Jan 12, 2015

எவ்வளவு செலவாகும்?

எழுதுகிறவன் சமூகத்தின் போக்கில் ஓடாமல் எதிர்த் திசையில் ஓட வேண்டும் என்கிற வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எப்பொழுதும் பேனாவை தாவாக்கொட்டைக்கு கீழாக வைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தபடியே நிழற்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பது போலவே இதுவும் ஒரு Myth. எழுதுகிறவன் இந்த சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ‘இவனும் நம்மைப் போலத்தான்’ என்கிற நினைப்பு வாசிக்கிறவர்களுக்கு வர வேண்டும். வாசகர்களின் போக்கிலேயே ஓடியபடி அவ்வப்பொழுது ஒரு மின்னல் கீற்றைப் பாய்ச்சத் தெரிந்தால் போதும். 

‘இவன் சொல்வதும் சரியாக இருக்குமோ?’என்கிற நம்பிக்கையை உருவாக்கி அந்தத் திசையில் மற்றவர்களைப் பார்க்கச் செய்வதுதான் இன்றைக்கு எழுதுகிறவனின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை எதிர்கொள்வதைத்தான் சமகால எழுத்தாளனின் வெற்றியாகக் கருதுகிறேன். அதற்கு காரணமிருக்கிறது- இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான தகவல்களும் எல்லோருக்கும் கிடைக்கின்றன. நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற மாதிரியான மனநிலையில் எல்லோரும் ஓடுகிற திசைக்கு எதிரில் ஓடுகிறேன் என்று வலுக்கட்டாயமாக எதிர்த்திசையில் பயணித்தால் சீண்டக் கூட மாட்டார்கள். அப்படி ஓடிப் பார்க்க விரும்புபவர்கள் ஓடலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எந்தவிதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளாமல் இந்தச் சமூகத்துடன்தான் ஓட விரும்புகிறேன். இப்படி இருப்பதற்கு நடுத்தரப் புத்தி, மந்தைக் கூட்டம் என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக் கொள்ளலாம். அது பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. 

கார்போரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு ‘உய்வதற்கு கம்யூனிஸம்தான் ஒரே வழி’ என்று புரட்டுவாதம் பேச வேண்டியதில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் வாழ்கிற சமூகத்தில், நம்மோடு வாழ்கிற மக்களுடன் சேர்ந்து எதெல்லாம் சாத்தியமோ அதைப் பேசுவோம். எப்படியிருக்கிறோமோ அதை வெளிப்படையாக எழுதுவோம். Write from your soul என்பார்கள். அப்படி. பக்கத்துவீட்டுப் பையனொருவன் திண்ணையில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியில். இதெல்லாம் பிற புரட்சிவாத/கலகக்கார எழுத்தாளர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இதுதான் சாத்தியம். ஒரு சாதாரணன் அப்படித்தான் இருக்க முடியும். 

இதை எதற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்- புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்கள்தான் வாசிக்கிறவர்களின் Pulse பார்க்க முடிகிற இடம். எந்த இடத்தில் நாம் விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் எந்த இடத்தில் பிறரோடு நெருங்கியிருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பேசிய ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு கருத்து இருக்கிறது. எல்லோரிடமும் ஒரு விமர்சனம் இருக்கிறது; ஒரு பாராட்டு இருக்கிறது. இத்தனை லட்சம் மனிதர்களின் முகங்களை வேறு எங்கே போய் பார்க்க முடியும்? - அதுவும் அத்தனை பேரும் வாசிப்போடு ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவர்கள்- இத்தனை ஆயிரம் மனிதர்களின் வாசிப்புச் சுவையை வேறு எப்படி தெரிந்து கொள்ள முடியும்? இத்தனை நூறு மனிதர்களிடம் வாசிப்பு பற்றி வேறு எந்த இடத்தில் பேச முடிகிறது? 

ஒவ்வொரு வருடக் கண்காட்சியும் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுத் தருகிறது. நிஜமாகவேதான். பை நிறைய புத்தகங்களைச் சுமந்து வருகிறேனோ இல்லையோ புரிதல்களைச் சுமந்து வருகிறேன்.

மாதொருபாகன், மிளிர்கல் போன்ற புத்தகங்களை அள்ளியெடுக்கிறார்கள். விகடன், கிழக்கு, காலச்சுவடு, உயிர்மையெல்லாம் கல்லா கட்டுகிறார்கள். பூவுலகின் நண்பர்கள் போன்ற அரங்குகளிலும் கால் வைக்க முடியாத அளவுக்குக் கூட்டம். டிஸ்கவரி மாதிரியான கடைகளில் கார்ட் வேலை செய்யவில்லை என்று சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கான வியாபாரம் அடி வாங்கியது. பத்து பதினைந்து புத்தகங்களை எடுத்து வருவார்கள். கார்ட் வேலை செய்யவில்லை என்று தெரிந்ததும் எடுத்த புத்தகங்களை அப்படியே கொடுத்துவிடுகிறார்கள். இன்றிலிருந்து கார்ட் வேலை செய்கிறது என்கிறார்கள். ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்.

விநாயகமுருகன், அதிஷா போன்றவர்களுக்கு நல்ல மாஸ். ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான உதாரணங்கள் இவர்கள். நல்ல ராயல்டி ப்ராப்திரஸ்து. 

சுஜாதா, கல்கி எல்லாக்காலத்திலும் அசைக்கமுடியாதவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது.

wecanshopping தளத்தின் குகன் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். புத்தகங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. சமையல் புத்தகங்கள் மட்டும்தான் விற்பனையாகும் என்பதெல்லாம் புரளி. சகல புத்தகங்களையும் அள்ளுகிறார்கள். சுந்தர ராமசாமியைத் தேடும் இருபது வயது இளைஞர்கள் இருக்கிறார்கள். எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் கதையைப் பேசக் கூடியவர்கள் புழங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். புத்தக ஆர்வம் பொங்கிப் பிரவாகமெடுக்கிறது. பயன்படுத்திக் கொள்வது பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் இதுவும் கூட மொத்த மக்கட்தொகையில் துளி சதவீதம்தான். புத்தகக் கண்காட்சியில் நம்மை அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடிய அல்லது நாம் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடிய பல நூறு மனிதர்களைப் பார்க்க முடியும். ஆனால் வெளியில் வந்து பேருந்தில் ஏறினால் ஒரு மனிதருக்கும் நம்மைத் தெரியாது நமக்கும் ஒருவரையும் தெரியாது. 

ஆக, ஒரு வட்டத்திற்குள்தான் இருக்கிறோம். அந்த வட்டமே இத்தனை லட்சம் புத்தகங்களைப் புரட்டியெடுக்கிறது என்றால் வெளியில் இருப்பவர்களுக்கும் புத்தக ஆர்வம் வருமாயின் நிலைமை என்னவாகும்?

இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது-

நேற்று மாலை வரைக்கும் கண்ணதாசன் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தார். யாவரும்.காம் பதிப்பகத்தின் முதலாளி. இரவில் பெங்களூருக்குக் கிளம்பும் போது அருகில் வந்து ‘மசால் தோசை புஸ்தகத்தை ஒன்னா நாற்பது ப்ளஸ் பெரியவர்கள் வாங்குகிறார்கள். இல்லையென்றால் உங்க வயது ஆண்கள் வாங்குகிறார்கள்..ஏன் எந்தப் பெண்ணும் வாங்குவதில்லை’ என்றார். எப்படியெல்லாம் கவனிக்கிறார்கள் பாருங்கள். இதைக் கேட்டதற்குப் பதிலாக ஒரு உலக்கையைத் தூக்கி வந்து பின் மண்டையில் அடித்திருக்கலாம். எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் இது ஒரு மிகப்பெரிய கறை. ஏதாவதொரு ஏஜென்ஸி மூலமாக நாற்பது அல்லது ஐம்பது பெண்களை அனுப்பி வாங்கச் சொல்லியாவது கறையைத் துடைக்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.