Jan 13, 2015

பத்த வைப்போம்

செல்லமுத்து குப்புசாமி தனது ‘கொட்டு மொழக்கு’ நாவலின் பிரதியை அச்சாவதற்கு முன்பாக அனுப்பி வைத்திருந்தார். படித்துவிட்டு கருத்துச் சொல்லச் சொல்லியிருந்தார். படித்திருந்தேன். கருத்தெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒரு அத்தியாயத்தில் நிறைய உள்குத்து வைத்திருந்தார். ‘இப்படியெல்லாம் எழுதினால் பிரச்சினை ஆகாதா?’ என்று நினைத்திருந்தேன். விடுவார்களா? அச்சுப் பிரதியை வாங்கி வந்து பார்த்தால் நிறைய இடங்களை வெட்டியெடுத்துவிட்டார்கள். பதிப்பாளர் வெட்டினாரா அல்லது எழுத்தாளர் வெட்டினாரா என்று தெரியவில்லை. ஆனால் ராயல்டி, புத்தகக் கணக்கு விவகாரத்தை எல்லாம் எழுத்தாளர் வெட்டியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பதிப்பாளர் விவரத்தை கூகிளில் தேடிக் கொள்ளவும். எனக்குத் தெரியாது.

செல்லமுத்து குப்புசாமி மன்னிக்க. கை அரிக்கிறது. எழுத்தாளர் எடிமலைக்கும், ராசுவுக்கும் இடையேயான உரையாடலை பிரசுரித்துவிடுகிறேன். அடிவாங்கினாலும் சரி; மார்கெட்டிங்குக்கு உதவினாலும் சரி. அவருடைய பிரச்சினையாகவே இருக்கட்டும்.

                                                                       ****

ராசு சிரித்துக் கொண்டான்.  “சொல்லுங்க தோழர் என்ன விஷயமாக கால் பண்ணுனீங்க..?”

“விஷயம் இருந்தாத்தான் இந்த எடிமலை ராசுக்கு போன் போடணுமா தோழர்..? இப்படி என்னை நீங்க அவமானப் படுத்தறதுக்குப் பதிலா என் படைப்புகளை நடு வீதியில் தீயிட்டுக் கொளுத்தி அந்த அக்கினியில் என்னைச் சுட்டிருக்கலாம்..”

“அருமைங்க தோழர்.. கவித்துவமா கோபத்தை வெளிப்படுத்தறீங்க.. ஐ லைக் இட்.. உங்க படைப்புகள்ல இப்படி பொயட்டிக்கா எழுதுங்க.. சேல்ஸ் சும்மா பிச்சுக்கிட்டுப் போகும்”

“கிண்டலா தோழர்..? என்னை நான் என்னைக்குமே எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டதே கிடையாது. எழுதறப்ப மட்டுந்தான் நாம எழுத்தாளர்.. எழுதி முடிச்சுட்டா நமக்கு அதுக்கும் சம்மந்தமே இல்லை பாத்துக்குங்க.. படைப்பு உருவான உடனே அது வாசகனுக்குச் சொந்தமாயிடுது.. எழுத்தாளன் செத்துப் போயிர்ரான்.. அல்லது அவன் மற்ற மனிதர்களைப் போல சாமானியன் ஆகிர்ரான்… எழுத்தாளன்ங்கற தொப்ப்பியைக் கழட்டி  போட்டுர்ரான்.. மத்தவங்க எப்படியோ.. நான் அப்படித்தான் தோழர்.. உங்களுக்குத் தெரியாதா?”

“ஆமாம் தோழர்.. எழுதி முடிச்சதும் படைப்பு படைப்பாளிக்குச் சொந்தமில்லைன்னா எதுக்கு ராயல்டி கேக்கறீங்க..? எத்தனை காப்பி வித்துச்சுன்னு கணக்கு வேற கேக்கறீங்களாம்..! இதெல்லாம் எதுக்கு தோழர்?” என்றான் ராசு.

“தோழர்.. உங்க பக்கத்துல வேற யாராவது இருக்கறாங்களா? இல்லை நீங்க மட்டுந்தானா?” என்று சன்னமாகக் கேட்டார் எடிமலை.

“நான் மட்டுந்தான் இருக்கேன்.. சொல்லுங்க தோழர்” என்றான் ராசு.

“கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்க தோழர்.. நான் எந்தக் காலத்துல ராயல்டி கேட்டீருக்கேன்? இது வரைக்கும் ஆறு புக் போட்டிருக்கேன்.. ராயல்டீன்னு ஒரு நயாப் பைசா சம்பாதிச்சது கெடையாது.. ஆறு புத்தகங்கள்.. நாலு பதிப்பகங்கள்.. ஆனா ஒன்னு.....”

“இந்த புஸ்தகத்தை யாருமே பப்ளிஷ் பண்ண முன்வர மாட்டேங்கறாங்க தோழர்.. ஏற்கனவே நாலு பப்ளிஷர்ஸ் கிட்ட ரிலேஷன் இருக்கு.. அவங்க அப்பறம் பாக்கலாம்ங்கறங்க.. இந்த பொள்ளாச்சிக்காரப் பையன் ஒருத்தன் இருக்கானே.. இப்பக் கூட ஒரு புக் போட்டன்ல..! அவன் என்ன பேச்சுப் பேசறானுங்கறீங்க தோழர்..! உம்படது ஒரு பொஸ்தகம் போடறதுக்கு எருமைய வித்துப் போட்டேன்.. இன்னொன்னு போடோனும்னா எருத்தை விக்கோணும்யா.. அப்படிக் கீது வித்தன்னு வெய்யி.. எங்கைய்யன் காடு தோட்டத்தை எல்லாம் கோயலுக்கு எழுதி வெச்சுட்டு சாமியாராப் போயிரும்னு மெரட்டரானுங்க தோழர்.. படைப்பாளிகளை இந்த நாடு எப்படி நடத்துது பாருங்க.. படுத்தா தூக்கம் வர மாண்டீங்குதுங்க தோழர்.. ”

“அவன் கெடக்கறான் உடுங்க தோழர். மத்த மெட்ராஸ் பதிப்பாளர்கள் என்ன சொல்றாங்க..?”

“அறுநூறு பிரதி போடறேன்.. நீங்க முன்னூறு வாங்கறதுன்னா சொல்லுங்கன்னு கேக்கறாங்க.. என்ன சோதனை இது தோழர்?  இலக்கியத்துக்கு வந்த பெருஞ்சோதனை!”

ஒரு இடைவெளி விட்டு-

“ஹாங் தோழர்.. என்ன பேசிக்கிட்டு இருந்தோம்? ஆங் முன்னூறு பிரதி நம்மளே வாங்கற மேட்டர்.. அது எப்படீங்க தோழர் ஒத்துக்க முடியும்? நாம விலை போன மாதிரி ஆகீராதா? படைப்புகள் விலைபோகலாமே ஒழிய படைப்பாளி ஓரு போதும் விலை போகக் கூடாது” என்று மறுபடியும் விட்ட இடத்தில் தொடர்ந்தார் எடிமலை.

“சரி.. மிச்சம் ரண்டு பதிப்பாளர்கள் என்ன சொல்றாங்க தோழர்?”

“ஒருத்தன் நீங்களே லைப்ரரி ஆர்டர் புடிச்சுக் குடுக்கறதுன்னா நான் வெளியிடறேங்கறான்.. நான் எழுத்தாளன்யா.. இந்த மாதிரி இழிவான வேலை நமக்காகுமா! சரீன்னு இன்னொருத்தன் கிட்டப் போனா..அவன் சொன்னாம் பாருங்க தோழர்..”

“அப்படி என்ன தோழர் சொன்னான்?”

“அவன் சொல்றான் தோழர்.. புக் எல்லாம் விக்கறது உள்ள இருக்கிற கண்டெண்டுக்காக இல்லியாம்.. யாரு எழுதறாங்கங்கற ஃபேஸ்வேல்யூல தான் விக்குதாம்.. இன்னி நான் ஃபேஸ்வேல்யூவுக்கு எங்கே போறது தோழர்? சினிமாவுல சேந்து முயற்சி செஞ்சு பாக்கட்டுமா?”

எடிமலை பேச்சை மாற்றினார். இப்போது கூடுதலான ஸ்ருதியுடன். “தோழர் ஃபேஸ்புக் பாத்தீங்களா? ஒரு முக்கியமான மேட்டர்!”

“இணைய வசதியில்லாத இடத்தில் இருக்கிறேன் தோழர்.. என்ன மேட்டர்.. சொல்லுங்க?’ என்றார் ராசு.

“நம்ம தோழர் **** இருக்காங்கல்ல?”

“என்ன சொன்னீங்க தோழர்? நம்ம **** நம்மன்னா சொன்னீங்க.. ரைட்டு. சரி சொல்லுங்க நம்ம தோழர் ****வுக்கு என்ன?”

“தோழர் ****  எங்கையோ வளைகுடா நாட்டுல இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குப் போயி அங்கே குட்டியூண்டு டவுசர் போட்டுக்கிட்டு போஸ் குடுத்திருக்காங்க.. அய்யோ என்னமா இருக்காங்க தெரியுமா நம்ம ****த் தோழர்? செம்ம கியூட்டுங்க தோழர்.. நீங்க பாக்காம உட்டுட்டீங்களே தோழர்..”

“நீங்க தோழர்களின் வளர்சியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் தோழர்.. நான் மெட்ராஸ் வந்து பாத்துட்டாப்போவுது உடுங்க தோழர்.. நீங்க மெயில் அனுப்பி விடுங்க தோழர்..”

“நீங்க வேற.. நான் மொபைல்ல ஸ்கிரீன்சேவராவே வெச்சுட்டேன்னா பாருங்க… மூனு நிமிசத்துக்கு ஒருக்கா பாத்துப் பாத்து சிரிச்சுக்கறதுங்க தோழர்.. மனசு லேசாகுதுங்க தோழர்..”

“தோழர்கள் வளர்ச்சியைப் பாத்துத் தானுங்க தோழர்?”

”தோழர்கள் வளர்கிறார்கள்.. அவர்களது ஆடைகள்.. சரி விடுங்க தோழர்.. நான் எதாவது சொல்லி.. நீங்க ஏடாகூடமா எங்கையாவது ஷேர் பண்ணி.. சர்ச்சை உருவாகீரப் போவுதுங்க… நாம நம்மளையைப் பத்திப் பேசுவோம் தோழர்.. ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளு அந்த மாதிரி ஃபேமஸ் ஆகீரோணும் தோழர்..”

”ஷூர் பாஸ்.. ஷூர்.. நானும் இந்த நீயாநானா கோபிநாத் மாதிரி பிரபலம் ஆகி அவரை மாதிரி மூனு இலட்சம் காப்பி.. அஞ்சு இலட்சம் காப்பி விக்கற மாதிரி புக் எழுதாட்டி.. எம்பட பேரு எடிமலை இல்லீடா.. டா.. டா..”

”ஆகட்டும்ங்க தோழர்.. உங்களை பிரபலமாகச் சந்திக்கிறேன்… வெச்சிரட்டுமா?”

“பாத்தீங்களா பாஸ்… அதுக்குள்ள வெக்கறம்னு சொல்றீங்க… ஒரே ஒரு கொஸ்டீன்.. வில் யூ ஏன்ஸர்?”

“யெஸ் தோழர்.”

“கோபிநாத் நம்பர் இருக்கா உங்க கிட்ட?”

“இல்லை.. ஆனா எதுக்கு பாஸ்?”

“பிரபலம் ஆகறது பிரச்சினை இல்லை.. அஞ்சு லட்சம் காப்பி விக்கற மாதிரி புக் எழுதறது கூடப் பிரச்சினை இல்லை… ஆனா அஞ்சு இலட்சம் காப்பி வித்துதுன்னு கணக்குக் காட்டற பதிப்பாளரைக் கண்டுபிடிக்கற சூட்சுமம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்கு… க்கு க்கு”

“என்ன க்கு க்கு”

“அந்த கோபிநாத் கோட்டைப் புடிச்சு நாலு உலக்கு உலுக்கிக் கேக்காம உடறதில்லீஙக் தோழர்… அந்தாளு நம்பர் இருக்குதா?”