‘நல்லா மார்க்கெட்டிங் செய்யறீங்க’ என்றார். புத்தகத்திற்கான மார்க்கெட்டிங்கைத்தான் சொல்கிறார். ‘பின்ன செய்யாமல்?’ என்றேன். ரஜினி, ஷங்கர் கூட மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் வரை மார்க்கெட்டிங் செய்கிறார்கள். எழுத்தாளர்களும்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் செய்வதில்லை. வெட்கப்படுகிறார்கள். இங்கு ஜெயிக்கிற குதிரைகள் எல்லோருமே மார்கெட்டிங் செய்கிறார்கள். நான் என்ன ரஜினியா, கமலா? அல்லது நமது புத்தகம் வந்த உடனே வரிசையில் நின்று அள்ளி எடுத்துச் செல்வதற்கு ஹாரிபார்ட்டரை எழுதிய ஜே.கே.ரெளலிங்கா? ஒன்றுமேயில்லை. பிறகு மார்க்கெட்டிங் செய்யாமல் என்ன செய்வது?
வெளிப்படையாகச் சொன்னால் ராயல்டி மீதெல்லாம் எந்த ஆசையும் இல்லை. அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வரும் என்று நினைக்கிறேன். அதில் ஒரு கணக்கு இருக்கிறது. ஆயிரம் பிரதிகள் விற்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரதி நூறு ரூபாய். ஆயிரம் பிரதிகளுக்கு ஒரு லட்சம் கிடைக்கும். விற்பனையாளருக்கு கிட்டத்தட்ட நாற்பதாயிரம் போய்விடும். மிச்சமிருக்கிற அறுபதாயிரத்தில் புத்தகத் தயாரிப்புக்கு ஒரு தொகை. கடந்த வாரம் புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போதுதான் கரிகாலனிடம் விசாரித்தேன். ஆயிரம் பிரதிகளை அச்சடிக்க இருபத்தேழாயிரம் செலவாகியிருக்கிறது. இதையும் கழித்துவிட வேண்டும். முப்பத்து மூன்றாயிரம் ரூபாய் இருக்கும். இந்தத் தொகையில் வழக்கமாக ஆறு அல்லது ஏழு சதவீதம் தருவார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதுவும் ஆயிரம் பிரதிகள் விற்றால்தான் இந்தத் தொகை. பதிப்பாளர் மனது வைத்து அதிகபட்சமாக பத்து சதவீதம் கிடைத்தாலும் கூட எழுத்தாளனுக்குக் கிடைப்பது பெரிய தொகை இல்லை.
இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுதான் நிதர்சனம். அப்படியானால் இந்த ஐந்தாயிரம் ரூபாய்க்காகவா மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?
பணம் பிரதானமில்லை. என்னைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
முதல் விஷயம்- சராசரியாக ஒரு நாளைக்கு நான்காயிரம் பேர் வரைக்கும் இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள். அது மூன்றாயிரத்து முந்நூறாகவும் இருக்கலாம். நான்காயிரத்து எழுநூறாகவும் மாறும். சில சமயங்களில் ஒன்பது அல்லது பத்தாயிரத்தைக் கூடத் தொடும். ஆனால் அது எப்பவாவதுதான். இப்படி வருகிறவர்களில் எல்லோருமே தினமும் வாசிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. சிலர் கொஞ்ச நாட்களுக்கு வாசிப்பார்கள். பிறகு ஏதாவது ஒரு காரணத்தினால் தொடராமல் விட்டுவிடுவார்கள். போரடித்திருக்கலாம் அல்லது தங்களின் எழுத்தில் கவனம் செலுத்தலாம் இப்படி ஏதாவதொரு காரணம். இன்று புதிதாக முந்நூறு அல்லது நானூறு பேர் வந்திருந்தால் ஏற்கனவே வாசித்தவர்களில் இருநூறு அல்லது முந்நூறு பேர் கழண்டிருப்பார்கள். இப்படியொரு கணக்குப் போட்டால் மொத்தமாக இருபதாயிரம் பேருக்கு என் எழுத்தைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். என்றாலும் கூட அதில் எத்தனை பேர் புத்தகங்கள் வாங்குவார்கள்? அதிகபட்சம் முந்நூறு அல்லது நானூறு பேர்தான். இதைச் சொல்வதில் எனக்குச் சங்கடம் எதுவும் இல்லை. ஆனால் உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
யாவரும்.காம் பதிப்பகத்தினர் இருபத்தேழாயிரம் ரூபாயை புரட்டி - கடன் வாங்கியி- புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சென்ற முறை லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற ஒரு புத்தகத்தை மட்டும்தான் கொண்டு வந்தார்கள். அது புத்தகக்கண்காட்சி முடிவதற்குள்ளாக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் பிரதிகள் விற்றிருந்தன. அந்த உற்சாகத்தில் இந்த முறை வேறு சில புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். எப்படியும் ஒரு லட்சம் ரூபாயாவது தேவைப்பட்டிருக்கும். எல்லோருமே இளைஞர்கள். பெரிய வசதியெல்லாம் இல்லை. மாதச் சம்பளக்காரர்கள். ஒரு ஆர்வத்தில் செய்கிறார்கள். இந்த முறை வெற்றியடைந்தால் அடுத்த முறை கிட்டத்தட்ட ஏழெட்டு புத்தகங்களாகக் கொண்டு வருவார்கள். இப்படியாக ஒரு பதிப்பகம் நிலைபெறுகிறது அல்லவா? அதற்காகவாவது மீதமிருக்கும் எழுநூறு பிரதிகளுக்காக மார்க்கெட்டிங் செய்துதான் தீர வேண்டும்.
‘புத்தகம் பதிப்பகத்தின்’ வழியாக புத்தகத்தைக் கொண்டு வருவதாகத் திட்டமிட்டதற்கும் இதுதான் காரணம். ஏற்கனவே பிரஸ்தாபித்துவிட்ட பதிப்பகத்தில் கொடுப்பதற்கு பதிலாக புதிய பதிப்பகத்தின் வழியாகக் கொண்டு வந்தால் இன்னொரு பதிப்பகத்தின் உருவாக்கத்தில் பங்களிப்பு இருக்குமே என்ற ஆசைதான். அது புஸ்வானமாகிவிட்டது.
பதிப்பகம் என்பது முதல் விஷயம் என்றால் எழுத்தைப் பரவலாக்குவது என்பது இரண்டாவது விஷயம். என்னதான் இணையத்தில் எழுதினாலும் இன்னமும் இணையவாசமே இல்லாத பல லட்சம் வாசகர்கள் வெளியே இருக்கிறார்கள். அவர்களிடம் எழுத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் புத்தகமும் அதன் விற்பனையும் மிக முக்கியம். லட்சக்கணக்கானவர்களை அடைய முடியாது என்றாலும் ஐந்நூறு பேரையாவது அடைய முடியுமல்லவா?
‘எழுத்தும் சினிமாவும் ஒன்றா? எழுத்தை பண்டமாக்குகிறான்’ என்று யாராவது திட்டக் கூடும். ஆமாம். நானே கூட ஒரு சமயத்தில் நம்பிக் கொண்டிருந்தேன்- ‘ஒரு நல்ல வாசகன் ஏதாவதொரு காலத்தில் நல்ல எழுத்தைத் தேடி வருவான்’என்று. வருவார்கள்தான். ஜி.நாகராஜனையும், தி.ஜானகிராமனையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதிவேகமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. வாழும் காலத்தில் பிறருக்கு நம்மால் முடிந்ததை எழுதுவதினால் செய்ய முடியும் என்றால் அது போதும்.
எழுதுபவனுக்கு இணையம் மிகப்பெரிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. எந்த பெரிய எழுத்தாளருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எந்த பதிப்பகத்தின் நிழலையும் அண்டியிருக்க வேண்டியதில்லை. எழுத்தை நம்பினால் போதும். வெளிப்படையாக மனதில் தோன்றுவது எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகச் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இதுவும்.
நேர்மையாகத்தானே இந்த மார்க்கெட்டிங்கைச் செய்து கொண்டிருக்கிறேன்? இல்லாததும் பொல்லாததுமாக எதுவும் சொல்வதில்லை. யாரையும் வசைபாடுவதில்லை. இதுதான் மணிகண்டன், இதுதான் ரியாலிட்டி, இதுதான் ப்ராக்டிகல் என்று எதை நினைக்கிறேனோ அதை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது கூட ஓவர் டோஸாகப் போய்விடக் கூடாது என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.
அவனவன் பிரச்சினை அவனவனுக்கு. விடுங்க சார்...பாவம்!
அவனவன் பிரச்சினை அவனவனுக்கு. விடுங்க சார்...பாவம்!