Dec 9, 2014

சாபம்

கொங்குப் பகுதியில் ஒரு வழக்கம் உண்டு. சண்டை வந்துவிட்டால் சுண்ணாம்பு பானையை எதிராளியின் வீட்டுக்கு முன்னால் போட்டு நொறுக்கிவிடுவார்கள். சாபம் விடுவது போல. அதோடு அந்த பந்தம் முறிந்துவிடும். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதுக்கு கூட போய் வர மாட்டார்கள். நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அண்ணன் தம்பி, அக்கா தம்பி என்று நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே கூட இந்த மாதிரி சுண்ணாம்பு பானையை நொறுக்குவது நடைபெறும். வெகு காலத்திற்கு பிறகு மனம் மாறி பகை மறக்க விரும்பினால் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் ஏதாவதொரு பிரசித்தி பெற்ற கோவிலில் கடவுளை வணங்கிவிட்டு ஒரு சொம்பு தண்ணீரில் இருவரும் கை கழுவி பகிர்ந்து குடிப்பார்கள். அப்பொழுதுதான் அந்த சாபம் நீங்கும் என்கிற நம்பிக்கை. சுண்ணாம்பு பானை உடைப்பதற்கு மட்டுமில்லை. மண்ணை வாரித் தூற்றிச் சென்றாலும் சரி; நாசமா போ; நிர்மூலமா போ என்று ஏதாவது வாய்வழிச் சாபமாக இருந்தாலும் சரி. கோவிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் எதிராளியின் வீட்டில் கை நனைக்க வேண்டும்.

இப்பொழுது எதற்கு இந்த விவகாரம்?

சில பெரிய மனிதர்கள் சாபம் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஃபேஸ்புக்கில்தான். சிரிப்பு வந்துவிட்டது. சாபம் விடுவதற்குக் கூட ஒரு தகுதி வேண்டாமா? அந்தக் காலத்தில் சற்றேனும் மனசாட்சிக்கு பயப்பட்டார்கள். கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்று அஞ்சினார்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பாக ‘உன் வீட்டில் சம்பந்தம் எடுத்துக்கிறேன்’ என்று பேச்சுவாக்கில் சொல்லியிருந்தாலும் கூட ‘எங்க அப்பிச்சி கொடுத்த வாக்கின்படி நான் பெண் எடுக்கிறேன்’ என்று பேரன் தலைமுறையில் சொல்லைக் காப்பாற்றினார்கள். அப்படியிருந்தவர்கள்தான் மனம் பொறுக்காத போது சாபம் விட்டார்கள். அந்தச் சாபத்தை எதிர்கொள்ள பயப்பட்டார்கள். 

இப்பொழுது அப்படியா இருக்கிறோம்?

ஒரு மணியகாரர். கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளவில்லை. யார் வீட்டில் என்ன வேலையென்றாலும் இழுத்துப் போட்டு செய்வார். கடைசி காலத்தில் துணை யாருமில்லாத தனது சகோதரிகளுடன் ஒரு பாழடைந்த வீட்டில் குடியிருந்தார். அந்த இரண்டு சகோதரிகளுக்கும் வேலை எதுவும் இல்லை. ஆறுமாதத்திற்கு முன்புதான் மணியகாரர் ஓய்வு பெற்றார்.  தொகை வந்திருக்கிறது. சிலர் கடனாகக் கேட்டிருக்கிறார்கள். நம்பிக் கொடுத்துவிட்டார். சில நாட்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக். கதையை முடிந்துவிட்டது. அந்த இரண்டு பெண்களுக்கும் வேறு வழியே இல்லை. ஒரு வருமானமும் கிடையாது. யாரிடமெல்லாம் பணம் கொடுத்தார் என்கிற விவரத்தை அவரும் சொல்லவில்லை. பணம் வாங்கியவர்களும் ஒருத்தரும் திரும்பிப்பார்க்கவில்லை. போனது போனதுதான். இதுதான் நம் லட்சணம். இவ்வளவுதான் நம் நேர்மை.

சாபம் விடுகிறார்களாம்.

எங்கள் அப்பாவுக்கு அலுவலகத்தில் ஒரு நண்பர் இருந்தார். ரங்க நாயக்கர். அப்பாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும். மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக இருந்த போதும் கூட சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். சைக்கிள் மட்டும்தான் ஓட்டிக் கொண்டிருந்தார். அடுத்தவர்களிடம் பத்து பைசா வாங்க மாட்டார். மின்சாரவாரியத்தில் சற்று வளைந்தாலும் ஒப்பந்ததாரர்கள் குளிப்பாட்டிவிடுவார்கள். ஆனால் நாயக்கர் செம ரிஜிட். அவருக்கு குழந்தை பிறந்த போது மூன்று பவுன் சங்கிலியைக் கொண்டு வந்து ஒரு ஒப்பந்ததாரர் போட்டிருக்கிறார். ‘தயவு செஞ்சு கழட்டிக்குங்க...இனிமேல் இப்படியெல்லாம் கொடுக்கிறதுன்னா நீங்க வரவே வேண்டாம்’ என்றார் என்பதை அப்பா பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.

பன்னிரெண்டாம் வகுப்பு கணக்குத் தேர்வில் நான் தோல்வியடைந்துவிடுவேன் என்ற பயம் வந்த போது அவரிடம்தான் கணக்கு வகுப்புக்கு அனுப்பி வைத்தார்கள். அவருக்கு பயங்கரமான ஆஸ்துமா தொந்தரவு இருக்கும். ஆனால் மப்ளரைக் கட்டிக்கொண்டு கவலையே படாமல் சொல்லித்தருவார். எப்படியோ ப்ளஸ் டூவில் தேர்வு பெற்றுவிட்டேன். அடுத்த சில மாதங்களில் மின்சார வாரியத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். அப்பொழுது அவரது பையனும் பெண்ணும் கல்லூரியில் கூட சேர்ந்திருக்கவில்லை. அவர்களின் படிப்பு, திருமணம் என இன்னமும் எவ்வளவோ கடமைகள் அவருக்கு பாக்கியிருந்தன. எந்த தைரியத்தில் ராஜினாமா செய்தார் என்று புரியவேயில்லை. ஆனால் அவரது ராஜினாமாவுக்கான காரணம்தான் ஆச்சரியமானது.

ஏதோ ஒரு ஒப்பந்தப்பணி நடந்து முடிந்திருக்கிறது. இருபதாயிரம் ரூபாய்க்கான பணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கான கசோலையை ஒப்பந்ததாரருக்கு வழங்கச் சொல்லி செயற்பொறியாளர் உத்தரவிடுகிறார். நாய்க்கரின் மேலதிகாரி. மீதமிருக்கும் முப்பதாயிரத்தில் செயற்பொறியாளருக்கு கமிஷன் போகும். ஆனால் நாய்க்கர் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் கையெழுத்திடாவிட்டாலும் கூட பரவாயில்லை, விடுப்பில் சென்றால் போதும். வேறொருவரை அந்த இடத்தில் இன்-சார்ஜாக வைத்து காரியத்தை முடித்துக் கொள்வார். ஆனால் அதற்கும் நாய்க்கர் மசியவில்லை.

செயற்பொறியாளருக்கு உச்சந்தலையில் கோபம் எறியிருந்தது. அலுவலக வராண்டாவில் நாய்க்கர் நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்தவர் ‘உங்க மேல ஆக்‌ஷன் எடுப்பேன்’ என்று சொல்லிவிட்டு ‘அவனே இவனே’ என ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். அத்தனை பேருக்கு முன்பாக இந்த தாக்குதலை எதிர்பாராத நாய்க்கர் உடைந்த குரலில் ‘எடுத்துக்குங்க சார்...ஆனா நீங்க நல்லா இருக்க மாட்டீங்க’ என்று குழந்தைகள் இரண்டு கைகளையும் விரித்து வைப்பது போல விரித்து வைத்தபடி சொல்லியிருக்கிறார். செயற்பொறியாளர் நகர்ந்த பிறகு சுற்றிலும் இருந்தவர்கள் ‘மேலதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாய்க்கர் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டார்.

நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் செயற்பொறியாளர் இறந்து போனார். இந்த சாபமும், மரணமும் co-incidence ஆகவே இருக்கட்டும். ஆனால் நாய்க்கரின் நேர்மைக்கான அங்கீகாரம். இன்னமும் அவரோடு வேலை செய்தவர்கள் நாய்க்கரைப் பற்றி பேசும் போது இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டக் கூடும். இது வரை நாற்பது முறையாவது எங்கள் அப்பா சொல்லிக் காட்டியிருக்கிறார். அதன் பிறகு அவரிடம் வாய் கொடுப்பதற்கே பயமாக இருக்கும் அல்லவா? ஆனால் நாய்க்கருக்கு குற்றவுணர்ச்சி. தன்னால்தான் அந்த மனிதன் இறந்து போனானோ என்கிற வருத்தம். வேலையை ராஜினாமா செய்துவிட்டார்- வி.ஆர்.எஸ். 

சொற்ப பென்ஷனில் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களுக்கு திருமணத்தையும் முடித்து வைத்து இன்னமும் ஊரில் சைக்கிள் ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார். இப்படியான மனிதர்கள் சாபமிட்டால் அர்த்தமிருக்கிறது. 

அதைவிட்டுவிட்டு பித்தலாட்டக்காரன், பொம்பளை பொறுக்கி, வேடதாரியெல்லாம் சாபம் விடுகிறானாம். பலிக்கிறதாம்.