Feb 28, 2015

சந்தோஷம் தராத மழை

சுற்றிச் சுற்றி ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். எங்கள் வீட்டில் ஒரு குழாய். எதிர்வீட்டில் ஒன்று அதற்கு பக்கத்துவீட்டில் ஒன்று. வெறுமனே தோண்டுவதில்லை. தோண்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது அழுத்தமான காற்றை உள்ளே அனுப்புகிறார்கள். ‘புஸ்ஸ்’ என்ற பெரும் சப்தத்துடன். உடைந்த கற்கள் மண்கட்டிகளையெல்லாம் சிதறடிக்கும் ஒரு நுட்பம் அது.  ‘நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற கான்செப்டும் அதில் உண்டு.

எங்கள் ஆழ்குழாயில் நூற்றியிருபது அடியிலேயே தண்ணீர் வந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முந்தைய கதை இது. ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கியிருந்தோம். தரையிலிருந்து இருநூறு அடி வரைக்கும் உதிரி மண். விழுந்து குழியை மூடிவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு அஸ்திரம் அந்த இரும்புக் குழாய். அந்த அஸ்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்பு எறிந்துவிட்டார்கள். எங்களுக்குப் பிறகு அவர்கள் போர்வெல் தோண்டினார்கள்.

கற்களையும் மண் துகளையும் சுத்தம் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள் அல்லவா? அந்த அழுத்தத்தின் போது அவர்கள் குழியிலிருந்து வந்த கல் ஒன்று எங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாய் மீது மோதியிருக்கிறது. சோலி சுத்தம். குழாய் நசுங்கிப் போய்விட்டது. மோட்டாரை மேலே இழுக்கவும் முடியவில்லை கீழே பார்க்கவும் முடியவில்லை. சலனப்படக்கருவியை கயிற்றில் கட்டி உள்ளே அனுப்பிப் பார்த்துவிட்டார்கள். வேலைக்கு ஆகவில்லை. கடைசி முயற்சியாக ஒரு பெரிய இரும்பை உள்ளே விட்டு இடிக்கப் போகிறார்கள். வந்தால் தண்ணீர் போனால் கண்ணீர். கண்ணீரேதான். வராதா பின்னே? ஒரு லாரி தண்ணீர் வாங்கினால் ஐந்நூறு ரூபாய். ஏழெட்டு பேர் இருக்கிற கூட்டுக் குடும்பம் எங்களுடையது. வாங்குகிற சம்பளத்தை இரண்டாம் தேதியானால் தண்ணீர் டேங்க்காரருக்கு மாற்றிவிட வேண்டும் போலிருக்கிறது.

சொந்தக் கதை இருக்கட்டும். 

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஒருவரைப் பார்ப்பதற்காக நகரத்திற்குள் செல்ல வேண்டியிருந்தது. டவுன்ஹால் என்றொரு இடம் இருக்கிறது. அவ்வப்போது இந்த இடத்தில் தர்ணாக்களை நடத்துவார்கள். இன்றும் ஒரு தர்ணா. ஏதோ பிரச்சினை. காவலர்கள் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். பெரிய அளவிலான தடியடி என்று சொல்ல முடியாது. கூட்டத்தை ஒழுங்குக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி அது. வெயில் அடித்துப் பிளந்து கொண்டிருந்தது. போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை மண்டைக்குள் நர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தது கூடவே இந்த வெயில். இப்பொழுது வழியையும் மறைத்துவிட்டார்கள். 

வழக்கமாக எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று யாரையாவது அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. விரல்கள் செல்போனில் எண்களைப் பிசைந்தன. ரகுவின் எண் அது. நான் பெங்களூர் வந்த புதிதில் ரகு என்னுடன் பணியாற்றினார். கர்நாடகக்காரர். ஹசன் பக்கமாக ஒரு கிராமம். ஆரம்பத்தில் சண்டையிட்டுக் கொள்வோம். சண்டையென்றால் அரசியல் கச்சடாக்கள். அவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தமிழர்களை விமர்சிப்பார். தமிழக அரசியல்வாதிகளை பிடிக்கவே பிடிக்காது. இப்படித்தான் பெரும்பாலும் இழுத்துக் கொண்டிருப்போம். 

ரகுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கர்நாடக தலித் பெண்ணொருத்தியை திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தினால் இருவரது வீட்டிலும் ஆதரவில்லை.

காவிரியின் குறுக்காக அணை கட்டும் வேலை படுவேகமாக நடந்து வருவதாக கர்நாடக அமைச்சர் அறிவித்திருந்த செய்தி ஒன்றை இன்று காலையில் படித்திருந்தேன். அதைப் பற்றி பேசுவதற்காகத்தான் ரகுவை அழைத்தேன். அவரோடு பேசியே பல மாதங்களாகிவிட்டன. எப்படியும் சண்டைப் பிடிக்கலாம். அந்த கசகசப்புக்கு அது ஒருவித ஆறுதலைத் தரும் என்று தோன்றியது. அழைத்த போது மறுமுனையில் எந்த பதிலும் இல்லை. இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த நிமிடமே எனக்கு அழைப்பு வந்தது. நந்தினிதான் பேசினார். ரகுவின் மனைவி. நந்தினிக்கு தமிழ் நன்றாக பேச வரும். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். 

‘எப்படி இருக்கீங்கண்ணா?’ என்றார். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு ரகு பற்றிய பேச்சு வந்தது. ரகு இல்லை. இறந்துவிட்டார். இன்றைய தினத்தில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தியைக் கேட்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ரகு இறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. எப்படி எனக்குத் தகவல் வராமல் போனது என்று ஏதோவொரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது வீடு எங்கேயிருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதே ஏரியாதான். மடிவாலாவிலிருந்து பிடிஎம் லேஅவுட் செல்லும் வழியில் இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும் ரகுவின் யோசனைகளால் மனம் வழிந்து கொண்டிருந்தது.

ரகு வசதியான குடும்பம் இல்லை. எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் பார்த்த புரட்சிவாதி. கம்யூனிஸம் பேசுவார். எம்.சி.ஏ முடித்துவிட்டு பெங்களூர் வந்துவிட்டார். ‘ஐடியில் வேலை செஞ்சுட்டு எப்படி பாஸ் கம்யூனிஸம் பேசறீங்க?’ என்று நக்கலடித்திருக்கிறேன். ‘இதையெல்லாம் விட்டுட்டு போய்டுவேன்’ என்று சொல்வார். நந்தினியும் அப்படிதான். ஏதோவொரு கம்யூனிஸ மாநாட்டில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரகுவோடு நான் அறிமுகமான சமயத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது. அப்பொழுதும் இருவரின் வீட்டிலும் யாரும் வரவில்லை. தாங்களே குழந்தையை பராமரிப்பதாக பெருமையாகச் சொல்வார்.

வீட்டை அடைந்த போது ஒரு முதிய பெண்மணி இருந்தார். யாரென்று தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவில்லை. ‘எப்படி இறந்தார்?’ என்பதுதான் என்னுடைய முக்கியமான கேள்வியாக இருந்தது. மாரடைப்பு. முப்பத்தைந்து வயதாகிறது. வேலை அழுத்தம். சரியான தூக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பாடு. எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருப்பது என்று பல பிரச்சினைகள். முதல் முறையிலேயே ஆளை முடித்துவிட்டது. தூக்கத்தில் எழுப்பி நெஞ்சு வலிப்பதாகச் சொன்னாராம். எவ்வளவுதான் அவசரப்படுத்தியும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே எல்லாம் முடிந்து போனது.  ‘யாருக்குமே தகவல் சொல்ல முடியலைண்ணா’என்றார். அது பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்பொழுது செலவுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

நந்தினி பொறியியல் முடித்திருக்கிறார். ரகு இருக்கும் போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாராம். குழந்தையை அந்தப் பாட்டி பார்த்துக் கொள்கிறார். வாழ்க்கை அந்தக் குழந்தைக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. நந்தினியின் முகத்தில் தீர்க்கவே முடியாத சோகம் படிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் அதை அவர் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. எவ்வளவோ கற்பனைகளுடன் தொடங்கிய வாழ்க்கை அவர்களுடையது. தீவிரமான லட்சியவாத இளைஞர்கள் அவர்கள். ஆனால் எப்பொழுதுமே நாம் நினைக்கிற வகையில் வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நமது லட்சியங்கள், உணர்ச்சிகள் என எல்லாவற்றையும் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சீண்டிப்பார்ப்பதோடு நின்றுவிட்டால் நாம் பாக்கியசாலிகள். ஆனால் அடித்து நொறுக்கிவிட்டுப் போய்விடுவதும் நடந்துவிடுகிறது- பெரும் காட்டாறு ஒன்று ஊருக்குள் புகுந்து கிடைத்ததையெல்லாம் வழித்து எடுத்துக் கொண்டு போவதைப் போல. ஆனால் அதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன?

நந்தினி காபி கொடுத்தார். கிளம்பும் போது ‘உங்களுக்கு நான் ஏதாச்சும் உதவி செய்ய முடியும்ன்னு நினைக்கறீங்களா?’ என்றேன். ‘வீட்டுக்கு வந்து பேசிட்டு போறீங்க இல்லயா? அதுவே பெரிய உதவிண்ணா...குடும்பத்தோட வாங்க’ என்றார். வருவதாகச் சொல்லிவிட்டு வந்து எதுவுமே செய்யாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று மாலையில் வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஊரில் மழை பெய்தது. ஆனால் எந்தவிதத்திலும் சந்தோஷம் தராத மழை இது.

பொறியியல் Vs அறிவியல்

இயற்பியல்-பொறியியல் இரண்டில் எதை எடுப்பது எனும் என்னுடைய குழப்பத்தை இங்கே எழுதியிருக்கிறேன். அறிவுரை தர முடியுமா?

நான் இலங்கையில் ப்ளஸ் டூவுக்குச் சமமான Advanced Level எனும் பொதுப் பரீட்சை எழுதி, முடிவுகளும் வந்துவிட்டன. 

கணிதப் பிரிவில் பரீட்சை எழுதிய எனக்கு, இலங்கையின் மிகச் சிறந்த கல்லூரியில் இலவசமாக பொறியியல் கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சனை. எனக்கு அறிவியல் பாடங்களான Maths, Theoretical Physics (cosmology, particle physics) போன்றவற்றில் ஆர்வம் அதிகம் (ஆர்வமென்றால், அவை தொடர்பான Popular science கட்டுரைகளை படிப்பதிலும் விவாதிப்பதிலும் மட்டும்தான். Advance math ஐ சுயமாக கற்பதற்கு முயற்சி செய்யவில்லை. நான் child prodigy எல்லாம் கிடையாது ) 

இதனால் எனக்கு பொறியியலே பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இதுவரை படித்த பாடங்களுள் கணிதமும் இயற்பியலும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. பொறியியலை இதுவரை உள்ளே சென்று பார்த்திராததால் அது எப்படி என்று தெரியவில்லை. இருந்தும், பொறியியல் முழுவதும் problem solving இருக்குமென்பதால், அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என நம்புகிறேன்.

அத்துடன் படிப்பை முடித்துவிட்டு, அரசாங்க/தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்வதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. பொறியியல், இயற்பியல், கணிதம் எது படித்தாலும், அதில் ஆராய்ச்சி (Masters, Ph.D மேலும் மேலும்) வழியில் செல்லவும் தேவைப்பட்டால் பேராசிரியராக வரவுமே ஆசைப்படுகிறேன். 

இப்போது பிரச்சனை என்னவென்றால், மேலே சொன்னது போல இலங்கையின் ஆகச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இலவசமாக கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை விடுவது முட்டாள்தனம் என்பது பெற்றோரின் கருத்து. அது மட்டுமல்லாமல் கணிதம் மற்றும் இயற்பியல் இலங்கை கல்லூரிகளில் இரண்டாம்தர பாடங்களாக கருதப்படுவதால் அவ்வளவு சிறப்பாக கற்பிக்கப்படுவதில்லை. அத்துடன், இயற்பியல் / கணித பாடங்களில் பிரகாசிக்கும் அளவுக்கு எனக்கு ஒரிஜினாலிட்டியும் கிரியேட்டிவிடியும் இருக்கிறதா என்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. (அப் பாடங்களை ஆழம் வரை சென்று புரிந்துகொள்வதில் எனக்கு கொஞ்சமும் பிரச்சனை இருக்காது. ஆனால், அவற்றில் ஆராய்ச்சி செய்து புதிதாக கண்டுபிடிக்கும் அளவுக்குஎனக்கு திறமை இருக்கிறதா என்பதான் சந்தேகம்.) என்னுடைய புரிதலின்படி, கணிதம்-இயற்பியலில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதைவிட, பொறியியலில் ஆராய்ச்சி செய்வது சுலபம் போலிருக்கிறது. ஆனால், எங்கள் சமூகத்தின் பார்வையில் பொறியியலாளர்கள் இயற்பியலாளர்களை விட உயர்ந்தவர்களாக தெரிகிறார்கள்.

இதற்கு என் பெற்றோர், இப்போதைக்கு அந்த சிறந்த கல்லூரியில் பொறியியலை எடுத்து Bachelors டிகிரி செய்யுமாறும், பின்பு இயற்பியலில் ஆர்வம் அதிகம் இருப்பதாக நினைத்தால், Masters டிகிரியை இயற்பியலில் செய்து, தொடர்ந்த ஆராச்சிகளை இயற்பியலிலேயே செய்யுமாறும் கூறுகிறார்கள். இப்படிச் செய்வது சாத்தியமா? இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

நன்றி,
அபராஜிதன்.

அன்புள்ள அபராஜிதன்,

வாழ்த்துக்கள். 

அறிவியல் பாடங்களைத்தான் படித்தாக வேண்டும் என்கிற தீவிரமான மனநிலை உங்களுக்கு இல்லையென்பதாலும், மிகச் சிறந்த பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்வதாலும் தைரியமாக பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடுங்கள் என்றுதான் பரிந்துரை செய்வேன். இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு பொறியியல் மிகச் சுவாரஸியமான பாடத்திட்டம். பொறியியல் என்பது மேற்படிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட scope உள்ள படிப்பு பொறியியல். எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்ததுதான்.

நீங்கள் குறிப்பிடுவதோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அறிவியல் படிப்புகளை மிகச் சிறப்பாகச் சொல்லித்தரும் நிறைய கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் பொறியியல் படிப்பை மிகக் கேவலமாக்கிக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். சப்தகிரி என்றொரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. எம்.ஈ படிப்பில் சேர்த்துக் கொள்வார்கள். ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டால் வருகைப்பதிவைக் கொடுத்துவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்று தேர்வு மட்டும் எழுதிக் கொள்ளலாம். சப்தகிரி மட்டும்தான் என்றில்லை- இப்படி நிறைய பொக்கனாத்திக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியான பட்டியலே தயாரிக்க முடியும். யாருமே கண்டு கொள்வதில்லை. பி.ஈ முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களாகச் சேர்பவர்களில் பல பேர் இப்படித்தான் எம்.ஈ படிப்பை முடிக்கிறார்கள். பொறியியல் கல்வித்தரத்தின் லட்சணத்தை முடிவு செய்து கொள்ளலாம்.

அதுவே அண்ணா பல்கலைக்கழகம், கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி, பிஎஸ்ஜி போன்ற மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகளும் இருக்கின்றன. இப்படியான கல்லூரிகளில் படிக்கும் போது மாணவர்களின் திறன்கள் பன்முகங்களில் வளர்க்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. கவனிக்கவும்- வாய்ப்புகள் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்வது மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. பிஎஸ்ஜியில் படித்து ஐம்பது சதவீத மதிப்பெண்களோடு வீணாகப் போனவர்களும் இருக்கிறார்கள். ஐஐஎஸ்சியில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆகவே சிறந்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் பயன்படுத்திக் கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்க முடியும்.

என்னிடம் ‘என்ன படிப்பது?’ என்று கேட்டால் பாடத்திட்டத்தைக் காட்டிலும் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்வேன். மிகச் சிறந்த கல்லூரியில் நாம் அவ்வளவாக விரும்பாத பாடம் என்றாலும் எளிதாகக் கிடைக்கும் பட்சத்தில் அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. ‘இந்தப் படிப்புதான் வேண்டும்’ என முடிவு செய்து மேற்சொன்னது போன்ற ஏதாவது பொக்கனாத்திக் கல்லூரிகளில் சேர்வது என்பது குட்டைக்குள் விழுவது போலத்தான். ஆசிரியர்களும் சரியாக இருக்க மாட்டார்கள்; கல்லூரிகளில் வசதிகளும் சரியாக இருக்காது; உடன் படிக்கும் மாணவர்களும் திறன் வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

பொறியியலில் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் விருப்பப்பாடங்களான கணிதம், இயற்பியல் போன்றவற்றை பயன்படுத்தியே ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும். கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தப் பாடங்களை தொடர்ந்து கற்று வாருங்கள். நான்கு வருடங்களில் உங்கள் மனநிலை எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும். அப்படி மாறுவதை தவிர்க்கவே முடியாது. ஒருவேளை இதே மனநிலை இருக்குமானால் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொள்ளலாம். பிரச்சினை எதுவும் இருக்காது. 

உங்கள் குழப்பத்தை போக்குவதற்கு இந்த பதில் ஓரளவு உதவக் கூடும் என நம்புகிறேன். 

Feb 27, 2015

சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை

அன்பு மணி,

நீங்கள் கூறியதுபோல புலியூர் முருகேசன் செய்தது தேவை இல்லாதது என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

கி.ரா கூட அதிகமாக தெரிந்தவர்களின் கதையை எழுதி இருக்கிறார், முறை தவறிய உறவைக் கூட  எழுதி இருக்கிறார், ஒரு கட்டுரையில் (நண்பனின் கதை -பெருமாள்) ஆனால் வக்கிரமாக அல்ல. எல்லையை எங்கே வரையறுப்பது? இதை ஏன் சட்ட பூர்வமாக அணுக மறுக்கிறார்கள்? இப்படி வன்முறை என்று ஆரம்பித்தால் வேளாளர், தேவர், வன்னியர் என்று குறிப்பிடாமல் எவ்வாறு கூளமாதாரி போன்ற நாவல்களை எழுதுவது? ஆச்சரியமாக இருக்கிறது. யார் இவர்களுக்கு சிறுபத்திரிகை தொடர்பாக தகவல் அளிப்பது?

ஏனைய சாதிக் கட்சித் தலைவர்களோடு  ஒப்பிடும்போது ஈஸ்வரன், தனியரசுக்கு மட்டும் ஏன் ஊடகங்களில் மிகுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? கொங்கு வேளாளர்கள் ஏன் இப்படி ஆரம்பித்து விட்டார்கள்? புரியவில்லை. 

இந்தளவுக்கு எப்போதும் சாதி வீரியமாக தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

எளிமை, வெள்ளந்தி, அன்பு, விருந்தோம்பல் என்றெல்லாம் நான் பார்த்த ஒரு முகம்தானோ? அந்த கொங்கு மக்கள் எங்கே? ஒரே குழப்பம். 

அன்புடன்,
மணிமொழி ரத்தினம்

கொங்கு வேளாளர்களை பெருமொத்தமாகவெல்லாம் வகைப்படுத்த முடியாது. சகலவிதமான குணங்களும் நிறைந்த ஒரு ஆதிக்க சாதியினர்தான் அவர்களும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் நீங்கள் குறிப்பிடும் விருந்தோம்பலில் பல்லடத்து கவுண்டனுக்கும் ஈரோடு கவுண்டனுக்கும் கூட ஏகப்பட்ட வேற்றுமைகள் உண்டு. எனவே பொதுமைப்படுத்துதல் எதுவும் வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், மில்கள், தொழிற்சாலைகள், விவசாயம், நிதிவளம் என்று அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வலுவான சாதியினராக இருக்கிறார்கள். அதிமுக அரசு அமைந்தாலும் சரி, திமுக அரசு அமைந்தாலும் சரி- குறைந்தபட்சம் ஆறேழு அமைச்சர்கள் இந்தச் சாதியிலிருந்து இருப்பார்கள். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கொங்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் அரசு அலுவலர்களில் அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள். ஆசிரியர்களில் அதிகம் அவர்கள்தான் இருப்பார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்கள்தான். இப்படி சகலவிதமான செல்வாக்குடனும் இருக்கும் சாதி அது.

இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளை கவனித்தால் அந்தப் பகுதியின் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிக்க சாதியை எதிர்க்கும் அளவுக்கு வலுவான வேறு சாதிகள் இருக்கும். ஆனால் கொங்குப்பகுதியில் கவுண்டர்களை எதிர்க்கும் அளவுக்கு வலுவான சாதியென்று எதுவும் இல்லை. வேட்டுவக்கவுண்டர்கள், தலித்துகள் என ஆங்காங்கே சிலர் எதிர்த்தாலும் பெரிய அளவில் எதிர்க்க முடியாத சூழல்தான். எதிர்ப்பது என்றால் அரிவாளைத் தூக்கிக் கொண்டு எதிர்ப்பதைச் சொல்லவில்லை. பொருளாதாரம், விவசாயம், தொழில் போன்றவற்றில் கவுண்டர்களுக்கு போட்டியாக நிற்கும் வலுவுள்ள சாதி என்று எதையும் சுட்டிக்காட்ட முடிவதில்லை.

சமீபகாலத்தில் கவுண்டர்கள்  வெளியில் தெரியாத சாதிய மோதல்களில் ஈடுபடாத சாதியினர் என்பது உண்மைதான் என்றாலும் மிகத் தீவிரமான சாதிவெறியுடையவர்கள் என்பதை எந்தவிதத்திலும் மறுக்க முடியாது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் பிரச்சினை எழுவதற்கு சில ஆண்டுகாலம் முன்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலித்துகள் தங்களுக்குத் திருமண மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும் என்று கோரிய போது பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பது அந்தப் பகுதியினருக்குத் தெரிந்திருக்கும். தலித்துகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆன வரைக்கும் முயன்று பார்த்தார்கள். ஆனால் சகல திசைகளிலுமிருந்து களமிறக்கப்பட்ட கவுண்டர்களின் பலத்தின் முன்பாக தலித்துகள் அடங்கிப் போனார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இயல்பாகப் பேசும் போது கொங்குவேளாளர்கள் ‘சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை’ என்பார்கள். கவுண்டர்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றும் எதற்கும் துணிய வேண்டும் என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்வதை நேர்பேச்சில் கேட்க முடியும். இத்தகைய உள்மன ஆசைகள்தான் சாதி சார்ந்த பிரச்சினைகளின் போது தீவிரமாக வெளிப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

கொங்குப்பகுதியில் இந்தச் சாதியின் பலம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் தனியரசு, ஈஸ்வரன் போன்றவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ஒரு அணி அதிமுக பக்கம் நிற்கும் போது இன்னொரு அணி திமுக பக்கம் நிற்கிறது. 

பிற சாதிகளில் கலப்புத் திருமணம் அனுமதிக்கப்படும் அளவுக்கு கொங்கு வேளாளர்களில் சாதியக் கலப்பு நிகழ்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சாதியத் தூய்மை, தங்களின் சாதி புனிதமானது போன்ற பிம்பங்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மீது அடி விழுவதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. 

இத்தகைய பொருளாதார, சாதிய மற்றும் எண்ணிக்கை சார்ந்த சூழலில்தான் இந்தப் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களின் சாதி சீண்டப்படுவதை ஜீரணித்துக் கொள்வதில்லை. காலங்காலமாக கோலோச்சிக் கொண்டு வந்த தங்களின் மரியாதை கீழே விழும் துண்டு போல ஆகிவிடும் என்று பயப்படுகிறார்கள். அதை தங்களின் அரசியல் மற்றும் அரசு சார்ந்த செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் வழியாக தடுப்பதற்கான வழிகளை நாடுகிறார்கள். அதன் வழியாக பிரச்சினையை முன்னெடுப்பவர்கள் தங்களின் சொந்த செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சாதிய வெறியுடன், வாக்கு வங்கி அரசியலும் சேர்ந்து கொள்கிறது. நிலைமையும் சூழலும் வேறு மாதிரியாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தகவல் தொடர்பு மிகச் சாதாரணமாகிவிட்ட இந்தக் காலத்தில் ‘இதையெல்லாம் யார் சொல்லித் தருகிறார்கள்’ என்கிற கேள்வி வலுவில்லாததாகத்தான் தெரிகிறது. ‘ம்ம்’ என்றால் கூட தகவல் சென்றுவிடும். 

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி

நேற்று மதியம் ஒரு நடை சென்று கொண்டிருந்த போது 3C of Life என்று பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை ஒரு பெண் அணிந்திருந்தாள். மகாத்மா காந்தி சாலை என்றுதான் பெயர். ஆனால் அநியாயத்துக்கு கவனத்தைச் சிதறடிக்கிறார்கள். தலையைக் குனிந்து கொண்டு போகவா முடியும்? உற்றுப் பார்த்து கண்டுபிடித்துவிட்டேன். ‘இந்த சொட்டை அங்கிளுக்கு லொள்ளையும் லோலாயத்தையும் பாரு’ என்று நினைத்திருப்பாள். நினைத்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் Currency, Calendar, Chart of Account தான். எத்தனை நாட்களுக்குத்தான் இதையே கட்டிக் கொண்டு மாரடிப்பது? புதிதாகக் கண்டுபிடித்தாகிவிட்டது. இந்த இடத்தில் மாரடிப்பது என்கிற சொல்லை வலிந்து திணிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

தங்கவேலுவிடம் ஃபோனில் பேசியபடியே நடந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. கண்ணுக்கும் வாய்க்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது போலிருக்கிறது. இல்லையென்றால் கண் செய்யும் வேலைக்காக பேச்சுக் குழறுமா? குழறிவிட்டது. தங்கவேலு அன்னூரில் வசிக்கிறார். பொறியியல் முடித்துவிட்டு அவரும் தினேஷ் பாபுவும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்ன நிறுவனம் என்று சொல்லவில்லை பாருங்கள்- இணையதள வடிவமைப்பு உள்ளிட்ட மென்பொருள் சார்ந்த வேலைகள். நான்கைந்து வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாகன பராமரிப்பு நிறுவனங்கள்(Service center) மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு தேவையான மென்பொருட்களையும் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். இவர்கள் செய்வது கூட பெரிய காரியமில்லை. வீட்டில் இருப்பவர்கள் நம்பி அனுமதித்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.

இவர்களைச் சந்திக்கக் காரணமிருக்கிறது. நிசப்தம் தளத்தின் வடிவமைப்பை மாற்றிவிடலாம் என்று எண்ணி பெங்களூரில் ஒரு நிறுவனத்தை அணுகினேன். ஒரு பெரிய வீடு. அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்து கணினி நிறுவனமாக மாற்றியிருந்தார்கள். இருபத்தைந்து பேராவது வேலை செய்வார்கள். ஒரு மேலாளரை அழைத்துப் என்னிடம் பேசச் சொன்னார்கள். அவருக்கு ஒவ்வொன்றையும் ஆங்கிலத்தில் விளக்கி முடிப்பதற்குள் கண்ணாமுழி திருகிவிட்டது. ஆங்கிலத்தில் பேச முடியாது என்று இல்லை- புனைவு என்கிற வார்த்தைதான் வேண்டும் என்று சொல்வதற்கு அதைச் சொல்லி அர்த்தத்தையும் விளக்க வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் மென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அரை மணி நேரம் கூடி விளக்கி முடித்த பிறகு சில ஆயிரங்கள் வரைக்கும் கொடுக்க வேண்டும் என்றார். பணம் கூட பிரச்சினையில்லை. கிளம்பும் போது ‘நீங்க தமிழ்நாட்டில் எந்த ஊர்?’ என்றார். தமிழில்தான். இதை முதலிலேயே கேட்டிருந்தால் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கும்? ஏதாவது ஆங்கில இணைய தளத்தைக் காட்டி நான் விளக்கியிருந்தால் கூட பரவாயில்லை என்று விட்டிருக்கலாம். தமிழ் தளத்தைத்தான் விளக்குகிறேன். இப்படி நம்மைத் தமிழன் என்றே தெரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயங்கரமாக கடுப்பாகிவிடும். 

பெங்களூரில் ஒரு முறை படத்திற்குச் சென்றிருந்தோம். கோச்சடையான். பக்கத்து இருக்கைக்காரர்கள் படு வேகமாக ஓடி வந்தார்கள். தமிழில் பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னிடம் ‘excuse me..when the movie started?' என்று கேட்டார்கள். தமிழிலேயே கேட்டிருக்கலாம். ஆனால் ஆங்கிலம்தான். ‘வெளியே டீக்கடையில் விசாரிச்சுப் பாருங்க’ என்றேன். ஒரு முறைச்சலைக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். படம் முடிகிற வரைக்கும் கால்களைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடியே படம் பார்த்துவிட்டு எழுந்து வந்தேன். இந்த மாதிரி ஆட்களை நம்ப முடியாது. வெறுக்கென மிதித்துவிட்டு ‘ஸாரி’ என்று முடித்துவிடுவார்கள்.

இதே காரணத்திற்காக அந்த மென்பொருள் நிறுவனம் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்பொழுதுதான் தங்கவேலு, தினேஷ்பாபுவைப் பற்றித் தெரியும். Aspiremindz என்று நடத்துகிறார்கள். அதற்கு வேண்டியே ஒரு நாள் அன்னூர் கிளம்பிச் சென்றிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர்கள் ஒரு நாளில் காரியத்தை முடித்துவிட்டார்கள். இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன என்றாலும் இப்போதைக்கு இது போதும். ‘எவ்வளவுங்க?’ என்ற போது ‘கொடுக்கிறதைக் கொடுங்க’ என்றார்கள். பிழைக்கத் தெரியாத பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘நீங்களே சொல்லுங்க’ ‘அட நீங்க சொல்லுங்க’ ‘ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?’ என்கிற ரீதியில் ஆளாளுக்கு இழுத்து கடைசியில் சொற்பப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.

இருவருமே கிராமப்புறத்தில் படித்தவர்கள், அன்னூர் மாதிரியான ஊரில் அமர்ந்து கொண்டு இது போன்ற காரியங்களைச் செய்வதையெல்லாம் ஏதாவதொருவிதத்தில் ஊக்குவித்தாக வேண்டும். மருந்துக்கடையிலிருந்து மளிகைக்கடை வரைக்கும் இவர்களால் நுழைந்துவிட முடியும். வரவு செலவுக்கணக்கு, சாமான்களின் கையிருப்பு என எல்லாவற்றுக்கும் மென்பொருள் தயாரித்து விற்க முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வருமானமும் ஓரளவுக்கு இருக்கிறது என்கிறார்கள். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதில்லை. ஆனால் திருப்தியடையும் அளவுக்கான வருமானம்.

பொறியியல் முடித்த முக்கால்வாசிப் பேர்கள்  ‘வேலை கிடைக்கவில்லை அப்படியே கிடைத்தாலும் கிடைத்த வேலையில் சம்பளம் போதவில்லை’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டு அடுத்தவர்களைச் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் வீட்டில் மாதம் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெருநகரங்களில் ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்று கவாத்து அடிக்கிறார்கள். இப்படியானவர்களுக்கு மத்தியில் தங்கவேலு, தினேஷ்பாபு போன்றவர்கள் ஒருவகையில் ரோல்மாடல்களாக இருக்கிறார்கள். பெருநகரங்களில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் மென்பொருட்களை சில ஆயிரங்களில் விற்றுக் கொண்டு உள்ளூரிலேயே மாமன் மச்சானோடு திரியும் இவர்களைப் பார்க்க சற்று பொறாமையாகவும் இருந்தது.

இதே போன்ற வேலையை ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் செய்ய முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். அப்படியே செய்வதாக இருந்தாலும் வீட்டில் விடமாட்டார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்துவிட்டு இந்த ஊரில்தான் இருக்க வேண்டுமா என்று பெற்றவர்களும் மற்றவர்களும் கேள்வி கேட்பார்கள். அழுத்தத்திலேயே ஓட வைத்து விடுவார்கள். வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லோருமே இத்தகைய அழுத்தங்களை ஒருவகையில் பொறுத்துக் கொண்டவர்கள்தான். அடுத்தவர்கள் எவ்வளவுதான் நசுக்கினாலும் தங்கள் முடிவை இறுகப் பற்றிக் கொண்டு தம் கட்டியவர்கள்தான். அப்படி தப்பித்தவர்கள்தான் தாங்கள் விரும்பியதை அடைகிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கை வழக்கமான சுழலில் சிக்கி பத்தோடு பதினொன்றாகிவிடுகிறது. தங்கவேலுவும் தினேஷ்பாபுவும் தம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்கள் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அதுதான் அவர்களுக்கும் நல்லது அவர்களைப் பின்பற்றப் போகும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் நல்லது.

சரி. முடித்துக் கொள்ளலாமா? 

முதல் பத்தியை வேறு மாதிரி ஆரம்பித்துவிட்டு முடிவை வேறு மாதிரி முடித்தாலும் திட்டுவார்கள். இப்படி இளைஞர்களை ஊக்குவிக்கும்படி எழுதிவிட்டு அந்த 3C என்ன என்று எழுதினாலும் திட்டுவார்கள். உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. இப்பொழுது நான் என்ன செய்யட்டும்?

Feb 26, 2015

புலியூர் முருகேசன் தாக்கப்பட்ட விவகாரம்

புலியூர் முருகேசன் என்ற எழுத்தாளர் தாக்கப்பட்டிருப்பதாக இரண்டு நாட்களாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அப்படியொரு எழுத்தாளர் இருக்கிறார் என்பது  இப்பொழுதுதான் தெரியும். எனது அறியாமைதான். சிற்றிதழ்களில் எழுதுகிறார் என்று சொன்னார்கள். அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு கதைக்காக கொங்கு வேளாளர்கள் தாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும் தனியரசு எம்.எல்.ஏவின் ஆட்கள். தனியரசு பற்றித் தெரியும். தமிழக சட்டப்பேரவையிலேயே மிக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர். அவர் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

எந்தவொரு காரணமாக இருந்தாலும் எழுத்தாளரைத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதற்கும் கதையைப் படித்துவிட்டு வாயைத் திறக்கலாம் என்று நினைத்திருந்தேன். வாசித்துவிட்டேன். தேவையில்லாமல் சாதியை உள்ளே இழுத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது. கொங்கு வேளாளர்களில் பெருங்குடி என்ற கூட்டம்(உட்பிரிவு) உண்டு. கிட்டத்தட்ட நூறு கூட்டங்களில் அதுவும் ஒன்று. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தைத்தான் கதையின் வழியாக முருகேசன் தாக்கியிருக்கிறார்.

சுப்பிரமணி ஆண்மையற்றவன். அவனை மிரட்டி தனது பாலியல் இச்சைகளை அப்பன் தீர்த்துக் கொள்கிறான். சுப்பிரமணி ஆண்மையில்லாதவன் என்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனாலும் அவனது சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளையும் சுப்பிரமணியின் அப்பன் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்லும் சுப்பிரமணியை ‘ஒம்போது’ என்று திட்டி அடித்து உதைக்கிறான். அவன் தாக்கப்படுவதை அந்த மருத்துவமனையில் இருக்கும் தலித் பெண் (செருப்புக்கு டோக்கன் போடுபவள் என்று கதையில் வருகிறது) மட்டும்தான் எதிர்க்கிறாள் என்கிற வகையில் கதை நகர்கிறது.

தீவிரமான கதைக்கான கருதான். ஆனால் அதை அருவருப்பான முறையில் எழுதியிருக்கிறார். இணைப்பில் வாசித்துப் பார்க்கலாம்.

எந்தக் கருவைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும், அதை தனக்கு விருப்பமான முறையில் எழுதுவதும் படைப்பாளனின் உரிமைதான். ஆனால் இந்தக் கதையில் சாதியைக் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. சுப்பிரமணி, அவனது அப்பன், சுப்பிரமணியின் மருமகள் என்கிற பாத்திரங்களின் வழியாகவே இந்தக் கதையை வலிமையானதாக எழுதியிருக்க முடியுமே என்று தோன்றியது. எதற்காக அவர்கள் பெருங்குடி கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என எழுதியிருக்கிறார் என்று குழப்பமாக இருந்தது. அதுவும் புலியூர் என்ற ஊரையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 

கதையைப் பற்றி தெரிந்து கொண்ட புலியூர் பெருங்குடிக் கூட்டத்தினர் முருகேசனிடம் வந்து ‘பெருங்குடி’ என்ற பெயரை நீக்கிவிடச் சொல்லி எச்சரித்ததோடு விவகாரம் முடிந்து போனதாகவும் அதன் பின்னர் வந்த தனியரசுவின் ஆட்கள்தான் முருகேசனை அடித்து உதைத்ததாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு இவை செவி வழிச் செய்திகள்தான். இனி வரும் நாட்களில் முழுமையான தகவல்கள் வெளிவரும் என நினைக்கிறேன்.

சாதி, மதம் போன்ற பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் வலிந்து சர்ச்சையை உருவாக்க வேண்டியதில்லை என்கிற கட்சி நான். இதே போன்ற சாதி சார்ந்த பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்த அடிப்படையில்தான் எடுத்திருந்தேன். பிரச்சினை பெரிதாகும் வரைக்கும் மாதொருபாகனில் Controversy இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. விவகாரம் கதையின் ஓட்டத்தோடு இருக்கும். ஆனால் முருகேசனின் கதையில் பெருங்குடி என்கிற கூட்டம் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ஓர் எழுத்தாளன் சாதியைக் குறிப்பிட்டு எழுதுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. அடக்குமுறைகள், சாதிய அத்துமீறல்கள், சடங்குகள் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் சாதியை எழுத்து வழியாக வெளிப்படுத்துவதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஒரு பாலியல் வக்கிரத்தை தனது மகனிடமும் மருமகளிடமும் காட்டும் incest இந்த ஊரில் வசிக்கும் இந்தச் சாதியைச் சார்ந்த இந்த கூட்டத்துக்காரன் என்று எழுதுவது எந்தவிதத்தில் சரி? அப்படியே ஒரு மனிதன் வாழ்ந்திருந்தாலும் அது அவனுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விவகாரம். அதற்கு ஒரு சாதிய அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அப்படியென்றால் கொங்கு வேளாளர்கள் முருகேசனை அடித்ததை நியாயப்படுத்துகிறாயா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். அழுத்தமான கண்டனங்களை பதிவு செய்கிறேன். ஆனால் அதே சமயம் இந்தக் கதையை கருத்துரிமை என்ற பெயரில் எல்லாம் நியாயப்படுத்த முடியாது. அநிதீயையும் அக்கிரமங்களையும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய கடமையுணர்வு எழுத்தாளனுக்கு எவ்வளவு அவசியமோ அதேயளவிற்கு தான் வாழ்கிற சமூகத்தில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதில் புலியூர் முருகேசன் சறுக்கியிருக்கிறார்.

சாதிய உணர்வுகள் பொறி பூத்துக் கிடக்கும் தமிழகத்தில் இப்படி எதையாவது கிளறிவிட்டு சமூக சீர்திருத்தத்தை உருவாக்கிவிட முடியாது. இப்படியான கதைகள் அப்படிக் கிளறிவிடும் வேலைகளை மட்டும்தான் செய்கின்றன.

1970 - ஒரு காதல் கதை

மணிகண்டன் என்றொரு நண்பர் இருக்கிறார். மதுரைக்காரர். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவர் ஐயர். அந்தப் பெண் கிறித்துவர். ‘பிரச்சினை எதுவும் இல்லையாங்க?’என்று கேட்ட போது ஒரு கதையைச் சொன்னார். யாராவது சினிமா இயக்குநரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் அந்தக் கதையைச் சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன். அவ்வளவு சுவாரஸியம். இன்னொரு அட்டகாசமான காதல் கதையும் இருக்கிறது. இது வேறொருவருடையது. பெங்களூர் பெண்மணி. எழுபது வயதாகிறது. இவருடையதும் கலப்புத் திருமணம்தான். இருவரும் வெவ்வேறு சாதிக்காரர்கள். இவர் ஐயர். கணவர் வேறொரு சாதி.

நாற்பது வருடங்களுக்கு முன்பாக பெங்களூர் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு போக்குவரத்து நெரிசல்,  இத்தனை கசகசப்பு இல்லாமல்- அது வேறு பெங்களூர். அந்தக் குளிர்ந்த ஊரில் துளிர்த்த காதல் அது. அப்பொழுதுதான் அவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். முதலாளி ஒரு ஏமாற்றுப் பேர்வழி. தனது நிறுவனத்திற்காக ஒரு வேலையைச் செய்து கொடுத்த ஒருவருக்கு பணம் கொடுக்காமலேயே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறான். அந்த மனிதர் பணம் கேட்டு வந்த போது ‘சாயந்திரம் இந்தப் பொண்ணுகிட்ட கொடுத்துடுறேன்..பார்த்து வாங்கிக்குங்க’ என்று கைகாட்டிவிட்டானாம். அவ்வளவுதான். அந்த மனிதரும் தினமும் வந்து இந்தப் பெண்ணிடமும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ராஜா ராணி படம் பார்த்துவிட்டீர்களா? இல்லையென்றால் ஒரு முறை பார்த்துவிடுங்கள். இரண்டு நாட்களாக நயன்தாரா நினைப்பாகவே கிடந்தேன். அந்தப் படத்தில் இப்படித்தான் ஒரு காதல் வரும். 

தினமும் மாலை நேரத்தில் பணம் வசூலிப்பதற்காக இந்தப் பெண்ணின் அலுவலகத்திற்கு வந்துவிட்டு பிறகு அவரது வீடு வரைக்கும் கூடவே நடந்திருக்கிறார். பெங்களூர் பெண் அல்லவா? கூடிய சீக்கிரத்திலேயே ‘இந்த மனுஷன் பணம் வாங்க மட்டும் வரவில்லை’ என்று புரிந்து கொண்டார். பிறகு காதல் துளிர்த்திருக்கிறது. துளிர்த்ததோடு சரி. தெரியாத்தனமாக தோளோடு தோள் உரசிவிட்டாலும் கூட அவர் பத்துத் தடவை மன்னிப்புக் கோருவார். இவர் கற்பே போய்விட்டது போல திரும்பத் திரும்பத் துடைத்துக் கொள்வார். அப்படியான காதல்.

இப்படியே அலுவலக வாசலுக்கும் வீட்டு வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்த காதலில் ஒரு இடைவெளி. திடீரென்று அந்த மனிதர் காணாமல் போய்விட்டார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டு முகவரி கூட தெரியாது. வேறு வழியே இல்லை. தனியாகவே அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த அந்த மனிதர் ‘எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு’ என்று குண்டைப் போடுகிறார். சொந்தக்காரப் பெண்ணையே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ‘அப்பா கொன்னுடுவேன்னு மிரட்டினாரு..அம்மா செத்துடுவேன்னு சொன்னாங்க’ என்று ஏதேதோ ‘பிட்டு’க்கள்தான். இந்தப் பெண்ணுக்கு கால்களுக்குக் கீழாக நிலம் வழுக்குகிறது. கண்கள் சுழட்டிக் கொண்டு வருகிறது. பாரதிராஜாவின் எஃபெக்டில் பறவைகள் அப்படியே வானத்தில் உறைகின்றன. கடல் அலைகள் அசையாமல் நிற்கின்றன. எக்செட்ரா, எக்செட்ரா. அப்பொழுதே ‘போடா வெங்காயம்’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தால் இந்தக் கதையில் சுவாரஸியமே இல்லை. ஆனால் அந்தப் பெண் அதைச் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு திருமணம் செய்து கொள்ளவில்லை. 

இந்தச் சூழலில் அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகிறது. தனது மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்புகிறார். அந்தச் சமயத்தில் காதலன் வருகிறார். இந்த இடத்தில்தான் ட்விஸ்ட்.

அந்தப் பெண்ணின் அம்மாவிடம் ‘நாளைக்கு உங்க பெண்ணை கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொள்கிறேன். சம்மதமா?’ என்கிறார். அந்த அம்மாவுக்கு வேறு துணை இல்லை. அவரால் முடிவெடுக்கவும் முடியவில்லை. முடிவு பெண்ணிடம் செல்கிறது. அந்தப் பெண்ணிடமும் அந்த மனிதர் பேசுகிறார். ‘உன்னோடு எல்லா நேரமும் இருப்பது சாத்தியமில்லை..ஆனால் தினமும் இரண்டு மணி நேரங்களை ஒதுக்க முடியும். யோசித்துச் சொல்’ என்கிறார். அடுத்த விநாடி சரி என்கிறார். அடுத்த நாள் திருமணம் நடக்கிறது. 

இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று யோசித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இன்று வரை தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் வந்து மனைவியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இவர் அவரிடமிருந்து பணம் கேட்பதில்லை. அவருடைய நேரத்தைக் கேட்பதில்லை. கடந்த நாற்பது வருடங்களாக இப்படித்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

‘உங்க கல்யாணம் பத்தி அந்தக் குடும்பத்துக்குத் தெரியுமா?’ என்றேன்.

தெரியும். திருமணம் செய்து கொண்ட ஆரம்பகாலத்திலேயே தெரிந்துவிட்டது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கு உடலில் ஊனம். பேச்சு வராது. பல சமயங்களில் இவர்தான் முன்னின்று பார்த்துக் கொள்கிறார். இன்னமும் வேலைக்குச் செல்கிறார். சமீபகாலம் வரை பெங்களூரில் முதியோர் இல்லம் ஒன்றை பராமரித்து வந்திருக்கிறார். இப்பொழுது சிரமமாக இருக்கிறது என்பதால் நடத்துவதில்லை. ‘நிசப்தம் வாசிக்கிறேன். என் பங்களிப்பாக அறக்கட்டளைக்கு ஒரு சிறு தொகையைத் தர விரும்புகிறேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரது வயதுக்கு மரியாதை தர வேண்டும் என்று நேரடியாகவே சென்று வாங்கிக் கொண்டேன். அப்பொழுதுதான் இந்தக் கதையைச் சொன்னார்.

அவர் சொன்ன கதையில் பாதியைத்தான் சொல்லியிருக்கிறேன். மொத்தத்தையும் எழுதுவதென்றால் சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ எழுதிவிடலாம். எதற்காக இதைச் சொன்னேன் என்றால் மணிகண்டன் அழைத்து ‘அண்ணா மதுரை ஜி.ஹெச்ல இருந்து பேசறேன்....ஒரு பெரியவர் கீழே விழுந்து கிடந்தாரு...டயாபடிக் மாதிரி தெரியுது...ஜி.ஹெச்ல அட்மிட் செய்யறேன்..முடியலைன்னா வேறொரு ஆஸ்பத்திரிக்கு மாத்துவேன்...ஒருவேளை ஏதாவது பண உதவி தேவைப்பட்டா அறக்கட்டளை வழியாக செய்ய முடியுமா?’ என்றார். 

பெரியவர் என்றதும் எனக்கு முதியோர் இல்லம் நடத்திக் கொண்டிருந்த இந்த அம்மையாரைப் பற்றிய ஞாபகம் வந்துவிட்டது. வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் திசைமாறும் நீரோட்டமாக இருக்கிறது. அந்த ஓட்டத்திலும் நாம் வாழ்கிற வாழ்க்கைக்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இவருடைய வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

‘நிச்சயமாகச் செய்யலாம்’ என்று மணிகண்டனுக்கு உறுதியளித்திருந்தேன்.

முதியவர்களை அநாதைகளாக விடுவதைவிடவும் வேறு பெரிய பாவம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் விட்டுவிடுகிறார்கள். ஒரு சுடு வார்த்தை போதும். அவர்களை மொத்தமாக முறித்துப் போட்டுவிடுகிறது. வீட்டைத் துறந்துவிட்டு தெருக்களில் இறங்கி கால் போன போக்கில் சுற்றத் தொடங்குகிறார்கள். தங்களைப் பற்றிய முழுவிவரங்களும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் கேட்டால் சொல்ல மாட்டார்கள். ‘பெத்து வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு இதை தண்டனையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தங்கள் பாதை, தங்கள் கால்கள் என்று அலைகிறார்கள். இப்பொழுதெல்லாம் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் காற்றில் அலையும் உதிர்ந்த இலைகளைப் போலத் திரியும் முதியவர்களை சாதாரணமாக பார்க்க முடிகிறது. இவர்களின் குடும்பங்கள் எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழ்நாள் முழுமைக்கும் பாவத்தைச் சுமந்து திரிய வேண்டியதுதான்.

இப்படியொரு பெரியவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன். பிள்ளைகள் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தார்களாம். ஆகாவழி முதியோர் இல்லம் அது. அவருக்கு ஒத்து வரவில்லை. இல்லமும் சரியில்லை; இனி குடும்பமும் காப்பாற்றப் போவதில்லை. தனது நோய்க்கு தேவையான மருந்துகளை அரசு மருத்துவமனையில் வாங்கிக் கொண்டு எங்கேயாவது பரதேசம் போய்விடலாம் என்று வந்தவர் பசி மற்றும் வெய்யிலினால் மருத்துவமனை வாயிலிலேயே விழுந்துவிட்டார். கூட்டம் சேர்ந்திருந்தது. முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள். பெரியவரிடம் பணம் எதுவும் இல்லை. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ‘தயவு செஞ்சு கேட்காதீங்க...மறுபடியும் அவங்ககிட்ட சிக்க வெச்சு கொன்னுடாதீங்க’ என்று கெஞ்சிக் கையெடுத்துக் கும்பிட்டார். அதன் பிறகு யாருமே பேசவில்லை. அவர் எழுந்த போது ஒருவர் ஐம்பது ரூபாய் கொடுத்தார். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டார். பத்தடி நகர்ந்திருப்பார். ஓடிச் சென்று பத்து ரூபாய் கொடுத்தேன். அப்பொழுது நான் கல்லூரி மாணவன். என்னிடம் கை நீட்டுவதற்கு அவருக்கும் மனம் வரவில்லை. அழத் தொடங்கினார். என்னென்ன எண்ணங்கள் அவர் மனதுக்குள் அலையடித்திருக்கும் என்று இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் கசிந்துவிடும். அமைதியாக நகர்ந்துவிட்டேன். கசங்கிய சட்டையும், அழுக்கேறிய வேட்டியும் சவரம் செய்யப்படாத முகமுமாக அந்த மனிதர் மெதுவாக நடந்து மருத்துவமனைக்குள் நகர்ந்தார். மருத்துவமனைக்கு வெளியில் உலகம் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது.

ஊசி போட்டு கொன்றுவிடுவார்கள்

செல்லப்பிராணிகளில் கடைசியாக ஒரு புறா வைத்திருந்தேன். அது ஆண் புறாவா அல்லது பெண் புறாவா என்று தெரியாது. பெண் புறாவாக இருந்தால் ஆண் புறாவொன்றை இழுத்து வந்துவிடும் என்றார்கள். இது உல்டா ஆகிவிட்டது. ரொமான்ஸ் முற்றி ஓடிப் போய்விட்டது. அடுத்த தெருவிலேயேதான் அதன் காதலி இருந்தாள். அந்த வீட்டுக்காரப் பெண்மணியிடம் சென்று ‘என்ர புறாவைக் கொடுங்க’ என்று கேட்ட போது ‘புடிச்சுட்டு போ’ என்று சொன்னார். எப்படிப் பிடிப்பது? இரவில் கூண்டுக்குள் வந்தபிறகு பிடித்தால்தான் உண்டு. ‘சாயந்திரமெல்லாம் வந்து கதவைத் திட்டாத..எம்புருஷனுக்கு கோவம் வந்துடும்’ என்றார். அப்பொழுது எனக்கு அரும்பு மீசை முளைத்திருந்தது. இது என்ன புதுக்கரடி என்று விட்டுவிட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு காதல் சலித்துப் போய்விட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டது. எங்கள் ஆயாவுக்கு அறிவு ஜாஸ்தி. இறகைப் பிடுங்கி விட்டுவிடலாம். அது நன்றாக முளைப்பதற்குள் நம் வீட்டிலேயே இருந்து பழகிவிடும் என்றார். நல்ல ஐடியா என்று அவரது திட்டத்தை அமுல்படுத்தினோம். மூன்றே நாட்கள்தான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது இட்லிக்கு புறாக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு நாயொன்று கடித்துக் கொன்றுவிட்டது. ஆயாதான் செத்துப் போன புறாவை சுத்தம் செய்து கொடுத்தார் என்று அம்மா சொன்னார். ஆயாவை பார்த்தேன். சிரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த கோபத்துக்கு ஆயாவின் நடு உச்சியில் நங்கென்று கொட்ட வேண்டும் போலிருந்தது.

அதோடு சரி.

ஒரு காலத்தில் செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியத்துடன் இருந்தேன். பொடியனாக இருந்த காலத்தில் பொன்வண்டு வளர்த்துப் பார்த்தேன். ஏழெட்டு முட்டைகளைக் கொடுத்துவிட்டு செத்துப் போனது. கலர்கலராக முட்டையிடும் என்று கனவுகளை கலர்கலராக வைத்திருந்தேன். ஆனால் எப்படித் திருப்பினாலும் ஒரே வண்ணத்தில்தான் இருந்தது. தீப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் எடுத்துப் பார்த்தேன். மண் அரித்துவிட்டதா என்று பார்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இரண்டு நாட்கள் புதைத்து வைத்தால் மணக்கவா செய்யும்? முகத்தில் அறைந்த அந்த நாற்றத்திற்குப் பிறகு மண்ணைத் தோண்டுவதையே விட்டுவிட்டேன்.

அதற்கு வெகு நாட்கள் கழித்து கிளிக்குஞ்சு பிடித்து வந்திருந்தேன். அடுத்த நாள் காலையில் ஒரேயொரு இறகு மட்டும் கிடந்தது.  ‘கிளிக்கு றெக்கை முளைச்சிட்ச்சு....பறந்து போயிடுச்சேப்பா’ என்று சிவாஜியின் வசனத்தைச் சொல்லி சமாதானப்படுத்தினார்கள். ஆனால் உண்மையில் பூனை பிடித்துப் போய்விட்டது என்று வெகுநாட்கள் கழித்துத்தான் தெரியும். இப்படி ஓடிக் கொண்டிருந்த செல்லப்பிராணிகளின் சாப்டரில் கடைசியாகத்தான் புறா. இப்படியே கோழி, குருவி என்று நிறைய முயற்சித்துப் பார்த்தாலும் ஒன்றுமே உருப்படியானதில்லை என்பதால் இப்பொழுதெல்லாம் எதையும் கண்டு கொள்வதில்லை.

அப்பாவுக்கு அப்படியில்லை. இன்னமும் உள்ளுக்குள் நாய் மீதான பிரியம் உண்டு. அவ்வப்போது ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கறிக்கடையிலிருந்து கால்களையும் தோல்களையும் வாங்கி வந்து ரேஷன் அரிசியோடு சேர்த்து வேக வைத்து தெருநாய்களுக்கு போடுவார். அவை வாலைச் சுழற்றிக் கொண்டு கூடவே திரியும். அப்படித்தான் பால்காரர் வீட்டிலிருந்து ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்திருந்தார். பால் குடி மறக்காத குட்டி. கறுப்பும் செம்மியுமாக கீச் கீச்சென்று கத்திக் கொண்டிருந்தது. அதற்காகத் தனிக் கூண்டு தயாரித்து சாக்குப்பையினால் ஒரு மெத்தை என்று ஏதேதோ செய்து கொண்டிருப்பார். அம்மாவுக்கு பயங்கரக் கடுப்பாகிவிடும். ‘அதைப் போய் இந்தக் கொஞ்சு கொஞ்சுறீங்க’ என்றாலும் கண்டு கொள்ளவே மாட்டார். எங்கள் தெருவில் வாகனப்போக்குவரத்து அதிகம். முதல் வாரத்திலேயே குட்டியை தெருவில் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது பைக்காரன் ஒருவன் மேலேயே ஏற்றிவிட்டான். எதுவும் ஆகவில்லை. ஆனால் அப்பா அவனை ஏதோ வசைபாட அவன் சண்டைக்கு வந்துவிட்டான். சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

வெகுநாட்களுக்குப் பிறகு சங்கிலியிலிருந்து கழட்டிவிட்டிருந்தார். அதற்கு முன்பாக ரேபிஸ் தடுப்பூசி போட்டு சான்றிதழ் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். யாராவது கடி வாங்கி அது நம்முடைய நாய்தான் என்று நிரூபித்துவிட்டால் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் நஷ்ட ஈடு வாங்கிவிடுவார்கள் என்பதால் இந்தச் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தார். சங்கிலியிலிருந்து கழற்றி விட்ட பிறகு வீட்டிற்கு அருகிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆரம்பத்தில் மட்டும் எங்கேயோ போய் கறிக்கடைக்காரர்கள் வீசும் கோழி இறகுகளைத் தின்றுவிட்டு வந்துவிடும். அதன் அருகிலேயே போக முடியாது. அவ்வளவு நாற்றம். குடலை புரட்டிக் கொண்டு வரும். அப்பொழுதும் கூட அதைப் பிடித்துக் குளிப்பாட்டி அம்மாவிடம் அப்பா வாங்கிக் கட்டிக் கொண்டதைப் பார்த்திருக்கிறேன். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார்.

கு.க அறுவை சிகிச்சை செய்யாத ஒரே இளவட்டம் எங்கள் நாய்தான். அதனால் எந்தப் பெண் நாயையும் விடுவதில்லை. இதைப் பார்த்தாலே அவையெல்லாம் பம்மிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று முறை நாய்வண்டிக்காரர்கள் வந்திருந்தார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்குத் தோல்விதான். எப்படியாவது தப்பித்துவிடும். அப்பாவும் இதைப் பார்த்துவிட்டார். ‘இதைப் புடிச்சுட்டு போனீங்கன்னா கொண்டு வந்து விட்டுடுங்க..நூறு ரூபாய் தர்றேன்’ என்று பேரம் பேசி வைத்திருந்தார்.

நாய் பிடிக்க வரும் சமயத்தில் அவர்களிடம் விசாரித்தால் ‘கொண்டு வந்து இங்கேயே விட்டுடுவோம் சார்’ என்பார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்கள் வேறு மாதிரியாகச் சொல்கிறார்கள். தூரமாகக் கொண்டு போய் கொன்று புதைத்துவிடுகிறார்கள் என்று ஓரிருவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு சிலர் அதை மறுத்து ‘ஊருக்கு வெளியில் விட்டுவிடுகிறார்கள்’ என்பார்கள். எது உண்மை என்று தெரியவில்லை.

அப்பாவுக்கு அந்த நாய்க்குட்டியின் மீது தனிப்பாசம் இருக்க காரணமிருக்கிறது. மிகப் பொறுப்பான நாய் அது. இரவு பத்து மணிக்கு மேலாக வாசற்படியை விட்டு நகராது. காலையில் யாராவது கதவைத் திறந்த பிறகுதான் வெளியே சுற்றச் சொல்லும். அப்பா கட்டி வைத்திருக்கும் கூட்டின் அடியிலேயே பெரும்பாலான நேரம் படுத்திருக்கும். தெருவில் ஏதாவது பெண் நாய் சுற்றினால் மட்டும் இடத்தைக் காலி செய்யும். சோலி முடிந்தவுடன் திரும்பவும் வந்து படுத்துக் கொள்ளும். இது வரையிலும் கொடுத்து வைத்த வாழ்க்கைதான். 

ஆனால் வாழ்க்கை எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? 

அப்படித்தான் ஆகிவிட்டது. மூன்று நாட்களுக்கு முன்பாக தனது வழக்கமான இடத்தில் படுத்துத் தூங்கியிருக்கிறது. வண்டிக்காரர்கள் சப்தமில்லாமல் வந்து அமுக்கிச் சென்றுவிட்டார்கள். அப்பா இதைப் பார்க்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் நாய் வண்டிக்காரர்களோடு சண்டைப் போட்டிருக்கிறார்கள். கொண்டு வந்து விட்டுவிடுவதாகத்தான் சொன்னார்களாம். ம்ஹூம். நேற்று எனக்கு அங்கலாய்ப்பாக இருந்தது. கார்போரேஷன்காரர்களிடம் அழைத்துப் பேசினால் சரியாக பதில் சொல்லவில்லை. ‘எங்கேயாவது கொண்டு போய் விட்டிருப்பார்கள்’ என்று சொல்கிறார்கள். அப்படி விட்டிருந்தால் சனிக்கிழமை போய் பிடித்து வந்துவிடலாம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் ‘ஊசி போட்டு கொன்னுருப்பாங்க சார்’ என்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதெல்லாம் சாலையைத் தாண்டத் தெரியாமல் வாகனச் சக்கரத்தில் சிக்கிக் கூழாகிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான நாய்களுக்காக வெறும் ‘ப்ச்’ மட்டும் கொட்டுவேன். இப்பொழுது ஒரு படி அதிகம். அவ்வளவுதான்.

Feb 25, 2015

என்ன படிக்கலாம்?

பிப்ரவரி மாத மத்தியிலிருந்து கல்லூரி பற்றியும் மேற்படிப்பு பற்றியதுமான பேச்சு ஆரம்பிக்கிறது. சமீபத்தில் தேனியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். முதல் கேள்வியே ‘இஞ்சினியரிங்கில் என்ன கோர்ஸ் நல்லா இருக்கும்?’ என்றுதான் ஆரம்பித்தார். அவரது மகளுக்கான விசாரணை அது. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறார். 

அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது. ‘உங்க பொண்ணுக்கு எந்த பாடம் பிடிக்கும்?’ என்ற போது அவரிடம் பதில் இல்லை. ‘இஞ்சினியரிங்கே போகணும்ன்னு இல்லைங்க’ என்று நான் ஆரம்பித்தது ஒருவேளை அவருக்கு பிடிக்காமல் போயிருக்கக் கூடும். ஆனால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

தேர்வுகள் முடிவதற்கும் கல்லூரியின் சேர்க்கை ஆரம்பிப்பதற்கும் இன்னமும் இரண்டு மூன்று மாதங்கள் இருக்கின்றன. பொறுமையாக முடிவெடுக்கலாம். இப்பொழுதே அவசரப்பட வேண்டியதில்லை. மாணவர்கள் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் பெற்றோர்கள் உள்ளே புகுந்து ‘அதுதான் நல்ல படிப்பாம்..இதுதான் நல்ல படிப்பாம்’ என்று குட்டையைக் குழப்புவது மாணவர்களின் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். அவர்கள் போக்கில் விட்டுவதுதான் இப்போதைக்கு சரியான செயலாக இருக்கும்.

இதுவரைக்கும் அடுத்து என்ன சேர்வது என்பது பற்றி யோசிக்காமல் விட்டிருந்தால் இப்பொழுது யோசிக்க ஆரம்பிப்பது சரியான தருணம் இல்லை. பொதுத் தேர்வுகள் முடியும் வரைக்கும் வெறும் தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அது மிக முக்கியம். தேர்வுகள் முடிந்த முதல் நாள் மாலையிலிருந்து அடுத்து என்ன சேரலாம் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடலாம்.

சில மாணவர்கள் ப்ளஸ் ஒன் படிப்பின் போதே ‘அடுத்து என்ன படிப்பது?’என்று முடிவு செய்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் ‘அடுத்தது பொறியியல் படிப்புதான்’ என்று முடிவு செய்திருந்தால் வேண்டுமானால் ‘பொறியியலில் எதைப் படிக்கலாம்?’ என்று யோசிக்கத் தொடங்குவதில் தவறில்லை. ஆனால் அதைக் கூடத் தேர்வு முடிந்த பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்றுதான் பரிந்துரைக்க வேண்டும்.

‘படிப்பது அவர்கள் வேலை....பாடத்தைப் பற்றி விசாரித்து வைப்பது பெற்றவர்களின் கடமை’ என்று நினைத்தால் அது நல்ல நினைப்புதான். யோசிக்கத் தொடங்கலாம்தான். ஆனால் இப்போதைக்கு இந்தச் சிந்தனைகளை நமக்குள்ளேயே வைத்துக் கொள்வது நல்லது.
  • அறிவியல் படிப்புகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. வேறு பாடங்களில் மாணவர்கள் ஆர்வமாக இருந்தால் ‘நீ பொறியியல்தான் படிக்க வேண்டும்’ என்று தடை போட வேண்டியதில்லை. இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைப் படித்து முனைவர் பட்டம் வாங்கும் நோக்கமிருந்தால் எப்படியும் ஏழெட்டு வருடங்கள் ஆகிவிடும். ஆனால் ஏழெட்டு வருடங்கள் தாங்குமளவுக்கு குடும்பப் பொருளாதாரம் இருந்தால் தைரியமாக அனுமதிக்கலாம். மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
  • மாணவர்களுக்கு உண்மையிலேயே சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மீதான விருப்பமிருப்பின் அந்தத் தேர்வுகளைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பெற்றோர்கள் உருவாக்கித் தரலாம். எந்தெந்த பாடங்களில் தேர்வுகள் எழுதலாம், தேர்வு முறைகள் என்ன என்பது பற்றி விவரம் தெரிந்தவர்களைச் சந்திக்கச் செய்து பேச வைக்கலாம். மாணவர்கள் அது சம்பந்தமான பாடங்களை கல்லூரிகளில் தேர்ந்தெடுக்க விரும்பக் கூடும். அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.
  • உதாரணமாக மாணவர் சைக்காலஜி படிப்பை படிக்க விரும்புகிறார். அதன் பிறகு போட்டித் தேர்வு எழுத விரும்புகிறார் என்றால் ஒருவேளை தேர்வில் வெற்றியடைய முடியாவிட்டால் சைக்காலஜி படிப்பை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருங்கள்.
  • புள்ளியியல், நிலவியல்(ஜியாலஜி) உள்ளிட்ட வெளியில் பரவலாக கவனம் பெறாத படிப்புகளைப் பற்றி விசாரித்து வைக்கலாம். புள்ளியியலும் அதோடு சேர்த்து SAS போன்ற மென்பொருளும் படித்தவர்களுக்கு மிகச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
  • வெளிநாடு செல்வதற்கு பொறியியல்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. வரலாறு முடித்துவிட்டு ஹரப்பா நாகரிகத்தை ஆராய்ச்சி செய்துவிட்டு இப்பொழுது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஒரு மலையாள நண்பரைச் சந்தித்திருக்கிறேன்.
  • குறைந்தபட்சம் நான்கைந்து பாடங்களைப் பற்றியாவது தெளிவான புரிதல் வேண்டும். அதிலிருந்து ஒன்றிரண்டை முடிவு செய்து கொள்ளலாம்.
இனிமேல் நிறையப் பாடங்களைப் பற்றியும் அவற்றின் வாய்ப்புகளைப் பற்றியும் விரிவாகப் பேசலாம். தனிப்பட்ட பாடங்கள் எதையாவது பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எனக்குத் தெரியாவிட்டாலும் கூட விசாரித்துவிட்டு எழுதுகிறேன். அந்தத் தகவல் பிறருக்கும் பயன்படக் கூடும். வெளியில் அதிகம் தெரியாத படிப்புகளைப் பற்றிய தகவல் ஏதாவது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அனுப்பி வைக்கவும். அந்தத் தகவலை பரவலாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம். ஜூன் வரைக்கும் இந்த வேலையைச் செய்ய வேண்டும். ப்ளஸ் டூ மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஒரு வகையில் விஜய்யாகவோ அல்லது அணிலாகவோ இருக்கலாம். 

இப்போதைக்கு பெற்றோர்கள் ஒரேயொரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இப்பொழுதிலிருந்தே அவசரப்படுத்துவார்கள். ‘உடனடியாகச் சேராவிட்டால் அத்தனை இடங்களும் தீர்ந்துவிடும்’ எனச் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். பல கல்லூரிகள் ஊர் ஊராக கூடாரம் போட்டு ஆள் பிடிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இயல்பாக இருக்கும் பதற்றத்தை அறுவடை செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் அவர்கள். பணத்தைக் கட்டச் சொல்வார்கள். அவசரத்தில் நிறையப் பேர் கட்டிவிட்டு ‘சரி ஆண்டவன் கொடுத்த வழி’ என்று இருப்பதை கவனித்திருக்கிறேன். நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. நிறையப் பாடங்கள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு செய்ய வேண்டும். 

ஒன்று மட்டும் நிச்சயம். பொறியியல் படித்தவர்களெல்லாம் வாழ்க்கையில் வென்றுவிடுவதில்லை. மற்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் எல்லாம் தோல்வியடைந்துவிடுவதுமில்லை. ஆர்வம்தான் வெற்றியின் அடிப்படை. ஆர்வமிருப்பின் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அந்த ஆர்வம் குருட்டாம்போக்கான ஆர்வமாக இருந்துவிடாதபடிக்கு புரிதலை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை. ஒருவேளை பெற்றவர்களுக்கு அந்தளவுக்கு விவரம் போதாது என்றால் விவரம் தெரிந்தவர்களைச் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் போதும். மற்றவற்றை மாணவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வாழ்த்த வயதில்லை

பெங்களூரில் வழக்கமாக இரண்டு கடைகளில்தான் விசிடிக்களை வாங்குவேன். இரண்டு கடைக்காரர்களுமே தமிழர்கள் இல்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்கள் அதிகமாக இருக்கும். லூசியா மாதிரியான ஏதாவது முக்கியமான கன்னடப் படங்களை வலியுறுத்திக் கேட்டால் உள்ளுக்குள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு நிற பாலித்தீன் பையைப் பிரித்து எடுத்துத் தருவார்கள். சிடி பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். இரண்டு கடைகளிலுமே தமிழக அரசு வழங்கும் இலவசத் தொலைக்காட்சி உண்டு. தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட்ட தொலைக்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழ் பேசத் தெரியாதவர்களின் கடைகளுக்கு எப்படி வந்தன? 

இது ஜூஜூபி.

இந்த நகரத்தின் சாலைகளில் இலவச சைக்கிள்களை சாதாரணமாகப் பார்க்கலாம். கொள்ளேகால் பக்கமாக கர்நாடகத்தின் எல்லைக்குள் அம்மாவின் படம் ஒட்டிய மின்விசிறியைப் பார்த்திருக்கிறேன். அரசின் இலவச லேப்டாப்களை பெங்களூரின் பழைய கணினிக்கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் உண்மையிலேயே சரியான ஆட்களைத்தான் சேர்கின்றனவா என்பது கூட இரண்டாம்பட்சம். இத்தகையை திட்டங்கள் அவசியமானவையா என்று கூட ஏன் யோசிப்பதில்லை? இத்தகையை திட்டங்களில் பல லட்சம் கோடிகளை தண்ணீராகக் கரைக்கிறார்கள். கரைத்து தங்கள் வீட்டு அண்டாவை நிரப்புகிறார்கள்.

தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. கழிப்பறை வசதிகள் கூட இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்கள் பல்லாயிரக்கணக்கில் தேறும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. பொதுக்கழிப்பிடங்களில் சங்கடமில்லாமல் கால் பதித்துவிடுங்கள் பார்க்கலாம். இப்படி கல்வி, மருத்துவம், சுகாதாரம் என எல்லாவற்றிலும் தாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராதவர்களா அரசை நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களும் அதிகாரிகளும்?

நேற்று தமிழகம் முழுவதும் ‘ஜெ’க ஜோதிதான். நெடுஞ்சாலை முழுவதுமாக வாழ்த்த வயதில்லாமல் வணங்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனை விதமான கவன ஈர்ப்புகள்? எவ்வளவு கொண்டாட்டங்கள்? இதன் வழியாக எதை நிரூபிக்க விரும்புகிறார்கள்? யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு தமிழக மக்கள் மடையர்களா என்ன? அப்புறம் எதற்காக இவ்வளவு நிரூபணங்கள். இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வரப் போகிறது. எப்படியும் கட்சியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரிகிறார்கள்.

இந்த வருடம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகத் தமிழக அரசின் பட்ஜெட்டில்  துண்டு விழப் போகிறது என்ற செய்திக்குறிப்பை வாசித்தேன். அரசின் கடன் சுமை இப்போதைக்கு தீர்க்க முடியாத அளவுக்கு இருக்கிறதாம். பல லட்சம் கோடிகளில். அடுத்த வருடம் தேர்தல் வரப் போகிறது. அதற்காக நிறைய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். மேலும் சுமை கூடப் போகிறது. என்ன செய்யப் போகிறார்கள்? என்னவோ செய்யட்டும். இவையெல்லாம் எந்தச் செய்தித்தாளிலும் வெளிப்படையாக வருவதில்லை. ரஜினியின் இளையமகள் ஐஸ்வர்யாவுக்கு வளைக்காப்பு என்பதுதான் நாங்கள் வாங்கும் தினத்தந்திக்கு முக்கியமான செய்தி. 

தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம், எல்லாத் திட்டங்களிலும் தம் பெயரை பதிக்கும் கலாச்சாரம், குடி கலாச்சாரம், பிறந்தநாள் கொண்டாட்ட கலாச்சாரம் என்று கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் தமிழகம் எவ்வளவு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் புரிந்துவிடும். நாசக்கேடாகிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் குறுநில மன்னர்களாகத் திரிந்தார்கள் என்றால் இந்த ஆட்சியில் வாயைத் திறந்து பேசும் ஒரு அமைச்சரைப் பார்க்க முடியவில்லை. இரண்டுமே இரண்டு extreme. நல்லதுக்கில்லை.

மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி வரை செலவு பிடிக்கிறது. இலவச மடிக்கணினிக்கு ஆயிரம் கோடி ரூபாய். இலவச வேட்டி சேலைக்கு தனிக்கணக்கு. இலவச சைக்கிள், ஆடு, மாடு என்கிற வகையில் ஐநூறு கோடி வரை ஆகும் போலிருக்கிறது. தாலிக்குத் தங்கம், மின்விசிறி போன்றவையெல்லாம் வேறு கதை. இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச பஸ் பாஸ் போன்றவற்றையெல்லாம் பெரிதாக விமர்சனத்துக்கு உட்படுத்தத் தேவையில்லை அது கல்விக்கான செலவு என்று விட்டுவிடலாம். ஆனால் இந்த டிவி, கிரைண்டர், மிக்ஸியெல்லாம் கொடுத்தே ஆக வேண்டுமா? இவர்கள் கொடுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் பெறும். எதற்காக அத்தனை பேருக்கும் கொடுக்கிறார்கள்? ஏற்கனவே இருப்பவர்கள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்கள். ‘அறைக்கு ஒரு டிவி இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று காரணம் சொல்கிறார்கள். 

லேப்டாப்பிலிருந்து ஆடு வரைக்கும் அனைத்தையும் இந்தப் பக்கம் வாங்கி அந்தப் பக்கமாக விற்கும் ஒரு குழு இருக்கிறது. வரி வருவாயிலிருந்துதானே கொடுக்கிறோம் என்ற சால்ஜாப்பு சொல்வார்கள். யாரிடமிருந்தோ வரியை வாங்கி யாருடைய பையையோ நிரப்புகிறார்கள். அட ஏழை மக்கள்தானே வாங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. டெண்டர் எடுப்பதிலிருந்து பயனாளிகளிடம் ஒரு பங்கு வசூலிப்பது வரை அரசு அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அதிகாரி வாங்காமல் என்ன செய்வான்? ஒரு RTO பதவியின் இடமாறுதலுக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரித்துப் பாருங்கள். அதுவும் ஓசூர் போன்ற வருமானம் கொழிக்கும் இடங்கள் என்றால் அரைக் கோடியைக் கூடத் தாண்டும் என்கிறார்கள். கொடுத்துவிட்டு வருபவர்கள் சும்மா இருப்பார்களா? கிடைக்கிற இடங்களிலெல்லாம் சுருட்டத்தான் செய்வார்கள். அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆள் எடுக்கிறார்கள். இரண்டரை லட்சத்திலிருந்து ஏழு லட்சம் வரை பணம் கொடுக்கிறார்கள். நிரந்தரப் பணி எல்லாம் இல்லை. ஆரம்பத்தில் தற்காலிகப் பணிதான். ஆறாயிரம் ரூபாய் சம்பளம். வட்டிக்கணக்கு போட்டால் கூட கட்டுபடியாகாது. ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கூட இல்லை. சுருட்டாமல் என்ன செய்வார்கள்?

கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலுமே இந்த நிலைதான். ஒவ்வொரு அரசு அலுவலகமும் இப்படியே புழுத்துக் கொண்டிருந்தால் அரசு நிர்வாகம் எப்படியிருக்கும்? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? ஏன் எந்த சீரமைப்புமே நடைபெறுவதில்லை? அரசு என்பது அதிகாரத்திற்கும் பணம் சேர்ப்புக்குமான ஒரு நிறுவனமாகிவிட்டது அல்லவா?

இலவசத் திட்டங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். எளியவர்கள் பயன் பெறுகிறார்கள்; இவர்களுக்கும் வாக்கு வங்கி உருவாக வேண்டும் என்கிற காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வருமானத்திற்கு டாஸ்மாக் தவிர வேறு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? போக்குவரத்துத் துறையைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. நட்டத்தில் இயங்குகிறது. மின்சார வாரியத்தை விட்டால் கீழே விழுந்துவிடும் போலிருக்கிறது. சுற்றுலாத்துறை எந்த நிலைமையில் இருக்கிறது? ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. தொழில் ஈர்ப்புக்கென ஏதாவது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றனவா?  மூடப்பட்ட தொழிற்சாலைகளை விட்டுவிடலாம். இளம் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் ஏதேனும் வெற்றியடைந்திருக்கின்றனவா? பெரும்பாலும் பூச்சியம்தான். சமீபத்தில் தமிழக அரசு கூட்டிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு படுதோல்வி என்கிறார்கள். 

மண் சோறு தின்னுதல், தீச் சட்டி ஏந்துதல், இலவசத் திருமணங்கள் என்று எதையாவது செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் சில திட்டங்களையாவது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தலாம் அல்லவா? எல்லாத் திட்டங்களுமே வாக்குக் கவர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தால் எப்படி தமிழகம் தேறும்?

அம்மா உணவகம் நல்ல திட்டம்தான். அம்மா குடிநீர் பாராட்டப் பட வேண்டும். ஆனால் ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும். உழவர் சந்தை நல்ல திட்டம். இப்பொழுது என்ன ஆனது? மகளிர் சுய உதவிக்குழுக்களில் ஆயிரத்தெட்டு அரசியல் இருந்தாலும் ஓரளவுக்கு கிராமப்புற பெண்களுக்கு பயனளித்தன. ஆனால் இப்பொழுது அவையும் நசிந்துவிட்டன. இத்தகைய கவர்ச்சித் திட்டங்களின் ஆயுள் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்தான். இவை நீண்ட கால நோக்கமற்றவை. 

புதியதாக உருவாக்கப்படும் நீர் பாசன வசதிகள், கல்வி மேம்பாடு, தொழிற்சூழலை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு போன்ற திட்டங்களின் விளைவுகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு பயனளிக்கும். ஆனால் இப்படியான திட்டங்கள் ஏதேனும் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா?

இந்த வருடம் அறுபத்தேழு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நடப்போகிறார்களாம். அற்புதமான திட்டம். ஆனால் சென்ற வருடம் நட்டு வைத்த அறுபத்தாறு லட்சம் மரக்கன்றுகள் என்னவாயின? இரண்டு சதவீதம் கூட தப்பித்திருக்காது என்பதுதான் உண்மையாக இருக்கும். இலக்கை அடைய வேண்டுமென வனத்துறையை நெருக்குவார்கள். அவர்களும் கிடைத்த இடங்களில் எல்லாம் நட்டு வைப்பார்கள். இது பிப்ரவரி மாதம். அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு வெயில் கருக்கப் போகிறது. நட்டு வைத்த செடிகளுக்குத் தண்ணீருக்கு எங்கே போவார்கள்? மழையா பெய்கிறது? அப்படியே கருகித்தான் போகும்.

அறுபத்தேழு லட்சம் வேண்டாம். வெறும் ஆறு லட்சத்து எழுபதாயிரம் நட்டு வைக்கலாம். அதைத் தொடர்ந்து கண்காணித்து வளரச் செய்தாலே கன வேலை செய்யும். ஆனால் அதிலும் கூட பிரம்மாண்டம். அறுபத்தேழு லட்சம். என்ன முடிவு கிடைக்கப் போகிறது? இப்படியே மக்களின் பணத்தை எடுத்து தமிழகத்தைப் பள்ளத்துக்குள்ளாகவே இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நம் விதி. தலையெழுத்து என்றெல்லாம் வீர தீரமாக எழுதுவதாக மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று விழித்துப் பார்த்தால் அத்தனையும் கனவு. நல்லவேளை. கனவாகப் போய்விட்டதால் எந்த வம்பும் இல்லை. அப்படியே மறந்துவிட்டு ‘வாழ்த்த வயதில்லை தாயே வணங்குகிறேன்’ என்று முடித்துக் கொள்கிறேன்.

Feb 24, 2015

அவர்களும் மனிதர்கள்தானே

இன்று காலையில் ஒரு துணை ஆய்வாளரிடம் சிக்கிக் கொண்டேன். போக்குவரத்து எஸ்.ஐ. வண்டியை ஓரம் கட்டினார்கள். அருகில் செல்வதற்கு முன்பாகவே அவர் ‘ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டிய கேஸ் இருக்கிறது’ என்றார். தம்பியின் வண்டி அது. அவன் எப்பொழுதாவது அப்படி ஓட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ‘சரி ஃபைன் கட்டிவிடுகிறேன்’ என்றேன். அருகில் இருந்த காவலர் தனியாக அழைத்துச் சென்று ‘ஒரிஜினர் உரிமத்தைக் கொடுங்க’ என்றார். அதை எதற்கு வைத்திருக்கப் போகிறேன்? ஒரிஜினல் வீட்டில் இருக்கிறது. ‘யாரையாவது கொண்டு வரச் சொல்லுங்க’ என்றார். அடி போடுகிறார் என்று தெரிந்துவிட்டது. ஐந்நூறு ரூபாயை கையில் வைத்திருந்தேன். எவ்வளவு அபராதத் தொகையோ அதைக் கட்டிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதை அமுக்கப்பார்த்தார்.

‘நீ ஒரிஜினல் எடுத்துட்டு வாங்க...ஃபைன் போடுறோம்...கோர்ட்டில் கட்டிக்குங்க’ என்றார். ஒருவிதமான மிரட்டல்தான். அலுவலகம் செல்கிறான். எப்படியும் படிந்துவிடுவான் என்று நம்புகிறார். ஒரு வழியாக ‘ஐந்நூறு கொடுங்க’ என்றார். அப்படித்தானே ஆரம்பிப்பார்கள்? முடியாது என்றேன். பேரம் இருநூறில் வந்து நின்றது. பணத்தைக் கொடுத்த பிறகு ரசீது கொடுத்தார்கள். அதில் தொகை வெறும் பூச்சியம் என்றிருந்தது. ஆட்டையைப் போட்டுவிட்டார்கள். அவனவன் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறான். இந்த இருநூறும் முந்நூறும் பெரிய பிரச்சினையா? ஆனால் ஒரு நூறு ரூபாய்க்காவது ரசீது கொடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் பழைய கேஸையாவது சரி செய்திருக்கலாம். இருநூறையும் எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஒன்று-  தமிழ்நாட்டு போலீஸ்காரர்களோடு ஒப்பிடும் போது பெங்களூர் போலீஸ்காரர்கள் பன்மடங்கு உயர்வானவர்கள்.

கடந்த சனிக்கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு போலீஸ்காரனைப் பார்த்தேன். சீருடை இல்லை. வாக்கி டாக்கி வைத்திருந்தான். அவனுக்கு மரியாதை எதுவும் தேவையில்லை. அவன் இவன் என்றே எழுதலாம். அங்கே படுத்திருந்தவர்கள் சாதாரண மனிதர்கள். மணி பத்தரை இருக்கும். கொண்டு வந்த பையை தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார்கள். விடிந்தால் ஊருக்கு பேருந்து பிடித்துவிடுவார்கள். அவர்களை துரத்துகிறான். அதுவும் மிகப்பெரிய லத்தியொன்றை வைத்துக் கொண்டு ‘போடா டேய்...எந்திரிடா பாடு...ஓத்தா ஓடுடா’ இப்படியே பேசிப் பேசித் துரத்துகிறான். சிலருக்கு அடியும் விழுந்தது. முதியவர்களும், அப்பாவிகளும் அடிக்கு பயந்து ஓடுகிறார்கள். எனக்கு ஊருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ‘நாசமாகப் போடா பொறுக்கி’ என்று மனதில் சாபம் விட்டு வந்து பேருந்தைப் பிடித்துக் கொண்டேன்.

பெங்களூர் போலீஸில் இத்தகைய பொறுக்கித் தனங்களைப் பார்க்க முடியாது. மரியாதையாகத்தான் பேசுவார்கள். இந்தக் காவலர்களும் மரியாதையாகத்தான் பேசினார்கள். ஆனாலும் அலுவலகத்திற்கு வந்தவுடன் எரிச்சலில் பின்வரும் மின்னஞ்சலை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையாளருக்கு அனுப்பிவிட்டேன். 

Respected Sir,

Today(24-Feb-2015) morning I came through ASC centre signal in my two wheeler where I was stopped by Traffic police(I couldn't recognize his name) but he was along with Sub Inspector Mr. ***. They have told me that I had some old offences like 'driving without helmet'.I never ride my vehicle in the city without Helmet. That is fine. I was ready to pay the penalty but they were demanding Rs.500 to pay as bribe. as an alternate option they have asked me to surrender my vehicle and I supposed to pay the fine through court. It was kind of blackmailing. I was reluctant to do so and finally they asked me to pay Rs.200/- I have no other option as it was my rush hour to office and I gave 200 rupees and they provided me a receipt. It was a surprise that amount mentioned in the receipt was '0'.

CRR Number: E/17/1092
Violation Type: FTVR Notice
Total Amount: 0

If I am wrong I don't mind paying my penalty. But I do not want to bribe anyone.

I sincerely request you to verify the above matter and kindly take a right action on this. 

Thank you.

Regards,
Manikandan

கண்டு கொள்வார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் பதில் வந்தது. ‘உங்களுடைய புகார் அல்சூர் ஆய்வாளருக்கு அனுப்பப்படுகிறது’ என்று அனுப்பியிருந்தார்கள். அடுத்த முப்பத்தைந்தாவது நிமிடத்தில் அதே துணை ஆய்வாளர் ஃபோனில் அழைத்தார். குரலில் அவ்வளவு பதற்றம். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. ‘தெரியாமல் நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதை எதிர்பார்க்கவில்லை. அவர் துண்டித்த அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அந்தக் காவலர் அழைத்து ‘மதர் ப்ராமிஸ்..உங்கள் பணத்தை நான் வைத்துக் கொள்ளவில்லை’ என்றார். பத்து முறையாவது மன்னிப்புக் கோரியிருப்பார். இப்பொழுது எரிச்சல் எல்லாம் போய் அவர்கள் மீது பரிதாபம் வந்துவிட்டது.

ஒரு அரசு அலுவலரின் சிரமங்கள் எனக்குத் தெரியும். அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள். இப்படியான புகார்களினால் எவ்வளவு மன உளைச்சல் அடைவார்கள் என்று தெரியும். அந்தக் காவலர்களை சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என்றிருக்கும் அல்லவா? இந்த இருநூறு ரூபாய்க்காக அவர்களை மாட்டிவிடுவது ஒரு வகையில் பாவம்தான். ஆனால் புகார் அனுப்பியாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? உடனடியாக அதே மின்னஞ்சலுக்கு பின்வருமாறு பதில் அனுப்பியிருக்கிறேன் -

Respected Sir,

Thank you very much for your quick action on this. 

Just now received a call from SI Mr. Shetty and he mentioned that this was purely a mistake. Whatever may be the reason, I am really satisfied with his answer and the way of approach. as a common citizen, I am happy to see this kind of revert back from police department.

I would like to leave this issue here.

As an end note, I really appreciate Bangalore Traffic Police's tremendous efforts and sincerity. 

Thank you once again.

Regards,
Manikandan

அந்தக் காவலர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். கடந்த இரண்டு மணி நேரங்களாக அந்தக் காவலரின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பணி இடைநீக்கம் வரைக்கும் போகலாம் என்றார். என் வேலைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் எவ்வளவு பதறுவேன்? அவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? எதற்காக அவ்வளவு விரைவாக புகார் அனுப்பினேன் என்று பிடிபடவேயில்லை. வேலை செய்வதற்கு மனம் வரவில்லை. பாவமாக இருக்கிறது. பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டேன். அவர்களும் மனிதர்கள்தானே!

பச்சைக் காதலன்

ராமு தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம். எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். வயதாகிவிட்டது. சொன்னாலும் கேட்பதில்லை. மங்களூரில் மழைக் காலம். வெளியில் சுற்றி இருக்கிறார். உடல் தாங்கவில்லை. சளியும் காய்ச்சலும் தொடங்கி இப்பொழுது வாட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. வழக்கமாக இப்படியெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பமாட்டார். அவரே சமாளித்துக் கொள்கிற மனிதர்தான். இன்றைக்கு அனுப்பியிருக்கிறார். ரொம்பவும் முடியவில்லை போலிருக்கிறது. மனசு கேட்கவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றிருக்கிறது. மங்களூர் செல்வது பிரச்சினையில்லை. ஆனால் அலுவலகத்தில் விடுப்பு கேட்க வேண்டும். 

பாவம். இந்நேரம் தனியாக தவித்துக் கொண்டிருப்பார். தனிக்கட்டை. ராமு தாத்தாவுக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும். சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ‘உங்களுக்கு எவ்வளவு வயசு?’ என்று கேட்டிருக்கிறேன். ‘ஏன் பொண்ணு பார்க்க போறியா?’ என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார். மனைவி இல்லை. குடும்பம் இல்லை. சொந்த பந்தம் எதுவும் அருகில் இல்லை. 

இப்பொழுதெல்லாம் விடுப்பு கேட்டால் ஏதாவது காரணத்தைச் சொல்லி அலுவலகத்தில் பிரச்சினை செய்கிறார்கள். சில காலமாக என்.ஜி.ஓ ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அது அவர்களை உறுத்துகிறது. அலுவலக வேலைகளில் கோட்டைவிட்டுவிடுவேன் என்று மேனேஜர் நினைக்கிறார். ஆனால் அதை நேரடியாகச் சொல்லாமல் வெவ்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த என்.ஜி.ஓவில் நானாகச் சேரவில்லை. சீமாதான் சேர்த்துவிட்டாள். சீமா விஸ்வநாத். மைசூர் பெண். அம்சமான பெண் என்ற வர்ணிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எப்படித் தவிர்க்க முடியும்? இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அடிக்கடி அவளோடு பேசலாம் என்றுதான் சேர்ந்திருந்தேன். அவள் வேறொரு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள் என்றாலும் நாங்கள் ஒரே அபார்ட்மெண்ட். அவள் முதல் தளத்தில் இருக்கிறாள். ப்ளாட் நெம்பர் 103. நண்பர்களோடு நான் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன். 

அப்படித்தான் ராமு தாத்தாவும் அறிமுகம். அப்படித்தான் என்றால் அந்த என்.ஜி.ஓ வழியாக. அந்த ஞாயிற்றுக்கிழமையன்று கப்பன் பூங்கா வரச் சொல்லியிருந்தார்கள். ஏழு மணிக்கெல்லாம் நானும் சீமாவும் கிளம்பிவிட்டோம். ‘மரங்களைக் கட்டிப்பிடிப்போம்’ என்று அந்த நிகழ்வுக்கு பெயர். மரங்கள் நம் நண்பர்கள் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்துவார்கள். அன்றைய தினம் பூங்காவுக்கு வருகிறவர்கள் மரங்களைக் கட்டிப்பிடிக்க வேண்டும். சீமா கத்தரிப்பூ நிற பனியனும் ஜீன்ஸூம் அணிந்திருந்தாள். ‘பைக்கிலேயே வந்துவிடட்டுமா?’ என்று அவள் கேட்டபோது நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன என்று சொன்னால் க்ளிஷேவாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் இருந்தது. அவளுடைய அமெரிக்க உச்சரிப்பிலான ஆங்கிலத்தோடு கொஞ்சம் மாரடிக்க வேண்டியிருக்கும் என்பதுதான் ஒரே பிரச்சினை. ஆனால் சமாளித்துக் கொள்ளலாம்.

பூங்காவில் சீமாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களைச் சந்தித்தவுடன் அவள் என்னை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அது பரவாயில்லை. என்னோடு வண்டியில் வந்தவரைக்கும் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவே ஆயிரத்தெட்டு பொன் பெறும். அன்றைய தினம் ராமு தாத்தாவும் அங்கு வந்திருந்தார். நெற்றி சுருங்கியிருந்தது. சற்றே கூன் விழுந்த முதுகு. இன்னமும் ஊன்றுகோல் வைத்துக் கொள்ளவில்லை- அருகில் தடி எதுவும் கண்ணில்படவில்லை. தலையும் வெளுத்துவிட்டது. கசங்கிய சட்டையும் பழைய பேண்ட்டும் அணிந்திருந்த அவர் அருகிலேயே ஒரு துணிப்பையும் கிடந்தது. கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மீது எந்த கவனமும் இல்லாமல் மரங்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்த ஊரில் தினமும் ஏதாவது தில்லாலங்கடி வேலைகளை கேள்விப்பட வேண்டியிருக்கிறது. ஏடிஎம்மில் ஒரு பெண்ணை வெட்டிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு போன செய்தியை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். காலை எட்டரை மணிக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வெளியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய எந்த பயமுமில்லாமல் ஷட்டரை மூடிவிட்டு வெட்டியிருக்கிறான். வெறும் இரண்டாயிரத்து சொச்ச ரூபாய்க்காக ஒரு கொலை. அப்பேற்பட்ட ஊரில் இந்த மனிதன் ஏதோவொரு தைரியத்தில் பையைக் கீழே போட்டுவிட்டு அமர்ந்திருக்கிறார்.

சீமா தனது நண்பர்களோடு விளையாடத் தொடங்கியிருந்தாள். மஞ்சள் நிற சட்டையணிந்திருந்த பெங்காலிக்காரன் - அவன் பெயர் செளனக். முன்பொருமுறை அவனை அறிமுகப்படுத்தியிருக்கிறாள், அவளிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வான். சென்ற முறை அவன் பேண்ட்டை மிகக் கீழாக இறங்கி அணிந்திருந்தான். சீமா அதனை விளையாட்டாகச் சுட்டிக்காட்டிய போது ‘exposing is a status symbol' என்றான். பதிலுக்கு சீமா இரட்டை அர்த்தச் சொல் ஒன்றை உதிர்த்தாள். அதைவிட வீரியமான ஒரு சொல்லை அவன் பிரயோகிக்க இருவரும் சிரித்துக் கொண்டார்கள். சுற்றியிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து செளனக் இருந்தால் அந்த இடத்திலிருந்து நான் ஒதுங்கிக் கொள்வேன். பொஸஸிவ்னெஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பைசா பிரையோஜனமில்லாத பொஸஸிவ்னெஸ். அவளுக்கு என் மீது எந்த ப்ரியமும் இல்லை. எனக்கே அது தெரியும். ஆனாலும் ஒரு ஆசை இருக்கும் அல்லவா? அப்படியொரு ஆசை. களங்கமில்லாமல்.

அன்றும் செளனக் இருந்தான். அதனால் அப்பொழுதும் ஒதுங்கிக் கொண்டேன். தாத்தாவின் பையை அவர் அருகில் நகர்த்தி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். பார்த்துச் சிரித்தார். சிரித்தவர் கீழே குனிந்து பொறுக்கத் துவங்கினார். ச்சே...பையை நகர்த்திய போது கீழே விழுந்திருக்கும் போல. என் தவறுதான். பையை நகர்த்தும் போது கவனிக்கவில்லை. மன்னிப்புக் கோரிவிட்டு அவரோடு சேர்ந்து பொறுக்கத் துவங்கினேன். அத்தனையும் மண் உருண்டைகள். அந்தப் பை முழுக்கவே அவைதான் இருந்தன. எண்ணிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் தேறும். ஒருவேளை பைத்தியமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. முக்கால் இஞ்ச் தள்ளி அமர்ந்து கொண்டேன். அவர் மீண்டும் ஒரு முறை சிரித்தபோது எனக்கு சிரிப்பு வரவில்லை. அவ்வளவு எச்சரிக்கையுணர்வு என்னிடம்.

அன்றைய தினம் ராமு தாத்தாவை நிகழ்வில் கெளரவிக்க அழைத்த போது ‘பையை பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு மேடைக்குச் சென்றார். இந்தக் கிழவனை எதற்காக அழைக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. ஒரு நினைவுப்பரிசைக் கொடுத்து அவரிடம் ஒரு காகித உறையைக் கொடுத்தார்கள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை இருப்பதாகவும் அறிவித்தார்கள். கூச்சப்பட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டார். அவரை பேச அழைத்தார்கள். அவர் பேசுவதற்கு முன்பாக அவரைப் பற்றி தொகுப்பாளினி கொடுத்த அறிமுகம் மூச்சடைக்கச் செய்திருந்தது.

மாலையிலும் சீமா என்னோடு பைக்கிலேயேதான் வந்தாள். இந்த முறை பட்டாம்பூச்சி எதுவும் பறக்கவில்லை. அதற்கு காரணமிருக்கிறது- ராமு தாத்தாவைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். சீமா என்னனென்னவோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எதற்குமே பதில் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த நாள் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு மங்களூர் கிளம்பியிருந்தேன். விடுப்பு கேட்பதற்காக பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாக ஞாபகம். 

ராமு தாத்தாவிடம் முகவரி வாங்கியிருந்தேன். அரைகுறையாக எனக்கு கன்னடம் கொத்து என்பதால் ஊரைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அது மங்களூருக்கும் உடுப்பிக்கும் இடையிலான கிராமம். நாய்கள் நசுங்கிக் கிடந்த தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்வாங்கி மூங்கில் மரங்களால் சூழ்ந்து கிடந்தது. ராமு தாத்தாவின் வீட்டை அங்கு எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால் தாத்தா வீட்டில் இல்லை. 

‘உடுப்பி போயிட்டாரே’ அருகிலிருந்த டீக்கடை மாஸ்டர் முகத்தையே பார்க்காமல் சொன்னார்.  

நேற்றிரவுதான் பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார். இன்று காலையிலேயே கிளம்பி உடுப்பி சென்றிருக்கிறார். டீக்கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. தாத்தாவுக்கு ஊருக்குள் மரியாதை அதிகம் போலத் தெரிந்தது.  ‘வாழ்நாள் முழுக்க மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார்....நல்ல மனுஷன்’ என்றார்கள்.

‘தாத்தாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. டீச்சர் பொம்பளை. இந்த ஆள் வீட்டிலேயே தங்குவதில்லை என்று பிரிந்துவிட்டார்’

‘தாத்தா கர்நாடக அரசில் பணிபுரிந்தவர். பச்சை இங்க்கில் கையெழுத்து போடும் க்ரேடு. இருபத்தேழு வயதிலேயே மரம் வைப்பதில் நாட்டம் வந்துவிட்டது. வாங்குகிற சம்பளம் எல்லாம் மரங்களுக்குத்தான். இவர் வைத்து வளர்த்துவிட்டு வந்த மரங்களையெல்லாம் அரசாங்கமும் மரம் திருடிகளும் பின்னாலேயே வெட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் தாத்தா சலித்ததில்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக வேலையை உதறிவிட்டு இந்த கசங்கிய சட்டை பேண்ட்டுக்கு மாறிவிட்டார். அப்பொழுதிருந்தே இப்படித்தான்’

‘கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் இருந்தது. அந்தப் பெண்ணை ஏதோ கொள்ளை நோய் அள்ளிக் கொண்டது. அவள் நினைவாகவேதான் மரங்களைக் காதலிக்கத் துவங்கினார்’ - ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவரிடமும் தாத்தா பற்றிச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. 

தாத்தாவுக்கு சொற்பமான பென்ஷன் வந்து கொண்டிருந்தது. அந்த வருமானமும் நாற்று வாங்கவும் குழி தோண்டும் ஆட்களுக்குக் கொடுக்கவும் தண்ணீர் இல்லாத இடங்களில் வண்டியில் வாங்கி ஊற்றுவதற்கும் சரியாகப் போய்விடுகிறது. அப்படியானால் ‘சாப்பாட்டுக்கு என்ன செய்வார்?’ இந்தக் கேள்வி எனக்கும் உங்களுக்கும்தான் முக்கியமான கேள்வி. ராமு தாத்தாவுக்கு அது பிரச்சினையே இல்லை. திருமண மண்டபத்திலும் விஷேச வீடுகளிலும் கை நனைத்துக் கொள்வார். எதுவுமே சிக்காத போது எது கிடைத்தாலும் சரி. அவரைப் பிச்சைக்காரனாகக் கருதிக் கொடுத்தாலும் முகம் சுளித்துக் கொள்ளாதவர். 

தாத்தா வரட்டும் என மாலை வரை சுற்றிக் கொண்டிருந்தேன். உடுப்பியிலிருந்து மாலையில் வந்து சேர்ந்தார். கப்பன் பூங்காவில் சந்தித்ததை நினைவுபடுத்தினேன். வாயெல்லாம் பற்களாக சிரித்தார்.  கண் பார்வை மங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னவர் தடுமாறிக் கொண்டே வந்து சேர்ந்திருக்கிறார். அன்றைய இரவில் தன்னோடு தங்கிக் கொள்ளச் சொன்னபோது எனக்கு இரட்டைச் சந்தோஷம். அந்த வீடு அவருடைய பூர்விகச் சொத்து. அது மட்டும்தான் சொத்து. விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம். 

‘ஐயாயிரம் வருஷமா வாழ்ந்து முடிச்ச மரங்கள் இன்னமும் இருக்கு தெரியுமா? கலிபோர்னியால...மெதுசெலான்னு பேரு...ரொம்ப சீக்ரெட்டா வெச்சிருக்காங்க...அதை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. முடியல...ஆனா அதே கலிபோர்னியால த ப்ரெசிடெண்ட்ன்னு ஒரு மரம் இருக்கு...மூவாயிரத்து இருநூறு வருஷம் ஆச்சு.....நேரில் பார்த்தேன்..அழுதுட்டேன் தம்பி...என் பாட்டிக்கு முப்பாட்டிக்கு முப்பாட்டி. கட்டிப்புடிச்சுட்டு அங்கேயே நின்னுட்டேன்...முட்டாபசங்க..இவனுக அறுபது வயசு வாழுறதே பெரிசு..ஆனா எந்த யோசனையும் இல்லாம அறுத்துத் தள்ளுறாங்க....’பேசிக் கொண்டேயிருந்தார். தொண்டை கமறிவிட்டது.

அதன் பிறகு தாத்தாவும் நானும் நண்பர்களாகி விட்டோம். அவர் பெங்களூர் வரும் போதெல்லாம் என்னோடு தங்கத் துவங்கினார். இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம் என்று சொன்னால் அது துல்லியமாக இருக்காது. அவர் பேசிக் கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். ‘சஹாரா பாலைவனத்தில ரொம்ப வருஷமா ஒரேயொரு மரம் மட்டும் இருந்துச்சு...மொத்த பாலைவனத்துக்கும் காவல் தெய்வம் மாதிரி...விட மாட்டாங்களே...1973ல அழிச்சுட்டாங்க...அம்மாவை அழிக்கிற மாதிரி...இல்ல இல்ல... குழந்தையைக் கொல்லுற மாதிரி..இல்லையா?’தாத்தாவுக்கு மரம்தான் எல்லாமும். எதைப் பற்றி பேச்சைத் தொடங்கினாலும் மரத்தில் முடிப்பார். 

இப்பொழுதெல்லாம் சீமாவுடனான தொடர்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. தாத்தாவுடன் பேசுவதற்குத்தான் நிறைய இருக்கின்றன. 

‘ஏன் அரசாங்க வேலையை விட்டீங்க?’ என்றபோது ‘காசு கொடுத்தான்...வாங்கி நாற்பது ஊரில் மரங்களை நட்டேன்’ என்ற தாத்தாவைவிடவும் சீமா சுவாரசியமாகத் தெரியவில்லை. 

அதன்பிறகு எனக்கு வட கர்நாடகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாதையும் அத்துப்படியாகியிருந்தது. ஒவ்வொரு ஊராகச் சுற்றினோம். அதுதான் மேனேஜருக்கு உறுத்தத் துவங்கியிருந்தது. இப்படித்தான் கடந்த ஆறு மாதங்களாக திரிந்து கொண்டிருக்கிறோம்- இன்றைய குறுஞ்செய்தி வந்து சேர்ந்த வரைக்கும். அலுவலகத்தில் சொல்லாமலேயே கிளம்பியிருந்தேன். சீமாவும் ஒட்டிக் கொண்டாள். ஆனால் பேருந்தில் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அப்படியே பேசினாலும் தாத்தா பற்றித்தான் பேசிக் கொண்டோம். 

‘எப்படி ஒரு மனுஷன் காலம் பூராவும் இப்படியே இருக்க முடியும்?’ சீமாவின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

எப்படி இருந்திருக்க முடியும்? மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் அவர் எதிர்பார்க்கவே இல்லை. குழந்தைகளை அழைத்து மரங்களைப் பற்றிய கதைகளைச் சொல்கிறார். மூங்கில் விதைகளை ஈரமண்ணுக்குள் திணித்து அதை காய வைத்து போகிற  இடங்களில் எல்லாம் கொடுக்கிறார். மழைக் காலத்தில் அவற்றை நிலத்தில் போட்டுவிட்டால் போதும். மேலே இருக்கும் மண் கரைந்து மூங்கில் முளைக்கத் துவங்கும். அந்தக் குழந்தைகள்- மரங்களை குழந்தைகள் என்றுதான் சொல்வார்- வளர்வதைப் பார்ப்பதை மட்டுமே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருந்தவர். எந்த தனிப்பட்ட அபிலாஷைகளும் இல்லாத அந்த மனிதன் ஒருவிதத்தில் கடவுள்.

மங்களூரை நோக்கிச் சென்ற சாலையெங்கும் தென்மேற்கு பருவமழையின் சாரல் சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. சீமாவின் அருகாமை எனக்குத் தேவையாக இருந்தது. சீமாவும் இல்லையென்றால் இந்தப் பயணம் இன்னமும் வெறுமையானதாக இருந்திருக்கும். தாத்தாவின் காதல் கதையை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதை ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். நிலவும் நட்சத்திரங்களும் மேகங்களுக்குள் புதைந்து போயிருந்த ஓரிரவில் மொட்டை மாடியில் அமர்ந்தபடி அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

தாத்தாவுக்கு பதினேழு வயதாகியிருந்த போது மைசூருக்கு படிக்கச் சென்றிருந்தார். அப்பொழுது அது உடையார்களின் சாம்ராஜ்யம். ஹைதர் அலி, திப்புசுல்தானின் பொம்மைகளாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். அங்குதான் ராமு தாத்தா அவளைச் சந்தித்திருக்கிறார். பசவம்மா. கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் காதல் பிரவாகமெடுத்திருக்கிறது. அந்தக் காலத்துக் காதல். வெவ்வேறு சாதி. விடுவார்களா? துரத்தியிருக்கிறார்கள். 

உடையார்களின் ஆட்கள்தான் துரத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பசவம்மாவின் அப்பா உடையார்களின் அரண்மனையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதனால் அவர்களின் மூர்க்கம் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் தெரிந்து கொண்ட ராமு தாத்தாவின் மாமா கதறியிருக்கிறார். அவர்தான் பெற்றோர்களை இழந்துவிட்ட ராமு தாத்தாவை படிக்க வைத்தவர். ஆனால் தாத்தா தம் காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். பசவம்மாவை அழைத்துக் கொண்டு இருவருமாக குதிரைமுக்குக்கு ஓடியிருக்கிறார்கள். அது ஒரு மலைப்பகுதி. குதிரையின் மூக்கு வடிவில் இருக்கும் என்பதால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. அப்பொழுது அந்த மலையில் கால்நடை மேய்ப்பவர்களைத் தவிர யாருமே இல்லை. ஓடிவந்தவர்கள் ஒரு குகையில்தான் தங்கியிருந்தார்களாம். அந்த குகையைச் சுத்தம் செய்யவே பல நாட்கள் ஆனதாகச் சொன்னார். பழங்களும் காய்களும்தான் உணவு. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊருக்குள் செல்வதாக திட்டமிட்டிருக்கிறார்கள். கிழமைகள் தெரியாத நாட்கள், நேரம் குறித்த கவலையில்லாத வாழ்க்கை,  பணத்துக்கு அவசியமில்லாத தினங்கள், நம்மை நோக்கிய கேள்விகள் இல்லாத உலகம். இப்படியான அந்த உலகில் நமக்குப் பிடித்த பெண்ணுடனான வாழ்க்கை என்பது சொர்க்கம். இல்லையா? அப்படித்தான் தாத்தாவும் சொன்னார்.

ஆனால் அந்த சொர்க்கத்துக்கு ஆயுள் குறைவு. மூன்று மாதங்கள்தான். அந்த கருப்பு தினத்தின் அதிகாலையில் இருவரும் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன்பாகவே ஆட்கள் வந்துவிட்டார்கள். எப்படி மோப்பம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. தங்களை அரண்மனையின் ஆட்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உங்களைப் போலவேதான் நானும் குதிரையில் வாளேந்திய வீரர்களாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. வெகு இயல்பான மனிதர்கள் நான்கைந்து பேர்கள். நடந்துதான் வந்திருந்தார்களாம். இருவரையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் முழுமையாக விடிந்திருக்கவில்லை. வெளிச்சம் வருவதற்கு இன்னமும் வெகுநேரம் இருந்தது. பசவம்மா ராமு தாத்தாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். ‘அங்கே வந்தால் வாழ விடமாட்டார்கள்’ என்று அழத் தொடங்கியிருக்கிறார். தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். அடுத்த கணத்தில் தாத்தாவை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறாள். தாத்தாவுக்கு எங்கே போகிறோம் என்பது  கூடத் தெரியவில்லை. சிறுத்தையின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் வேகத்துக்கு ஓடுவது போல இருக்கிறது தாத்தாவுக்கு. அரண்மனை ஆட்களும் பின்னாலேயே ஓடி வருகிறார்கள். குதிரை முக்கின் உச்சியை அடைவதற்கும் ராமு தாத்தாவை அரண்மனையின் ஆட்கள் எட்டிப்பிடிப்பதற்கும் சரியாக இருக்கிறது.

இரண்டே வினாடிகள்தான். சப்தமே இல்லை. தாத்தாவின் கைகளை விடுவித்துவிட்டு பசவம்மா எட்டிக் குதித்துவிட்டாள். தாத்தாவின் கண்கள் இருண்டு போகின்றன. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மயங்கி விழிக்கும் போது எங்கேயோ கிடக்கிறார். யாருமே இல்லாத வனாந்திரம் அது. வந்தவர்கள் அரண்மனை ஆட்கள்தானா? எதற்காக இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் எதுவுமே தெரியவில்லை. யோசிக்கவும் விரும்பவில்லை. குதிரை முக்குக்கு ஓடியிருக்கிறார். தனது எதிர்காலம் இந்த மலையுச்சியிலிருந்து விழுந்து சிதறியதை எண்ணியபடியே தேடியதில் சிதறிய உடல்தான் கிடைத்திருக்கிறது. முகம் சிதைந்து அடையாளமே தெரியவில்லை. அவளது புன்னகை, கன்னத்தோரமாக இருந்த மச்சம் என்று எல்லாவற்றையும் அந்த முகம் தொலைத்திருந்தது. ‘என் குழந்தையை கொன்னுட்டீங்களேடா’என்கிற அவரது அழுகை மட்டும் குதிரைமுக்கில் எதிரொலித்திருக்கிறது. யாருமே பதில் சொல்லாத அழுகை அது. கண்ணீரைத் துடைப்பதற்கு எந்த விரல்களும் நீளாத தருணம் அது. தனித்து அழுது கொண்டிருக்கிறார். தனக்கென யாருமே இல்லாத அந்த உலகத்தில் பறவைகள் கூடடையும் நேரத்தில் அதே இடத்தில் அடக்கம் செய்துவிட்டு மண்மேட்டின் மீது ஒரு விதையை ஊன்றினார். இனி அதுதான் உலகம் என்று தோன்றியிருக்கிறது.  தனது பயணத்தை அப்பொழுது தொடங்கியவர்தான். யாருமே இல்லாத தனிமையில் நிற்காமல் நடந்து கொண்டேயிருக்கிறார். 

தனது கையில் ‘ப’ என்ற கன்னட எழுத்தை பச்சை குத்தியிருப்பார். அந்த ‘ப’ வேறொன்றுமில்லை என் பசவம்மா என்று சொல்லிவிட்டு கண்களை ஊடுருவினார். ‘இங்க யாருமே தனியா இல்ல..யாராவது நம்ம கூடவேதான் இருப்பாங்க..எனக்கு பசவம்மா இருக்கா...எனக்கும் அவளுக்கும் பிறந்த இந்த புள்ளைக இருக்காங்க’ என்று சொல்லியபோது தாத்தாவின் கண்கள் பனித்ததை பார்த்தேன். சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து தனது அழுகையை மறைக்க முயன்றார். அவருக்கு சங்கடம் தரக் கூடாது என வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

‘அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொண்டீர்களா?’ எனக் கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவேயில்லை. தாத்தாவின் கதையைச் சொல்லி முடித்த போது சீமாவும் அதே கேள்வியை என்னிடம் கேட்டாள். 

நாங்கள் சென்றிருந்த போது கண்களை மூடிக் கிடந்தார். நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. மரணப்படுக்கை. முகத்தில் ஈயாடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் நான்கைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தாத்தாவின் உறவினர்கள் போலிருக்கிறது. முகங்களை இறுக்கமாக வைத்திருந்தார்கள். ‘பூர்வீக வீட்டுக்காக காத்திருப்பவர்கள்’என்று முன்பொருமுறை தாத்தா சொன்னது ஞாபகம் வந்தது. காதருகில் சென்று தாத்தா என்றேன். அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. டீக்கடைக்காரர் அருகில் வந்து தோளில் கை வைத்து அழுத்தினார். தனியே அழைப்பதற்கான சமிக்ஞை அது.

‘இங்கே நிற்க வேண்டாம்’ 

‘ஏன்?’ சீமாவுக்கு அவசரம். கேட்டுவிட்டாள்.

‘இங்க ரிலேட்டிவ்ஸ் சரி இல்லை...நீங்க கிளம்புங்க’

‘அப்படின்னா?’

‘அவங்க சொத்துக்காக நிக்கிறாங்க...உயில் எழுதி ரேகை உருட்டிட்டாங்க...தாத்தா சாகலைன்னா கூட இன்னைக்கு தூக்கிடுவாங்க’ கேட்க அதிர்ச்சியாக இருந்தது. 

‘அப்படி கூட செய்ய முடியுமா? அந்த மனுஷன் வாழ்நாள் பூராவும் மரம் மரம்ன்னு அலைஞ்சாரு...ஒருவேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டே கூட பல வருஷம் ஆகியிருக்கு...சாகும் போதாவது நல்லபடியா சாகட்டும்..நாங்க போக முடியாது..இங்கேயே இருக்கோம்...வேணும்ன்னா போலீஸைக் கூப்பிடலாம்’- எங்கள் பதில் டீக்கடைக்காரருக்கு திருப்தியளிக்கவில்லை.

‘இல்ல அவங்க லோக்கல்ஸ்...தாத்தாவுக்காக நீங்க நிக்கிறது சரிதான்..ஆனா பிரச்சினை பெரிசாகும் போலிருக்கு...காலாகாலத்துக்கும் தாத்தாவைவிட இந்த சண்டைதான் உங்க மனசுலேயே நிக்கும்’ அந்த பதில் எங்களை சமாதானப்படுத்தவில்லை. வீட்டைவிட்டு வெளியே செல்லப் போவதில்லை என்று முடிவு செய்து வைத்திருந்தோம். அந்த மனிதனுக்கு எங்களால் முடிந்த ஒரே உதவி அதுதான். எங்கள் முடிவு அங்கிருந்தவர்களை சலனப்படுத்தியிருக்கக் கூடும். இறுக்கம் கூடியிருந்தது.

‘நீங்க கிளம்புங்க’ என்றார் அந்த கூட்டத்திலிருந்த நீலச்சட்டைக்காரர்.

அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த முறை தாத்தாவின் அருகில் சென்று அவரது வலது கரத்தை அழுந்தப் பிடித்தேன். சீமாவும் அருகில் அமர்ந்து கொண்டாள். இருவரும் ‘ப’ வைத் தேடினோம். மூடிய கண்களுக்குள் விழிகள் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு ஆன்மாவைத் தேடித் தேடி தன் காலங்களை தீர்த்த விழிகள் அவை. அந்த விழிகளைப் பொறுத்தவரையில் மரங்கள் மட்டும்தான் உயிர். பிற அனைத்துமே-மனிதன் உட்பட- மரங்கள்தான். மரங்களை புரிந்து கொள்ளும் மனிதனுக்கு மனிதர்களை புரிந்து கொள்ள முடியாதா என்ன? மூடிய விழிகளிலிருந்து நீர் கசிந்தது. ஒரு துளிதான். அடுத்த கணமே பெருமூச்சொன்று எழும்பி அடங்கியது. அதற்கு மேல் அங்கு ஒன்றுமில்லை. வெளியில் மழைக்காற்று வீசிக் கொண்டிருந்தது. தாத்தாவின் பெருமூச்சு மூங்கில் மரங்களுக்குள் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. சீமாவும் நானும் மழையிலேயே பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தோம்.

Feb 23, 2015

குபீர் இலக்கியவாதிகள்

ஒரு கூட்டத்திற்குத் தெரியாத்தனமாக கூப்பிட்டாலும் கூப்பிட்டார்கள் சிலர் அக்கப்போர் செய்கிறார்கள்.  சென்னையில் நடந்த கூட்டத்தைத்தான் சொல்கிறேன். அப்படியென்ன அலைகடலெனத் திரண்டு வந்துவிட்டார்களா? மீறிப் போனால் ஐம்பது பேர்கள் இருப்பார்கள். அதற்கே இப்படித் துள்ளுகிறார்கள். அதிலும் ஒரு மனிதர் ‘இவனைக் கூப்பிடுறது குத்தாட்டம் நடத்தி கூட்டம் சேர்க்கிற மாதிரியில்லையா’ என்றிருக்கிறார். அந்த மனிதர் யாரென்று விசாரித்துப் பார்த்தால் மயிரிழையில் நோபல் பரிசைக் கோட்டை விட்டவர். இன்ச் இழையில் ஞானபீடம் இவருக்கு இல்லாமல் போயிருக்கிறது. அடுக்கிக் கொண்டே போகலாம். வெங்காயம்.

தமிழ் எழுத்துக்கு இவர்களிடமிருந்து பத்து பைசா பங்களிப்புக் கிடையாது. அப்படியே எதையாவது எழுதினாலும் சீந்துவாரில்லை. ஆனால் நாக்கு மட்டும் அவ்வளவு நீளம். ‘எங்கள் எச்சிலில்தான் தமிழ்த்தாய் தலைக்குக் குளிக்கிறாள்’ என்ற வெட்டி ஜம்பத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இவர்களுக்கு எப்பொழுதிருந்து கொம்பு முளைக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான்கு சிறுபத்திரிக்கைகளின் பெயர்களைத் தெரிந்து கொண்ட போதா? தம்மைப் போன்ற நான்கு ஆட்களுடன் சேர்ந்து சரக்கடிக்கும் போதா? அல்லது கவிதையைச் சப்தம் போட்டு வாசிக்கப் பழகிக் கொண்ட போதா? 

அக்கிரமமாக இருக்கிறது. 

வருடம் முழுக்கச் சேர்த்து மூன்றே முக்கால் பக்கம் எழுத மாட்டார்கள். ஆனால் நாங்கள்தான் இலக்கியத்தை தூக்கி செங்குத்தாக நிறுத்துகிறோம் என்கிற சவடால் விடுவார்கள். ‘நிறைய எழுதாவிட்டால் என்ன? நாங்கள் எவ்வளவு வாசிக்கிறோம் தெரியுமா?’ என்ற திலுப்பாமாரித்தனத்தை பார்க்க வேண்டுமே. வாசித்தீர்கள் சரி. வருடத்திற்கு பத்து விமர்சனமாவது எழுதியிருப்பீர்களா? நாற்பது பேருக்காவது வாசித்ததை பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருப்பீர்களா? ஒரு எழவும் கிடையாது.  எங்கள் அமத்தாவிடம் பேசினால் ஒரு பழமொழி சொல்வார். ‘நாய்கிட்ட சிக்குன தென்னம்பழம்’ மாதிரி என்று. மட்டை உரிக்காத தேங்காய் சிக்கினால் நாய் என்ன செய்யும்? அப்படித்தான். உருட்டிக் கொண்டே திரிய வேண்டியதுதான். அமத்தா பழமொழி சொன்னால் ஆயா விடுவாரா? அவரிடமும் ஒரு பழமொழி இருக்கிறது. ‘பூனை பீ மூடுன மாதிரி’ என்று. மூடி வைத்துக் கொள்ளும். இவர்களது செயல்பாடுகள் வெளியில் ஒரு பயலுக்குத் தெரியாது. 

‘அதையெல்லாம் நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? இலக்கியத்தை வாசகன் தேடிப் படிக்க வேண்டும்’ என்கிற அலட்டல் விடுவார்கள். இப்படி பேசிப் பேசியேதான் வறட்டு வீம்பும் வீராப்புமாகத் திரிவார்கள். திருத்தவே முடியாது. முந்நூறு பேரைத் தாண்டி இலக்கியம் போய்விடக் கூடாது என்பதில் அவ்வளவு வெறி. விளங்காதவர்கள்.

இவர்கள் எல்லாம் குபீர் இலக்கியவாதிகள். நான்கு இலக்கியக் கூட்டங்களில் கலந்துவிட்டு திடீரென்று அத்தாரிட்டியாகிவிடுகிறார்கள். எப்பவாவது ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள் அல்லது ஏதாவது சிறுபத்திரிக்கையில் இரண்டு மூன்று கட்டுரைகளை எழுதியிருப்பார்கள். ஃபேஸ்புக் மோசம் என்று சொல்லிக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு லைக் விழுந்துவிடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பார்கள். இணையம் ஆகாதது என்று அலறுவதாக நடித்துக் கொண்டே இருபத்து நான்கு மணி நேரமும் இதிலேயே குடியிருப்பார்கள். இப்படி வெட்டிப் பேச்சினாலேயே இன்ஸ்டண்ட்டாக தாதாவாகிவிடுகிறார்கள். நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்றால் கையில் பிடிக்க முடியாது. அதன் பிறகு அவ்வளவுதான். ரவுடிதான். டாண்தான். பிஸ்தாதான். அடுத்த முப்பது வருடங்களுக்கு ஊருக்குள் மைனர் குஞ்சாகவே திரிந்து கொண்டிருக்கலாம். எந்தவிதத்திலும் கையாலாகாத இவர்கள்தான் அடுத்தவனைப் பார்த்து பல்லைக் காட்டுகிறார்கள்.

எழுதுகிறவன் எழுதிக் கொண்டேதான் இருக்கிறான். வெறும்பேச்சு வீராசாமிகள் இப்படி ‘அவன் மோசம்...இவன் மோசம்’ என்று பேசிக் கொண்டே திரிகிறார்கள்.

அபிலாஷையும் திட்டுகிறார்கள். அவரை எந்த அடிப்படையில் திட்டுகிறார்கள்? ஒரு அடிப்படை மண்ணும் கிடையாது. கும்பி கருகுகிறது. அதனால் திட்டுகிறார்கள். கருகாமல் இருக்குமா? கொஞ்சமாவது எழுதுவதற்கு கையாலாக வேண்டும் அல்லது அடுத்தவன் எழுதுகிறான் என்பதைப் பற்றி காழ்ப்புணர்ச்சியாவது இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டும் கிடையாது. வேறு என்ன செய்ய முடியும்? புகை விட வேண்டியதுதான். அபிலாஷ் தொடர்ந்து வாசிக்கிறார். தொடர்ந்து உரையாடலை உருவாக்குகிறார். மிகத் தீவிரமாக உழைக்கிறார். கவனிக்கத் தக்க கட்டுரைகளை எழுதிக் கொண்டேயிருக்கிறார். எதிர்த்துப் பேசுகிறவர்கள் எதைக் கிழித்தார்கள் என்று புரியவில்லை.

‘நாங்க எல்லாம் தீவிர இலக்கியவாதிகளாக்கும்’ என்று அளக்கிற இளையவர்களைக் கவனித்தால் தெரியும். துளி உழைப்பு கிடையாது. எழுதுவதற்கான மனநிலையும் இருக்காது. ஆனால் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. குதிக்க வேண்டியதுதான். வெறும் புறுக்கு விளக்கெண்ணெய்க்குத்தான் கேடு என்று தெரியாதா என்ன? இது அப்பாரு சொன்ன பழமொழி. பேதிக்காக எவனோ ஒருத்தன் விளக்கெண்ணெயைக் குடித்தானாம். ரிசல்ட் ஜீரோ. வெறும் சத்தம்தான். அடுத்தவனுக்கும் பிரச்சினை. விளக்கெண்ணையும் வீண்.

ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு எனக்குத் தகுதியில்லை என்று சொன்னதற்காக இதை எழுதவில்லை. தகுதியில்லை என்று ஒத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினையே இல்லை.  ஆனால் எந்த உழைப்புமே இல்லாமல் வயிற்றையும் புட்டத்தையும் பெருக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் இதே வேலையாகத் திரிகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

constructive ஆன வேலை என்று எதையாவது செய்துவிட்டு பேசலாம் அல்லவா? இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று இந்தப் பிதாமகன்கள் கண்ணாடியில் முகம் பார்த்திருப்பார்களா?

மீறிப் போனால் வட்டமாக அமர்ந்து சாராயத்தைக் குடித்து சைட் டிஷ்ஷைத் தின்று அடுத்த நாள் காலையில் வயிறு எரிந்து மோர் குடித்துத் திரியும் இவர்கள்தான் இலக்கியவாதிகள். குடித்த சாராயத்தை லிட்டர் லிட்டராக மூத்திரமாக ஊற்றி தமிழ் இலக்கியத்தை வளர்க்கிறார்கள் பாருங்கள். வெட்டிப்பயல்கள். ‘இவனுக்கான இலக்கிய மதிப்பீடு என்ன?’ என்று கேட்பதற்கு முன்பாக தமக்கான இலக்கிய மதிப்பீடு பற்றி ஒரு முறையாவது யோசித்திருப்பார்களா? இப்படி சத்தே இல்லாமல் வெறும் சக்கையைப் பேசிப் பேசியேதானய்யா இலக்கியம் என்றாலே தலை தெறிக்க ஓட வைத்திருக்கிறீர்கள்? எவனோ ஒருவன் மனைவி தாலியை அடமானம் வைத்து சிறுபத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பான். அதில் ஒன்றரைக் கவிதையை எழுதிவிட்டு கார்போரேட் நிறுவனங்களிலும் கந்துவட்டிகாரன்களிடமும் ஊழியம் செய்தபடியே தொண்டையக் கனைத்து ‘நாங்கள் அல்லவா இலக்கியக் குஞ்சுகள்?’ என்று நீட்டுகிற பீலாவுக்காக உங்களை மாதிரியான ஆட்களை மெச்சித்தான் ஆக வேண்டும்.

புரியாமல் எழுதி அடுத்தவர்களை மிரளச் செய்வது இலக்கியம் என்று எவன் சொல்லிக் கொடுத்தான்? அதே நினைப்பில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்துவிட்டால் நீங்கள் செய்வது இலக்கியம் என்றாகிவிடுமா? எழுத்து என்பது இயக்கம். எல்லாவகையான எழுத்தும் கலந்து ஓடுகிற காட்டாற்று வெள்ளம் அது. அதில் முந்நூறு பேர் மட்டும் எழுதுவதுதான் இலக்கியம் என்று பேசித் திரியாதீர்கள். எல்லாக்காலத்திலும் எல்லாவிதமான எழுத்தாளர்களும் அவசியம். அப்பொழுதுதான் மொழி செழிக்கும். வெட்டிச் சண்டைக்கு சட்டையைத் தேடாமல் உருப்படியாக ஒன்றிரண்டு வாக்கியங்களை எழுதிவிட்டு வாருங்கள். அதற்குள் நானும் எதையாவது உருப்படியாக எழுதிவிடுகிறேன். அப்புறமாக விவாதிக்கலாம். முளைத்து மூன்று இலை விடுவதற்குள்ளாகவே இவ்வளவு அழிச்சாட்டியம்மாய்யா?