Feb 26, 2015

1970 - ஒரு காதல் கதை

மணிகண்டன் என்றொரு நண்பர் இருக்கிறார். மதுரைக்காரர். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவர் ஐயர். அந்தப் பெண் கிறித்துவர். ‘பிரச்சினை எதுவும் இல்லையாங்க?’என்று கேட்ட போது ஒரு கதையைச் சொன்னார். யாராவது சினிமா இயக்குநரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் அந்தக் கதையைச் சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன். அவ்வளவு சுவாரஸியம். இன்னொரு அட்டகாசமான காதல் கதையும் இருக்கிறது. இது வேறொருவருடையது. பெங்களூர் பெண்மணி. எழுபது வயதாகிறது. இவருடையதும் கலப்புத் திருமணம்தான். இருவரும் வெவ்வேறு சாதிக்காரர்கள். இவர் ஐயர். கணவர் வேறொரு சாதி.

நாற்பது வருடங்களுக்கு முன்பாக பெங்களூர் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு போக்குவரத்து நெரிசல்,  இத்தனை கசகசப்பு இல்லாமல்- அது வேறு பெங்களூர். அந்தக் குளிர்ந்த ஊரில் துளிர்த்த காதல் அது. அப்பொழுதுதான் அவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். முதலாளி ஒரு ஏமாற்றுப் பேர்வழி. தனது நிறுவனத்திற்காக ஒரு வேலையைச் செய்து கொடுத்த ஒருவருக்கு பணம் கொடுக்காமலேயே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறான். அந்த மனிதர் பணம் கேட்டு வந்த போது ‘சாயந்திரம் இந்தப் பொண்ணுகிட்ட கொடுத்துடுறேன்..பார்த்து வாங்கிக்குங்க’ என்று கைகாட்டிவிட்டானாம். அவ்வளவுதான். அந்த மனிதரும் தினமும் வந்து இந்தப் பெண்ணிடமும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ராஜா ராணி படம் பார்த்துவிட்டீர்களா? இல்லையென்றால் ஒரு முறை பார்த்துவிடுங்கள். இரண்டு நாட்களாக நயன்தாரா நினைப்பாகவே கிடந்தேன். அந்தப் படத்தில் இப்படித்தான் ஒரு காதல் வரும். 

தினமும் மாலை நேரத்தில் பணம் வசூலிப்பதற்காக இந்தப் பெண்ணின் அலுவலகத்திற்கு வந்துவிட்டு பிறகு அவரது வீடு வரைக்கும் கூடவே நடந்திருக்கிறார். பெங்களூர் பெண் அல்லவா? கூடிய சீக்கிரத்திலேயே ‘இந்த மனுஷன் பணம் வாங்க மட்டும் வரவில்லை’ என்று புரிந்து கொண்டார். பிறகு காதல் துளிர்த்திருக்கிறது. துளிர்த்ததோடு சரி. தெரியாத்தனமாக தோளோடு தோள் உரசிவிட்டாலும் கூட அவர் பத்துத் தடவை மன்னிப்புக் கோருவார். இவர் கற்பே போய்விட்டது போல திரும்பத் திரும்பத் துடைத்துக் கொள்வார். அப்படியான காதல்.

இப்படியே அலுவலக வாசலுக்கும் வீட்டு வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்த காதலில் ஒரு இடைவெளி. திடீரென்று அந்த மனிதர் காணாமல் போய்விட்டார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டு முகவரி கூட தெரியாது. வேறு வழியே இல்லை. தனியாகவே அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த அந்த மனிதர் ‘எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு’ என்று குண்டைப் போடுகிறார். சொந்தக்காரப் பெண்ணையே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ‘அப்பா கொன்னுடுவேன்னு மிரட்டினாரு..அம்மா செத்துடுவேன்னு சொன்னாங்க’ என்று ஏதேதோ ‘பிட்டு’க்கள்தான். இந்தப் பெண்ணுக்கு கால்களுக்குக் கீழாக நிலம் வழுக்குகிறது. கண்கள் சுழட்டிக் கொண்டு வருகிறது. பாரதிராஜாவின் எஃபெக்டில் பறவைகள் அப்படியே வானத்தில் உறைகின்றன. கடல் அலைகள் அசையாமல் நிற்கின்றன. எக்செட்ரா, எக்செட்ரா. அப்பொழுதே ‘போடா வெங்காயம்’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தால் இந்தக் கதையில் சுவாரஸியமே இல்லை. ஆனால் அந்தப் பெண் அதைச் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு திருமணம் செய்து கொள்ளவில்லை. 

இந்தச் சூழலில் அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகிறது. தனது மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்புகிறார். அந்தச் சமயத்தில் காதலன் வருகிறார். இந்த இடத்தில்தான் ட்விஸ்ட்.

அந்தப் பெண்ணின் அம்மாவிடம் ‘நாளைக்கு உங்க பெண்ணை கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொள்கிறேன். சம்மதமா?’ என்கிறார். அந்த அம்மாவுக்கு வேறு துணை இல்லை. அவரால் முடிவெடுக்கவும் முடியவில்லை. முடிவு பெண்ணிடம் செல்கிறது. அந்தப் பெண்ணிடமும் அந்த மனிதர் பேசுகிறார். ‘உன்னோடு எல்லா நேரமும் இருப்பது சாத்தியமில்லை..ஆனால் தினமும் இரண்டு மணி நேரங்களை ஒதுக்க முடியும். யோசித்துச் சொல்’ என்கிறார். அடுத்த விநாடி சரி என்கிறார். அடுத்த நாள் திருமணம் நடக்கிறது. 

இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று யோசித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இன்று வரை தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் வந்து மனைவியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இவர் அவரிடமிருந்து பணம் கேட்பதில்லை. அவருடைய நேரத்தைக் கேட்பதில்லை. கடந்த நாற்பது வருடங்களாக இப்படித்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

‘உங்க கல்யாணம் பத்தி அந்தக் குடும்பத்துக்குத் தெரியுமா?’ என்றேன்.

தெரியும். திருமணம் செய்து கொண்ட ஆரம்பகாலத்திலேயே தெரிந்துவிட்டது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கு உடலில் ஊனம். பேச்சு வராது. பல சமயங்களில் இவர்தான் முன்னின்று பார்த்துக் கொள்கிறார். இன்னமும் வேலைக்குச் செல்கிறார். சமீபகாலம் வரை பெங்களூரில் முதியோர் இல்லம் ஒன்றை பராமரித்து வந்திருக்கிறார். இப்பொழுது சிரமமாக இருக்கிறது என்பதால் நடத்துவதில்லை. ‘நிசப்தம் வாசிக்கிறேன். என் பங்களிப்பாக அறக்கட்டளைக்கு ஒரு சிறு தொகையைத் தர விரும்புகிறேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரது வயதுக்கு மரியாதை தர வேண்டும் என்று நேரடியாகவே சென்று வாங்கிக் கொண்டேன். அப்பொழுதுதான் இந்தக் கதையைச் சொன்னார்.

அவர் சொன்ன கதையில் பாதியைத்தான் சொல்லியிருக்கிறேன். மொத்தத்தையும் எழுதுவதென்றால் சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ எழுதிவிடலாம். எதற்காக இதைச் சொன்னேன் என்றால் மணிகண்டன் அழைத்து ‘அண்ணா மதுரை ஜி.ஹெச்ல இருந்து பேசறேன்....ஒரு பெரியவர் கீழே விழுந்து கிடந்தாரு...டயாபடிக் மாதிரி தெரியுது...ஜி.ஹெச்ல அட்மிட் செய்யறேன்..முடியலைன்னா வேறொரு ஆஸ்பத்திரிக்கு மாத்துவேன்...ஒருவேளை ஏதாவது பண உதவி தேவைப்பட்டா அறக்கட்டளை வழியாக செய்ய முடியுமா?’ என்றார். 

பெரியவர் என்றதும் எனக்கு முதியோர் இல்லம் நடத்திக் கொண்டிருந்த இந்த அம்மையாரைப் பற்றிய ஞாபகம் வந்துவிட்டது. வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் திசைமாறும் நீரோட்டமாக இருக்கிறது. அந்த ஓட்டத்திலும் நாம் வாழ்கிற வாழ்க்கைக்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இவருடைய வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

‘நிச்சயமாகச் செய்யலாம்’ என்று மணிகண்டனுக்கு உறுதியளித்திருந்தேன்.

முதியவர்களை அநாதைகளாக விடுவதைவிடவும் வேறு பெரிய பாவம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் விட்டுவிடுகிறார்கள். ஒரு சுடு வார்த்தை போதும். அவர்களை மொத்தமாக முறித்துப் போட்டுவிடுகிறது. வீட்டைத் துறந்துவிட்டு தெருக்களில் இறங்கி கால் போன போக்கில் சுற்றத் தொடங்குகிறார்கள். தங்களைப் பற்றிய முழுவிவரங்களும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் கேட்டால் சொல்ல மாட்டார்கள். ‘பெத்து வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு இதை தண்டனையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தங்கள் பாதை, தங்கள் கால்கள் என்று அலைகிறார்கள். இப்பொழுதெல்லாம் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் காற்றில் அலையும் உதிர்ந்த இலைகளைப் போலத் திரியும் முதியவர்களை சாதாரணமாக பார்க்க முடிகிறது. இவர்களின் குடும்பங்கள் எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழ்நாள் முழுமைக்கும் பாவத்தைச் சுமந்து திரிய வேண்டியதுதான்.

இப்படியொரு பெரியவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன். பிள்ளைகள் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தார்களாம். ஆகாவழி முதியோர் இல்லம் அது. அவருக்கு ஒத்து வரவில்லை. இல்லமும் சரியில்லை; இனி குடும்பமும் காப்பாற்றப் போவதில்லை. தனது நோய்க்கு தேவையான மருந்துகளை அரசு மருத்துவமனையில் வாங்கிக் கொண்டு எங்கேயாவது பரதேசம் போய்விடலாம் என்று வந்தவர் பசி மற்றும் வெய்யிலினால் மருத்துவமனை வாயிலிலேயே விழுந்துவிட்டார். கூட்டம் சேர்ந்திருந்தது. முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள். பெரியவரிடம் பணம் எதுவும் இல்லை. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ‘தயவு செஞ்சு கேட்காதீங்க...மறுபடியும் அவங்ககிட்ட சிக்க வெச்சு கொன்னுடாதீங்க’ என்று கெஞ்சிக் கையெடுத்துக் கும்பிட்டார். அதன் பிறகு யாருமே பேசவில்லை. அவர் எழுந்த போது ஒருவர் ஐம்பது ரூபாய் கொடுத்தார். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டார். பத்தடி நகர்ந்திருப்பார். ஓடிச் சென்று பத்து ரூபாய் கொடுத்தேன். அப்பொழுது நான் கல்லூரி மாணவன். என்னிடம் கை நீட்டுவதற்கு அவருக்கும் மனம் வரவில்லை. அழத் தொடங்கினார். என்னென்ன எண்ணங்கள் அவர் மனதுக்குள் அலையடித்திருக்கும் என்று இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் கசிந்துவிடும். அமைதியாக நகர்ந்துவிட்டேன். கசங்கிய சட்டையும், அழுக்கேறிய வேட்டியும் சவரம் செய்யப்படாத முகமுமாக அந்த மனிதர் மெதுவாக நடந்து மருத்துவமனைக்குள் நகர்ந்தார். மருத்துவமனைக்கு வெளியில் உலகம் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது.