Feb 20, 2015

சட்டையைக் கிழிக்கிறாங்க

சமீபமாக இலக்கியவாதிகள் வெளிப்படையாக விமர்சிக்கவும் விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். சமீப காலத்தில்  இவ்வளவு வெளிப்படைத் தன்மை இருந்ததில்லை. தங்களுக்குப் பிடித்தவர்களைப் பாராட்டுவார்கள். பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிப் போய்விடுவார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசத் தொடங்கியிருப்பது உண்மையிலேயே நல்ல போக்கு. இது விவாதமாக ஆரம்பித்திருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் ஃபேஸ்புக்கில் வாசித்துக் கொள்ளலாம். இலக்கியத்தின் ஏகப்பட்ட விவகாரங்களை உள்ளடக்கி கவிஞர். தூரன் குணாவும், கவிஞர். வெய்யிலும் நடத்திக் கொண்டிருக்கும் இந்த உரையாடலில் ஒரு சுண்டைக்காயன் பெயரும் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இதுதான் விவாதம்-


தூரன் குணா:

திரு.ஜெயமோகன், திரு.சாரு நிவேதிதா, திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.மனுஷ்யபுத்திரன், முன்னாள் கவிஞரும் இன்னாளைய பிரபல பத்தி எழுத்தாளருமான திரு. வா.மணிகண்டன் போன்றோர் இணையத்தைப் பயன்படுத்தும் விதங்களைப் பற்றியும் வாசகர் வட்டங்கள், எழுத்தாளன் தன்னை பிராண்டாக மாற்றிக்கொள்ளுதல் போன்ற போக்குகளையும் எப்படிப் புரிந்துகொள்வது? இச்செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கனவா?

வெய்யில்:

இன்றைய தலைமுறை படைப்பாளிகள் அனைவருக்கும் இதில் விருப்பமிருக்கிறது. (இது எனது தனிப்பட்ட கருத்து) முந்தைய தலைமுறையினர் குறித்து (இவ்விசயத்தில்) சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. இதில் எனக்கு நான் சில எல்லைகளை வைத்திருக்கிறேன். //முன்னாள் கவிஞரும் இன்னாளைய பிரபல பத்தி எழுத்தாளருமான திரு. வா.மணிகண்டன் போன்றோர்// என்ற உங்கள் கூற்று சக கவிஞன் மீதான காழ்ப்புணர்ச்சியாகவே புரிந்துகொள்கிறேன். ஒரு எழுத்தாளன் ப்ராண்டாக மாறுவது பற்றி கேட்டிருக்கிறீர்கள். ப்ராண்டாவது என்றால் என்ன? அவர்கள் அப்படி எத்தனை வாசகர்களை பெற்றுவிட்டர்கள்? எத்தனை புத்தகங்கள் விற்பனையாகின்றது? எவ்வளவு சம்பாதித்துவிட்டார்கள்? அவர்கள் ப்ராண்டாவதில் உண்மையாகவே... மனசாட்சிப்படி நமக்கு எது கண்ணை உறுத்துகிறது? முக்கால்வாசிப் பேரின் பேச்சில் பொறாமையைத்தான் காண்கிறேன். மேற்கத்திய எழுத்தாளர்களோடு ஒப்பிடுகையில் அவர்களும் நாமும் பாவம். “அயல் எழுத்தாளனுக்கு ஒரு நீதி உள்ளூர் எழுத்தாளனுக்கு ஒரு நீதி!” மற்றபடி யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

தூரன் குணா:

வா.மணிகண்டனை எனக்கு 2006 லிருந்து தெரியும். அப்போது நான் பெங்களூரிலிருந்தேன்.அவர் ஹைதராபாத்திலிருந்தார். அப்போது பேஸ்புக் இல்லை. வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்தான். நான் படித்த கல்லூரி இருந்த ஊர் அவருடைய சொந்த ஊர். அதனடிப்படியிலான உரையாடலில் ஏற்பட்ட நட்பு மிக நெருக்கமானது என்று சொல்ல முடியாதென்றாலும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். தக்கை இதழுக்காக அவரிடம் நான் கவிதை கேட்டுப்பெற்றேன். கல்குதிரைக்காக கவிதை கேட்டிருக்கிறேன். அவருடைய தவிட்டுக்குருவி தொகுப்பைப் பா.வெங்கடேசன் வெளியிட நான் பெற்றுக்கொண்டு என் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அது வேறுகாலம். (மேற்கண்டவை பின்புலத் தகவல்களுக்காக).

ஆமாம்...அவருடைய சமீபத்திய செயல்பாடுகளில் நான் முரண்படுகிறேன். அவருடைய செயல்பாட்டு வெளி அவர் சுதந்திரமென்றாலும் நானறிந்த மணியும் இப்போதைய திரு.வா.மணிகண்டனும் வேறானவர்கள். அவருக்கு பத்தி எழுத்து நன்றாக வருகிறது. அதையும் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அவர் எங்கிருந்து தொடங்கினார், இப்போதைய அவர் மதிப்பீடுகள் என்ன என்பதிலிருந்து என் “காழ்ப்புணர்ச்சி” சொற்றொடர்கள் தோன்றியிருக்கிறது. அவருடைய க்ராப்ட் நன்றாக இருந்தாலும் அவர் வைக்கும் மதிப்பீடுகள் சராசரி வாசக மனநிலையை மற்றும் நீங்கள் சொன்னீர்களே மதிப்பீட்டிற்கும் வாழ்வுக்கும் இடையிலிருக்கும் இடைவெளி, அது போன்றவற்றை சொறிந்து கொடுத்து ஆறுதலூட்டுவை. மேலும் அவர் தன் வழக்கமான பத்தி எழுத்திற்கு நடுவே இலக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கிறார். ஜமாலனின் புத்தக விமர்சன கூட்டத்தில் அவர் பேசப்போவதாக ஒரு பேஸ்புக் அறிவிப்பு சொல்கிறது. ஒரு விமர்சகர் பரிந்துரைத்த ஒரு பெண்கவிஞரின் கவிதைகளுக்குள் தான் புகமுடியவில்லை என்கிறார். ஆகவே அவரை “முன்னாள் கவிஞர் மற்றும் இன்னாளைய பிரபல பத்தி எழுத்தாளர்” என்று விளிக்கிறேன். அது காழ்ப்புணர்ச்சி என்று மதிப்பிடப்பட்டால் எனக்கொன்றும் பிரச்சனையில்லை. அவ்வண்ணமே ஆகுக! மேலும் அவருடைய புத்தக விற்பனை, பணம், புகழ் போன்றவற்றால் நான் பொறாமையடையவில்லை. இந்தக் கருத்தை நான் விரிவாக பேசவும் விரும்பவில்லை.

வெய்யில்:

வா.மணிகண்டன் குறித்த விளிப்பு காழ்ப்புணர்ச்சி மிக்கது என்று குறிப்பிடுகிறேன். அதற்காக அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நான் வக்காலத்து வாங்குவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம். மோடி ஆதரவு போன்ற பல்வேறு அரசியலில் நான் முற்றிலும் அவருடன் முரண்படுவேன்.
            
                                                                 ***

பொறுமையாக வாசித்துவிட்டீர்களா? இப்பொழுது கீழே இருப்பதையும் வாசியுங்கள்.

முன்னாள் கவிஞர் என்று ex. சேர்த்திருக்கிறார் குணா. உண்மையிலேயே அதுதான் நிலைமை. கவிதை எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டன. கவிதை எழுதுவதற்கு ஒரு மனநிலை வேண்டும். இப்பொழுது அது இல்லை. எழுதியே தீர வேண்டும் என்று முக்கிப் பார்த்தால் செயற்கையாக இருக்கிறது. ஏற்கனவே கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பம். இதில் நாமும் இரண்டு மூன்று பேரைக் காலி செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஏற்கனவே ‘இவன் கவிதைத் தொகுப்புதான் சுஜாதா வெளியிட்ட கடைசித் தொகுப்பு தெரியுமா? கவிதையைப் படிக்கக் கொடுத்து அவரை முடிச்சதே இவன்தான்’ என்று யாரோ பழியைப் போட்டிருக்கிறார்கள். அதனால் குணா குறிப்பிட்டிருக்கும் முன்னாள் இன்னாள் என்பதில் எந்த வருத்தமும் இல்லை. உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்?

இருந்தாலும் சில நிலைப்பாடுகளைத் தெளிவாக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. 

குணாவின் முதல் குற்றச்சாட்டில் இருக்கும் வாசகர் வட்டம் என்ற சொல் எனக்கானது இல்லை என்று நம்புகிறேன். ‘இல்லை இல்லை....உன்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறேன்’ என்று சொன்னால் அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா?

வாசகர் வட்டம் என்பதெல்லாம் சிறிய அளவில் இருப்பதால் நமக்கு அது ஒத்து வராது. தற்கொலைப் படை ஒன்றை உருவாக்குவதற்கான பகீரத முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்பொழுதும் கறுப்புச்சட்டையணிந்த பயில்வான்கள் கூடவே இருக்கப் போகிறார்கள். கையில் பத்து லிட்டர் பெட்ரோலும் வைத்திருப்பார்கள். தேவைப்பட்டால் கொளுத்திக் கொள்வார்கள். அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பத்து ஆட்களுக்கு மூன்று வேளை சோறும் போட்டு, யூனிபார்முக்கு துணியெடுத்துக் கொடுத்து, சம்பளமும் கொடுத்து- செலவு ஆகும் போலிருக்கிறது.

சிரிப்பதை நிறுத்திவிட்டு சீரியஸாக எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்-

ரசிகர் மன்றம், வாசகர் வட்டம் எல்லாம் நடத்துமளவிற்கு எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? அல்லது இவனை நம்பி யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? யாராவது எங்கேயாவது திட்டினால் ஓடிச் சென்று அவர்களுக்கு ‘எங்க ஆளைத் திட்டுறியா?’ என்று அட்டைக்கத்தியைச் சுழற்றி அக்கப்போர் நடத்துவதற்கெல்லாம் என்னிடம் ஈ, காக்காய் கூட கைவசம்  கிடையாது என்பதுதான் சத்தியம். இன்னும் எத்தனை வருடங்கள் எழுதினாலும் இப்படித்தான் இருப்பேன் என்பதும் உண்மை. ஏன் என்றால் என்னை நம்பியெல்லாம் ஒருவரும் வர மாட்டார்கள். 

எழுதுகிறேன். வாசிக்கிறார்கள். அவ்வளவுதான்.

உலகம் முழுவதுமாகச் சேர்த்து ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறார்களாம். ஒரு நாளைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் பேர்கள் வாசிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூட தனி நபர்களின் எண்ணிக்கை இல்லை. Page visits. தனிநபர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் சில ஆயிரங்கள்தான் இருக்கும். இந்த எண்ணிக்கையைத் தொடுவதற்கே மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சதவீதக் கணக்கு போட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்- இன்னும் போக வேண்டியது வெகுதூரமிருக்கிறது.

இந்த எண்ணிக்கையைச் சொன்னால் அடுத்த கேள்வியாக ‘ஒரு எழுத்தாளனுக்கு வாசகர்களின் எண்ணிக்கை முக்கியமா?’ என்று கேட்பார்கள். ஆமாம் என்றுதான் பதில் சொல்வேன். இதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் எதுவும் இல்லை.  

இப்பொழுதெல்லாம் இணையத்தின் வழியாக நிறையப் பேர்கள் புதிதாக வாசிக்கத் தொடங்குகிறார்கள். அவர்களைப் போன்றவர்களையும் மனதில் வைக்க வேண்டியிருக்கிறது. ‘நான் புரியாதபடிக்குத்தான் எழுதுவேன். என் எழுத்தை அறிவாளிகள் மட்டும் படித்தால் போதும்’ என்கிற ஜம்பம் எதுவும் பார்ப்பதில்லை. எளிமையாக எழுதுவதால் Contemporary ஆக இருக்காது என்று அர்த்தமில்லை அல்லவா? இத்தகைய புதிய வாசகர்களை மேலும் வாசிக்கச் செய்ய வேண்டும் என்பதும் என்னுடைய சில நோக்கங்களில் முக்கியமானதாக இருக்கிறது. 

செவ்விலக்கியம் படைப்பதற்கெல்லாம் காலமிருக்கிறது. ‘காலமிருக்கிறது சரி. உனக்குத் தகுதியிருக்கிறதா’ என்று கேட்டு விக்கித்துப் போக வைத்துவிடாதீர்கள். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்களே?

இணையம் என்கிற மிகப்பெரிய ஊடகம் கைவசமிருக்கிறது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது அவரவர் நிலைப்பாட்டை பொறுத்தது. என் பாதை ஓரளவு தெளிவாகவே புலனாகிறது. அதே சமயம் தலைக்கு மேலாக எந்தக் காலத்திலும் ஒளிவட்டம் வந்துவிடக் கூடாது என்பதிலும் காலுக்குக் கீழாக பீடம் வந்துவிடக் கூடாதிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறேன்.

‘நீ ப்ராண்ட் ஆகிக் கொண்டிருக்கிறாய்’ என்று வேறு சிலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஆகிவிட்டுப் போகட்டும். காண்டம் தொடங்கி கடலைமிட்டாய் வரைக்கும் அத்தனையும் இங்கு ப்ராண்ட்தான். எழுத்தாளர்கள் ஆகக் கூடாதா என்ன? ஆனால் அதற்காக தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. உழைப்பு போதும். என்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பதும் உழைப்பு சார்ந்த விஷயம்தான். அந்த உழைப்பை சமரசமில்லாமல் தந்து கொண்டிருந்தால் போதும்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். கிட்டத்தட்ட எழுபது வயதான பெண்மணியொருவர் தான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னாலேயே நம்ப முடியவில்லை. உங்களால் எப்படி நம்பமுடியும்? ஆனால் இதை வெற்றுப் பெருமைக்காகச் சொல்லவில்லை. நிஜமாகத்தான் சொல்கிறேன். இப்படி புதிதாக வாசிக்க வருபவர்களிடம் முடிந்தவரையில் நேர்மைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நேர்மைத் தன்மை என்றால் ‘இவ்வளவுதான் எனக்குத் தெரியும்’ என்று ஒத்துக் கொள்ளுதல். அதே வாசகர்களுக்காகத்தான் எழுத்தில் சுவாரஸியத்தையும் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படித்தான் வாசிக்க வைக்க முடியும். ஆனால் இந்தச் செயலை ‘சராசரி வாசக மனநிலையை சொறிந்து கொடுத்து ஆறுதலூட்டுபவை’ என்றெல்லாம் சொன்னால் என்ன சொல்வது? 

இதையே வேறு யாராவது சொல்லியிருந்தால் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்வேன். சிலரை அப்படி தவிர்த்த சம்பவங்களும் உண்டு. ஆனால் தூரன் குணா, வெய்யில் போன்றவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுண்டு. எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத சமகால எழுத்தாளர்கள் என்று அவர்களின் மீது விருப்பமும் உண்டு. அதற்காகத்தான் இந்த பதில்.

தினசரி பார்ப்பதை, வாசிப்பதை, புரிந்து கொள்வதை எந்தப் பாசாங்குமில்லாமல் வெளிப்படையாக எழுத வேண்டும் என விரும்புகிறேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

இன்னமும் சில வருடங்களில் இணையம் வழியாக தமிழை வாசிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். அவர்களில் மிகச் சிலரையாவது தீவிர இலக்கியம் நோக்கித் திருப்ப முடியும்  என்கிற அற்பமான ஆசையுடன் செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கம் எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இடையிடையே எனது இலக்கிய மதிப்பீடுகளை முன் வைப்பதற்கு இதுதான் காரணம். அது ஓடுகிற ஓட்டத்தில் கை அசைத்துவிட்டுப் போவது போல. சுவாரஸியத்தை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? அவ்வப்போது நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கிறேன். இலக்கியம் பற்றி எழுதுகிறேன். அறக்கட்டளை போன்ற சில பணிகளை மேற்கொள்கிறேன்.

ஏதேனும் தவறாகத் தெரிகிறதா என்ன?

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்காக வருத்தம் எதுவும் இல்லை. இப்படியான விமர்சனங்களிலிருந்துதான் ஓடுவதற்கான பலத்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றபடி, சம்பாதித்துவிட்டான் என்று இவர்கள் சத்தமாகப் பேசுவதைப் பார்த்தால்தான் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. நிசப்தம் தளத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்குக் கூட கைச்காசைத்தான் செலவழித்திருக்கிறேன். ‘வாசகர் ஒருத்தர் இலவசமாகவே மாற்றிக் கொடுத்திருக்கிறார்’ என்று புளுகி இந்த விவகாரத்தை வீட்டில் தெரியாமல் வைத்திருந்தேன். மாட்டிவிட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.