குழந்தைக்கு எப்படி கதை சொல்வது என்று சிலர் கேட்டிருந்தார்கள். அதற்கு முன்பாக ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது அல்லவா? அதுதான் டிவியில் ஏகப்பட்ட கார்ட்டூன்கள் வருகின்றனவே என்றால் ‘டிவி பார்த்தால் கண் கெட்டு விடும்’ என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டியதில்லை. மூன்று விஷயங்களுக்காக குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்- முதலும் முக்கியமானதுமான விஷயம், குழந்தைகளுடனான நமது பிணைப்பு இறுகும். கதை சொல்லலின் வழியாக குழந்தைகளிடம் வெகு இயல்பாக நெருங்க முடியும்.
இரண்டாவதாக, குழந்தைகளின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். கதை கேட்கும் போது நம்மையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த கவனிப்பானது ஒரு பழக்கமாக மாறி வகுப்பறையில் மட்டுமில்லை வேறு எந்த வேலையைச் செய்யும் போதும் ஆழ்ந்த கவனத்தோடு செய்வார்கள்.
மூன்றாவதாக, கதை கேட்டலின் வழியாக குழந்தையின் கற்பனைத்திறன் வளரும். தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் சோட்டா பீம் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு பெரிய திரை விழுந்துவிடுகிறது. இதுதான் குதிரை; இதுதான் வில்லன்; இதுதான் குரங்கு என்று திரையில் தோன்றுவதைத் தாண்டி சிந்திப்பதில்லை. ஆனால் கதை கேட்கும் போது அப்படியில்லை- அஸ்கான் என்றொரு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘அவனுக்கு இவ்ளோ பெரிய கண்ணு; பல்லு ரெண்டும் அருவா மாதிரி; காது இருக்கே வாழை இலை மாதிரி பெருசா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் தங்கள் கற்பனையில் ஒரு உருவத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள். அருவாள், வாழை இலை போன்ற சம்பந்தமில்லாத பொருட்களை கதையின் ஓட்டத்தோடு கற்பனை செய்ய வைக்கிறோம் அல்லவா? வெவ்வேறு சம்பந்தமில்லாத பொருட்களை ஒரே நேரத்தில் சேகரிப்பதன் வழியாக மூளை பயிற்சி பெறுகிறது. இப்படித்தான் கற்பனையின் குதிரையை தட்டிவிட முடியும். தறிகெட்டு ஓடட்டும்.
அஸ்கான், முஸ்கான் போன்ற கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்குவதுதான் குழந்தைகளுக்கான கதை சொல்லலில் முக்கியமான காரியம். மகிக்கு கதை சொல்வதற்காக நன்னா, ஜிம்மி, ரோபோ, ஜொடாளி உள்ளிட்ட பத்து கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். ஜொடாளியும் ஜிம்மியும் நண்பர்கள். மலேசிய விமானம் கடலில் விழுந்த போது அதைத் தேடுவதற்கும், சோமாலியா கடற்கொள்ளையர்களைத் தாக்குவதற்கும், உக்ரைனை ரஷ்யா தாக்கும் போது அதைத் தடுப்பதற்கும் தேவையான வீரதீரச் செயல்களை ஜொடாளி செய்வான். இந்தக் கதாபாத்திரத்தின் வழியாக நிகழ்காலச் சம்பவங்களைச் சொல்லித் தந்துவிடலாம். ஜொடாளிக்கு உதவிகரமாக இருக்கும் சேட்டை நாய்தான் ஜிம்மி. காமெடி கதாபாத்திரம். ஓடிப்போய் எதிரியைக் கிள்ளி வைப்பது, கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற காரியங்களை அது பார்த்துக் கொள்ளும். இந்தக் கேரக்டரை அடிக்கடி கதைக்குள் கொண்டு வந்து சிரிக்க வைக்க முடியும். இவர்களின் நண்பனான ரோபோவுக்கு ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் உண்டு. இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு அப்படியென்றால் என்னவென்று எளிமையாக விளக்கிவிடுவேன். அதை விளக்குவதற்கு முன்பாக நம் மூளை குறித்தும் அதில் இருக்கும் நியூரான்கள் குறித்தும் கொஞ்சம் சொல்லலாம்.
ஆறு வயது குழந்தைக்கு இதெல்லாம் புரியுமா என்று முதலில் யோசனையாகத்தான் இருக்கும். ஆனால் நமக்குத்தான் அந்த சந்தேகம். குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
அதே போல அஸ்கானும் முஸ்கானும் இரண்டு டைனோசர்கள். Prehistoric கால உயிரினங்கள். பூமி எப்படி உருவானது என்பதிலிருந்து விழுகின்ற எரிகற்களை எப்படி அஸ்கானும், முஸ்கானும் சமாளிக்கிறார்கள் என்பது வரையிலான விஷயங்களைச் சொல்லித் தருவதற்கு இவர்கள் உதவுகிறார்கள். அப்பொழுது வனங்கள் எப்படியிருந்தன அதை மனிதர்கள் எப்படி அழித்தார்கள் போன்றவற்றை சொல்லித்தருவதற்கும் இந்த அஸ்கானும் முஸ்கானும்தான் பயன்படுகிறார்கள். Titanoba என்றொரு வரலாற்றுக்கு முந்தைய கால பாம்பு ஒன்றைக் குறித்துச் சொல்லிவிட்டு அது பிரேசிலின் அமேசான் காடுகளில் இருந்தது என்று கதை போகும். உலகிலேயே மிகப்பெரிய காடு அமேசான். தெரியுமா? என்று ஒரு பொது அறிவுக் கேள்வி ஒன்றைச் சொல்லித் தந்துவிடலாம். இந்தப் பாம்புக்கும் டைனோசருக்கும் சண்டை வரும். அதில் நாயகர்கள் ஜெயிப்பார்கள். இப்படியே கதை நீளும்.
இன்னொரு கதையில் நன்னா என்பவன் ஒரு குள்ளக் கத்தரிக்காய். விஞ்ஞானி ஒருவரிடம் எடுபிடியாக இருக்கிறான். அந்த விஞ்ஞானி எது குறித்து வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்வார். ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை கொடுத்தால் நன்னா ஓடிப் போய் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கும் தீவிரவாதிகளின் முகத்தில் அடித்துவிட்டு அவர்கள் வீட்டு பைப்புக்குள் புகுந்து தப்பித்து வருவான். திடீரென்று அந்த விஞ்ஞானி பறவையியல் பற்றி ஆராய்ச்சி செய்வார். Ornithology. அப்பொழுது ஹம்மிங் பறவை குறித்தும், மக்காவ் என்னும் கிளி குறித்தும் அதன் வாழ்க்கை முறை குறித்தும் சொல்லித் தருவார். இதெல்லாமே கதைகள் வழியாகத்தான் நடக்கும்.
மகன் ஒவ்வொரு நாளும் ஒரு கதையைக் கேட்பான். ஜொடாளி கதையிலும், அஸ்கான் முஸ்கானிலும் கடைசியாக என்ன சொன்னேன் என்பது எனக்கு மறந்திருக்கும். அவன் ஞாபகப்படுத்தித் தருவான். அதிலிருந்து தொடர்வேன்.
மகன் ஒவ்வொரு நாளும் ஒரு கதையைக் கேட்பான். ஜொடாளி கதையிலும், அஸ்கான் முஸ்கானிலும் கடைசியாக என்ன சொன்னேன் என்பது எனக்கு மறந்திருக்கும். அவன் ஞாபகப்படுத்தித் தருவான். அதிலிருந்து தொடர்வேன்.
இவை சாம்பிள்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது பெரிய காரியமே இல்லை. கொஞ்சம் பயிற்சி இருந்தால் போதும். ஆனால் என்னதான் பயிற்சி இருந்தாலும் நிறைய தயாரிப்பு இருக்க வேண்டும். எப்படியென்றால்- இன்று சொல்லப் போகும் கதையில் என்ன சப்ஜெக்ட்டை வைக்கிறோம் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட வேண்டும். கிருஷ்ணர் கதை, ராமர் கதை என்று சொல்லித் தருவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதை மட்டுமே கதையாக்க வேண்டியதில்லை. இயற்பியல், வேதியியல், கணிதம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்தப் பாடங்களில் நமக்கு அறிவு வேண்டுமல்லவா? அதனால் அந்தப் பாடங்கள் குறித்து சற்று தயாரிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
எனக்கு இயற்பியல் தெரியாதே, வேதியியல் தெரியாதே என்று யோசிக்க வேண்டியதில்லை. அனைத்து பாடங்களுக்கும் இணையத்தில் அடிப்படை கிடைக்கிறது. அடிப்படை அறிவை நாம் வளர்த்துக் கொண்டால் போதும். இயற்பியலும், வேதியியல் மட்டும் பாடங்கள் இல்லை. பொருளாதாரம், புள்ளியியல் என்று சொல்ல முடியும்.
அதெப்படி பொருளாதாரம் குறித்து கதை சொல்வது? அதற்கும் ஒரு உதாரணம் இருக்கிறது. நாம் இந்தியாவில் இருக்கிறோம். நமக்கு சீனா எதிரி நாடு. அங்கிருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறோம். ‘வெளிநாட்டிலிருந்து வாங்கினால் இறக்குமதி; நாம் வெளிநாட்டுக்கு விற்றால் ஏற்றுமதி’ இந்த வரியை புரியும் படி சொல்லித் தந்தால் போதும். பிறகு கதையை வளர்க்க வேண்டும். அப்படி இறக்குமதி செய்யும் கோதுமையில் விஷத்தைக் கலந்து அனுப்புகிறார்கள். அதை எப்படி ஜொடாளியும் அவனது டீமும் தடுக்கிறார்கள் என்று நீட்டிக்க வேண்டியதுதான். அடுத்த நாள் கதையில் நம்மைவிட வளர்ந்த நாடுகள் யாவை? அவை ஏன் வளர்ந்த நாடுகள் என்று சொல்லித் தரலாம்.
இருபது நிமிடக் கதையைச் சொல்வதற்கு ஆரம்பகட்டத்தில் குறைந்தபட்சம் பதினைந்து நிமிடத் தயாரிப்பு தேவை.
கணிதத்தை எடுத்துக் கொண்டால் அஸ்கான் ஒரு டீக்கடைக்குச் சென்றான். கையில் ஐந்து ரூபாய் வைத்திருந்தான். அங்கு மூன்று ரூபாய் கொடுத்து ஒரு சாக்லேட் வாங்கினான். மீதி எவ்வளவு இருக்கும்? என்ற கேள்வியை போகிற போக்கில் கேட்டால் போதும். குழந்தை பதில் சொன்னால் சந்தோஷம். இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் குழந்தைகளுக்கு பதில் தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் முகத்தைச் சுளிக்கவும் கூடாது. பதில் சொல்லித் தரலாம். சில குழந்தைகளுக்கு சில பாடங்கள் பிடிக்காது. அதனால் அதையே திரும்பத் திரும்ப முயற்சிக்க வேண்டியதில்லை.
நாம் டியூஷன் எதுவும் சொல்லித் தரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கதை சொல்கிறோம். அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த பாடத்தில் விருப்பம் இருக்கிறதோ அதைச் சொல்லித் தந்தால் போதும். அதே போல ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது. ஒரே நாளில் அத்தனையும் சொல்லித் தர முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சொல்லித் தர வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கதையை சுவாரஸியமாக்குவதுதான் நமது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, நிறையச் சொல்லித்தருகிறேன் பேர்வழி என்று டார்ச்சராக்கக் கூடாது. அப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்தால் ‘உன் கதையே வேண்டாம்’ என்று சொல்லிவிடுவார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக ஏதோ ஒரு உரையாடலில் லாபம், நட்டம் பற்றி மகனுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. வீட்டில் தொட்டியில் இருந்த மீன்கள் சில குஞ்சுகளைப் பொறித்திருந்தன. அதைத்தான் சொல்லித் தந்தேன். ‘நாம ரெண்டு மீன் வாங்கிட்டு வர்றோம். அதுல ஒரு மீன் செத்துப் போச்சுன்னா நட்டம். அதுவே அந்த மீன்கள் குஞ்சு பொறிச்சா அது நமக்கு லாபம்’. பிடித்துக் கொண்டான். இன்று பேச்சுவாக்கில் கேட்ட போது அச்சுபிசகாமல் திருப்பிச் சொன்னான்.
இதை பெருமைக்காகச் சொல்லவில்லை. சிலர் தங்களின் குழந்தைகள்தான் உலகிலேயே ஆகச் சிறந்த குழந்தைகள் என்பது போல எதையாவது எழுதிக் கொண்டிருக்கும் போது அலர்ஜியாக இருக்கும். அதையே நானும் செய்துவிடக் கூடாது என நினைக்கிறேன். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் நான் வல்லுநர் கிடையாது. ஆனால் சொந்த அனுபவத்திலிருந்து சில உபாயங்களைச் சொல்ல முடியும் என்பதற்காக இதை எழுதியிருக்கிறேன்.
எதையெல்லாம் சொல்லித் தர வேண்டும் என முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது. பெரும்பாலான விஷயங்களை நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வழியாகவே சொல்லித் தந்துவிட முடியும். தினமும் எழுதுவதற்காக நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. அந்த வாசிப்பு எனக்கு கதை சொல்வதில் பெருமளவு உதவுகிறது.
எதையெல்லாம் சொல்லித் தர வேண்டும் என முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது. பெரும்பாலான விஷயங்களை நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வழியாகவே சொல்லித் தந்துவிட முடியும். தினமும் எழுதுவதற்காக நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. அந்த வாசிப்பு எனக்கு கதை சொல்வதில் பெருமளவு உதவுகிறது.
இது எல்லோருக்குமே சாத்தியமான விஷயம்தான். துளி மெனக்கெட வேண்டும். அவ்வளவுதான். குழந்தைகளுக்காக இந்த மெனக்கெடலைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?