Dec 31, 2014

தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாமா?

மென்பொருள் துறை ஊழியர்களுக்கும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமென்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியெலலம் சங்கம் வந்துவிட்டால் போனஸ் கேட்கலாம். வேலையை விட்டு நீக்கினால் சங்கத்து மூலமாக கேள்வி கேட்கலாம். பிரச்சினை செய்யும் மேனேஜரைச் சட்டையப் பிடிக்கலாம். இன்னும் என்னனென்னவோ செய்யலாம். நல்ல விஷயம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதுதான் கேள்வி. 

பெருமுதலாளித்துவத்தின் நீட்சிதான் இந்த கார்போரேட் உலகமும், ஐடி நிறுவனங்களும். அவர்களிடம் சென்று ‘நாங்கள் சங்கம் ஆரம்பிக்கிறோம்’ என்று சொன்னால் அடித்தெல்லாம் துரத்த மாட்டார்கள். சிரித்துக் கொண்டே ‘அப்படியா ரொம்ப சந்தோஷம்..நல்லபடியா ஆரம்பிங்க’ என்று சொல்வார்கள். அந்தக் கட்டிடத்தை தாண்டுவதற்குள் எல்லாவிதமான நசுக்குதலையும் ஆரம்பித்திருப்பார்கள். அதில் வெற்றியும் அடைந்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். விஷப்பாம்புகள்.

எத்தனை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சொந்தக்கட்டிடத்தில் இயங்குகின்றன என்று கணக்கெடுத்துப் பார்த்தால் போதும். நிலைமை தெரிந்துவிடும். அவர்களிடம் இல்லாத பணமா? அவர்கள் நினைத்தால் இடம் வாங்கி சர்வ சாதாரணமாக சொந்தக் கட்டிடம் கட்ட முடியும். ஏன் கட்டுவதில்லை? எவ்வளவோ காரணங்களை வெளியில் சொல்வார்கள். ஆனால் சிம்பிளான காரணம் ஒன்றிருக்கிறது. எப்பொழுது ஒத்து வரவில்லையோ அப்பொழுது பெட்டியைக் கட்டிவிடலாம் என்பதுதான். அவர்களுக்குத் தேவையெல்லாம் Cheap Resource. பிரச்சினை செய்யாத அரசாங்கங்கள். சுமூகமான சூழல். இதில் எதில் சிரமம் வந்தாலும் அவர்களின் கொடுக்குகள் தயாராகிவிடும். 

சங்கம் ஆரம்பிக்க விரும்புபவர்களின் விருப்பம் போலவே ஒரு நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் போராட்டத்தில் இறங்குவதாகவே வைத்துக் கொள்வோம். நிறுவனத்தின் உயர்மட்டம் செவி சாய்க்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது? அரசு ஊழியர்களின் போராட்டங்களையே இங்கு சர்வசாதாரணமாக முறிக்கிறார்கள். தற்காலிக ஊழியர்கள் தேவை என்று கேட்டால் மூன்றாயிரம் ரூபாய்க்கு வேலை செய்ய மூன்று லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகம் ஸ்தம்பித்துப் போய்விட்டதா என்ன?

அரசாங்கங்களே கருணையைக் காலால் மிதித்துவிட்டு முதலாளிகளைப் போல நடந்து கொள்ளும் போது பெரு முதலாளிகளை பணிய வைத்துவிட முடியும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலும் பகல் கனவுதான். இந்த நிறுவனத்தைப் பகைத்துக் கொண்டு நான் வெளியே போனால் இதே வேலையைச் செய்ய நிறுவனத்திற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள். ஆனால் என் குடும்பத்திற்கு நான் மட்டும்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலைமையில் எப்படித் துணிவேன்? நல்ல சம்பளம் தருகிறார்கள். மகனும் மகளும் படிக்கும் பள்ளிக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. மாதாமாதம் தேய்க்கும் கிரெடிட் கார்டுக்கு பணம் தேவைப்படுகிறது. வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கிறது. அடிமையோ, கொத்தடிமையோ- பணம் வந்து கொண்டிருக்கிறது. குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொடிபிடித்து வேலை போய்விட்டால்? 

நீதிமன்றங்களின் வழியாகவோ அல்லது பாராளுமன்றத்தின் வழியாகவோ தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வர வைப்பார்களா? அதற்காக ஆட்களைத் திரட்டி தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவார்களா? எழுதுவதற்கும் பேசுவதற்கும்தான் நன்றாக இருக்கும். உண்மையில் கஷ்டம். நமது மனநிலை மரத்துப் போன மனநிலை. போராட்டம், புரட்சி என்றெல்லாம் எந்தவிதத்திலும் ஆட்களைத் திரட்டிவிட முடியாது. எவ்வளவுதான் உசுப்பேற்றினாலும் அதிகபட்சமாக ஆன்லைனில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி எனது ஆதரவைத் தெரிவிப்பேன். அதுவும் கூட என்னைப் பற்றிய எந்த அடையாளமும் என்னுடைய நிறுவனத்திற்குத் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். இப்படியானதொரு மத்தியவர்க்க மனநிலைதான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு தொழிற்சங்கம், போராட்டம், பிரதமருக்குக் கடிதம் என்பதெல்லாம் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பது மாதிரிதான். வறண்டு போன கிணறு. உயிரும் போகாது. மேலேயும் வர முடியாது.

சரி நல்லதாகவே நினைப்போம். சங்கங்கள் வலுவாகி, அரசாங்கம் அடிபணிகிறது என்று வைத்துக் கொள்வோம். ‘போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்’ என்று சொல்லிவிட்டு போக அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? யாருமே செய்ய முடியாத வேலை என்றெல்லாம் இங்கு எதுவும் இல்லை. இதே வேலையை இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்ஸிலும் வைத்து சர்வசாதாரணமாக முடித்துவிட முடியும். எங்களைவிட்டால் இந்த வேலையை எவனாலும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதைப் போன்றதொரு மடத்தனம் எதுவும் இருக்க முடியாது. 

‘சங்கம் ஆரம்பிப்போம்; அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்களின் குரலுக்கு அடிபணியச் செய்வோம்’ என்பதும் கூட உயரப் பறக்கும் கற்பனைதான். கார்போரேட்களால்தான் இங்கு ஒவ்வொரு கட்சியும் நடக்கின்றன. அரசாங்கங்களை நடத்துவதே அவர்கள்தான். Special Economic Zone என்பதிலிருந்து தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு வரை ஏகப்பட்ட சலுகைகளைக் கொடுத்து அரசாங்கங்களும் அவர்களை தாஜா செய்து வைத்திருக்கின்றன. அதிகாரவர்க்கமும் முதலாளிகளும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தச் சூழலில் தொழிற்சங்கங்களால் எப்படி செயல்பட முடியும் என்று புரியவில்லை.

இதையெல்லாம் மீறி தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அதன் நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதிலிருந்து குழுவிற்குள்ளே குழப்பம் விளைவிப்பது வரைக்கும் அத்தனை காரியங்களையும் முதலாளிகளால் செய்ய முடியும். இதையெல்லாம் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கான மனநிலையில் இருப்பவர்களை சீண்டும் விதத்தில் சொல்லவில்லை. அவர்களுடைய நோக்கம் உன்னதமானது. ஆனால் எல்லாவற்றிலும் Practicality என்று இருக்கிறது அல்லவா? 

மரத்துப் போய்க் கிடக்கும் பெருவாரியானவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்; கோடிக்கணக்கான ரூபாய் பணமும் அதிகார வர்க்கத்தின் அருகாமையும் உள்ள முதலாளிகளை எதிர்த்து நிற்க வேண்டும். அவர்களின் உறுமலுக்கு சலனமடையாத படையாக உங்களின் பின்னால் நிற்பவர்களை மாற்ற வேண்டும். இன்னும் எவ்வளவோ. 

அப்படியென்றால் நிலைமை அப்படியேதான் இருக்குமா? 

ஓசோனில் ஓட்டை விழுந்துவிட்டது. இனி அடைக்கவா முடியும்? இப்படி நம்மைச் சுற்றிலும் எவ்வளவோ Irreversible actions நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஒருவேளை வெகுகாலம் கழித்து சூழல் மாறக்கூடும். அப்பொழுது நமது எள்ளுப்பேரனின் கொள்ளுப் பேரன் பிறந்திருப்பான்.