Jan 7, 2015

எல்லாமே ப்ராண்டிங்தானே?

ப்ராண்டிங் (Branding) பற்றிய ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கொய்யாப்பழத்தை தள்ளுவண்டியில் வைத்து விற்றால் பேரம் பேசுவோம். அதே கொய்யாப்பழத்தை மழைக்காகிதத்தில் போட்டு மேலே ஒரு ஸ்டிக்கரையும் ஒட்டினால் போட்டிருக்கும் விலையைக் கொடுத்துவிட்டு வருவோம் அல்லவா? அதன் பின்னணிதான் ப்ராண்டிங் என்று ஆரம்பித்தார். சுவாரஸியமாக இருந்தது.

‘Eat cricket...Sleep cricket’ என்ற வரியைக் கேட்டால் என்ன ஞாபகம் வரும்? கோகோ கோலா. அந்த விளம்பரம் இப்பொழுது ஒளிபரப்பாவதில்லை. இருந்தாலும் மிகச் சரியான சமயத்தில் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை ஒலிக்கச் செய்து மண்டையில் ஏற்றிவிட்டார்கள். எந்தக் காலத்திலும் மறக்காது. லூயி பிலிப் சட்டைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத சட்டையை திருப்பூரில் தேடினால் கண்டுபிடித்துவிடலாம். ஆயிரத்திற்குள்ளாகத்தான் விலை இருக்கும். ஆனால் லூயி பிலிப் சட்டைக்கு மூன்றாயிரம் கொடுத்தால் ஒரு கெத்து. சட்டைப் பாக்கெட்டின் மீதாக இருக்கும் அந்த நிறுவனத்தின் இலச்சினைக்குத்தான்(Logo) அத்தனை விலை.

ஊரில் சொந்தக்காரர் ஒருவர் நெல்லிக்காய் சாறு தயாரிக்கிறார். அதற்குள் ஏகப்பட்ட மூலிகைகளைக் கலக்குகிறார். நெல்லிக்காய் மட்டுமில்லை. சர்க்கரை நோய், இருதயப் பிரச்சினை, இரத்த அழுத்தம் என பிற நோய்கள் இருப்பவர்களும் அதற்குத் தகுந்தபடி ஜூஸை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் காலையில் கொஞ்சம் குடித்து வந்தால் போதும். பலன் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரிடமிருந்து சில பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்து பெங்களூரின் சூப்பர் மார்கெட்டில் கொடுத்தால் கண்டுகொள்ளவே இல்லை. ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டார்கள். இரண்டு மாதங்கள் கழித்துச் சென்றால் ஒரு பாட்டில் விற்றிருந்தது. மிச்சமிருந்ததையெல்லாம் எடுத்து வந்துவிட்டேன். கடைக்காரர் சொன்ன ஒரே காரணம் ‘ப்ராண்ட் வேல்யூ இல்லைன்னா விற்காது சார்’.

அதுதான் கான்செப்ட். இங்கு எல்லாமே வர்த்தகமயம்தான்.

ஒன்றுமில்லை- சேலத்திலிருந்து பெங்களூர் வரும் வழியில் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் மைல்கற்களைப் பாருங்கள். வாரணாசி எவ்வளவு கிலோமீட்டர் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். டெல்லி எவ்வளவு கிலோமீட்டர் என்று எழுதி வைத்திருந்தாலாவது அர்த்தமிருக்கிறது. எதற்கு வாரணாசி? அதுவும் இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு கல்லில். அதுதான் ப்ராண்டிங். வாரணாசி என்ற பெயரைப் பார்க்கும் போதெல்லாம் நம்மையுமறியாமல் மோடியின் ஞாபகம் வரும். அவ்வளவு நேர்த்தியாக மண்டைக்குள் ஏற்றுகிறார்கள். இதைத் தவறு என்று சொல்லவில்லை. அவருக்குத் தன்னை ப்ராண்ட் ஆக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கிறது. அதனால்தான் 2001 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர். அப்படியெல்லாம் இல்லை- NH 7 வாரணாசியில் ஆரம்பித்து கன்னியாகுமரியில் முடிவடைவதால் வாரணாசியின் பெயர் எழுதியிருப்பதாகச் சில நண்பர்கள் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியும் இருக்கலாம். சமீபத்தில் நிறையக் கற்களில் எழுதி வைக்கப்பட்டிருப்பதால் அப்படிப் புரிந்து கொண்டேன். என் புரிதல் தவறானதாகவும் இருக்கலாம்.

அது போகட்டும்.

எம்.பி.ஏ படிப்பை நல்ல கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். ‘ப்ராண்டிங் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்ய வேண்டும்’ என்று. திரையரங்குகளில் இடைவேளையின் போது மெல்லிய ஒலியில் ஒரு பிரபலமான விளம்பரப் பாடலைத் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்ய வேண்டும். அது ஒலிப்பதே தெரியாது ஆனால் நம் உள்மனம் அந்தப் பாடலைப் பாடுவது போன்ற பிரமையை உருவாக்கும். அதனால் அன்றைய தினம் அந்த திரையரங்கின் உணவு விடுதியில் அந்தப் பொருளின் வியாபாரம் அதிகமாக இருக்கும். இது ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டதுதான்.

வெறும் ப்ராண்டிங் மட்டும் வேலைக்காகாது. அதற்கான உழைப்பும் தரமும் இருக்க வேண்டும்.

கடலைமிட்டாய் எல்லா ஊர்களிலும் கடலை மிட்டாய்தான். ஆனால் கோவில்பட்டி கடலைமிட்டாய்தான் ப்ராண்ட் ஆகியிருக்கிறது. காபி எல்லா ஊர்களிலும் காபிதான். ஆனால் கும்பகோணம் டிகிரி காபி என்கிற கடையைப் பார்த்தால் வண்டியை ஒதுக்குகிறோம். அதே சுவையை மற்றவர்கள் கொடுத்தாலும் கூட ‘என்ன இருந்தாலும் கும்பகோணம் மாதிரி வராது’ என்று சொல்லிவிடுவோம். அவர்கள் சுவையைக் கொடுத்து அதை ப்ராண்டாகவும் ஆக்கிவிட்டார்கள்.

தனிநபர்களுக்கும் இந்த ப்ராண்டிங் முக்கியம்தான். நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான சரக்கு உள்ளே இருக்கிறதா என்பது அவசியம். புதிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்கிறோம். திறமை இருந்தால் மூன்று மாதங்களில் நாம் ஒரு ப்ராண்ட் ஆகிவிடலாம். உள்ளே திறமை எதுவும் இல்லாமல் கூட ப்ராண்ட் ஆகிவிடலாம்தான். ஆனால் ஆறாவது மாதத்தில் பல் இளித்துவிடும். வேலை என்று மட்டுமில்லை- பத்து பெரிய ஊடகத் தொடர்புகள் இருந்தால் எழுத்தாளன் என்று வெளியில் பேச வைத்துவிடலாம். ஒன்றரை வருடங்களில் காணாமல் போய்விடுவோம். பணக்காரத் தொடர்பு இருந்தால் சினிமாவில் நுழைந்துவிடலாம். தன்னை மாஸ் ஹீரோவாகவும் காட்டிக் கொள்ளலாம். எத்தனை வருடங்களுக்குத் தப்பிக்க முடியும்? 

இன்னொரு விதமாகவும் இதை புரிந்து கொள்ளலாம். 

திறமையில்லாதவன் தன்னை ப்ராண்ட் ஆக்கினாலும் கூட காணாமல் போய்விடுவதைப் போலவே திறமையாளன் தன்னை ப்ராண்ட் ஆக்கிக் கொள்ளாமல் விட்டாலும் காணாமல் போய்விடுவான். சிவகார்த்திகேயனை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் இந்த பிம்பம் அவரை இன்னும் கொஞ்ச காலத்திற்காவது காப்பாற்றிவிடும். ரஜினி எளிமையானவர், கமல் திறமையானவர், அஜீத் ஜெண்டில்மேன் என்பதெல்லாம் கூட இந்த வகையறாதான்.  ‘அப்படியானால் உண்மையிலேயே ரஜினி எளிமையானவர் இல்லையா’ என்று கேட்கக் கூடாது. இருக்கலாம். ஆனால் அவரைவிடவும் எளிமையானவர்கள் பல லட்சம் பேர்கள் இருப்பார்கள். ஆனால் ரஜினியின் எளிமைதான் ப்ராண்ட் ஆகியிருக்கிறது. 

‘இருபது வருஷமா இப்படியே இருக்கேன்’ என்று சொன்னால் சொல்பவரிடம்தான் ஏதோ பிரச்சினையென்று அர்த்தம். ஒன்று திறமையில்லை அல்லது இருக்கிற திறமையை மேலே இருப்பவர்களிடம் காட்டத் தெரியவில்லை. ‘இல்ல இதே போதும்..சந்தோஷமாத்தான் இருக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அது ஒருவிதமான சுய அமைதிப்படுத்துதல்தான். வளர்ச்சி இல்லாத வாழ்க்கையில் சுவாரஸியமே இல்லை. இன்றைய தினத்தைவிடவும் நாளைக்கு ஒரு அடியாவது முன்னேறியிருக்க வேண்டும். ‘இப்படியே இருந்து விடுகிறேன்’ நாம் என்று சொன்னால் யாரும் ‘வேண்டாம்’ என்று சொல்லப் போவதில்லை. இருந்து கொள்ளலாம்தான். ஆனால் இந்த உலகம் நம்மைவிட்டு வெகுதூரம் ஓடிவிடும்.