முன்பெல்லாம் அரசுப் பேருந்தில் படம் போடுவார்கள். திரும்பத் திரும்ப ஒரே படங்கள்தான் என்றாலும் பொழுது போகும். பேருந்தில் இருக்கும் டிவி, வீடியோ பராமரிப்புக்காக காண்ட்ராக்டர்கள் உண்டாம். ஒரு பேருந்துக்கு இருபது ரூபாயோ அல்லது முப்பது ரூபாயோ அந்த ஒப்பந்ததாரர்களுக்கு கொடுப்பார்கள். இப்பொழுது அந்த ஒப்பந்ததாரர்களை துரத்தியடித்துவிட்டார்கள் போலிருக்கிறது. வீடியோவும் இல்லை ஆடியோவும் இல்லை. பேருந்துக்கு வெளியில் சொகுசுப்பேருந்து என்று எழுதியிருப்பதைப் பார்த்து நம்பி ஏறினால் அவன் செத்தான் என்று அர்த்தம்.
புத்தகக் கண்காட்சிக்காகச் சென்னை செல்வதாகச் சொன்னவுடன் சுந்தர், தினேஷ், செந்தில் ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். எப்படியும் அடுத்த வருட புத்தகக் கண்காட்சிக்கு ஒரு லாரியைப் பிடித்து அது நிறைய ஆட்களைத் திரட்டி வந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த அரசுப்பேருந்துகளுக்கு லாரிகள் எவ்வளவோ தேவலாம். சுந்தர்தான் ‘சார் இந்த வண்டியில் ஏறிக்கலாம்...சாதாரணப் பேருந்து வேண்டாம்’ என்றார். நானும் சலனப்பட்டுவிட்டேன்.
உள்ளே மூட்டைப் பூச்சி, கொசுவெல்லாம் கடிக்கிறது. பேருந்தில் முன்பக்கமாக இருந்த இரண்டு மூன்று பெண்கள் கத்தினார்கள். ‘அவ்வளவுதானே? இருங்க ஒரு வழி பண்ணுறேன்’ என்று சென்ற நடத்துநர் விளக்குகளை போட்டுவிட்டார். ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவர் கொடுத்த விளக்கம் முக்கியமானது. ‘இனி கொசு கடிச்சா அடிப்பதற்கு இந்த வெளிச்சம் வசதியா இருக்கும்’ என்றார். நம்மவர்களின் அறிவுக்கு ஈடு இணை உண்டா? அதன் பிறகு வெளிச்சத்தில் உறக்கம் வராமல் இரண்டரை மணி வரை புரண்டு கொண்டிருந்தேன். துளியூண்டு தூக்கம் வந்தது. அரை மணி நேரம்தான் இருக்கும். ஓட்டுநருக்கு என்ன எரிச்சலோ? ஒரு குழிக்குள் விட்டு ஏற்றினார். அவ்வளவுதான். மொத்தத் தூக்கமும் போய்விட்டது.பிறகு ஏற்றமும் இறக்கமும்தான். பின் வரிசைகளில் இருந்தவர்கள் கத்தத் துவங்கினார்கள். சில பல கெட்ட வார்த்தைகள் ஓட்டுநரை நோக்கிப் பறந்தன. அவர் கண்டுகொள்ளவேயில்லை. மூன்றரை மணிக்கெல்லாம் தூக்கம் வராத பிரகஸ்பதிகள் ஜன்னலைத் திறந்துவிட்டார்கள். காதுக்குள் புகுந்த குளிர்க் காற்று வாய் வழியாக வந்து தொண்டையைப் பதம் பார்த்துவிட்டது.
ஏன் இப்படி கேவலமாக வண்டிகளை இயக்குகிறார்கள் என்று தெரியவில்லை. கே.பி.என் னும், எஸ்.ஆர்.எஸ்ஸூம் யானை விலை குதிரை விலையில் டிக்கெட் விற்கிறார்கள். அப்படியிருந்தும் ஆட்கள் அங்குதான் மொய்க்கிறார்கள். வெள்ளிக்கிழமையன்று கூட அரசுப் பேருந்துகள் காற்று வாங்குகின்றன. நஷ்டம் என்றால் நஷ்டமாகாமல் என்னவாகும்? பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பேருந்துகளைப் பார்க்க வேண்டுமே. தனியார் பேருந்துகளுக்கு எந்தவிதத்திலும் சளைக்காமல் வைத்திருக்கிறார்கள். வீடியோ உண்டு; ஏ.சி.உண்டு- இதெல்லாம் கூட இல்லாவிட்டால் பரவாயில்லை.தமிழகப் பேருந்துகளில் இருக்கைகள் இருக்கை மாதிரியாவது வைத்திருக்க வேண்டாமா? ச்சை.
போக்குவரத்து ஊழியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். தனியார் பேருந்துகளின் முதலாளிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட மேல்மட்ட ஆட்களை செமையாக கவனித்துவிடுகிறார்களாம். அதனால் மேல்மட்ட ஆட்கள் அரசுப் பேருந்துகள் இப்படியே நாசமாகப் போகட்டும் என்று விட்டுவிடுகிறார்களாம். இப்படிக் கேவலமாக இருந்தால்தானே தனியார் பேருந்து முதலாளிகளின் தொப்பைக்குள் பாலாறும் தேனாறும் பாயும்? இப்படியே நஷ்டத்தின் மீது நஷ்டமாகக் காட்டி போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்கிறார்கள்.
தபால்துறை நாசமாக்கப்பட்ட போது தனியார் கூரியர் சர்வீஸ் ஆட்களின் கைங்கர்யம் பின்னணியில் இருக்கிறது என்றார்கள்.எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எம்.ஜி.ரோடு மாதிரியான இடங்களில் இருக்கும் ப்ரொபஷனல் கூரியர்ஸில் வரிசை கட்டி நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதே ஏரியாவில் இருக்கும் தபால் துறை அலுவலகத்தில் காண்டம் தவிர வேறு எல்லாவற்றையும் விற்றுக் கொண்டு காலத்தை-ஈயை- ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
BSNL ஆட்டம் கண்ட போது தனியார் மொபைல் ஆபரேட்டர்கள் பணத்தால் அடிக்கிறார்கள் என்றார்கள். அப்படித்தான் ஒவ்வொன்றும் போலிருக்கிறது.
எப்படியோ போகட்டும்.
நேற்று நான்கு கோழிக்குஞ்சுகள் வாங்கியிருந்தேன். வண்ணக் குஞ்சுகள். அவர் தமிழ்நாட்டுக்காரர்தான். சைக்கிளில் வைத்து பெங்களூருக்குக்குள் விற்கிறார். தமிழ்நாட்டில் ஒரு குஞ்சு ஐந்து ரூபாய்.தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு கொண்டுவர போக்குவரத்துச் செலவு உட்பட அடக்கவிலை ஆறு ரூபாய். பெங்களூரில் பத்து ரூபாய்க்கு விற்கிறார். நேற்று நூறு குஞ்சுகள் விற்றிருந்தார். நானூறு ரூபாய் இலாபம். ‘போதுமா’ என்றேன். ‘வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு’ என்றார். அதற்கு மேல் வருமானம் பற்றி கேட்கவில்லை.அப்பொழுதே மணி இரவு ஒன்பது மணி இருக்கும். இனி அவர் சாந்தி நகர் பேருந்து நிலையத்திற்குச் செல்கிறார். பதினோரு மணிக்கு வந்து சேரும் பேருந்தில் ஒரு கூடை கோழிக்குஞ்சு வரும். அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். வீடு பொம்மனஹள்ளியில் இருக்கிறது.இந்தக் கோழிக்குஞ்சுகளை ஊரிலிருந்து ஏஜெண்ட் ஒருவர் அனுப்பி வைக்கிறார். இரண்டு நாட்களுக்கு ஒரு கூடை. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அவர் வந்து பணம் வாங்கிக் கொள்வார். சாப்பாடு இல்லாமல் சைக்கிள் மிதித்துக் கொண்டிருக்கிறார்.
பூவிருந்தவல்லியில் இறங்கிய போது அதிகாலை மணி நான்கரை. சைக்கிளில் சுக்குக்காபி விற்பவர் ஒவ்வொரு பேருந்தாக வரவேற்றுக் கொண்டிருந்தார். ஒரு காபியை வாங்கிக் கொண்டு ‘ராத்திரி பூராவும் இருப்பீங்களா?’ என்றால், ‘இரண்டு மணியிலிருந்து’ என்றார். அவரும் சைக்கிள்தான் மிதிக்கிறார். ‘அப்பொழுதிருந்துதான் அரசுப் பேருந்துகள் வரத் துவங்கும். தூக்கத்தோடு மனுஷங்க இறங்குவார்கள்’ என்ற அவர் லாஜிக் பிடித்திருந்தது.
அதே அரசுப் பேருந்துதான். எவ்வளவு பரிமாணங்கள்? எத்தனையோ முதலாளிகளின் போட்டியாளன்; எத்தனையோ அதிகாரவர்க்கத்தினரின் பொன் முட்டையிடும் வாத்து. எத்தனையோ தொழிலாளர்களின் ஜீவாதாரம். கோழிக்குஞ்சு விற்பவருக்கு வாழ்வாதாரத்தைச் சுமந்து வருகிறது. சுக்குக்காபி விற்பவருக்கு தூக்கு மூஞ்சி வாடிக்கையாளர்களைத் இறக்கிவிடுகிறது. நான் சொகுசாக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
தூக்கக் கலக்கத்தில் இந்த யோசனையெல்லாம் தேவையா?
அந்நேரத்தில் கரிகாலன் காத்திருந்தார். இறங்கியவுடன் மசால் தோசை யின் முதல் பிரதியைக் கொடுத்தார். மகியை பிரசவ அறையிலிருந்து வெளியே கொண்டு வந்த போது இருந்த சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டேன். அந்தக் குளிருக்கான வெதுவெதுப்பை ஒவ்வொரு பக்கமும் கொடுக்கத் துவங்கியது. அதே கதகதப்பில் இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.
இன்று மாலை 4.30க்கு புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடுங்கள்.