கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஒரு செய்தி- பள்ளி மாணவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து தங்களது வகுப்பறையிலிருந்த மர பெஞ்ச் ஒன்றை உடைத்து ஆளாளுக்கு ஒவ்வொரு கட்டையாகத் திருடிச் சென்று விட்டார்கள். கொண்டு போய் மரக்கடையில் கொடுத்ததில் கிடைத்த விலைக்கு டாஸ்மாக்கில் தீர்த்தவாரி நடத்தினார்களாம்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பாக வேலுச்சாமி வாத்தியார் ஒரு சம்பவத்தைச் சொன்னார். வாய்க்கால் ஓரமாக நடைப்பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பள்ளி மாணவர்கள் சிலர் திடீரென்று வந்து ‘சார் சரக்கு சாப்பிடலாம்ன்னு வாய்க்காலுக்கு வந்தோம்’ என்று வம்பிழுத்திருக்கிறார்கள். அவர் எங்கள் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நூறாண்டு கடந்த பள்ளியின் பெருமை மிகு மாணவர்கள் இவர்கள்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம்தான் தனிப்பயிற்சி வகுப்புக்குச் செல்வேன். கொஞ்சம் ஏமாந்தாலும் போதும் அழைத்து முட்டியை பெயர்த்துவிடுவார். ‘ஏண்டா படிக்கலையா? உங்கப்பன் படிக்க உடமாட்டீனுட்டாரா?’ என்று கேட்டபடியே புறங்கையை அவருக்கு வாகாக பிடித்துக் கொள்வார். பேசிக் கொண்டே குச்சியால் விரல் நுனியில் ‘டொக்..டொக்’ ‘டொக்..டொக்’ ‘டொக்...டொக்’ என்று ரிதமிக்காக அடிப்பார். மெதுவாக அடிப்பது போலத்தான் தெரியும். பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரணமாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அடி வாங்குகிறவனுக்குத்தான் பாதம் வரைக்கும் வலிக்கும். அடித்தாலும் தொலையட்டும் என்று விட்டுவிடலாம். அப்பாவுக்கு அவர் சிறுவயதிலிருந்து நண்பர். சாயந்திரம் ஆனால் கடையொன்றில் அமர்ந்து புஷ்ஷின் கதையிலிருந்து ஓடிப்போனவளின் கதை வரைக்கும் பேசிக் கொண்டிருப்பார்கள். பேச்சுவாக்கில் என்னையும் போட்டுக் கொடுத்துவிடுவார். அப்பா கமுக்கமாக அம்மாவிடம் சொல்லிவிடுவார். அவ்வளவுதான். தாண்டவமாகத்தான் இருக்கும். பற்களை வெறுவிக் கொண்டிருப்பேன். பொதுவாக அவரைக் கண்டால் பயமாகத்தான் இருக்கும். ஆனால் அவரை அழைத்துத்தான் கலாய்த்திருக்கிறார்கள்.
இன்னொரு சொந்தக்காரர் இருக்கிறார். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். ஒரு விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது ‘க்ளாஸூக்கு தண்ணியடிச்சுட்டு வந்துடுறானுக’ என்றார். ‘வெளியே துரத்த வேண்டியதுதானே?’ என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். இன்னொரு ஆசிரியப் பெண்மணியின் வகுப்பில் இப்படித்தான் நடந்திருக்கிறது. வெளியே போகச் சொன்னாராம். பவ்யமாக வெளியே சென்ற இரண்டு பேர் திரும்ப வந்து ‘கத்தியை மறந்துட்டு போய்ட்டோம்’ என்று மேசைக்கு கீழாக வைத்திருந்த கத்தியைக் காட்டிக் கொண்டு சென்றார்களாம். அடுத்த முறை வெளியே போகச் சொல்ல எந்த ஆசிரியருக்கு தைரியம் வரும்?
இந்தக் குடிகார நாய்கள் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். போதையில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இப்பொழுதெல்லாம் மனித உயிர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது? சர்வசாதாரணமாக பிய்த்து வீசிவிடுகிறார்கள். நேற்று தன் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஒரு மனிதர் வெட்டிச் சாய்த்திருக்கிறார். இதையாவது ஒரு விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கிடையே குடும்பப் பிரச்சினை இருந்திருக்கிறது. வெறுப்பு உச்சத்தைத் தொட்டு வெட்டியிருக்கிறார். ஆனால் எந்தச் சம்பந்தமுமே இல்லாத ஆளைக் கொல்கிற செய்திகளையெல்லாம் படிக்கும் போது திகிலாகத்தான் இருக்கிறது.
ஒரு மாதம் இருக்கும்- அதிகாலையில் ஊரிலிருந்து பேருந்தில் வந்து இறங்கிய ஒரு பையனை ஆட்டோக்காரரே கடத்திச் சென்றிருக்கிறார். இருக்கிற பணத்தைப் பிடுங்கிவிட்டு விட்டுத் தொலைத்திருக்கலாம். ஆனால் மாட்டிக் கொடுத்துவிடுவான் என்று பயந்துவிட்டானாம். கழுத்தை அறுத்து வீசிவிட்டான். கேட்டால் ‘போதையில் செய்துவிட்டேன்’ என்று சொல்லியிருக்கிறான். அதே போலத்தான் லாரிக்காரர்களைக் கொல்கிற செய்திகளும் சாதாரணமாகிவிட்டன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் விடிய விடிய கண் விழித்து வண்டி ஓட்டுகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். பாவப்பட்ட ஜென்மங்கள். ஆனால் எந்த யோசனையுமே இல்லாமல் இப்படி சரக்கு ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களைக் கொன்றுவிட்டு லாரியில் இருக்கும் சரக்குகளைத் திருடுகிறார்கள். கைது செய்யப்பட்டு அவர்களால் கொடுக்கப்படும் வாக்குமூலத்தை கவனித்தால் தெரியும். ‘போதையில் இருந்தோம்’ என்கிற வரி நிச்சயமாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் குடிப்பதை பெருமையாக அறிவித்துக் கொள்கிறார்கள். எந்தச் சங்கடமும் இல்லை. முன்பெல்லாம் ‘நான் குடிக்கமாட்டேன்’ என்று அறிவித்துக் கொள்வது பெருமையாக இருந்தது. இப்பொழுது ‘குடிப்பேன்’ என்று சொல்லிக் கொள்வதுதான் பெருமை. அதுவும் இந்த இலக்கியம் பேசுகிறவர்கள் எல்லாம் போதையைப் பற்றி பேசும் போது எரிச்சலாக இருக்கிறது. இதில்தான் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறதாம். வெங்காயம். முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதில் ஆர்வமாக இருக்கும். ஏதாவது உருப்படியாக பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்பொழுது லட்சணம் தெரிந்துவிட்டது. குடிக்கிறார்கள், அடுத்தவனை சொறிந்துவிடுகிறார்கள் பிறகு வெளியே வந்து ‘நாங்கள் குடித்தோம்’ என்றும் ‘அடித்தோம்’ என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள்.
இலக்கியவாதிகள் எப்பவுமே இப்படித்தான். அவர்களைப் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. மாணவர்களின் நிலைமை ஏன் இவ்வளவு பரிதாபமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் சங்கடமாக இருக்கிறது.
கரூரில் ஒரு மாணவன் போதையில் கிடந்தான் என்று அவனது நிழற்படத்தை பகிர்கிறார்கள். அவன் ஒருவன் மட்டுமா சீரழிந்து கிடக்கிறான். சதவீதக் கணக்கு எடுத்துப் பார்த்தால் தெரியும். பெரும்பாலான இளைஞர்கள் குடித்துப் பழகியிருக்கிறார்கள். முன்பெல்லாம் மது கிடைப்பதில் நிறையச் சிரமம் இருந்தது. அவ்வளவு சீக்கிரம் வாங்கிவிட முடியாது. அப்படியே வாங்கினாலும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல்தான் குடிப்பார்கள். இப்பொழுதுதான் மது கிடைப்பதில் பிரச்சினையே இல்லையே- கம்பிக்கு இந்தப்பக்கமாக நின்று பணத்தை நீட்டினால் போதும். யாராக இருந்தாலும் கொடுக்கிறார்கள். பிறகு ஏன் வகுப்பறை மேசைகளை உடைக்கமாட்டார்கள்? சத்துணவுக் கூட பாத்திரங்களை திருட மாட்டார்கள்?
அரசுக்கு இதை விட்டால் வருமானம் இல்லை. வருமானத்திற்கு வேறு என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்? போக்குவரத்துக் கழகம் நாசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது. சுற்றுலாத்துறையின் விருந்தினர் விடுதிகளைப் பார்க்க வேண்டும். நாறிக் கிடக்கின்றன.
அரசுக்கு வருமானம் கொழிக்கும் துறை என்று எதைச் சொல்ல முடியும்? வருமானமே இல்லை ஆனால் இந்த லட்சணத்தில்தான் அரசு ஊழியரின் அம்மாவுக்குக் கூட ஆதரவற்றோர் நிதி வழங்குகிறார்கள். பத்து ஏக்கர் பண்ணையகாரன் வீட்டில் இலவசத் தொலைக்காட்சி இருக்கிறது. பெரிய தொழிலதிபரின் வீட்டில் அம்மா படம் போட்ட மிக்ஸியும், கிரைண்டரும் இருக்கிறது. இலவசங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். அதைத் தகுதியானவர்களுக்குத்தான் கொடுக்கிறார்களா? நினைத்தவனுக்கெல்லாம் அள்ளி வீசினால் வருமானம் எங்கிருந்து வரும்?
டாஸ்மாக்தான் சரணாகதி. அதுவும் இலக்கு வைத்து விற்கிறார்கள். தீபாவளியென்றால் இத்தனை கோடிக்கு விற்றாக வேண்டும்; பொங்கலென்றால் அத்தனை கோடிக்கு விற்றாக வேண்டும்.
சமூகம் சீரழிந்து கிடக்கிறதே என்று நாம் புலம்ப வேண்டியது இப்படிக் குடித்துவிட்டுக் கிடக்கும் மாணவர்களைப் பார்த்து இல்லை. இந்த கேடுகெட்ட அரசாங்கத்தைப் பார்த்துத்தான். கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், பன்னீர்செல்வத்தையும் பார்த்துத்தான். எப்படியோ சம்பாதித்துவிட்டு போகட்டும். அடுத்த தலைமுறையைப் பற்றி துளியாவது சிந்திக்கலாம் அல்லவா? ம்ஹூம். என்னதான் கத்தினாலும் காதிலேயே வாங்கிக் கொள்ளமாட்டார்கள்.