தினேஷூக்கு பன்னிரெண்டு வயதாகிறது. பிறக்கும் போதிலிருந்தே தண்டுவடத்தில் பிரச்சினை. நரம்பு பிசகு போலிருக்கிறது. அதனால் தண்டுவடம் வளையத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அதில் பிரச்சினை பெரிதாகி இப்பொழுது கூன் விழுந்துவிட்டது. கூன் விழுந்ததோடு நில்லாமல் சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை நசுக்கத் துவங்கிவிட்டது. தினேஷ் நீலகிரி மாவட்டம். குருத்துக்குளி என்கிற கிராமத்தைச் சார்ந்தவன். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளிகள். டீ எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள். தண்டுவடத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பதால் சற்று சிரமமான காரியம். அதுவும் ஐம்பது சதவீதம்தான் சரி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பெங்களூரிலிருக்கும் நாராயண ஹிருதயாலயா என்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டுமாம். பால நந்தகுமார் அழைத்துப் பேசினார். விவரங்களைச் சொல்லிவிட்டு ‘ஏதாவது உதவ முடியுமா?’ என்றார். அவர் ஒரு தொகையைக் கொடுப்பார் போலிருக்கிறது. அரிமா சங்கம் உள்ளிட்ட உள்ளூர் அறக்கட்டளைகள் பத்தாயிரம், இருபதாயிரம் என்று தருவதாக உறுதியளித்திருக்கிறார்களாம். ஏதாவது அரசு உதவி கிடைக்குமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமாக கேட்பது போலத்தான் கேட்டேன். ‘எவ்வளவு தேவையோ அதை விசாரித்துச் சொல்லுங்கள். அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட கேட்க வேண்டாம்’ என்று. இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். முதல் சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் வரைக்கும் அடுத்த அறுவை சிகிச்சைக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் வரைக்கும் தேவைப்படுகிறது. தினேஷை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வியாழக்கிழமை காலையில் பெங்களூர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். முதல் அறுவை சிகிச்சை உடனடியாக நடைபெறவிருக்கிறது. பத்து அல்லது பதினைந்து நாள் கழித்து அடுத்த சிகிச்சையான கார்டியாக் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தினேஷின் பெற்றோர்கள் புரட்டி வைத்திருக்கும் தொகை தவிர எப்படியும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. ஐம்பதாயிரம் ரூபாயை அறக்கட்டளையின் நிதியிலிருந்து வழங்க வேண்டியிருக்கும். தினேஷின் சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள் அறக்கட்டளையின் கணக்குக்கு தொகையை மாற்றிவிடலாம். பணம் கைவசம் (அல்லது) வங்கிவசமிருக்கிறது. தினேஷூக்கு என்று அளிக்கப்படும் தொகை அடுத்து உதவி தேவைப்படுபவர்களுக்கு பிரயோஜனப்படும். அரவிந்தனுக்கு என்று அளிக்கப்பட்ட தொகை இப்பொழுது தினேஷூக்கு பயன்படுவது போல.
வெள்ளி அல்லது சனிக்கிழமையன்று தினேஷைச் சந்திக்கச் செல்கிறேன். பெங்களூர் நண்பர்கள் யாராவது வர விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
****
****
யாருக்கு எப்பொழுது உதவி தேவைப்படும் என்று யாருக்குமே தெரியாது. உதவி என்பது பணம் மட்டுமில்லை. திடீரென்று தேவைப்படும் ஆறுதல் கூட உதவிதான். அழும் போது தோளைப் பிடிக்கிற கரங்கள் கூட உதவிதான். ஒவ்வொரு நாளும் அப்படியான கரங்களையும், ஆறுதல்களையும் கோரி இந்த உலகின் ஏதோவொரு மூலையில் யாரோ சிலர் ஏங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதுதான் இந்த உலகின் தவிர்க்கவே முடியாத நியதி.
****
****
நலங்கிள்ளி பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். எழுதுவதற்கும் பேசுவதற்கும் வாழ்வதற்கும் சம்பந்தமேயில்லாத எழுத்தாளர்களிடையே இந்த மூன்றுக்கும் பெரிய இடைவெளியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர். தீவிரமான தமிழ் உணர்வாளர். சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவர். தான் பிறந்த சாதியை மறந்துவிட்டு குழந்தைகளுக்கு ஈரோடை, பறை என்று பெயர் வைத்தவர்- நிறைய இருக்கிறது இவரைப் பற்றிச் சொல்வதற்கு. மூத்த மகளுக்கு பத்து வயது. இளைய மகளுக்கு இரண்டு வயது.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் ‘A brief History of Time’ என்ற புத்தகத்தை நலங்கிள்ளி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்ட 'The Mechanincal Universe’ என்ற புத்தகத்தையும் மொழி பெயர்த்திருக்கிறார்.
இந்த மொழியாக்கமும், பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதும்தான் ஜீவனம். நலங்கிள்ளி ஆரம்பத்தில் வெளிநாட்டில் வேலையில் இருந்தவர் என்று சொல்லியிருக்கிறார்கள். தேர்ந்த ஆங்கிலப் புலமை உண்டு. வேலையைவிட்டு வந்து தமிழைக் கட்டிக் கொண்டு வாழும் மனிதர். தமிழுக்காக வாழ்கிறார் என்றாலும் ஆங்கில வகுப்பு நடத்துகிறார். Spoken English. அது கொஞ்சம் வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சென்ற வாரத்தில் திடீரென்று இருதய அடைப்பு. அவரது மனைவியிடம் பேசினேன். ‘கட்டுரை அனுப்பியாக வேண்டுமே’ என்ற பதற்றத்தில் நாள் முழுவதும் இருந்திருக்கிறார். வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உடனடியாக பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஊசி போட வேண்டும் என்று சொன்னார்களாம். கைவசம் ஆறாயிரம்தான் இருந்திருக்கிறது. மொழிக்காக தனது வாழ்க்கையை அடகு வைத்தவனின் நிலைமை அதுதான்.
அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இனி கொஞ்ச நாட்களுக்கு எதையும் செய்ய முடியாது. உதவுவது குடும்பத்திற்கான செலவுகளுக்கு நிச்சயம் உதவும். நான்கைந்து பேர்களிடம் பேசினேன். வெவ்வேறு துறை மனிதர்கள். ஒருவர் பத்திரிக்கையாசிரியர். ஒருவர் பள்ளி நடத்துகிறார். ஒருவர் நிருபர். ஒருவர் சினிமாத்துறையில் இருக்கிறார். யாருமே நலங்கிள்ளி பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொல்லவில்லை. மொழிக்காக தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட ஒரு மனிதருக்கு இக்கட்டான சூழலில் உதவுவதுதான் சரியான காரியமாக இருக்க முடியும்.
சாதியை மறுத்து உறவுகளை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட அந்தக் குடும்பத்திற்காக இல்லையென்றாலும் அந்தக் குழந்தைகளுக்காக உதவலாம் என்று தோன்றுகிறது. நலங்கிள்ளி பற்றிய ஆனந்த விகடனின் கட்டுரை இணைப்பு இது. நலங்கிள்ளிக்கு என உதவ விரும்புபவர்கள் அனுப்பும் பணத்தைச் சேகரித்து அடுத்த வாரத்தில் அவரது குடும்பத்திடம் கொடுத்துவிடலாம். எவ்வளவு தொகை என்ற இலக்கு இல்லை.
வங்கிக் கணக்கு விவரம்:
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur