புலியூர் முருகேசன் என்ற எழுத்தாளர் தாக்கப்பட்டிருப்பதாக இரண்டு நாட்களாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அப்படியொரு எழுத்தாளர் இருக்கிறார் என்பது இப்பொழுதுதான் தெரியும். எனது அறியாமைதான். சிற்றிதழ்களில் எழுதுகிறார் என்று சொன்னார்கள். அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு கதைக்காக கொங்கு வேளாளர்கள் தாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும் தனியரசு எம்.எல்.ஏவின் ஆட்கள். தனியரசு பற்றித் தெரியும். தமிழக சட்டப்பேரவையிலேயே மிக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர். அவர் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
எந்தவொரு காரணமாக இருந்தாலும் எழுத்தாளரைத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதற்கும் கதையைப் படித்துவிட்டு வாயைத் திறக்கலாம் என்று நினைத்திருந்தேன். வாசித்துவிட்டேன். தேவையில்லாமல் சாதியை உள்ளே இழுத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது. கொங்கு வேளாளர்களில் பெருங்குடி என்ற கூட்டம்(உட்பிரிவு) உண்டு. கிட்டத்தட்ட நூறு கூட்டங்களில் அதுவும் ஒன்று. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தைத்தான் கதையின் வழியாக முருகேசன் தாக்கியிருக்கிறார்.
சுப்பிரமணி ஆண்மையற்றவன். அவனை மிரட்டி தனது பாலியல் இச்சைகளை அப்பன் தீர்த்துக் கொள்கிறான். சுப்பிரமணி ஆண்மையில்லாதவன் என்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனாலும் அவனது சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளையும் சுப்பிரமணியின் அப்பன் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்லும் சுப்பிரமணியை ‘ஒம்போது’ என்று திட்டி அடித்து உதைக்கிறான். அவன் தாக்கப்படுவதை அந்த மருத்துவமனையில் இருக்கும் தலித் பெண் (செருப்புக்கு டோக்கன் போடுபவள் என்று கதையில் வருகிறது) மட்டும்தான் எதிர்க்கிறாள் என்கிற வகையில் கதை நகர்கிறது.
தீவிரமான கதைக்கான கருதான். ஆனால் அதை அருவருப்பான முறையில் எழுதியிருக்கிறார். இணைப்பில் வாசித்துப் பார்க்கலாம்.
எந்தக் கருவைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும், அதை தனக்கு விருப்பமான முறையில் எழுதுவதும் படைப்பாளனின் உரிமைதான். ஆனால் இந்தக் கதையில் சாதியைக் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. சுப்பிரமணி, அவனது அப்பன், சுப்பிரமணியின் மருமகள் என்கிற பாத்திரங்களின் வழியாகவே இந்தக் கதையை வலிமையானதாக எழுதியிருக்க முடியுமே என்று தோன்றியது. எதற்காக அவர்கள் பெருங்குடி கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என எழுதியிருக்கிறார் என்று குழப்பமாக இருந்தது. அதுவும் புலியூர் என்ற ஊரையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
கதையைப் பற்றி தெரிந்து கொண்ட புலியூர் பெருங்குடிக் கூட்டத்தினர் முருகேசனிடம் வந்து ‘பெருங்குடி’ என்ற பெயரை நீக்கிவிடச் சொல்லி எச்சரித்ததோடு விவகாரம் முடிந்து போனதாகவும் அதன் பின்னர் வந்த தனியரசுவின் ஆட்கள்தான் முருகேசனை அடித்து உதைத்ததாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு இவை செவி வழிச் செய்திகள்தான். இனி வரும் நாட்களில் முழுமையான தகவல்கள் வெளிவரும் என நினைக்கிறேன்.
சாதி, மதம் போன்ற பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் வலிந்து சர்ச்சையை உருவாக்க வேண்டியதில்லை என்கிற கட்சி நான். இதே போன்ற சாதி சார்ந்த பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்த அடிப்படையில்தான் எடுத்திருந்தேன். பிரச்சினை பெரிதாகும் வரைக்கும் மாதொருபாகனில் Controversy இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. விவகாரம் கதையின் ஓட்டத்தோடு இருக்கும். ஆனால் முருகேசனின் கதையில் பெருங்குடி என்கிற கூட்டம் துருத்திக் கொண்டு நிற்கிறது.
ஓர் எழுத்தாளன் சாதியைக் குறிப்பிட்டு எழுதுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. அடக்குமுறைகள், சாதிய அத்துமீறல்கள், சடங்குகள் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் சாதியை எழுத்து வழியாக வெளிப்படுத்துவதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஒரு பாலியல் வக்கிரத்தை தனது மகனிடமும் மருமகளிடமும் காட்டும் incest இந்த ஊரில் வசிக்கும் இந்தச் சாதியைச் சார்ந்த இந்த கூட்டத்துக்காரன் என்று எழுதுவது எந்தவிதத்தில் சரி? அப்படியே ஒரு மனிதன் வாழ்ந்திருந்தாலும் அது அவனுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விவகாரம். அதற்கு ஒரு சாதிய அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது போன்ற கேள்விகள் எழுகின்றன.
அப்படியென்றால் கொங்கு வேளாளர்கள் முருகேசனை அடித்ததை நியாயப்படுத்துகிறாயா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். அழுத்தமான கண்டனங்களை பதிவு செய்கிறேன். ஆனால் அதே சமயம் இந்தக் கதையை கருத்துரிமை என்ற பெயரில் எல்லாம் நியாயப்படுத்த முடியாது. அநிதீயையும் அக்கிரமங்களையும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய கடமையுணர்வு எழுத்தாளனுக்கு எவ்வளவு அவசியமோ அதேயளவிற்கு தான் வாழ்கிற சமூகத்தில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதில் புலியூர் முருகேசன் சறுக்கியிருக்கிறார்.
சாதிய உணர்வுகள் பொறி பூத்துக் கிடக்கும் தமிழகத்தில் இப்படி எதையாவது கிளறிவிட்டு சமூக சீர்திருத்தத்தை உருவாக்கிவிட முடியாது. இப்படியான கதைகள் அப்படிக் கிளறிவிடும் வேலைகளை மட்டும்தான் செய்கின்றன.