Jan 2, 2015

டாப் 10

போட்டியை அறிவித்துவிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தேன். இன்று தேனி செல்கிறேன். அதற்காக டிக்கெட் ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். முக்கால் மணி நேரம் கழித்து வந்தால் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து சேர்ந்துவிட்டன. கிட்டத்தட்ட முப்பது விமர்சனங்கள். இவ்வளவு வேகத்தில் எழுத முடியுமா? முதல் பத்து விமர்சனங்கள் மட்டும் கீழே- 

இதனிடையே இங்கிலாந்தில் வசிக்கும் ரிச்சர்ட் விஜய் தானும் பத்து புத்தகங்களுக்கு ஸ்பான்ஸர் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். ‘எதுக்குங்க?’ என்று கேட்டால் இதன் மூலமாக என்னை உற்சாகப்படுத்துவதாகச் சொன்னார். உற்சாகம் அடையாமல் இருப்பேனா? இதுவரைக்கும் கிட்டத்தட்ட நூறு புத்தகங்களுக்கான ஆர்டர்கள் வந்திருப்பதாக கரிகாலன் அழைத்துச் சொன்னார். பறந்து கொண்டிருக்கிறேன்.

அது இருக்கட்டும்.

ரிச்சர்ட் விஜய் வழங்கும் அடுத்த பத்து பிரதிகளுக்காக போட்டி நடத்தலாமா அல்லது அடுத்த பத்து விமர்சனங்களுக்கு கொடுக்கலாமா என்று சிறு குழப்பம். இப்பொழுதே கூட முடிவு செய்யலாம்தான். ஆனால் பேருந்துக்காரன் விட்டுவிட்டு போய்விடுவான். தேனி எதற்காகச் செல்கிறேன் என்று திரும்பி வந்து சொல்கிறேன்.

கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான வெற்றி. முதல் பத்து பேருக்கும் வாழ்த்துக்கள். முகவரியை அனுப்பி வையுங்கள். மசால் தோசை வந்தவுடன் படித்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்.

நன்றி
                                           *************

1)
                                                        
நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

எப்போதுமே சற்று புரியாத புத்தகங்களை படிக்கும்போது அங்கலாய்ப்பது உண்டு  “ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றும் புரிகிற மாதிரி எழுதவே முடியாதா” எனவும். 

‘அட சின்னப்பயலே’ என ஆரம்பத்திலேயே மட்டம்தட்டி ஆரம்பிக்கிறார் ஆசிரியர். ஆரம்பப்பள்ளி மாணவனுக்கு முதுநிலை பட்ட படிப்பிற்கான புத்தகத்தை படிப்பது நிச்சயம் புரியாததாக இருக்குமே அது போலதான் இலக்கியமும். புரியாத புத்தகத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு சில வருடம் கழித்து படித்தலே  சாலச்சிறந்தது.  படிப்பவருக்கு  எதனையாவது சொல்வதற்காகவே ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் ஆசிரியர் உருவாக்கியுள்ளார் என்பதை ஆழமாக நம்ப வேண்டும் என ஜெமோ கூறுவதை மறுக்க இயலவில்லை. பல்வேறு வாசிப்பு படிநிலை, இலக்கிய வகை போன்றவற்றை சிறப்பாக விளக்குகிறார் ஆரம்ப இலக்கிய வாசிப்பாளர்கள் ஒருமுறை படிப்பது நலம் பயக்கும்.

- ஜெகதீஸ் தனபால்    

2)

ஆழ்கடலுக்குள் இறங்கும் மண்குதிரை ( கவிதைத்தொகுப்பு)
ஆழி. வீரமணி

அகமும் புறமும், காதலும் களவும், நகரமும் கிராமமும், வலியுடன் வாழ்தலும் தற்கொலையும், கூடலும் பிரிவும், விவசாயமும் கூலித்தொழிலும், சாதி அடக்குமுறையும் சாதி எதிர்ப்பும் கவிதையாகி இருக்கின்றன. 

ஆஞ்சனேயர், பித்ரு, அமாவாசை, முனிவனின்கைத்தாங்கி, லவகுச என மதத்தால் உருவாக்கப்பட்ட  அடிமைத்தனத்தை அவற்றைக் கொண்டே  அறுக்கிறார். “பூக்களால்மலர்ந்ததுன்வீடு”, ”மண்குதிரை”, “நடுக்கடலில்மிதக்கும்படகு” போன்ற கவிதைகளில் குறியீடுகள் அழகாக இணைந்து வேறு அனுபவம்தருகின்றன. பெரிய குடும்பத்து ஆண்டை “கனல்”இல் நேராக்கக்குகிறார், “தவறவிட்ட மூன்றாவது ரயில்” காதலின் அரசியலை பேசுகிறது.மரங்களும், பறவைகளும், விலங்குகளும் கிராமத்தை வரைந்துசெல்கின்றன. 

“ கொசுவத்தி புகையும் பேச்சுலர் அறையில்” என்ற கவிதையில்   “ஒரு பூவாய் மிதக்கிறது உடல்”.

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டவனின் முகநூல் பக்கத்தில் “ தினமும்பூக்கிறதொரு அயல்தேச காதல்பூ”. 

மெய்மறந்த காதலர்களை “அணில்வாய்தவறிய முந்திரி பழமொன்று” பூமிக்கு இறங்கி வர வைக்கிறது.

கே எஃப்சி வாசலில் நாய் கலகக்காரனாகிறது. 

நுட்பங்களும் வார்த்தைகளும் துருத்தித் தெரியாமல் கவிதைக்குள் கரைந்து இருக்கின்றன. நிகழ்காலத்தின் முகத்தை , மக்களை, வாழ்வை
அரிதாரங்கள் இல்லாமல் காட்டுகின்றன இந்தக் கவிதைகள்.

செம்மண்வெளியீடு.

பா.சரவணன்

3) 

வந்தாரங்குடி  (நாவல் - வெளியீடு : தமிழினி 2014)
எழுத்தாளர் : கண்மணி குணசேகரன் 

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக தங்கள் மண்ணை இழந்து இழப்பீடுகளுக்காகவும் உரிமைக்காகவும் போராடிய அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் அவலங்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் புதினமிது. மண் அன்றி வேறேதும் அறியாத ராசோக்கியத்தின் பற்று, நிலம் பெயர்ந்ததால் விவசாயக் கூலிகள் பிழைப்புக்காக அல்லாடும் சித்திரம், மலருக்கும் பூமாவிற்கும் இடையேயான உறவாடல் என அற்புதமாக திரண்டு மேலெழும் பகுதிகள் அநேகம். ஊர் காத்த அய்யனார் ராட்சச இயந்திரத்தின் கரங்களால் துண்டாடப்படும் இடம் ஓர் உதாரணம். ஓர் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடயே அரசாங்கமும் நவீனத்துவமும் தகர்க்க இயலாத புழுதிச் சுவற்றை கட்டியெழுப்பியதால் உருவாகும் குழப்பங்களின் உறவுகளிடையே மூளும் சிக்கல்களின் பேராசைகளின் குறுக்குவெட்டுச் சித்திரம் யதார்த்தம் சற்றும் மிகைப்படுத்தப் படாமல் நாவல் முழுவதும் ஒரு நிழலாக தொடர்ந்தபடியே இருக்கிறது.

வன்னியர் சங்கம் மேற்கொண்ட போராட்ட கள முயற்சிகள் - அது குறித்த கதாபாத்திரங்களின் உரையாடல்களையும் தாண்டி எழுத்தாளருக்கு ராமதாஸ் மீதிருக்கும் அபிமானம் நாவலில் ஆங்காங்கே துருத்திக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஈழத்தை பற்றிய பகுதிகள் அனைத்தும் 'தாங்கள் வெறும் சாதிச் சங்கம் மட்டுமல்ல' என்பதை நமக்கு பறைசாற்றுவதற்கு பயன்படுவதன்றி நாவலோடு முயங்கி வரவில்லை. இது போன்று இன்னும் சில குறைகளை கொண்டிருந்தாலும் தமிழ்ப்புதின வரலாற்றில் அழுந்தக் காலூன்றி நிற்கத் தவறவில்லை இவ்வந்தாரங்குடி.

கோகுல் பிரசாத்

4) 

சோளகர் தொட்டி.
ச.பாலமுருகன்

இது வரை  சில புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் சமீபத்தில் வாசித்த "சோளகர் தொட்டி" உண்மையில் என்னை மிகவும் அதிர செய்தது. பள்ளி,கல்லூரி  நாட்களில் வீரப்பன் தேடுதல் வேட்டை மற்றும் ​அதனையொட்டி நடந்த தேடுதல் வேட்டையின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் என செய்திகளில் பார்த்திருந்தாலும் அவ்வளவாக மனதை பாதித்ததில்லை... இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததில் இருந்து மனதில் ஒரு வலியை  உணரமுடிகிறது.

சக மனிதனை இவ்வளவு கொடூரமாக நடத்திய மனிதர்கள் இன்னும் நமது சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணும் போதே வாழ்வின் மீதே வெறுப்பு வருகிறது. ஆனால் அத்தனை  சித்திரவதைகளையும் தாங்கி மீண்டு வந்தவர்களின் நம்பிக்கை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. சோளக மக்களின் இன்றைய நிலை என்னவாக இருக்குமோ. அவர்களின் வாழ்க்கை மேம்பட்டு இருக்குமோ என்று பல கேள்விகள் என்னுள். இங்கு மேம்பட்ட வாழ்க்கை கூட வேண்டாம் குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையாவது கிடைத்து இருக்குமா? 

எனக்குள் சில கேள்விகள்- கல்வியை கொடுத்து அவர்களை இயற்கையை விட்டு பிரிப்பது சரியா? பொதுவில் நாம் எல்லோரும் கூட வேட்டை சமூகமாக இருந்து பின்னர் விவசாயம் செய்து குடியானவர்களாக மாறியவர்கள் தான். அரசாங்கம் அவர்களுக்கு எதுவும் தரவேண்டாம் அவர்களது காட்டை அவர்களிடம் திரும்ப தந்தால் போதும் .அவர்கள் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையே... காடு நிச்சயம் அவர்களிடம் பாதுகாப்பாய் இருக்கும்.

கிருஷ்ண குமார்

5)

இரவு
ஜெயமோகன்

கருப்புனா நமக்கு பயம் ஆனா அதே கருப்புதான் நமக்கு சாமி. இரவும் அப்படித்தான். நிறைய பயம், நிறைய சுவாரசியம். 12 மணிக்கு பேய்வரும்னு சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. இரவு எல்லாருக்கும் பிடித்தமானதாக மாறிவிட்டது. எவருக்கேனும் இரவு பிடிக்கவில்லை என்றால்  இந்த புத்தகத்தை படிக்கக் கொடுக்கலாம். மொத்தம் 240 பக்கங்கள். படிக்க ஆரம்பிச்சா அஞ்சு அல்லது  ஆறு மணிநேரத்தில் முடிச்சிடலாம்.

நம்ம கிட்ட யாராவது இரவை பத்தி கொஞ்சம் அழகா சொல்லுங்கன்னு கேட்டா நிலா,வானம், நட்சத்திரம்னு சொல்லுவோம். இதைத் தாண்டி யோசிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். வளர்ந்த நகரத்து மனிதர்கள் பப், டிஸ்கோ, நைட் பார்ட்டினு சொல்லுவாங்க பட் அவ்ளோ தான். ஆனா ஆசிரியர் இரவுக்குள் எவ்ளோ அழகான வாழ்க்கை இருக்கும்னு நமக்கு படம் போட்டு காட்டுகிறார். இரவோடு நம் பயணம் தொடங்குகிறது, இரவோடு நம்மை பிணைத்துக்கொள்கிறோம்.எப்படா இரவு வரும்னு  காத்திருக்கிறோம். இருட்டான இரவை வெளிச்சமான இரவாய் தன் எழுத்தின் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர். அந்த வெளிச்சத்தில் இரவின்  அசெளகரியங்கள் விலகி அது நம்மை அரவணைத்துக்கொள்கிறது .புத்தகத்தை படித்து முடிக்கும் போது  ஒரு இரவாவது அப்படி வாழ்ந்து பாக்கனும்னு தோணும். அப்படி தோண வைப்பதில் தானே எழுத்தாளனின் வெற்றி அடங்கியிருக்கிறது?

மோகன் குமார்

6) 

வாடிவாசல் 
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு வெளியீடு

தன்  அப்பனைக் கொன்ன ஜல்லிக்கட்டுக்காளைய அடக்கனும்ன்னு பிச்சி களத்துல எறங்குறதுதான் ஒன் லைன்.. இந்த ரஜினி டைப் மசாலா கதையை ஒரு இலக்கியவாதி எழுதுனா அது எத்தனை ஒசரத்துக்குப் போகும்ங்கறதுக்குக்கான சாம்பிள்தான் வாடிவாசல்..

நகர்வாழ் மக்களுக்கு விருமாண்டிதான் ஜல்லிக்கட்டு. ஆனா, அதுல இருக்குற நுணுக்கம், பற்று, ஈடுபாடு பற்றி பேசுறதுக்கு சரியான களம் எழுத்துதான். கிட்டத்தட்ட சினிமா பாணியிலேயே போகுது விவரணைகள்..

இதுல நடுவுல,  ஜமீன் வழக்குமுறை,  சாதீயம்,  ஒரே சாதிக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு என போகிறப்போக்கில் கதை தொட்டு செல்லும் இடங்கள் அலாதி.. முடிவு முழுக்க முழுக்க அபத்தம். ஜமீந்தார் அப்போது  ‘ஹஹஹா’ன்னு சிரிப்பதில் நாவல் தொப்பென தொய்வடைந்து சாய்கிறது..

முற்போக்கு, வயித்துப்போக்குன்னு கொத்துக்கறியெல்லாம் போடாமல் அலசினால் படிப்பதற்கு ஏதுவான ஒரு சிறந்த குறுநாவல்.. வாசித்து முடித்தப்பின் மனதில் கொம்பை வைத்து கீறிக்கொண்டிருக்கும் அந்த கருப்புப்பிசாசுதான் நாவலின் வெற்றி.

மயிலன்

7) 

மணல் உள்ள ஆறு
- கல்யாண்ஜியின்  கவிதை தொகுப்பு

கல்யாண்ஜியின் கவிதைகள் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. காரணம், அவருடைய கவிதையைப் படிக்க படிக்க நம்முடைய மனக்கண் முன்னே காட்சிகள் விரியும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட ஏதோ ஒரு காட்சிக்கும், கல்யாண்ஜியின் கவிதைக்கும் நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். மணல் உள்ள ஆறும் அதே போல் ஒரு கவிதை தொகுப்பு. உதாரணத்திற்கு ஒரு கவிதை

ஆச்சி இறந்து
அனேக காலம் ஆயிற்று
அவளுடைய மர அலமாரியில்
வேறெதையோ தேடுகையில் கிடைத்தது
ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்
அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்
எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்
தவறி விழுந்ததோ,
எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக
ஒட்டிய மணல் சோப்பில்.

தெரியாமல் போயிற்று
இத்தனை காலமும்
ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது
மர அலமாரிக்குள் ஒரு
மணலுள்ள ஆறு என்று.

இக்கவிதை படிக்க படிக்க‌ எண்ண ஓட்டங்கள் என் பால்ய காலத்திற்கு திரும்பியது. விடுமுறை காலத்தில் நான் செல்லும் பாட்டியின் வீடு, பாட்டியின் அதட்டல்கள்,  தாத்தாவை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்ப்பது, அவள் இரவு மட்டும் சாப்பிடும் ஆரஞ்சு மிட்டாய், இறுதியாக‌ யாரிடமும் சொல்லாமல் பாட்டி 80 வயதில் தற்கொலை செய்து கொண்டது.. சங்கிலித் தொடர் போல நினைவுகள் நீண்டு கொண்டே போனது. இறுதியாக ஒரு பெருமூச்சின் வழியாக நிகழ்காலத்தை வந்தடைந்தேன். 

இப்புத்தகம் எப்போதும் என் மேஜை மேலேயே இருக்கும். மாத்திரை போல தினம் ஒரு கவிதை படித்து வந்தேன். ( மொத்தமாக படித்தால் திகட்டும் என்பது என் எண்ணம்).  மணல் உள்ள ஆறில் உள்ள கவிதைகள் எல்லாமே உங்கள் வாழ்க்கையில் நடந்தவை தான். ஒரு டைரியை புரட்டிப் பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை மீள் வாசிப்பு செய்ய வைக்கும். இக்கவிதைகளைப் படிப்பவரும் நீங்கள் தான், இக்கவிதையின் கண்களும் நீங்கள் தான். இக்கவிதைகள் நிகழ்ந்தேறியதும் உங்கள் வாழ்க்கையில் தான். வாசியுங்கள்.  இறுதியாக அந்த தொகுப்பிலிருந்து இன்னுமொரு கவிதை நீங்கள் அசை போட‌

புங்கை மரத்தடியில் ஒரு காக்கைக் குஞ்சு
எறும்பு அரித்துக் கிடந்தது பாவமாய்
காது மூக்கு தொண்டை மருத்துவர்
கட்டுகிற வீட்டுச் செங்கல் பக்கம்
இரட்டைச் சிசுக்களின் மரணம் போல
இறந்து இடந்தன மேலும் இரண்டு
அன்றைக்கும் இன்றைக்கும் மருந்துக்குக் கூட
எந்தக் காக்கையும் கத்தவே இல்லை
அணிலை விரட்டிச் சோறு கொத்தின
தேங்காய்ச் சிரட்டையைத் தூக்கிப் போயின
எந்தக் கவலையும் இல்லாதது போல்
இறகை எக்கி எச்சம் இட்டன
காக்கைக் குஞ்சுகள் இறந்ததை விடவும்
காக்கைமை இறந்தது எத்தனை துயரம்


சிங்கசந்த்ரா சிவா

8) 

உறுபசி
எஸ்.ராமகிருஷ்ணன்

மூன்று வருடங்களுக்கு முன், உறுபசி படித்து முடித்த நான்கு நாட்கள் வரை, நான் பைத்தியக்காரன் போல் நடந்து கொண்டேன். வாழ்க்கையில் குறிப்பாக  தன்  தொழில்/ இலட்சியம் ஆகியவற்றில் வெற்றி பெறாமல் திணறும் என்னைப் போன்ற பலரின் பிம்பம் தான் நாவலின் கதாநாயகன் ' சம்பத்'. ஆமா, சம்பத் தானே கதாநாயகன்? ஏனென்றால், வெற்றி பெறுபவனே புதினங்களின்/ திரைப்படங்களின் நாயகனாக இருக்க வேண்டும் என்ற இந்திய மனநிலை என்னை, அவ்வாறு வினா  எழுப்ப தூண்டுகிறது. எதிலும் பிடிப்பு இல்லாதவனாகவும், எல்லவற்றிலும் அதீத ஆர்வம் மிக்கவனாகவும் சம்பத் இரண்டு மாறுபட்ட மனநிலைகளில் தவிப்பான் அல்லது மற்றவரை தவிக்க வைப்பான். 

சம்பத்தின் மரணத்திற்கு பின் தங்கள்  வாழ்க்கை குறித்த ஒரு ஐயம், குழப்பம், வெறுமை தோன்றுவதால் அவனது நண்பர்கள் மூவரும் மனித நடமாட்டமில்லாத ஒரு மலை  காட்டுப்  பிரதேசத்திற்கு  செல்கின்றனர். ஆக, சம்பத்தின் மரணம் ஏற்படுத்திய சோகத்தை விட அவர்களின் அச்சம் அல்லது வெறுமையை வெல்லவே இப்பயணம் என்பதை நாவலாசிரியர் தெளிவாக கூறியுள்ளார். மது , இயற்கை உணவுகள், பழங்கள், இயற்கையின் பேரழகு எல்லாவற்றிலும் சற்றே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்போது, அவர்கள் ஓவ்வொருவருக்கும் சம்பத்திற்கும் உள்ள நட்பு, பிணைப்பு, வேறுபாடு என எல்லாம் எடுத்துரைக்கப்படுகிறது. 
                           
 சம்பத் தானே வாழ்க்கையில் வென்றிருக்க வேண்டும்? ஏன் தோற்றான்? காதலில், லட்சியத்தில், குடும்ப உறவில்  என்று எல்லா அம்சங்களில் தோற்று போனவனாகவும், மனம் ஒரு நிலையில் இல்லதவனாகவும் அவன் நடந்து கொள்ளும்போது என்னுள்  வாழ்க்கை குறித்து ஒரு அச்சமும், கல்வி, அறிவு, தேடல், ஆர்வம் போன்றவற்றின் மீது ஒரு பரிகாசமும் தோன்றியதை  தவிர்க்க இயலவில்லை. சம்பத்திற்கு திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை திடீரென அமைகிறது. அவன் மனைவியும் அவனைப் போன்றே இலக்கின்றி அல்லது இலக்குகளை நிர்ணயிக்க இயலாத ஒரு பரிதாப சூழலில் தான் இருந்தாள். அவன் மரணம் அவளிடம் பெரிய சோகத்தை  ஏற்படுத்தவில்லை என்பது எந்த வியப்பையும் உண்டாக்கவில்லை. ராமதுரை சற்றே சுயநலம் மிக்கவனாக இருந்தாலும் சம்பத்தின் பலவீனங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் நண்பனாக ஆறுதல் அளித்திருந்தான். சம்பத்தின் காதலி அவனது மரணத்திற்கு பின்  அவன் வீட்டிற்கு வருவதும், இறுதி சடங்கு முடியும் வரை காத்திருப்பதும், அவனது மனைவிடம் கரிசனம் காட்டுவதும் தான் நாவலில் வரும் ஒரே கவிதை. 

நாவல் இன்னும் சில பக்கங்களை கொண்டிருக்கலாம். அதாவது, சம்பத்தின் இழப்புகள் அல்லது தோல்விகள் இன்னும் சில சம்பவங்களால் எடுத்துரைக்கப்  பட்டிருக்கவேண்டும். மிகக் குறைந்த உரையாடல்களே கொண்ட இந்த நாவல் மற்ற சோக/ தோல்வி புதினங்களை போல எந்த இடத்திலும் அலுப்பு தரவில்லை என்பது இதன் மிகப் பெரிய பலமாகும்.

ரமேஷ்சிவா 

9) 

குருத்தோலை 
செல்லமுத்து குப்புசாமி

கொங்குத் தமிழில் எழுதப்பட்டதாலே ஆர்வத்தை தூண்டியது . ஆரம்பத்தில் தேன் உறுஞ்சுலாமாடா என தொடங்கி , அதே வார்த்தையில் முடித்ததும் அந்த நினைவுகளும் குருத்தோலையின் மையம் . அங்கங்கு பழைய முறைகளும் குறிப்பாக திருமண பொருத்தம் பார்ப்பது துணி வெளுப்பவர்கள் என்பதும் திருமண அழைப்புக்கு முடி வெட்டுபவர்கள் மூலமே கிராமங்களுக்கு சேதி சொல்வதும் உண்மைப்பதிவு.

எளிய மனிதனின் காமம் , அன்பு ,அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தும் கிராமத்து ஆசிரியர் டேவிட் வாத்தியார் ,மாமாவின் பகட்டு ,ஆதாயமன பேச்சுக்கள் மூலம் பிரச்சனையில் முடியும் உறவுகளின் உணர்வுகள், என விவசாயவாழ்க்கை முறையோடு கூடிய வாழ்தலை ஆராய்ந்திருக்கிறார்.
குறிப்பாக நாட்டரயன் எருது வித்த பணம் கேட்கப்போய் அடிவாங்கி வந்ததை , தன் மகன் அறிந்து கொள்ளும் அந்த சூழ்நிலை அட்டகாசம் .

சிரித்து சிரித்து வாய்வலித்தது. சேம்பிளுக்கு ,"டேய் முத்துசாமி ,இன்னைக்கு ஊட்டைச் சுத்திகிட்டே கெடக்குது. நாய்ச்சோறு ஊத்திக்கொடுக்கிறேன். சீக்கிரம் கொண்டு போய் அதும்பட ஓட்டுல ஊத்திட்டு வந்திரு .அப்பலே புடிச்சு ஒலைச்சுகிட்டே இருக்குது " இந்த இடத்தில் தலைவர் சுஜாதா மின்னி மறைந்தார் .நக்கல் பண்ணியே அந்த சோகத்தை விழுங்கியிருப்பாள் செல்லாயி.

டேவிட்

10)

ஓநாய் குலச்சின்னம்

இயக்குனர் வெற்றிமாறன் முயற்சியால் தமிழில் வெளியான இந்த புத்தகம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. விவசாயமும் விவசாய நிலங்களும் அழிந்து கொண்டிருப்பதை கண்டு வருந்தும் நமக்கு, அதற்கு முன்னர் இருந்த மேய்ச்சல் என்கிற தொழில் அழிக்கப்பட்டு, மேய்ச்சல் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு உழவு நிலங்களான கதை புதிதாய் இருக்கும்!!! எப்படி மேடை நாடகம்-சினிமா-VCD என ஒரு தொழிலை அழித்து இன்னொன்று வந்ததோ அதுபோலவே மேய்ச்சல்-விவசாயம்-கார்ப்பரேட்.

அத்தகைய மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை வேட்டையாடினாலும் கடவுளாக நினைத்து வாழ்ந்த மங்கோலியர்களின் வாழ்க்கை பற்றிய புத்தகம். நிறைய சொல்லி கொண்டே போகலாம். 

புத்தகம் படித்தவுடன் இழந்து கொண்டிருக்கும் இயற்கையின் வேட்கை, மனிதர்களில் மீது நமக்கு கோபத்தை வரவழைக்கும்.

இரண்டாம் உலக போருக்கு பின்பான சீனாவில் நடந்த தொழில் புரட்சி பற்றியும் இதில் தெரிந்து கொள்ளலாம். தொய்வில்லாத எழுத்து நடை.

இதுதான் எனது முதல் புத்தக விமர்சனம் என்பதால் எப்படி முடிப்பதற்கு தெரியாமல் இப்படியே முடிக்கிறேன்.

கதிர்