட்டருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். தன்னைக் காண்பதற்காக ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வரச் சொல்லி எழுத்தாளரிடமிருந்து பதில் வருகிறது.

இது Fault in our stars படத்தின் முதல் பாதி. அதே பெயரில் ஒரு நாவல் வந்திருக்கிறது. சில மாறுதல்களுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

இத்தகைய கதைகளைக் கொண்ட படங்கள் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் படியாகத் தொடங்கினால் பார்வையாளனுக்கு சற்று தொய்வு ஏற்பட்டுவிடக் கூடும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது- எனக்கு சலிப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படம் பாஸிட்டிவ் எனர்ஜியுடன்தான் ஆரம்பிக்கிறது. அதற்காக மற்ற சாதாரணப் படங்களைப் போன்ற துள்ளலான இசையுடனும் கொண்டாட்டத்துடனும் ஆரம்பிக்கிறது என்று சொல்ல முடியாது. சற்றே உள்ளடங்கிய குரல். அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் களம் அப்படியானது. கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். ஆனால் தங்களின் நோய்மையை நினைத்து ஒடுங்கிக் கிடக்காத இளைஞர்கள். அப்படியான பாஸிடிவ் எனர்ஜி.


படம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே நம்மை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். 

மிக எளிமையான காட்சிகள், காமத்தை வெளிப்படுத்தாத காதல் காட்சிகள், ஹாலிவுட் படங்களில் வழக்கமாக சித்தரிக்கப்படும் பொறுப்பில்லாத பெற்றோர்கள் என்று இல்லாமல் ஹெய்சல் மீது உயிரையே வைத்திருக்கும் பெற்றோர்கள் என பார்வையாளனை ஒன்றச் செய்துவிடுகிறார்கள். அடுத்தபாதியில் அகஸ்டஸூம் ஹெய்சலும் ஆம்ஸ்டர்டம் செல்வதும், அங்கே அந்த எழுத்தாளன் இவர்களை வெறுப்பேற்றும் போதும், அவர்கள் பரஸ்பரம் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போதும் என காட்சிகள் நகரும் போது அந்தச் சம்பவங்கள் எல்லாம் ஏதோ நமக்கே நிகழ்வது போலத்தான் தோன்றுகிறது. ஆம்ஸடர்டம் செல்வதற்கு முன்பாகவே மருத்துவர்கள் ஹெய்சலை எச்சரித்துத்தான் அனுப்புகிறார்கள். ஆனால் ஹெய்சல் உயர்ந்த படிகளில் நடந்தே ஏறுகிறாள், தனது சுவாசக் குழாயைக் கழட்டி விமான நிலையத்தில் கேள்வி கேட்கும் குழந்தைக்குக் காட்டுகிறாள். இப்படியான ஒவ்வொரு காட்சிகளிலும் ‘அய்யோ ஹெய்சலுக்கு மூச்சுத் திணறல் வந்துவிடுமோ’ என்று பயத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதெல்லாம்தான் படத்தின் மிகப்பெரிய பலங்கள் என்று தோன்றுகிறது.

ஹெய்சலாக நடித்திருக்கும் ஷெலின் வுட்லியும் அகஸ்டஸாக நடித்திருக்கும் ஏன்ஸல் எல்கார்ட்டும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இரண்டு மூன்று முறையாவது திருப்பித் திருப்பி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதல் முறை படம் பார்த்து முடித்தபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அகஸ்டஸையும், ஹெய்சலையும் தாண்டி சஹானா நினைவில் வந்து கொண்டிருந்தாள். அன்றைய தினம் இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது- ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலை அது. சஹானாவின் தந்தை அழைத்திருந்தார். குரல் உடைந்திருந்தது. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பாக சஹானாவுக்கு மூச்சுத் திணறல் வந்திருக்கிறது. அருகாமையில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனை வாயிலை அடையவும் சஹானா இந்த உலகைவிட்டு நீங்கவும் சரியாக இருந்திருக்கிறது. தனது பீஹாரிய ஆங்கிலத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக காத்திருந்தேன். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகாக மூக்கை உறிஞ்சிக் கொண்டு ‘அந்த மருத்துவமனைப் பக்கமாகப் போனால் சஹானாவை ஒரு வினாடி நினைச்சுக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தார்.

படத்தில் ஒரு காட்சி வரும். உதவி மையத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அகஸ்டஸ் ‘தனது மறைவுக்குப் பிறகும் தன்னை மற்றவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்’ என்பான். தனது மகளை அடுத்தவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சஹானாவின் அப்பா விரும்பியது போலவே.

மூன்று மணிக்கு மேலாகத் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. மொட்டை மாடிக் கதவைத் திறந்தேன். இந்த மாநகரின் சோடியம் விளக்குகள் வானத்தில் சிவப்பு நிறத்தைச் சிதறடித்திருந்தன. நட்சத்திரங்கள் எதுவும் தெரியவில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் ஹெய்சல் வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்பாள். அகஸ்டஸின் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் அவள் அவனது நினைவுகளால் முழுமையாக நிரம்பியிருப்பாள். நான் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது சஹானாவின் நினைவுகளால் நிரம்பிக் கொண்டிருந்தேன். குளிர்வாடைக்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. அப்பொழுது திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று விரல்களுக்குத் தோன்றவேயில்லை.

தாய்மார்களே பெரியோர்களே

டிசம்பர் மாதத்திலிருந்து கரிகாலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்- ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று. எனக்கும் உள்ளூர ஆசைதான். ஆனால் ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஆரம்பித்துவிட முடியுமா? அதற்கான அவசியம் என்று ஏதாவது இருக்க வேண்டுமல்லவா? ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை...சாதாரணக் கலந்துரையாடலாக நடத்தலாம்’ என்பதுதான் திட்டம். ஆரம்பத்தில் கடற்கரை அல்லது பூங்கா மாதிரியான இடங்களாகத்தான் யோசித்துப் பார்த்தோம். ஆனால் டிஸ்கவரி புக் பேலஸ்தான் சரியாக இருக்கும் என்றும் யாவரும்.காம் நண்பர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எதைப் பற்றியான கூட்டம் என்பதில் பெரிய குழப்பம் இல்லை. கார்ட்டூனிஸ்ட் பாலாவிடம் ‘நீங்கள் பேச முடியுமா?’ என்று கேட்டதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொண்டார். அவர் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் பற்றி பேசுகிறார். இயக்குநர் கவிதாபாரதியுடன் தனிப்பட்ட அறிமுகமில்லை. ஆனால்  அவர் மசால்தோசை 38 ரூபாய் புத்தகம் பற்றிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். அவரிடம் கேட்டவுடன் சரி என்று சொல்லிவிட்டார் என்று கரிகாலனுக்கு ஏக சந்தோஷம். எனக்கும்தான். நாடகக்கலைஞர் தம்பிச்சோழனும் பேசுகிறார். இதுதான் என்றில்லாமல் கலந்துகட்டி பேசுவதாகச் சொன்னார். நல்லதாகப் போயிற்று.

புத்தகங்களைப் பற்றி பேசிவிட்டு நிசப்தம்.காம் தளத்தை விட்டுவிட முடியுமா? அது இல்லையென்றால் எதுவுமே இல்லை. நாகேஸ்வரன் மற்றும் புகழேந்தி இருவரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். நாகேஸ்வரன் வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் சி.ஏ தேர்வில் தேசிய அளவிலான ரேங்க்குடன் தகுதி பெற்றவர். இப்பொழுது மிகுந்த சிரமப்பட்டுத்தான் நடக்கிறார். நிசப்தம் தளத்தைத் தொடர்ந்து வாசித்து கருத்துச் சொல்லிக் கொண்டே இருப்பவர். புகழேந்தி அவர்களும் அப்படியாகத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்தான். அரசு ஊழியர். இவர்கள் இருவரும் இயல்பாகப் பேசக் கூடியவர்கள் என்பதால் மனதில் பட்டதைப் பேசிவிடுவார்கள் என நம்புகிறேன்.

முதல் பத்தியில் குறிப்பிட்டது போல இது ஒரு கலந்துரையாடல்தான். ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் கூட்டம் தொடங்குகிறது. இரண்டு மணி நேரங்கள். மேற்சொன்ன ஐந்து பேரும் தோராயமாக ஆளுக்கு பத்து நிமிடங்கள் பேசினால் ஒரு மணி நேரம் பிடிக்கும். அப்புறம் ஒரு மணி சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்கலாம். இப்படியான கூட்டங்களில் கிடைக்கும் எதிர்வினைகள்தான் அடுத்து நகரவேண்டிய பாதை குறித்தான தெளிவை உண்டாக்குபவை. சம்பிரதாயமான கூட்டங்களில் சகஜமாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் அப்படியான கூட்டங்களில் ஆர்வமுமில்லை. 

நன்றாக ஞாபகமிருக்கிறது - கடந்த முறை நிகழ்ந்த இப்படியான யாவரும்.காம் கூட்டம் முடிந்து பேசிக் கொண்டிருந்தபோதுதான் யாரோ ஒருவர் ‘ட்ரஸ்ட் மாதிரி ஏதாச்சும் செய்யலாமே’ என்றார். அவர் சொன்ன போது கலங்கலாகத்தான் இருந்தது. என்ன செய்வது? எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் புரியவில்லை. ஆனால் அவர் சொன்னது ஒரு தூண்டுகோல்தான். பிறகு அது குறித்தான யோசனைகள் ஒரு வடிவத்தைக் கொண்டு வந்து சேர்த்தன.

அதன் நினைவாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். சென்னை மடுமாநகர் பள்ளிக்கு விளையாட்டுச் சாதனங்களை இதே நிகழ்ச்சியில் வழங்கிவிடலாம். 

‘அலைகடலெனத் திரண்டு வருவார்கள் பாருங்கள்’ என்று உசுப்பேற்றினார்கள். ரணகளம் ஆக்கிக் கொள்வதற்கெல்லாம் தயாராக இல்லை. ஆனால் சென்னையில் கலந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் அத்தனை பேரையும் நிச்சயம் எதிர்பார்க்கிறோம். வழிகாட்டுதலும் எதிர்வினைகளும் மிக மிக அவசியமானவை. வெறும் சடங்காக அழைக்கவில்லை. உண்மையிலேயே அவை எனது போக்கு, எழுத்து, செயல்பாடு குறித்தான சோதனையைச் செய்ய உதவும் லிட்மஸ் தாள்.

பொதுவெளியில் இயங்குபவர்கள் இந்தச் சமூகத்தின் நாடியைப் பிடித்துப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன். அந்த வெகுஜன மனநிலையில் சலனத்தை உண்டாக்கி எதிர்திசையில் நகர்கிறோமோ அல்லது அல்லது அந்த மனநிலையின் போக்கிலேயே நகர்கிறோமோ என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இந்தச் சமூகம் என்ன நினைக்கிறது என்பதை நிச்சயம் புரிந்து கொண்டவனாக இருக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த மாதிரியான கூட்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே தாய்மார்களே, பெரியோர்களே, வாக்காளப் பெருங்குடி மக்களே..மறந்துவிடாதீர்கள்...மறந்தும் இருந்துவிடாதீர்கள்! ஏப்ரல் 05 காலை பத்து மணி. டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை.

Mar 23, 2015

ஒரு மாலைப் பொழுது

கலாப்ரியா தம்பதி சமேதகராக காசி சென்று திரும்பியிருந்தார். பெங்களூரிலிருந்துதான் விமானம். திரும்பி வந்து பெங்களூரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதுதான் அழைத்திருந்தார். அவருக்குக் கை கொடுத்தால் பாதி புண்ணியத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள். கப்பன் பூங்கா என் அலுவலகத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர்தான் இருக்கும். வெக்குடு வெக்குடு என நடந்தால் இருபது நிமிடங்கள்தான். நான்கரை மணிக்கெல்லாம் மேலாளரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஒரு குழாமே இருந்தது. 

எழுத்தாளர் பாவண்ணன் வந்திருந்தார். அவரைப் பார்க்கும் போதே உற்சாகம் ஒட்டிக் கொள்ளும். அவரைப் போன்ற எளிமையான மனிதர்கள் வேறு யாரையாவது சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. தமிழின் சிறுகதைகளில் எந்தச் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். கன்னட இலக்கிய உலகம் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பார். தனது படைப்பாக்கத்தின் வழியாகவும் மொழியாக்கத்தின் வழியாகவும் தமிழில் அவரது  பங்களிப்பு பற்றி வாசிப்புப் பழக்கம் உள்ள அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கக் கூடும். சாதாரணமாகப் பேசுவார். முளைத்து மூன்று இலைவிடாத குளுவான்கள் எல்லாம் இந்த ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க இந்த மனிதர் மட்டும் ஏன் தளும்புவதே இல்லை என்று சந்தேகமாகவே இருக்கும். 

வழக்கமாக அவரோடு இருக்கும் திருஞான சம்பந்தமும் வந்திருந்தார். சம்பந்தமும் லேசுப்பட்ட ஆள் இல்லை. மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் விஞ்ஞானி. விமான வடிவமைப்பில் இருக்கிறார். ஏரோ டயனமிக்ஸ் தவிர பிற எல்லாவற்றையும் பற்றி பேசக் கூடிய மனிதர். பயணம் செய்வதிலும் வாசிப்பிலும் மிகுந்த ஆர்வமுடையவர். காசியில் தனது பாதைகளைப் பற்றி கலாப்ரியா பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தம் தனது காசி, பீஹார் பயணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். காசியைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் தீராது என்பார்கள். அப்படித்தான் இருந்தது. அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திலும் நான்கு கேள்விகளாவது கேட்பதற்கு மிச்சமிருந்தன.

மகாலிங்கமும் காசி சென்று திரும்பியிருந்தார். பெங்களூர்வாசி. மிகத் தீவிரமான வாசிப்பாளர். ஆனால் அவராக பேசவே மாட்டார். ஆனால் ஆரம்பித்துவிட்டால் அவரது ஆழம் தெரியும். மிகத் தெளிவாகப் பேசுவார். இப்படியான மனிதர்களுடன் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் சந்திப்பு நிகழ்த்தினாலும் மிகுந்த நிறைவுடையதாக இருக்கிறது. காதுகளைத் திறந்து வைத்து அமர்ந்து கொண்டால் போதும்.  சில சொற்கள் உள்ளே விழும். அவை உள்ளுக்குள் நொதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவைதான் பெரும்பாலான சமயங்களில் சந்தோஷ வினையூக்கிகளாக இருக்கின்றன.

பரிதி பதிப்பகத்தின் இளம்பரிதியும் அவரது நண்பரும் சேலம் ஸ்ரீனிவாசனுடன் வந்திருந்தார்கள். பரிதி வகுப்பறை என்றவொரு சிற்றிதழ் நடத்துகிறார். அதைச் சிற்றிதழ் என்று சொல்ல முடியாது. பேரிதழ். ஒரு இதழின் விலை நூறு ரூபாய். ஒரு வருடச் சந்தா ஆயிரத்து இருநூறு ரூபாய். இவ்வளவு பெரிய விலையில் ஒரு இதழைக் கொண்டு வர வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பரிதி நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.

கிர்த்திகா தரனும், கவிஞர் ராமலஷ்மியும் வந்திருந்தார்கள். இப்படியாக ஒரு கூட்டம்.


இது எந்தவிதத்திலும் ஒருங்கிணைக்கப்படாத உரையாடல். கப்பன் பூங்காவின் மொட்டைப்பாறை வாகானதாக இருந்தது. செளகரியப்பட்ட இடங்களில் அமர்ந்து கொண்டு கண்டது கடியதை வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இப்படியான உரையாடல்கள் மனதுக்கு நிறைவு தருவனவாக இருக்கின்றன. பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கிளி மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று பேச்சை அதை நோக்கித் திருப்ப முடிந்தது. முறைப்படுத்தப்பட்ட உரையாடல்களில் அதெல்லாம் சாத்தியமில்லை. பேச்சாளர் எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைத்தான் கவனிக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியில்லை. எதை வேண்டுமானாலும் பேச முடிகிறது.

மிகப்பெரிய இந்த நகரத்தில் கப்பன் பூங்காவைத் தேர்ந்தெடுத்த அந்தக் கிளி உண்மையிலேயே அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும். அவ்வளவு பாதுகாப்பான இடம் அது. இந்த நகரத்தின் இரைச்சலிலிருந்தும் மனிதர்களின் குரூர கைகளிலிருந்தும் மிக எளிதாக தப்பித்து வாழ்வதற்கு தோதான இடம். எங்கள் வீட்டுக்கு முன்பாக நட்டு வைத்திருந்த செடியொன்று பூப்பெய்து இளம்பருவத்தில் நிற்கிறது. அந்த மரத்தில் குருவி கூடு கட்டியிருக்கிறது. அவ்வளவு அழகான வண்ணத்துடன் கூடிய குருவி இணை. முட்டையிட்டு குஞ்சும் பொறித்தாகிவிட்டது. தினமும் அதைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது ஏதோ இனம்புரியாத சந்தோஷம் கைகளைப் பற்றிக் கொள்ளும். இயந்திர நகரத்தில் ஒரு குருவிக்கான வாழ்விடத்தை உருவாக்கித் தருவதற்கான மரத்தை நட்டு வைத்திருக்கிறோம் என்பதான மகிழ்ச்சி அது. ஆனால் இன்னமும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. வீட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கான இடம் பார்த்தாகிவிட்டது. வந்தவர் குறித்துக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் இடம் அந்த மரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறது. போர்வெல் எந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்தி ஓட்டினால் சப்தத்திற்கு பயந்து குருவி ஓடிவிடும் என்கிறார்கள். குருவி முக்கியமா? தண்ணீர் முக்கியமா? - மிகப் பெரிய கேள்வி. ஆனால் மிகச் சாதாரணமாக முடிவெடுத்துவிடுவோம். இப்படியே துளித் துளியாக எல்லாவற்றையும் வேட்டையாடிவிட்டு ‘அவன் உலகத்தை அழிக்கிறான் இவன் உலகத்தை அழிக்கிறான்’ என்று அடுத்தவனை நோக்கி விரல் நீட்ட வேண்டியது. உனக்கு எப்படித் தேவையிருக்கிறதோ அப்படித்தான் எனக்கும் தேவையிருக்கிறது என்பான். அவனவனுக்கு அவனவன் பிரச்சினை முக்கியம்.

அந்தக் கிளி நினைவுகளை எங்கேயோ புரட்டிக் கொண்டு போய்விட்டது. ‘ஒரு படம் எடுங்க’என்று ராமலஷ்மியிடம் கேட்டுக் கொண்டேன். அவர் காமிரா கவிதாயினி. லென்ஸ் இல்லை என்றார். கிளியை மனதுக்குள் பதித்துக் கொண்டு வெளியே வரும் போது கிருஷ்ணகுமார் தான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ஒரு மலையாள நாவல் பற்றி பேசிக் கொண்டிருந்தார். கிருஷ்ணகுமாரை வெகு காலமாகத் தெரியும். இதற்கு முன்பாக பெங்களூரில்தான் இருந்தார். சம்பளம் போதவில்லை என்று சவூதி அரேபியாவிற்குச் சென்றுவிட்டார். அங்கே காய்ந்து போய்விட்டார் போலிருக்கிறது. பெங்களூர் மாதிரி கண்கள் குளிர்வதேயில்லை என்று வாபஸ் ஆகிவிட்டார். எல்லோரும் கலைந்துவிட்ட பிறகு கிருஷ்ணகுமாரும் நானும் விக்டோரியா சிலையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். 1900களில் அமைக்கப்பட்ட சிலை. சிலையின் பக்கவாட்டில் தமிழ் கல்வெட்டு இருக்கும். அப்பொழுதெல்லாம் தமிழ்தான் கோலோச்சியிருக்கிறது. இப்பொழுதுதான் தமிழை அடித்து விரட்டுகிறார்கள்.

பேசிக் கொண்டு நடக்கத் துவங்கியிருந்தோம். பாவண்ணனும் சம்பந்தமும் எதிர்ப்பட்ட தேனீர்க்கடையில் நின்றிருந்தார்கள். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் கசகசப்பை ஊட்டத் துவங்கியது. இனி யாராவது இந்த ஊருக்கு வருவதற்காகக் காத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அப்பொழுது ஆட்டோக்காரன் பின்னாலிருந்து ஏதோ கெட்டவார்த்தையில் திட்டினான். அந்த வினாடியிலிருந்து நகரம் வழக்கம் போல தனது பற்சக்கரத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டது.

(இந்தப் படம் பார்ப்பதற்கு பந்தாவாக இருக்கிறது என்ற நினைப்பில் பயன்படுத்திக் கொண்டேன்)

என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்?

எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது.  ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.

இது ஒரு வித்தியாசமான நிபந்தனையாகத் தெரிந்தது.  இப்படியெல்லாம் தனியார் பள்ளிகளில் சுயமாக யோசிக்கமாட்டார்களே என்று நினைத்தபடி மேலும் தொடர்ந்தால் அடுத்த நிபந்தனை அதைவிட அதிரடியானது. நல்ல பெற்றோர்கள், பண்பாடான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் சேர்க்கை  என்பது இரண்டாவது நிபந்தனை. ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், பண்பாடானவர்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. ‘எக்ஸ்க்யூஸ்மீ....ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கிடைக்குமா?’ என்று கேட்பவர்கள் கூட படு நாகரிகமாகத்தானே வருவார்கள்? 

எதற்காக திடீரென்று இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று குழம்பினால் அதற்கடுத்த நிபந்தனை காரண காரியத்தை விளக்கிவிட்டது. பெற்றோர்கள் புகாரோ, கருத்தோ கூற விரும்பினால் தாளாளரை அணுகி மென்மயாகவும், நாகரிகமாகவும் கூறவும் என்பதுதான் அதிமுக்கியமான நிபந்தனை. புரிந்துவிட்டது. யாரோ உள்ளே புகுந்து செமத்தியாக வீடு கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. கதறக் கதற துண்டறிக்கை அச்சடித்து வெளியிட்டுவிட்டார்கள். 

வீடு கட்டாமல் இருப்பார்களா? கட்டத்தான் செய்வார்கள். ப்ரீ.கே.ஜிக்கு வெறும் நாற்பதாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் பள்ளி அது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு நாற்பதாயிரம் கட்டும் பெற்றவன் என்ன செய்வான்? அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா? அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா? ஒரு தட்டும் தட்டிவிடுகிறார்கள். 

‘இரண்டரை வயசுப் பையனுக்கு பத்தாம் வாய்ப்பாடு சொல்லித் தரமுடியாதுய்யா’ என்று கதறினால் ‘அப்புறம் எதுக்குய்யா நாற்பதாயிரம் வாங்கி கல்லாப் பெட்டிக்குள்ள பூட்டுன?’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா? பள்ளி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணிவாக என்ற சொல்லைப் பார்க்கும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘வேண்டாம்...அழுதுடுவேன்’ என்பது மாதிரியே தெரிந்தது.

இந்தப் பள்ளியில் ஏதோ நல்ல விவகாரம் நிகழ்ந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. அடித்து மொத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கேள்வி கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போன்ற பல்லாயிரம் பள்ளிகள் திருடிக் கொழிக்கிறார்கள். முரட்டுத்தனமான திருட்டு இது. இப்படி பெற்றோர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்? எம்.எஸ்.ஸி எம்.பில் முடித்த பள்ளித் தோழன் தனியார் பள்ளியொன்றில் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனை நேரில் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்தக் காலத்தில்?

பெற்றவர்களிடமிருந்து கறக்கிறார்கள். பணியாளர்களுக்கு மரியாதையான சம்பளமும் தருவதில்லை. எங்கே போகிறது அத்தனை பணமும்? கட்டிடத்து மேலாக கட்டிடம். கார் மாற்றி கார். பெருத்துப் போகும் தாளாளர். இப்படித்தானே போகிறது?


அப்படியே பணத்தைப் பறித்தாலும் கல்வித்தரத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா? கிழித்தார்கள். PISA பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். Program for International Student Assessment என்பதன் சுருக்கம்தான் PISA. உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது. சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது. இந்த அமைப்பு யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை. 

2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் இந்தியா கலந்து கொண்டது. Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால் இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின. எழுபத்து நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா எழுபத்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள்.

சிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒரு முறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை. குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக இருக்கும்? ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.

வெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். ‘நாங்கள்தான் தில்லாலங்கடிகள்’ என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச் சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டோம்.

பாடத்திட்டங்களில் மாற்றம், கற்பிக்கும் திறனில் மேம்பாடு என நாம் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றன. ஏதாவது உருப்படியாக நடக்கிற மாதிரி தெரிகிறதா? நாராயணமூர்த்திக்கும், அசிம் பிரேம்ஜிக்கும் மாடு மாதிரி உழைப்பவர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

தனியார் பள்ளிகள் திருடட்டும். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களிடம் என்னவிதமான திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன? எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள்? அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய செய்திகள் சேர்வதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகச் சிறந்த கார்போரேட் அடிமைகளாக உருவாகிறார்கள். அப்புறம் எப்படி கல்வித்தரம் விளங்கும்?

அரசாங்கம்தான் கண்டுகொள்வதேயில்லை. கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது. கண்களை மூடிக் கொள்கிறார்கள். பெற்றவர்களாவது சட்டையைப் பிடித்தால் அதற்கு எதிராக துண்டறிக்கை விடுகிறார்கள். ஆனால் ஒருவிதத்தில் சந்தோஷமாக இருக்கிறது. ‘முழுமையான திருப்தி கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டினால் போதும் அதுவும் மார்ச் 2016 ஆம் ஆண்டு கட்டினால் போதும்’ என்கிற அளவில் இந்தப் பள்ளியினர் இறங்கி வந்திருக்கிறார்கள். அதையும் இந்தத் துண்டறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த ஒரு பள்ளி மட்டும்தான் மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. நம் தேசத்தின் கல்வித்தரம், பள்ளிகளில் நடக்கும் பகல் கொள்ளை போன்றவை குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வு ஏற்படுவதே கூட கொண்டாட்டத்திற்கான மனநிலையை உருவாக்குகிறது. இந்தத் துண்டறிக்கையையும் அப்படியொரு கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய அறிக்கைதான்.

Mar 21, 2015

மரணத்தின் வர்ணங்கள்

சென்ற வாரத்தில் மர்மமான முறையில் இறந்து போன ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்று வந்தேன். இன்றைக்கு யுகாதி என்பதால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடந்தன. கோரமங்களாவும் விதிவிலக்கு இல்லை. அங்குதான் அவரது வீடு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ‘இது கொலை’ என்றோ அல்லது ‘இது அழுத்தம் கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட தற்கொலை’ என்றோதான் பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அந்த நம்பிக்கையில் சம்மட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் விவகாரம், குடும்பச் சிக்கல்கள் என்று உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. சாமானிய மக்கள் ‘இந்தக் காலத்தில் யாரை நம்புறது?’ என்று தங்களது நம்பிக்கையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். விவரம் தெரிந்த கன்னடக்காரர்கள் வேறுமாதிரி பேசுகிறார்கள். ஆளுங்கட்சி பெரும்புள்ளிகள் பினாமிகளாக நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குள்ளேயே ரவி வணிகவரி ரெய்டு நடத்தினார் என்பதால்தான் இந்த விவகாரம் திசை மாற்றப்படுகிறது என்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் ஜார்ஜின் நிறுவனத்தில் ரவி ரெய்டு நடத்தியதாக பேச்சு உலவுகிறது. எம்பஸி கோல்ப் லின்க் என்னும் மிகப்பெரிய நிறுவனத்தின் சேர்மனாக ஜார்ஜ்தான் இருக்கிறார். அவர்தான் ‘ரவி தனது பேட்ஜ் ஐஏஎஸ் பெண் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தார்’ என்று முதலில் அறிவித்தவர். இதையெல்லாம் சேர்த்து முடிச்சுப் போட்டு இது திசைமாற்றல் என்று விவகாரம் சூடு கிளம்பியிருக்கிறது.

திசை மாற்றமா என்பது முழுமையாகத் தெரியவில்லை ஆனால் கர்நாடக உள்துறை மந்திரி ‘இது தனிப்பட்ட காரணங்களினால் நடந்திருக்கிறது’ என்று பேசினால் ‘இது தற்கொலைதான்’ என்கிற ரீதியில் முதலமைச்சர் சித்தராமையா பேசினார். விசாரணையே ஆரம்பிக்காமல் இப்படிப் பேசுவது சரியான செயல் இல்லை என்று எதிர்க்கட்சிகள் துள்ளின.  மாநிலம் முழுவதும் போராட்டங்கள் ஆரம்பமாகின.

அதன் பிறகு ரவியின் பெயரைக் களங்கப்படுத்தும் செய்திகளாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவருடன் ஐ.ஏ.எஸ் தேர்வான பெண்ணுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்கள் கசியவிடப்பட்டன. அதுவும் ஒரே நாளில் நாற்பத்து நான்கு முறை அலைபேசியில் பேசினார் என்று ஒரு பத்திரிக்கையில் எழுதினார்கள். இன்னொரு பத்திரிக்கையில் நாற்பத்து நான்கு வாட்ஸப் மெசேஜ்கள் அனுப்பியிருக்கிறார் என்று எழுதினார்கள். அதுவும் கடைசி மெசேஜில் ‘அடுத்த வாழ்க்கையில் சந்திக்கலாம்’ என்று அனுப்பியிருந்தாராம்.

எது உண்மை எது பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பிவிட்டுவிட்டார்கள்.

இவர்கள் சொல்லும்படி பெண் விவகாரமாகவே இருந்தாலும் அமைச்சர்கள், மாபியாக்கள் என்று அத்தனை பேரையும் கலங்கடித்த ஒரு அதிகாரி இதற்காகவெல்லாம் தற்கொலை செய்து கொள்வாரா என்று சில கன்னட அமைப்புகள் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றன. ‘உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கு வேண்டாம். சிபிஐ விசாரிக்கட்டும்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். ‘முடியவே முடியாது’ என்று சித்தராமையா ஒற்றைக்காலில் நிற்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் முடிந்தவரையில் நோண்டிப் பார்க்கிறது. நேற்று முதலமைச்சர் கவர்னரைச் சந்தித்து இது பற்றி விவாதித்துள்ளார். மத்திய அரசுதான் கவர்னர் வழியாக அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மாநிலத்தில் அரசியல் ரீதியாக மூன்றாவது இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ள குமாரசாமி கெளடாவும் இந்த விவகாரத்தை எடுத்திருக்கிறார். பெங்களூர் நகரில் ஆங்காங்கே ரவியின் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா முழுவதுமே இப்படித்தான் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். ‘சிபிஐக்கு மாற்றுங்கள்’ என்று சோனியாவே சித்தராமையாவுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவரது வீடு இருக்கும் பகுதியில் ஒரு கடைக்காரர் சொன்னார். ஆனால் அந்தப் பகுதியாட்களுக்கு முழுமையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஊடகம் மற்றும் வாய்வழிச் செய்திகளைத்தான் அவர்களும் சொல்கிறார்கள். உள்துறையமைச்சர், முதலமைச்சர் என எல்லோரும் அவர்களது வாய்களுக்குள் விழுகிறார்கள்.

சிபிஐ விசாரணைக்கு ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளூர் காங்கிரஸ் நபர் ஒருவர் இருக்கிறார். எனக்கு நல்ல பழக்கம். அவரிடம் கேட்டால் மம்தா பானர்ஜி எதற்கு பயப்படுகிறாரோ அதே காரணங்களுக்காகத்தான் சித்தராமையாவும் பயப்படுகிறார் என்கிறார். அது என்ன காரணம் என்று பெரியதாக மண்டை காய வேண்டியதில்லை. பா.ஜ.க இல்லாத மாநில அரசுகள் மிக மோசமாக அரசாங்கத்தை நடத்துகின்றன என்கிற பரப்புரையை மேற்கொள்வதற்கு பா.ஜ.கவுக்கு இதுவொரு வாய்ப்பாகிவிடும் என்கிறார். சிபிஐ இதற்கு பயன்பட்டுவிடும் என்கிறார். அப்படியும் நடக்குமா? நடக்காமல் என்ன? இத்தனை காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாபியாக்களின் அழுத்தத்தினால்தான் இறந்தார் என்று தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். மாநில அரசின் பெருந்தலைகள்தான் கொன்றுவிட்டார்கள் என்று இன்னொரு தரப்பினர் நம்புகிறார்கள். தனிப்பட்ட குடும்பக் காரணங்களுக்காத்தான் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். இது தற்கொலையே இல்லை என்றும் கொன்று தொங்கவிட்டுவிட்டு ஆளாளுக்கு மடை மாற்றுகிறார்கள் என்று ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு மரணம். ஓராயிரம் கோணங்கள்.


இதையெல்லாம் விட ஒரு காமெடியும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகாரிகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள் ஆனால் அவை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்பதால் வெளியிலேயே வருவதில்லை என்று ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதியிருந்தார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தின் மீது இவ்வளவு வெளிச்சம் விழக் காரணம் ரவியின் கறார்த்தன்மை. அவரது எளிமையும் நேர்மையும் நிறையப் பேர்களின் முதுகை வெளுத்திருக்கிறது. கோலார் மாவட்டத்தின் செய்திகளை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவியின் மீது அவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள். இது போன்ற காரணங்களால்தான் இந்த மரணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற செய்தியாக மாறியிருக்கிறது.

ஆனால் ஒன்று- எது உண்மை எது பொய் என்பதெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவரப் போவதில்லை. எந்தத் தரப்பினரின் கரங்கள் வலிமையாக இருக்கின்றனவோ அவர்களது தரப்பு வாதங்கள்தான் வலுப்பெறும். மற்ற குரல்கள் முரட்டுத்தனமாக நசுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் மறக்கடிக்கச் செய்துவிடுவார்கள். மரணம் நடந்த வீட்டுக்கு வெகு அருகில் நிற்கிறேன். ஏதாவது சில தகவல்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் கூட ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஊடகங்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கின்றன. அதிகாரம் இருப்பவனும் பலம் வாய்ந்தவனும் என்ன தீர்ப்பு எழுத விரும்புகிறானோ அதை ஊடகங்கள் வழிமொழிகின்றன. 

மரணம் ஒரு பொருட்டே இல்லை. அதன் வர்ணத்தை மிகச் சுலபமாக இந்தச் சமூகம் மாற்றிவிடுகிறது. ஒரு மாநிலமே கொண்டாடும் அதிகாரியின் மரணத்தையே மின்கம்பத்தில் தொங்கவிட்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரணன் செத்துப் போனால் என்ன செய்வார்கள்? ஊதித் தள்ளிவிட்டு போய்விடுவார்கள். 

எண்ணிக்கையில் அடங்காத வஸ்து

அன்புள்ள மணிகண்டன்,

2015 சென்னை  புத்தகக் காட்சியில் பயணி (பயணத்திற்கான முதல் தமிழ் மாத இதழ்) மற்றும் சின்ன நதி (சிறுவர்களுக்கான மாத இதழ்) ஆகிய இரண்டு இதழ்களோடும், நல்ல நிலம் பதிப்பகத்தின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களோடும் நம்ம நிலம் பதிப்பகத்தின் சார்பாக முன்னெடுத்தோம். 

நிசப்தம் வலைதளத்தில் சின்ன நதி குறித்து நீங்கள் எழுதிய முன்வரைவை முன்வைத்து ஏராளமானவர்கள் எங்களோடு தொடர்புகொண்டார்கள். குறிப்பாக, தங்கள் குழந்தைகளின் மீதான அவர்களின் அக்கறையைப் புரிந்துகொள்ள முடிந்தது. மிக அமைதியாக இந்தச் செயலை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி சொல்வது சம்பிரதாயமாக இருந்தாலும்....உங்களுக்கும் அவர்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையை உணரமுடிந்தது. உங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மிகுந்த வரவேற்பைப் பெற்ற பயணியும், சின்ன நதியும் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் வெகுதொலைவிலிருந்தும், பெருநகரங்களிலிருந்தும் சின்ன நதியின் சந்தாராராக இணைய விருப்பம் தெரிவித்து மின்னஞ்சலும், தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. தங்களின் குழந்தைகளின் மேல் எப்பொழுதும் கவனமுள்ள பெற்றோர்களின் குரலைத் தொடர்ந்து கேட்க முடிந்தது.  “இது சின்ன நதி அலுவலகமா? உங்கள் புத்தகம் குறித்த நிசப்தம் வலைதளத்தில் அறிந்தோம்....” என்ற அவர்களின் பேராவல் எங்களை வியக்க வைத்தது. உடனே நிசப்தம் வலைதளத்தில் சங்கமித்தபோது, அன்புக்குரிய தோழர் வா.மணிகண்டன் சின்ன நதி சிறார் மாத இதழ் குறித்து ஒரு முன்வரைவை அளித்திருந்தார். 

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் அரங்கிற்கு வருகை தந்தவர் அவர். தன்னுடைய குழந்தைக்காக இரண்டு பிரதிகளும், சந்தாவும் அளித்திருந்தார். அவருடைய சிபாரிசு அர்த்தமுள்ளதாகவே அமைந்திருந்ததால்தான் சின்ன நதிக்கான வரவேற்பு நிகழ்ந்திருக்கிறது.  

குழந்தைகளின் உலகம் அபூர்வமானது. அவர்களுக்கான சொல்லாடல்களை சாத்தியப்படுத்தி, வாசிப்பு நோக்கியும், வண்ணங்கள் தீட்டுதல் குறித்தும், விசாலமான அறிவுலகை உணரவைக்கும் பொருட்டு சின்ன நதியின் பயணம் பெருவுவகையோடு நீள்கிறது. யான் பெற்ற இன்பம் இவ்வையமெலாம் பெருக என்ற வாசகத்திற்கேற்ப வா.மணிகண்டனின் பெருந்தன்மையைப் பாராட்டுவது எங்கள் கடமை. அது வெறும் பாராட்டு நல்கும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், குழந்தைகளின் மீதான பெற்றோர்களின் பொறுப்பைவிடவும், அக்கறையைத் தாண்டியும் அவர்கள் மீதான அன்பும் பரிவும், எல்லையற்று விரியும் அறிவுசார் மனப்பெருவெளியை நோக்கி நகரும் சின்ன நதி.

உங்களுக்கு இதழ் சரியாக வந்து சேர்கிறதா? அதில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா? உங்களை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். மெலிதான உடல்வாகுடன், சிகப்பாக இருந்தீர்கள். கண்ணாடி அணிந்திருந்ததாக ஞாபகம். கையில் சின்ன நதியை ஏந்தியபடி நம்பிக்கையோடு விடைபெற்றீர்கள். யார் அந்த மணிகண்டன் என்று எங்கள் நிறுவனமே உங்களை மனம்குவிந்து நன்றிப் பாராட்டுகிறது.

நன்றியுடன்,
சின்ன நதி, பயணி மாத இதழ் வெளியீடு
சென்னை.

எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் கடிதம் இது!

அந்தக் குறிப்பினை எழுதும் போது சாதாரண மனநிலையில் இருந்தேன். ஓரளவுக்கு கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படியான வரவேற்பைப் பெறும் என்றெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷமாக இருக்கிறது. சின்னநதியின் இந்த மின்னஞ்சலைத் தவிர ஃபோனிலும் அழைத்துப் பேசினார்கள். கிட்டத்த்தட்ட அறுபது அல்லது எழுபது பேராவது சந்தா செலுத்தியிருப்பதாக பேசியவர் சொன்னார்.

சென்றவாரத்தில் இந்த இதழைப் பற்றி எழுதிய குறிப்பைப் பற்றி ஒரேயொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கட்டுரையில் ஏதோ குறை இருப்பதாகவும் அதனால்தான் யாரும் அது குறித்துப் பேசவில்லை என்றும் நினைத்துக் கொண்டேன். ஆனால் இவ்வளவு பேர் விசாரித்து சந்தா கட்டியிருக்கிறார்கள். அத்தனையும் வெகு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. அறக்கட்டளைக்கு பணம் அனுப்புகிறவர்களும் இப்படித்தான். அனுப்புவார்கள். ஆனால் யார் அனுப்பியது என்று தெரிவிப்பதில்லை. நேற்று கூட ஐந்தாயிரம் ரூபாய் வந்திருந்தது. ஒரு நல்ல மனிதர் அனுப்பியிருக்கிறார் என்று தெரியும். அதற்கு மேல் விவரங்கள் இல்லை.

இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் தெரியவில்லை.

ஆனால் இது போன்ற நிகழ்வுகள்தான் பக்குவத்தைக் கொண்டு வந்து சேர்க்கின்றன என்று நினைத்துக் கொள்வேன். நிசப்தம் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை இன்னமும் கணிசமாக உயர்த்துவதற்கு ஏதேனும் செய்யச் சொல்லி அவ்வப்போது சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனித மனம்தானே? எனக்கும் ஆசை துளிர்க்கத்தான் செய்யும். அவர்கள் சொல்வதும் சரிதான் என்று தோன்றும். யாரையாவது வம்பிழுத்தால் அல்லது சர்ச்சைக்குரியதாகவே எழுதிக் கொண்டிருந்தால் கவனம் பெற்றுவிடலாம்தான். ஆனால் அப்படி கிடைக்கும் கவனத்தினால் பெயரைப் பரவலாக்க முடியுமே தவிர எந்தக் காலத்திலும் மரியாதைக்குரிய நம்பிக்கையை பெற முடியாது என்பதை இதைப் போன்ற செயல்கள்தான் உணர்த்துகின்றன. இதை முழுமையாக உணர்ந்துதான் சொல்கிறேன்.

எல்லாவற்றையும் எண்களாகப் பார்த்துப் பார்த்து மனம் பழகிக் கொண்டது. சம்பளம் எவ்வளவு என்பதில் ஆரம்பித்து எவ்வளவு இட்லி சாப்பிட்டேன் என்பது வரை அத்தனையிலும் எண்களைத்தான் பார்க்கிறோம். ஆனால் எண்ணிக்கை தாண்டிய சிலவற்றினால்தான் இந்த உலகத்தோடு நாம் இறுகக் கட்டப்பட்டிருக்கிறோம். அன்பு, நம்பிக்கை என்பதெல்லாம் அப்படியான விஷயங்கள்தான். இங்கு உருவாகியிருக்கும் பரஸ்பர நம்பிக்கையை எந்த எண்ணிக்கையில் அளவிட முடியும்?  ‘இவன் சொன்னால் ஓரளவு சரியாக இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது. இல்லையா? வேறு எதைக்காட்டிலும் இந்த நம்பிக்கையை உருவாக்குவதுதான் மிக முக்கியமான காரியம். அதைத்தான் இந்த மின்னஞ்சலும் சுட்டிக்காட்டுகிறது.

சின்னநதியிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் நன்றி எனக்கு உரித்தானதன்று. ‘இது சரியான பாதைதான். இப்படியே போய்க் கொண்டிருக்கட்டும். எந்த ஆரவாரமுமில்லாமல் வாசிக்கிறோம். இவன் எந்த ஆரவாரமுமில்லாமலேயே எழுதிக் கொண்டிருக்கட்டும்’ என்று திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்குமான நன்றி.