Jan 15, 2015

மின்னிதழ்

ஒரு புதிய மின்னிதழ் வந்திருக்கிறது. தமிழ் என்று பெயர். பிடிஎஃப் வடிவம். யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அறுபத்து நான்கு பக்கங்களில் இருக்கும் என்றுதான் அதன் ஆசிரியர் முன்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால் முதல் இதழ் நூற்றி முப்பத்தெட்டு பக்கங்கள். இது ஆச்சரியமான விஷயம். இவ்வளவு படைப்புகளைத் திரட்டுவதே கூட சிரமமான காரியம்தான். கவிதைகள், கதைகள், ஜெயமோகனின் நேர்காணல், விமர்சனங்கள் , ஓவியம், நிழற்படம், அனுபவம் சார்ந்த பதிவுகள் என்று ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. பொறுமையாக வாசிக்கலாம்.

தமிழ் மின்னிதழின் ஆசிரியர் சரவண கார்த்திகேயன். அவருடன் பணியாற்ற ஆசிரியர் குழுவொன்றும், ஆலோசனைக் குழுவொன்றும் இருக்கிறது.

இவ்வளவு நல்ல படைப்புகளுடன் பிடிஎஃப் வடிவில் ஒரு மின்னிதழ் வருவது முக்கியமான முயற்சி. இணையம் முக்கியமான ஊடகமாகிக் கொண்டிருக்கிறது. வாசிப்பு சார்ந்த இப்படியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியம். எவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறைத் தமிழ் வாசகர்களின் பரப்பை இத்தகைய செயல்பாடுகளால்தான் விரிவாக்க முடியும்.

இப்போதைக்கு காலாண்டிதழாகத்தான் கொண்டு வருவார்கள் போலிருக்கிறது. அதுதான் சரி என்று நினைக்கிறேன். மாத இதழ் என்றால் அவசர அவசரமாக வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். சரியான படைப்புகள் வரவில்லையென்றால் சுமாரான படைப்புகளுக்குக் கூட சமரசம் செய்ய வேண்டியிருக்கும். காலாண்டிதழ் என்றால் அந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காது. அதுவுமில்லாமல் சரவண கார்த்திகேயன் கறாரான ஆள். அதனால் படைப்புகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என தைரியமாக நம்பலாம்.

இதழைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதில் நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் ஆனால் அதையெல்லாம் சமாளித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஓரளவு கவனம் பெற்றுவிட்டால் போதும். பரவலாக வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். 

முதல் இதழில் பாஸிட்டிவாகச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. குறையாகச் சொன்னால்- இதைக் குறையாகச் சொல்ல முடியாது. ஒரு suggestion- வடிவமைப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம். கணினித் திரையில் வாசிக்கும் போது- அதுவும் இவ்வளவு அதிகமான பக்கங்களை- தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. 

வாசகனாக இந்த மின்னிதழ் குறித்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்.

சிரத்தையெடுத்து தரமான மின்னிதழைக் கொண்டு வர வேண்டும் என மெனக்கெட்டிருக்கும் சரவண கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.