Feb 1, 2015

கிணறு நிரம்பிக் கொண்டிருக்கிறதா?

வரவு செலவு வெளிப்படையாக இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் வராது என்கிற நம்பிக்கை பொய்க்கவில்லை. இதுவரையிலும் எந்தச் சிக்கலும் இல்லை. கணக்கை பராமரிப்பதும் பெரிய சிரமமாக இல்லை. இதுதான் வரவு, இதுதான் செலவு என்று தெளிவாக வைத்திருக்கிறேன். வருகின்ற பணம் அப்படியே உதவியாக மாற்றப்பட்டுவிடுகிறது. உதவி பெறுபவர்களைச் சந்திக்கச் செல்வது உள்ளிட்ட செலவுகள் என் பொறுப்பு. வரவுக் கணக்கை பார்த்தால் தெரிந்திருக்கும். என் பணம் எதுவுமே இல்லை. அத்தனையும் பிறர் வழங்குவதுதான். கணக்கு பராமரிப்பு, போக்குவரத்து செலவு, பட்டயக்கணக்கருக்கான செலவுகள் போன்றவைதான் என் பக்கமிருந்து. அறக்கட்டளைக்காக பணம் என்ற வகையில் எனது பங்களிப்பு அது மட்டும்தான்.

ஆளுக்கு ஒரு கை தண்ணீரை ஊற்றுகிறார்கள். கிணறு வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது.

செலவு விவரங்கள் இதுதான் -

வரிசை எண் 50:
ஒரு லட்சம் ரூபாய் மதுரையைச் சேர்ந்த முகேஷ் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் பெயரில் நேரடியாக காசோலை வழங்கப்பட்டது.

வரிசை எண் 91:
ஐம்பதாயிரம் சென்னை திருமுல்லைவாயிலைச் சார்ந்த உமாநாத் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையின் பெயரில் காசோலை வழங்கப்பட்டது.

வரிசை எண் 93:
மசால் தோசை 38 ரூபாய் புத்தகம் கேட்டு ஆயிரத்து எழுநூறு ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு சிலர் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தத் தொகை பதிப்பாளர்களில் ஒருவரான கண்ணதாசனிடம் வழங்கப்பட்டது.

வரிசை எண் 100 மற்றும் 102:
கோவையைச் சார்ந்த வேதா ஸ்போர்ட்ஸ் என்ற கடையின் மூலமாக மூலமாக பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் வாங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் திரேசாள் முதனிலைப்பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் திருப்பூர் மாவட்டம் துலுக்கமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. (துலுக்கமுத்தூர் பள்ளிக்கான விளையாட்டு சாதனங்கள் இந்த வார இறுதியில் வழங்கப்பட்டுவிடும்)

வரிசை எண் 103:
சிறுவன் அரவிந்தனின் கை அறுவை சிகிச்சைக்கான தொகை ஐம்பதாயிரம் ரூபாய் கோவை கங்கா மருத்துவமனையின் பெயரில் காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 105:
எழுத்தாளர் கோவை ஞானி அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையான ஐம்பதாயிரம். ஞானி அவர்களின் இயற்பெயர் கி.பழனிசாமி.

இப்பொழுது வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை ரூ. 4,33,732.70. (நான்கு லட்சத்து முப்பது மூன்றாயிரத்து எழுநூற்று முப்பதியிரண்டு ரூபாய்)

இந்த வருடத்திற்கான அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கை பட்டயக்கணக்கர் வழியாக வருமானவரித்துறையில் தாக்கல் செய்துவிடுவேன். வேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.

vaamanikandan@gmail.com