Jan 17, 2015

எப்படி உருப்படுவேன்?

சென்னையில் இறங்கிய போது அதிகாலை நான்கு மணி. மறுபடியும் எதற்கு சென்னை என்று கேட்கக் கூடாது. புத்தகக் கண்காட்சிக்குத்தான். ‘வந்தே தீர வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கானவர்கள் கேட்கவில்லையென்றாலும் இரண்டு பேர்கள் வற்புறுத்தினார்கள். ஒன்று நான். இன்னொன்று எனது மனசாட்சி. அதனால் பையைத் தூக்கி தோளில் போட்டு கிளம்பிவிட்டேன். பேருந்தில் கூட்டமே இல்லை. என்னையும் சேர்த்து மொத்தமே நான்கு பேர்கள்தான். ஆளுக்கு நானூறு ரூபாய். ஆயிரத்து அறுநூறு ரூபாய் பெங்களூரிலிருந்து சென்னை வரும் பேருந்தின் தேய்மானச் செலவுக்குக் கூட கட்டுபடியாகாது. ஆனாலும் வண்டியை இயக்குகிறார்கள். சித்தராமையாவுக்கு தைரியம் ஜாஸ்தி.

ஓட்டுநர் மட்டும்தான். அவரே வண்டியை ஓட்டுகிறார். அவரே டிக்கெட் கொடுக்கிறார். அவரே ஆட்களை இறக்கி விடுகிறார். நடத்துநர் கூட வண்டியில் இல்லை. தூங்காமல் பினாத்திக் கொண்டிருந்தேன். ஏன் தூக்கம் வரவில்லையென்பதைக் கடைசியில் சொல்கிறேன்.  நான்கு மணி வாக்கில் ஓட்டுநர் அருகில் வந்து பார்த்தேன். பூந்தமல்லி நெடுஞ்சாலை. இறங்கிவிட்டேன். அது ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியின் வாசல்.  ‘இனமான காவலர்’ நடத்தும் இருபத்தைந்து சொச்சம் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ஆரணி, சென்னை, பெங்களூர், கொடைக்கானல் என்று வளைத்து வளைத்துக் கட்டியிருக்கிறார். அது போக புதிய நீதிக்கட்சி. 'இனமான காவலர்' என்ற பட்டமும் ஆயிற்று. தனக்கு பின்னால் நிற்க சில நூறு ஜாதிக்காரர்களும் ஆயிற்று.இனி எவனாவது சொத்து மீது கண் வைக்க முடியுமா?

மோடி மற்றும் ஏ.சி.எஸ்ஸின் படங்களைப் போட்டு காலண்டர் அடித்து காவலாளியின் அறையில் மாட்டியிருந்தார்கள். மத்திய அரசே எங்கள் பக்கம்தான் என்று காட்டிக் கொள்கிறார்களாம். ஜாதிக்கட்சி நடத்துபவர்களில் முக்கால்வாசிப்பேர்- முக்கால்வாசி என்ன முக்கால்வாசி- கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். தேர்தல் வரைக்கும் சத்தமே இருக்காது. தேர்தலுக்கு முன்பாக இரண்டு மாதத்திலிருந்து கூட்டம் நடத்தத் துவங்குவார்கள். நோட்டீஸ் அடிப்பார்கள். பெரிய கட்சிகளுடன் பேரங்கள் நடத்தத் தயார் படுத்திக் கொள்வார்கள். கறுப்புப் பணத்தையெல்லாம் வெள்ளையாக்கிக் கொள்வார்கள். எங்கள் ஊர்ப்பக்கம் பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், உ.தனியரசு எல்லாம் கொங்கு வேளாளர் கட்சித் தலைவர்கள். அதில் தனியரசு மீதுதான் தமிழக எம்.எல்.ஏக்களிலேயே அதிக வழக்குகள். ஒரு கொலைக்கேஸ் உட்பட முப்பத்தியாறு வழக்குகள்.

சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திலிருந்து தலித்தியக் கட்சிகள் என்று நடத்தப்படுகிற விடுத்லைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் வரை எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் ஜாதியின் வழியாகத்தான் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள். பெரிய கட்சிகள் மட்டும் என்ன செய்கின்றன? சாதியின் அடிப்படையில்தானே மாவட்டச் செயலாளரிலிருந்து அமைச்சர்கள் வரை நியமிக்கப்படுகிறார்கள்? இவர்கள்தான் சாதியை ஒழிக்கப் போகிறார்களாம். கிலுகிலுவென்று ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை.

இப்படியான அரசியல் தலைகள் என்ன செய்கிறார்கள்? ஒன்று கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

சில நாட்களுக்கு முன்பாக தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் பேசினார். அவரது கல்லூரியில் ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தபட்சம் ஐந்து மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும் என்பது வாய்மொழி உத்தரவு. பொறியியல் கல்லூரி அது. ஒரு மாணவர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தினால் எட்டாயிரம் ரூபாய் கமிஷன் உண்டு. சேர்க்க முடியாவிட்டால் வேலைக்கு உலை உண்டு. அதனால் பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் போது ‘நீ எங்க காலேஜ்ல சேர்ந்தா உனக்கு எட்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்று ஆசை காட்டுகிறார்கள். அதாவது தங்களின் கமிஷன் தொகையைத் துறந்து வேலையைக் காத்துக் கொள்கிறார்கள்.

மாணவர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? ‘சார் அந்தக் காலேஜ்ல பத்தாயிரம் தர்றதா சொன்னாங்க..நீங்க எட்டாயிரம்தான் தர்றீங்க’ என்று பேரம் பேசுகிறார்களாம். இந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இன்னொரு கல்லூரி பேராசிரியரிடம் கேட்டேன். ‘உங்களுக்கு இப்போத்தான் தெரியுமா?’ என்கிறார். அவரும் ஒரு ஜாதிக்கட்சிக்காரரின் கல்லூரியில்தான் வேலையில் இருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தால் பொறியியல் கல்வி எப்படி விளங்கும்?

அது கிடக்கட்டும்.அதிகாலை நான்கு மணிக்கு வர வேண்டிய சிந்தனையா இது?

பேருந்தில் வந்த நான்கு பேரில் இரண்டு பேர்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஐடிவாலாக்கள். காதலர்களோ என்னவோ- கொஞ்ச நேரம் முன்வரிசையில்தான் அமர்ந்திருந்தார்கள். ஓசூர் தாண்டியதும் பின் வரிசைக்குச் சென்றுவிட்டார்கள். எனக்கு இரண்டு வரிசைகள் பின்பாக- எனக்கு ஏன் காணும் பொங்கல் இப்படி வாய்த்தது என்று தெரியவில்லை. என்ன கண்டேன் என்பதையெல்லாம் சொல்ல முடியாது. புத்தகக் கண்காட்சியில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இதையெல்லாம் எழுதாமல் அரசியல்வாதியைப் பற்றியும் கல்வித் தந்தையைப் பற்றியும் யோசித்துக் கொண்டு...எப்படி உருப்படுவேன்?