Jan 18, 2015

என்ன அக்கப்போர்?

இது வழக்கமான கூட்டமா என்று தெரியவில்லை. புத்தகக் காட்சியின் சில அரங்குகளில் கேட்டால் வழக்கத்தை விடவும் வியாபாரம் அதிகம் என்கிறார்கள். சில அரங்குகளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் விற்பனை கொஞ்சம் குறைவுதான் என்றார்கள். குழப்பமாகத்தான் இருந்தது. ஆனால் மொத்த வளாகமும் இந்தத் தலைமுறையின் இளைய வாசகர்களால் நிரம்பி வழிகிறது. கார்டைத் தேய்த்து புத்தகங்களை வாங்கிச் செல்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. மற்றவர்கள் எப்படியோ தெரியவில்லை- ஆனால் வாங்கிச் செல்லும் புத்தகங்கள் அனைத்தையும் நான் வாசிப்பதில்லை. வாங்குகிற புத்தகத்தில் நான்கில் ஒரு பங்கை வாசித்தால் பெரிய  விஷயம். ஆனால் சேகரித்து வைத்துக் கொள்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். எப்பொழுதாவது தேவைப்படும்.

எதற்காக இந்த ஆராய்ச்சி என்றால் நேற்று மாலை சன் நியூஸ் விவாத மேடைக்கு அழைத்திருந்தார்கள். பெங்களூரில் இருப்பதால் அடிக்கடி டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. நீயா நானாவுக்கு இரண்டொரு முறை அழைத்தார்கள். ஆனால் இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் நிகழ்ச்சியின் பதிவு இருக்கும் போலிருக்கிறது. முந்தின நாள் பகல் கிளம்பி வந்து அடுத்த நாள் பகலில் வீடு திரும்ப வேண்டும். இரண்டு நாட்கள் ‘கட்’ அடிக்க வேண்டியிருக்கும். அதுவுமில்லாமல் கூட்டத்திற்குள் பேசி சமாளிக்கும் அளவுக்கு எனக்கு பேச்சுத் திறமை போதாது.

சன் நியூஸில் அழைத்த போது சாயந்திர நேரம். புத்தகங்களுக்குள்ளாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். இடையில் மூன்று மணி நேரங்கள் இருந்தன. பெரிதாகத் தயாரிப்பு எதுவும் செய்து கொள்ளவில்லை. நல்ல சட்டையாக இல்லாததால் ஒரு வெள்ளைச் சட்டை மட்டும் வாங்கிக் கொண்டேன். ஐந்நூற்று எழுபது ரூபாய். பழைய சட்டையோடு கலந்து கொண்டால் வீட்டில் திட்டு வாங்க வேண்டியிருக்கும். ‘பிச்சைக்காரன் மாதிரி இருக்கான் பாரு’ என்பார்கள். எதற்கு அக்கப்போர்?

டிவியில் பேசிய பிரதாபத்தை எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை. பேசிய விவகாரத்தைப் பற்றி எழுத வேண்டும்.

புத்தக விற்பனை திருப்தியளிக்கிறதா என்பதுதான் முதல் கேள்வி. திருப்தியாக இருக்கிறது என்றேன். மசால் தோசை 38 ரூபாய் இதுவரைக்கும் ஐந்நூறு பிரதிகளாவது விற்றிருக்கும் என பதிப்பாளர் சொல்கிறார். பத்து நாட்களில் ஐந்நூறு பிரதிகள். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருக்கின்றன. எப்படிப்பார்த்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

கலாப்ரியா, அ.ராமசாமி மற்றும் போகன் சங்கர் ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பெருமாள் முருகன் விவகாரம், வாசிப்பின் தரம் முதலியன பற்றி கொஞ்ச நேரம் பேசினார்கள். நெல்சன் சேவியர் குறிப்பு கூட வைத்துக் கொள்வதில்லை. அவ்வளவையும் கோர்வையாக மண்டைக்குள் வைத்துக் கொள்கிறார். அடுத்து யாரைக் கேட்கப் போகிறேன் என்றெல்லாம் டிப்ஸ் கொடுப்பதில்லை. திடீரென்று ‘மணிகண்டன் நீங்க சொல்லுங்க’ என்கிறார். நேரடி ஒளிபரப்பு வேறு. கஷ்டமான கேள்வி எதையாவது கேட்டு மாட்டிவிடுவாரோ என பயம் இருந்தபடியேதான் இருந்தது.

புத்தகக் காட்சி வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறதா என்று கேட்டார். ஆமாம் என்று உறுதியாக நம்பலாம். ஏகப்பட்ட வாசகர்களை உள்ளே இழுக்கிறது. ஏதாவதொரு புத்தகத்தை வாங்கிச் செல்கிறார்கள். இன்றைக்கு வாசிக்கவில்லையென்றாலும் பிறகு எப்போதாவது வாசித்துப் பார்ப்பார்கள். நெய்வேலி, ஈரோடு, மதுரை என்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளின் வழியாக பல லட்சம் பேர்களுக்கு புத்தகங்கள் அறிமுகமாகின்றன என்பதுதான் உண்மை.

விவாதத்தில் Reading Pleasure, Readability பற்றிக் குறிப்பிட வேண்டியிருந்தது. இந்த அடிப்படையில் எழுதுவதுதான் எனது முதன்மையான விருப்பம் என்று வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. இலக்கியவாதியாக என்னைக் காட்டிக் கொள்வதைவிடவும் ‘சுவாரஸியமாக எழுதுகிறான்’ என்று யாராவது சொல்வதைக் கேட்பதைத்தான் விரும்புகிறேன். அந்த சுவாரஸியத்திற்குள் சின்னதாக ஒரு செய்தியை வைத்தால் போதும். இப்படி விரும்புவதற்கு நோக்கம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புதியவர்களுக்கு இணையம் வழியாகத் தமிழ் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களில் வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்தான் அதிகம். அத்தகைய  வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவர் இந்த எழுத்து வழியாக வாசிக்கத் தொடங்கினால் அல்லது அந்த வாசிப்பைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது இந்த எழுத்தைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் அதைத்தான் மிகப்பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வேன். Being a Bridge. இலக்கியவாதிகள் இதை இலக்கியம் இல்லை என்பார்கள். விருதுகள் எதுவும் தரமாட்டார்கள். ஆனால் அதற்காக சொங்கி விட வேண்டியதில்லை. அவர்கள் எப்பவுமே இப்படித்தான். பொருட்படுத்தத் தேவையில்லை.

பாருங்கள்- பெருமாள் முருகனைக் கூட ‘இலக்கியவாதி இல்லை’ என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் இந்த தீர்ப்பை வேறு மாதிரி பார்க்க முடியும். பெருமாள் முருகன் விவகாரம் தி கார்டியனில் வந்திருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட்டில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள், நியூயார்க் டைம்ஸில் வரப் போகிறது என்கிறார்கள். மாநிலம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அவருக்குக் கிடைக்கும் சர்வதேச கவனம் இங்கு சில எழுத்தாளர்களின் வயிறைக் கருக்குகிறது. எழுதிக் குவிக்கும் தன்னால் இந்த இழவெடுத்த தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்ட முடியவில்லையே என்கிற ஆதங்கம். எழவு வீட்டிலும் தானே பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலைதானே இங்கு இருக்கிறது? குறைந்தபட்சம் தமிழ் சமூகமாவது தன்னைப் பற்றி பேசட்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள். பாவம்.

(உலக அளவில் இன்று தமிழிலக்கிய முகங்களாக அறியப்படுபவர்கள் நால்வர் மட்டுமே– சல்மா, பாமா, பெருமாள் முருகன், இமையம். இவர்களை கொண்டு செல்லும் ஒரு பெரிய ‘சானல்’ செயல்படுகிறது. காலச்சுவடு,வ.கீதா,க்ரியா என அவர்கள் ஒரு பெரிய வட்டம். இவர்களில் இமையம் மட்டுமே இலக்கியவாதி என நேற்று பதிவிட்டிருந்தார். இன்று தேடினால் காணவில்லை. நீக்கிவிட்டார் போலிருக்கிறது)

பெருமாள் முருகன் போன்ற ஜாம்பவான்களைக் கூட இடது கையால் ஒதுக்கிவிடுபவர்கள் மத்தியில் என்னை மாதிரியான சில்லுண்டிகள் எப்படித் தப்பிக்க முடியும்? இங்கு யாரைப் போற்றுகிறோம், யாரை விமர்சனம் செய்கிறோம், யாரைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் சுயநல அரசியல் இருக்கிறது. அதனால் இலக்கியவாதிகளின் சான்றிதழ்களை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. சுவாரஸியமாக எழுதுவதன் வழியாகவே எவ்வளவோ காரியங்களைச் செய்ய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறது. இந்த நம்பிக்கை நானாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை இல்லை. நிசப்தம்.காம் உருவாக்கிய நம்பிக்கை.

பந்தாவுக்காக படம் ஒன்றை  போட்டுக் கொள்கிறேன் இருங்கள்- 


நல்லவேளையாக நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில் வீட்டில் மின்சாரம் இருந்திருக்கிறது. குடும்பத்தோடு அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். இனி மூன்று மாதத்திற்கு எதற்கும் திட்ட மாட்டார்கள். முதல் வேளையாக அனுமதிக்கப்பட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதலாக ஆயிரம் ரூபாய்க்கு இன்று புத்தகக் காட்சியில் புத்தகங்களை வாங்கிவிட வேண்டும்.யாராவது வருகிறீர்களா?