Jan 1, 2015

ஆரம்பிக்கலாமா?

புது வருடம் பிறந்துவிட்டது. அடுத்ததாக புத்தகக் கண்காட்சி வரவிருக்கிறது. இந்த ஆண்டு என்னுடைய புத்தகம் எதுவும் வராது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தப் பதிப்பாளரிடமும் இது குறித்துப் பேசியிருக்கவில்லை.  ஒரு நாள் ராஜலிங்கம் அழைத்து ‘பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்’ என்றார். புதிதாக பதிப்பகம் தொடங்குபவர்களுக்கு புத்தகத்தைக் கொடுப்பது நல்ல விஷயம்.  அவர்களால் நமக்கும் நம்மால் அவர்களுக்கும் பலன் இருக்கும்.  சில குறைபாடுகள் இருந்தாலும் ஒரு புத்தகம் வெற்றியடைந்துவிட்டால் புதிய பதிப்பகம் காலூன்ற  வழி செய்துவிடலாம் என்கிற சிறு ஆசையும் உண்டு.

அதன்பிறகு தொடர்ந்து பேசி அவரது பதிப்பகத்தின் வழியாகவே புத்தகத்தை கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கட்டுரைத் தொகுப்பு. கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததே நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள்தான். சுதா, சுரேஷ், சங்கரி ஆகியோர் மிகச் சிரத்தையுடன் செய்தார்கள். சந்தோஷமாக இருந்தது. அட்டைப்படத்திற்கான நிழற்படம் சசிகுமார் எடுத்தது. குக்கூ திரைப்படத்தில் இவர்தான் நிழற்படக்காரர். சந்தோஷ் நாராயணன் அட்டையை வடிவமைத்திருந்தார்.  ராஜலிங்கம் பெரும்பாலான வேலையை முடித்து அனுப்பி வைத்திருந்தார். இரண்டு மூன்று நாட்களில் பிழை திருத்தத்தை செய்து அனுப்பி வைத்திருந்தேன்.

புத்தகம் வருவது குறித்தான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. சிலர் புத்தகம் பற்றி விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். அடுத்த நாள் அச்சுக்கு அனுப்புவதாக ராஜலிங்கம் சொல்லியிருந்தார். அப்பொழுது ஒரு பிரச்சினை. குடும்பச் சூழல்களால் தன்னால் புத்தகத்தைக் கொண்டு வர முடியாது என்று தயக்கத்தோடு சொன்னார். இனி புத்தகம் வராது என்று கிட்டத்தட்ட முடிவு செய்து கொண்டேன்.  இதை அறிவிப்பதற்காக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது யாவரும்.காம் பதிப்பகத்தின் ஜீவகரிகாலன் அழைத்திருந்தார். சூழலைச் சொன்ன போது தாங்களே கொண்டுவருவதாகச் சொன்னார். சென்ற முறை லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் சிறுகதைத் தொகுப்பைக் பதிப்பித்தவர்கள்தான்.

முதலிலேயே இவர்களிடம் பேசியிருக்கலாம்தான். ஆனால் ஏற்கனவே சில புத்தகங்களை ஒத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒன்றும் காசு புழங்கும் பெரிய பதிப்பகத்தார் இல்லை.  நான்கைந்து இளைஞர்கள் ஆளாளுக்கு சிறுதொகையைப் போட்டு பதிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். பணத்துக்காகச் சிரமப்படுவார்களோ என்ற தயக்கம்தான். அவர்களுக்குச் சுமையை ஏற்றிவிட்டது போல ஆகிவிடும். தேவைப்பட்டால் கடன் வாங்குவதாக கரிகாலன் சொன்னார்.  திக்கென்றிருந்தது.

கரிகாலன் புத்தக வேலையை ஆரம்பித்துவிட்டால் அதற்காகவே சோறு தண்ணீர் இல்லாமல் அலைகிற மனிதர். சென்ற முறை எப்படியிருந்தாரோ அதே ஆர்வத்தோடுதான் இப்பவும் இருக்கிறார். ஒரே நாள் இரவில் வடிவமைப்பாளருடன் அமர்ந்து புது அட்டையைத் தயாரித்து அனுப்பி வைத்திருந்தார். அட்டைப்படத்தை அவர் மின்னஞ்சல் அனுப்பிய போது நேரம் அதிகாலை நான்கே முக்கால். விடிகிற வரைக்கும் ஒவ்வொரு டிசைனாக முயன்றிருக்கிறார்கள். விடியும் போதுதான் இந்த அட்டையை முடிவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு பால கணேஷூடன் அமர்ந்து உள்ளடக்கத்தின் வேலையைச் செய்திருக்கிறார்.

வெறும் நூற்றியிருபது பக்கம்தான்.  வெளியிலிருந்து பார்க்க சாதாரண விஷயமாகத்தான் தெரிகிறது. உள்ளுக்குள் நிறைய மனிதர்களின் கடும் உழைப்பு இருக்கிறது. 


ஒவ்வொரு வருடமும் புத்தகம் பதிப்பித்தே தீர வேண்டும் என்ற வேண்டுதல் எதுவும் இல்லை. ஆனால் அது ஒரு உற்சாக டானிக். சென்ற முறை ஆயிரம் பிரதிகள் அச்சடித்திருந்தார்கள். புத்தகக் கண்காட்சியிலேயே மொத்தமும் தீர்ந்துவிட்டது. தமிழகத்தின் பிறபகுதிகளிலும் புத்தகம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். அது சாத்தியமாகவேயில்லை. பதிப்பகத்தாரையும் குறை சொல்ல முடியாது. எந்தப் பின்புலமும் இல்லாமல் கரிகாலன், சாத்தப்பன், வேல்கண்ணன், கண்ணதாசன் உள்ளிட்ட நான்கைந்து பேர் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொன்றுமே அனுபவம்தான். சென்னையைத் தாண்டி புத்தகம் செல்லவில்லை. ஆனால் ஒன்று- இன்று வரைக்கும் ‘எங்கே புக் கிடைக்கும்?’ என்று கேட்பவர்களிடமெல்லாம் ‘தீர்ந்துடுச்சுங்க’ என்று சொல்லும் போது உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அது ஒரு திருப்தி. அதை வைத்துக் கொண்டே அடுத்த ஒரு வருடத்திற்கு எழுதிவிட முடியும். 

லிண்ட்சே லோஹன் விற்பனை வழியாகக் கிடைத்த பத்தாயிரம் ரூபாயை வைத்துத்தான் அரசு பள்ளிகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். இந்த முறையும் அப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட வேண்டும். கிடைக்கிற ராயல்டியில் இன்னொரு மடங்கைச் சேர்த்து- ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தால் என்னுடைய பணம் ஐந்தாயிரம் சேர்த்து பத்தாயிரமாக- ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கும்  ஏழைப்பெண்ணுக்குக் கொடுத்துவிடலாம் என்று யோசித்திருக்கிறேன்.

முதலில் புத்தக விற்பனையப் பார்க்கலாம். இதையெல்லாம் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.

இடையில் கோவை ஞானிக்காக திரட்டிய பணம் இருப்பத்தைந்தாயிரம் இருக்கிறது. இன்னொரு நண்பர் பத்தாயிரம் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். அவர் அனுப்புகிறாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. அனுப்பி வைத்தால் இன்னும் கொஞ்சம் சேர்த்து நாற்பதாயிரம் ரூபாயாக புத்தகக் கண்காட்சிக்கு முன்பாக கொடுத்துவிட வேண்டும். அந்த நண்பர் அனுப்பவில்லையென்றால் முப்பதாயிரம் ரூபாய். ஐம்பதாயிரம் ரூபாயாவது புரட்டி விட விருப்பமிருந்தது. ஆனால் சாத்தியப்படவில்லை. அறக்கட்டளையில் பணம் இருக்கிறதுதான். ஆனால் எந்தக் காரியத்திற்கு என்று சொல்லி வாங்குகிறோமோ அந்தக் காரியத்திற்குத்தான் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால் மருத்துவச் செலவுக்கும், பள்ளிகளுக்கான உதவிக்கும் சேர்ந்த பணத்தை எடுத்துக் கொடுப்பது சரியாக இருக்காது.

புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு முன்பாக - அதாவது ஒன்பதாம் தேதிக்கு முன்பாக - ஆர்டர் செய்யப்படும் அத்தனை புத்தகங்களையும் நானும் கரிகாலனும் சேர்ந்து அனுப்பி வைத்துவிட முடிவு செய்திருக்கிறோம். பத்து அல்லது பதினொன்றாம் தேதி உங்களைச் சேர்ந்துவிடும். கையெழுத்து போடுமளவுக்கு பெரியவனில்லை என்றாலும் யாராவது விரும்பினால் கையெழுத்திட்டு அனுப்புகிறேன். ஆர்டர் செய்துவிட்டுச் சொல்லுங்கள். எதுவும் சொல்லவில்லையென்றால் கையெழுத்தில்லாத பிரதியை அனுப்பி வைத்துவிடுகிறோம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கான இணைப்பு இது.

உங்களின் ஆதரவு எனக்கான உற்சாகம். புது வருடத்தை ஆசி கோரலுடன் ஆரம்பித்திருக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.