எங்கள் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையானால் யாராவது இரண்டு மூன்று பேர் ‘ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்’ என்று பிட் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் அல்லது ‘உங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைக்கு ஜெபம் செய்கிறோம்’ என்று வருகிறார்கள். ஆரம்பத்தில் மரியாதையாகத்தான் பதில் சொன்னேன். ஆனால் இப்பொழுது ஒவ்வொரு வாரமும் வருகிறார்கள். எரிச்சல் மிகுந்துவிடுகிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஜெபத்தினால் வழிக்கு கொண்டு வந்துவிடுவோம் என்கிறார்கள். சம்பள உயர்விலிருந்து, கணவன் மனைவி பிரச்சினை வரை சகலமும் அடக்கம். பெங்களூரில்தான் இப்படியென்றால் கரட்டடிபாளையத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறார்கள். வெகு நாகரீகமாக ஆடையணிந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்.
பெங்களூரில் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து ஜெப வீடாக மாற்றிவிட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த வீதியே அலறுகிறது. எதற்கு திடீரென்று ஜெபவீடு வந்திருக்கிறது என்று யோசித்தால் அந்தப் பகுதியில் கட்டிட வேலை செய்யும் ஆட்கள்தான் பிரார்த்தனைக்குழுவில் பங்கேற்பவர்கள்.
மதத்தைப் பரப்புவது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை என்று சொல்லிக் கொள்வதை எந்தவிதத்திலும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கான சில வரையறைகள் இருக்க வேண்டியதில்லையா? சமீபத்தில் யூடியூப்பில் ஒரு சலனப்படத்தை பார்க்க நேர்ந்தது. உமாசங்கர் பேசிக் கொண்டிருந்தார். பகீரென்றிருந்தது. வெறியெடுத்துத் திரிகிறார். ஒரு சாமானியரோ அல்லது பால் தினகரனோ கூட பேசுவது பெரிய அயற்சியை உருவாக்குவதில்லை. விரும்பினால் காது கொடுத்துக் கேட்கிறோம் இல்லையென்றால் விலகிப் போய்விடலாம். ஆனால் உமாசங்கர் போன்ற அதிகாரி- நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர் இப்படி பேசிக் கொண்டு திரிவதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள மனம் ஒத்துக் கொள்வதில்லை.
பாரதிமணியின் ஒரு கட்டுரையில் ஒரு மத்திய அரசுச் செயலாளரைப் பற்றிய குறிப்பு வரும். அவர் நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டுதான் அலுவலகத்துக்கு வருவாராம். புதியதாக அந்தத் துறைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் ‘இனி இப்படி பட்டையோடு என் முன்னால் வராதீங்க’ என்று சொல்லியிருக்கிறார். ‘நிச்சயம் வர மாட்டேன்’ என்று சொன்னவர் உடனடியாக வேறு துறைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாராம். அந்த உரையாடல் துல்லியமாக நினைவில் இல்லை. ஆனால் இந்த ரீதியில்தான் பேசிக் கொள்வார்கள்.
இதை எதற்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால்- ஒரு அதிகாரியின் தனிப்பட்ட இறை நம்பிக்கைகள் வேறு அதையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மேடைகளில் பிரஸ்தாபிப்பது வேறு. உமாசங்கர் இரண்டாவது விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறார். நமக்கான உரிமை என்பதைத் தாண்டி நமக்கான பொறுப்புணர்வு என்பதனை சமூகத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
மதம், கடவுள் ஆகியன குறித்த நம்பிக்கைகள் ஒருவனுக்கு அவனது புரிதலிலிருந்து உருவாக வேண்டுமே தவிர கையைப் பிடித்து இழுப்பதாக இருக்கக் கூடாது. இயேசுவை வணங்குவதிலும் தர்க்காவில் மந்திரித்த கயிறைக் கையில் கட்டிக் கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் இன்னொருவர் வந்து ‘இந்தக் கடவுளினால் மட்டும்தான் உனது பிரச்சினையைச் சரி செய்ய முடியும்’ என்று சொன்னால் அது எரிச்சலான காரியம்தான். ராமராஜனை வைத்துக் கூட்டம் நடத்துகிறார்கள். குமரி முத்து இயேசுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று பேசுகிறார். நக்மாவின் படத்தை வீதிக்கு வீதி பதாகைகளாகத் தொங்கவிடுகிறார்கள். ஒரு மதத்தை இவ்வளவு தீவிரமாக பரப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி தானாகவே எழுகிறது.
குமரிமுத்துவும், ராமராஜனும், நக்மாவும் பேசும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மலைப்பாக இருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாட்டில் தீவிர இந்துமதப் பற்றுடன் இருப்பவர்களை இது கிளறிவிடத்தான் செய்யும். நித்யானந்தாவை விமர்சித்தாலும் கூட எகிறுபவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். காரணத்தை யோசித்துப் பார்த்தால் வெகு எளிதாக இருக்கும். ‘அந்த ஆள் என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். இந்து மதத்தைத் தாங்கிப் பிடிக்கிறான்’ என்பார்கள். இந்தச் சூழலில் உமாசங்கர் மாதிரியான பொறுப்பான அதிகாரிகள் இப்படி வெறியெடுத்துத் திரிவது எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது மாதிரிதான். சிவசேனாவும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அரசியல் சாசனத்திலிருந்து ‘Secular மற்றும் Socialist' என்ற சொற்களை நீக்குவோம் என்று பேசுவதைப் பற்றி கோபப்படும் அதே சமயத்தில் இத்தகைய பிற மதங்களின் வேகத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இதே விஷயங்களை தீவிரமான கிறித்துவ அல்லது இந்து மத நம்பிக்கையாளரின் பார்வையிலிருந்து பார்த்து வேறு மாதிரியும் பேசலாம்.
ஆனால் ஒன்று- மதச்சார்பற்ற நாடு என்றால் அது எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்பது என்ற அர்த்தமில்லை- எந்த மதமும் அரசாங்கத்திற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம் என்பார்கள். அப்படியானால் மதம் அல்லது கடவுள் நம்பிக்கை தொடர்பான செயல்பாடுகளை எந்தவிதத்திலும் வழிபாட்டு இடங்களைத் தாண்டி பொதுவிடங்களில் அனுமதிக்கக் கூடாது என்கிற வரையறை இருக்க வேண்டும். ஆனால் அப்படியா இருக்கிறோம்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்தான் மதமே பரப்பப்படுகிறது. அதன் மைதானங்களில்தான் ஜெபக் கூட்டங்களும், தட்டியெழுப்பும் சுவிசேஷக் கூட்டங்களும், ஆன்மிக பேரொளியின் சொற்பொழிவும் நடக்கின்றன.
உறவுக்காரப் பெண்மணியொருவர் இளவயதில் கிறித்துவப்பள்ளியில் படித்தார். இன்று வரைக்கும் பொட்டு கூட வைத்துக் கொள்ளமாட்டார். கணவரின் வற்புறுத்தலில் அவரது மகளை இந்துத்துவ பள்ளியில் சேர்த்தார்கள். அவள் இப்பொழுதே தீவிர இந்து மதவாதியாகியிருக்கிறாள். என்னால் வாய் கொடுக்க முடிவதில்லை. இந்த லட்சணத்தில்தான் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்கிறோம். ‘மதரஸாக்களை விட்டுவிட்டான்’ என்று யாராவது கத்தக் கூடும். அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
கிறித்துவர்களிடம் ‘நீ மதப்பிரச்சாரம் செய்ய வேண்டாம்’ என்று சொன்னால் அடுத்த கேள்வி ‘விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை ஏன் தடை செய்வதில்லை’ என்பார்கள். ‘ஏம்ப்பா விநாயர் சதுர்த்தி ஊர்வலங்கள் தேவையா?’ என்று இவர்களிடம் கேட்டால் ‘அப்படின்னா இசுலாமியர்கள் நடத்து ஊர்வலங்கள் உனக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்பார்கள். சண்டைப் போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்.
உமாசங்கரைத் தடுக்கும் இதே தமிழக அரசின் அமைச்சர்கள்தான் கூட்டம் சேர்த்துக் கொண்டு மண்சோறு சாப்பிடுகிறார்கள்; தீ மிதிக்கிறார்கள்- அதை ஒவ்வொரு செய்தித்தாளிலும் விளம்பரமாக வரும்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்று யாரோ எழுதியிருந்தார்கள். இன்னொருவர் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது எந்தவிதத்தில் சரி என்று கேட்டிருந்தார். இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். யோசித்துப் பார்த்தால் மதம் மற்றும் இறை நம்பிக்கைகளை நம்மால் முற்றாகத் துறந்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏதாவதொருவிதத்தில் நம்மோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் நமக்கான பொறுப்புணர்வை மீறி அதை வெளிக்காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமான செயல். அசிங்கமானது என்றாலும் கூட விட்டுவிடலாம். ஆபத்தானதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் யோசிக்கச் செய்கிறது.