இந்த புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்தேன். மிகவும் எளிமையாக இருந்தீர்கள். நாளுக்கு நாள் உங்களை பிடித்துக்கொண்டே போகிறது. எனக்காக, நீங்கள் பூவுலகின் நண்பர்கள் கடைக்கு மின்மனி புத்தகச் சந்தா பற்றி கேட்க என்னை கூட்டி சென்றீர்கள்.
உங்களின் அறக்கட்டளை செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும், இன்று Rs. 5000 நிசப்தம் கணக்குக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் pdf ரசீது அனுப்பினால் போதும்.
உங்களின் இரண்டு புத்தங்களும் படித்து விட்டேன். நன்றாக இருந்தன. அந்த மசாஜ் பார்லர் கதையை எத்தனை முறை படித்தாலும், என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.
இதுவரை இரவல் காதலி, சென்னைக்கு மிக அருகில், லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன், மசால்தோசை 38 ரூபாய், அமெரிக்க தேசி புத்தங்களை படித்து முடித்ததில் உங்களுடைய எழுத்துக்கள்தான் satisfaction level high. fulfilled. நாவல்களோடு ஒப்பிடும்போது சிறுகதைகள் short and crispy.
நாவல்கள் சில சமயங்களில் இழுக்கின்றன. அதுவும் 600+ பக்கங்கள் தொடர்ந்து படிக்கும்போது, முடிவில் தலைவலியை தந்துவிடுகிறது, அது நாவலின் மீதும் சிறிது எரிச்சலை தந்துவிடுகிறது. மற்றபடி சிறுகதைகள் நேரமிருக்கும்போது படிக்கலாம், தொடர்ந்து கண்விழித்து படிக்க வேண்டியதில்லை.
உங்களை நாவல் எழுத சொல்லி கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. எழுதினால் 200/300 பக்கங்களுக்குள் எழுதி முடித்து விடுங்கள். மசால் தோசையில் அனைத்து கதைகளுமே சரியான அளவில் இருந்தன. At end of each story reading, ஒரு fulfilled ஐ தந்தன.
மேலும் அம்மாவிடம் சொல்லுங்கள். நீங்கள் எளிமையாக இருப்பது, உங்களோடு முடிந்து விடுவதில்லை. உங்களின் இந்த வரிகள் "எளிய மனிதர்களைச் சந்திக்கும் போது எந்தவிதத்திலும் அவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்டிவிடக் கூடாது என்று மனம் விழிப்பாகவே இருக்கும்" நாங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று எங்களைப் போன்ற வாசகர்களுக்கு நினைவூட்டுகிறது.
உங்களைப் புத்தக கண்காட்சியில் பார்த்த பிறகு, எனக்கு வேட்டியின் மேல் ஆர்வம் வந்திருக்கிறது. குறைந்தது குடும்ப விழாக்களிலாவது, கட்டினால் என்ன என தோன்றுகிறது.
நண்பன் ஒருவன் தனது சித்தப்பா ஒருவரை பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் மிகவும் நேர்மையாக மத்திய அரசு பணியில் வேலைபார்த்தவர். நேர்மையின் காரணமாக எதற்காகவும் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை, பணம் வாங்குவதும் இல்லை. அவரின் சக பணியாளர்கள் அனைவரும் மிகுந்த உயரத்திற்கு சென்றனர். ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள், சிறிய தொகைதானே, கொடுத்துவிட்டு பதவி உயர்வை வாங்கி அடுத்த நிலைக்கு செல்ல வேண்டியதுதானே என அலுவலகத்தில பலரும் இவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். இவர் மறுத்து விட்டு, பல வருடம் வேலை பார்த்து ரிடையரும் ஆகிவிட்டார். நண்பன் வருத்தத்தோடு கூறுவான், இவரின் நேர்மையால் யாருக்கு என்ன பயன் என்று.
இவர்கள் நேர்மையாக இருந்து கஷ்டப்படுவது, இவர்களுக்காக மட்டும் இல்லை. இவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எப்படி வாழ வேண்டும் என ஒரு vibration/inspiration message அனுப்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
மீடியா, இண்டர்நெட் என கவனச்சிதறல்கள் நிறைந்த இந்த உலகில், இந்த மாதிரி எளிமையான, நேர்மையான மனிதர்களை பார்ப்பதும், கேட்பதும், படிப்பதும் நல்ல செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. 90 சதவீத junk செய்திகளை தினசரி வாழ்வில் உட்கொள்ளும் நமக்கு இந்த மாதிரியான 2 அல்லது 3 சதவீத செய்திகள் தான் நம்மை சிறிதாவது மனித தன்மையோடு இருக்க செய்கின்றன.
விட்டால் நிறைய புலம்புவேன், இத்துடன் முடித்து கொள்கிறேன். நீங்கள் செய்வனவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள், எங்களுக்கு உங்களை நிறையப் பிடிக்கும்.
அன்புடன்
செந்தில்
***
செந்திலின் இந்தக் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது.
புத்தகம் பற்றிய குறிப்பைவிடவும் வேட்டி பற்றி எழுதியிருந்ததுதான் காரணம்.
மூன்றாண்டுகளாக பொது நிகழ்வுகளில் வேட்டி அணிவதை வழக்கமாக்கியிருக்கிறேன். ஆரம்பத்தில் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் மட்டும்தான். இப்பொழுது பெரும்பாலான இடங்களிலும் இதுதான் உடை. பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை. வேட்டி அணிவதால் மட்டும் பாரம்பரியத்தைக் காத்துவிட முடியாது என்கிற எண்ணம் உண்டு.
அப்பா காலத்து ஆட்கள் வேட்டியணிவது சாதாரணமான விஷயம். ஆனால் என்னைவிட பத்து வயது மூத்தவர்களில் பெரும்பாலானவர்கள்- சட்டையை டக்-இன் செய்து பெல்ட் அணிந்து கொள்கிறார்கள். என்னையொத்த வயதுடையவர்களும் அல்லது இளையவர்களும் குடும்ப நிகழ்வுகளில் அத்தனை பேரும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிகிறார்கள். ஆனால் எப்பொழுதும் வேட்டியணிந்து கொண்டிருப்பவர்கள் அருகி வருவதாகத்தான் தெரிகிறது. யாருமே அணிவதில்லை என்று சொல்லவில்லை- நான் பார்த்தவரையில் பெரும்பாலானவர்கள் அணிவதில்லை. அதனால் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் வேட்டிதான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இப்பொழுது அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். செந்தில் சொன்ன இதே கருத்தை இதுவரை மூன்று பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தவிதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்ற ஆண்டு லிண்ட்சே லோஹனுக்கு கிடைத்ததைவிடவும் மசால் தோசை 38 ரூபாய்க்கான ரெஸ்பான்ஸ்தான் ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கிறது. அந்தவிதத்திலும் சந்தோஷம்தான்.
முக்கியமான விஷயம்- மின்மினி.
குழந்தைகள்/சிறார்களுக்காக தமிழில் வரக் கூடிய முக்கியமான சஞ்சிகை என்று மின்மினியைச் சொல்லலாம். பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். மாதாந்திர சஞ்சிகை இது. தினம் ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் மகனுக்குச் சொல்லித்தர உதவுகிறது. ஒவ்வொரு மாதமும் எழில், கனி, பாரி என்னும் மூன்று குழந்தைகள் காட்டுக்குச் சென்று அங்கிருக்கும் ஏதாவதொரு வன விலங்குடன் உரையாடுவது போன்றும் அப்பொழுது அந்த விலங்குகள் தம் இனத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போலவும் சித்திரக் கதை இருக்கும். ஒரு மாதத்தில் பத்து தடவையாவது அந்தக் கதையைச் சொல்லித் தரச் சொல்லிக் கேட்கிறான். அது போக வேறு சில கதைகள், விலங்குகள் பற்றி, பறவைகள் பற்றி, காடுகள் பற்றிய செய்திகள், வண்ண நிழற்படங்கள் என்று ஏதாவதொரு விதத்தில் காடு மற்றும் இயற்கை சார்ந்த செய்திகளை குழந்தைக்குச் சொல்லித்தர முடிகிறது.
விவரங்கள் தேவைப்படுபவர்கள் 98416 24006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம். ஓராண்டுச் சந்தா இருநூறு ரூபாய்தான். கட்டி வைத்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கான சஞ்சிகை இருக்கிறதா என்று செந்தில் கேட்டவுடன் மின்மினிதான் நினைவுக்கு வந்தது. அரங்குக்கு அழைத்துச் சென்று காட்டினேன். அதை வைத்து நான் எளிமையாக இருப்பதாக புரிந்து கொண்டார். ஒரு நடுத்தர வர்க்கத்து ஆணுக்குரிய அத்தனை சிக்கல்களும் எனக்குண்டு. ஈகோ, கோபம், வன்மம் என்று கலவையாகத்தான் இருக்கிறேன். இப்படி அடுத்தவர்கள் ‘நீ நேர்மையாக இருக்கிறாய்; எளிமையாக இருக்கிறாய்’ என்று சொல்லிக் காட்டும் போது அவர்களது நம்பிக்கைக்காகவாவது இருக்கும் ஈகோவில் துளியைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வன்மத்தை கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க வேண்டியிருக்கிறது. கோபத்தை ஓரங்கட்டுகிறேன். இப்படியே விட்டால் என்னை உண்மையாகவே நல்லவனாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது. அது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். தம்பிக்கலை அய்யன்தான் காப்பாற்ற வேண்டும்.