Jan 2, 2015

துக்கினியூண்டு போட்டி

துபாய் நண்பர் சரவண பாபு மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்தின் பத்து பிரதிகளை வாங்குகிறார். அவருக்காக இல்லை. பணத்தை அவர் கொடுத்துவிடுவார். நாம் புத்தகத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். இது நல்ல கான்செப்ட்டாக இருக்கிறது அல்லவா? சென்ற வருடமும் அப்படித்தான் செய்தார். யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பம் வந்த போது விமர்சனப் போட்டி நடத்தலாம் என்று தோன்றியது. முதலில் வரும் பத்து விமர்சனங்களை எழுதியவர்களுக்கு தலா ஒரு பிரதி அனுப்பி வைத்துவிடுகிறோம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இப்பொழுதும் அதே சரவண பாபுதான். ஆனால் இந்த வருடமும் புத்தக விமர்சனமே போட்டியாக வைக்கலாமா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் புத்தகம் சார்ந்து வேறு என்ன செய்வது?

அதனால் அதேதான் -

1) விமர்சனம் எந்தப் புத்தகத்தைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் சரி. எந்தத் துறையாக இருந்தாலும் சரி.

2) பத்து வரிகளுக்கு மேலாக இருந்தால் நல்லது.

3) தமிழில் இருந்தால் சிறப்பு. சிலருக்கு தமிழில் தட்டச்சு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் இருந்தாலும் சரி. சைனீஸ், கொரியனில் யாராவது அனுப்பினால் புத்தகத்துக்கு பதிலாக ஆட்டோவில் நான்கு தடியர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

4) இது சிறந்த விமர்சனங்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியெல்லாம் இல்லை என்பதால் முதல் பத்து விமர்சனங்கள்தான் கணக்கு. 

5) சுவாரஸியமான விமர்சனமாக இருந்தால் ரொம்பச் சந்தோஷம்.

6) முதல் பத்து விமர்சனங்கள் வந்து சேர்ந்தவுடன் அவற்றை நிசப்தத்தில் பிரசுரம் செய்துவிடுகிறேன். அதன் பிறகு அனுப்ப வேண்டாம்.

முக்கியமான நிபந்தனை- தயவு செய்து எங்கும் பிரசுரம் செய்யப்படாத அனுப்பி வைக்கவும். 

சரவண பாபு பணத்தை பதிப்பாளருக்கு அனுப்பி வைத்துவிடுவார். பத்து முகவரிகளை நான் அனுப்பி வைத்துவிடுவேன். அந்தப் பத்து பேருக்கும் பதிப்பாளர் புத்தகங்களை அனுப்பி வைத்துவிடுவார்.

vaamanikandan@gmail.com