பெருமாள் முருகன் இனிமேல் எழுதப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதுவரை எழுதியதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறாராம். அவரது அறிக்கை இதுதான் -
***
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக
***
இதைத்தான் எதிர்பார்த்தார்கள். முடித்துவிட்டார்கள். நாவலின் நான்கு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய குழுவினருக்கு மட்டும் இது வெற்றியில்லை. பெருமாள் முருகனின் ஆளுமையைப் புரிந்து கொள்ளாமல் ‘இது ஒரு நாடகம்...புத்தகத்திற்கான விளம்பரம்’ என்று தங்களைப் போலவே அவரையும் நினைத்துக் கொண்டு புலனாய்வு செய்த இலக்கிய RAW அமைப்பினருக்குமான வெற்றி இது.
இதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. எந்தச் சாதியைப் பற்றியும், எந்த மதத்தைப் பற்றியும் அல்லது எந்த இனத்தைப் பற்றியும் யார் எழுதினாலும் இதுதான் முன்னுதாரணமாக இருக்கும். போராடக் கிளம்பி வருவார்கள். எழுதுவதென்றால் பாராட்டியும் புகழ்ந்தும் எழுதலாம் ஆனால் விமர்சனம் செய்யக் கூடாது என்பார்கள். அதுதான் நடக்கப் போகிறது.
‘ஓர் ஊரை பழிக்கலாமா என்றும் அந்த ஊரின் பெண்களை இழிவுபடுத்தலாமா’ என்று கேட்பவர்களின் குரலை உதாசீனப்படுத்தவில்லை. இது ஒரு எமோஷனலான விஷயம்தான். ஆனால் புரிந்து கொண்டு பேசுவார்கள் என்று எதிர்பார்த்த சில இந்துத்துவ நண்பர்கள் கூட கண்களை மூடிக் கொண்டு எதிர்ப்பதுதான் வேதனையாக இருக்கிறது. மதம், சாதி, கட்சி என்று வந்துவிட்டால் கண்களை மூடிக் கொள்கிறார்கள். தனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருப்பவன் எதைச் சொல்கிறானோ அதையேதான் திரும்பச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்த நாவலும் பேசக் கூடிய விஷயத்தை எந்த ஒரு எதிர்ப்பாளரும் பேசுவதாகத் தெரியவில்லை. இந்த நான்கைந்து பக்கங்கள்தான் கண்களை உறுத்துகின்றன.
‘பெருமாள் முருகனை எதிர்ப்போம்’ என்கிற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றைத் தொடங்கி இஷ்டத்திற்கு வசை பொழிகிறார்கள். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரின் பங்களிப்பு பற்றி இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று புரியவில்லை. பெருமாள் முருகன் தொகுத்த சொல்லகராதிதான் கொங்கு வட்டார வழக்கின் முழுமையான அகராதி எனலாம். அவர் தொகுத்த ‘சாதியும் நானும்’ என்ற புத்தகம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பைத் துல்லியமாகச் சொல்லும் ஆவணம். இதுவரை பதிவு செய்யப்படாத கொங்குவட்டாரத்தின் சந்துகளையும் இருள் படிந்த பகுதிகளையும் அவரது நாவல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன என்று சொன்னால் அது மிகையான பாராட்டு இல்லை. கொங்கு வட்டார வழக்கையும் அந்தப் பகுதியின் வாழ்வியலையும் Contemporary இலக்கியத்தில் பதிவு செய்த பெருமாள் முருகனின் பங்களிப்பை நம்மால் எந்தவிதத்திலும் உதாசீனப்படுத்திவிட முடியாது.
சரி. அவரது அத்தனை பங்களிப்பையும் ஒதுக்கிவிடலாம். அவர் ஏன் தனது நாவலில் சாமி புள்ள பற்றி எழுதினார் என்று கேட்கலாம். ஆனால் அதற்கு முன்பாக நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. கோவில்களில் இருக்கும் பாலியல் சிற்பங்களை என்ன செய்யப் போகிறோம்? அவை வெறும் பாலியல் சிற்பங்கள் என்று சுருக்கிவிட முடியாது. இன்றைய நம் அளவுகோலின்படி வக்கிரமான சிற்பங்கள் என்று பல நூறு சிற்பங்களை நம்மால் கணக்கெடுக்க முடியும். அவற்றையெல்லாம் உடைத்து நொறுக்கப் போகிறோமோ? அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதுதான் நாகரீகம் வளர்ந்துவிட்டதே என்று யாராவது கேட்கலாம்தான். இந்த நாகரீகத்தில் முறையற்ற உறவு என்பதே இல்லாமல் இருக்கிறதா? எல்லோரும் யோக்கியமானவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அதையெல்லாம் என்ன செய்யப் போகிறோம்? அல்லது இதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்களில் முறையற்ற உறவுகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லையா? அவற்றிற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
ஒரு நாவலின் சில பகுதிகளுக்காக ஒரு எழுத்தாளனை கையை முறித்து முடக்கயிருக்கிறோம். இப்படி ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு விருப்பமானதைச் சாதித்துக் கொள்ளட்டும். அடுத்து ஒவ்வொருவரின் குரல் வளையாகத் தேடி வருவார்கள். இத்தனை அக்கப்போர் நடக்கிறது. ஒரு கட்சியாவது வாயைத் திறந்திருக்கிறதா? சாதி வாக்கு போய்விடும்.
சிலர், பெருமாள் முருகனை கோழை என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். முரட்டுத்தனமான ஒரு குழு தனக்கு எதிராகத் திரண்டு நிற்கும் போது ஒரு எழுத்தாளன் வேறு என்ன செய்ய முடியும்? அவனது குடும்பமும், குழந்தைகளும்தானே கண்களில் தெரியும்? மாவட்ட வருவாய் அலுவலரின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகிறார்கள். வேலைக்கு பிரச்சினை வரும். தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சிரமம் வரும். என்ன செய்வான் அந்த எழுத்தாளன்? எவனோ எப்படியோ போகட்டும் என்று தனது முப்பதாண்டு கால உழைப்பையும் முப்பது வரி அறிக்கையின் வழியாக குழி தோண்டி புதைத்துவிட்டு பின்னால் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிவிட்டுச் செல்கிறான்.
இது ஒரு முரட்டுத்தனமான போக்கு. பெருமாள் முருகன் காலச்சுவடோடு தொடர்புடையவர் என்பதற்காகவே காலச்சுவடுடன் பகை கொண்ட குழுவினர் ‘இது ஒரு நாடகம்’ என்று பரப்பினார்கள். இப்படி பரப்பியவர்கள் இலக்கிய வாதிகள். ஏற்கனவே சாதி, மதம் என்று முனையோடு இருக்கும் வெகுமக்களிடம் நான்கு பக்கங்களை மட்டும் பிரதி எடுத்துக் கொடுத்து அவர்களை சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும், ஊரின் அடிப்படையிலும் ஒன்று திரட்டினார்கள். இப்படித் திரட்டியவர்கள் அரசியல்வாதிகள். இதை எவ்வளவு சென்ஸிடிவ் ஆக்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்ஸிடிவ் ஆக்கினார்கள். சென்ஸிடிவ் ஆக்கியவர்கள் உள்ளூர்வாசிகள். காவல்துறையிலிருந்து மாவட்ட நிர்வாகம் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் கையெழுத்திட்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இது ஒரு முரட்டுத்தனமான போக்கு. பெருமாள் முருகன் காலச்சுவடோடு தொடர்புடையவர் என்பதற்காகவே காலச்சுவடுடன் பகை கொண்ட குழுவினர் ‘இது ஒரு நாடகம்’ என்று பரப்பினார்கள். இப்படி பரப்பியவர்கள் இலக்கிய வாதிகள். ஏற்கனவே சாதி, மதம் என்று முனையோடு இருக்கும் வெகுமக்களிடம் நான்கு பக்கங்களை மட்டும் பிரதி எடுத்துக் கொடுத்து அவர்களை சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும், ஊரின் அடிப்படையிலும் ஒன்று திரட்டினார்கள். இப்படித் திரட்டியவர்கள் அரசியல்வாதிகள். இதை எவ்வளவு சென்ஸிடிவ் ஆக்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்ஸிடிவ் ஆக்கினார்கள். சென்ஸிடிவ் ஆக்கியவர்கள் உள்ளூர்வாசிகள். காவல்துறையிலிருந்து மாவட்ட நிர்வாகம் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் கையெழுத்திட்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
‘ஒரு எழுத்தாளனின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்?’ என்று கேட்டால் ‘அந்த ஊர் மக்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்?’ என்று கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு கோணம் இருக்கிறது அல்லவா? இந்தப் பக்கம் இருந்து பார்த்தால் இது சரி; அந்தப் பக்கம் இருந்து பார்த்தால் அது சரி.
இந்த நாவல் எதிர்காலத்தில் தவறான தரவாகிவிடும் என்று கருதி போராடினோம் என்று யாராவது சொன்னால் அதைத் தவறான வாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. சரியான கருத்துத்தான். ஆனால் அந்தப் பிரச்சினையைக் களையும் வழிமுறைதான் திகிலூட்டுகிறது.
இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறைதான் உலகமயமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் சிந்தனைகளை மிக மிகச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். முதலில் மனிதன், அப்புறம் இந்தியன், பிறகு தமிழன், அப்புறம் மதம், கடைசியில் சாதி என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் நாம் அப்படியே எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் சாதிதான்.
இதை எழுதுவதால் முற்போக்கு வாதம் பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை- ஏன் விவாதம் என்பதே இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்? எல்லாவற்றிலும் உத்தரவிட்டு பழகிவிட்டோம். எனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவன் செய்யக் கூடாது. அவ்வளவுதான். முன்முடிவுகளோடுதான் பிரச்சினைகளை அணுகுகிறோம். நாகரீக சமுதாயம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவது போல் இல்லையா?
ஒன்று மட்டும் புரியவில்லை. இவர்கள் இவ்வளவு பிரச்சினை செய்யவில்லையென்றால் வழக்கம் போல அந்நாவல் முந்நூறு பிரதிகள் விற்றிருக்கும். அந்த முந்நூறு பிரதிகளை வாங்கியவர்கள் படித்துவிட்டு மறந்திருப்பார்கள். அதோடு சரி. இப்பொழுது பிரச்சினை அந்த நாவலின் உள்ளடக்கத்தில் இல்லை- அதை வைத்து ஆதாயம் தேட முயன்ற யாரோ சிலரின் நடவடிக்கையில்தான். அவர்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டார்கள். ஒரு கூட்டத்திற்கு சந்தோஷம். ஒரு எழுத்தாளன் முடங்குகிறான். ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான். அடுத்த அரை மணி நேரத்தில் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்குவோம். வென்றவர்கள் கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டு அடுத்த கழுத்தை நோக்கி வருவார்கள். எல்லாவற்றையும் விட நமக்கு கழுத்து முக்கியமில்லையா? வாயைப் பொத்திக் கொள்கிறேன். கழுத்து தப்பிக்கட்டும்.