Dec 24, 2014

யார் தூக்கிட்டுக் கொண்டது?

பத்து நாள் இருக்கும். பெங்களூரில் முருகேஷ்பாளையாவில் வசிக்கும் நண்பரொருவர் தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கிவிட்டதாகச் சொன்னார். முருகேஷ்பாளையா எங்கள் அலுவலகம் இருக்கும் டொம்ளூருக்கு மிக அருகில்தான் இருக்கிறது. ஆனால் யாரோ முகம் தெரியாத மனிதன் தூக்கில் தொங்கியதற்கெல்லாம் செல்ல முடியுமா? அந்த நண்பர் வடக்கத்திக்காரர். ஆஷிஷ் சர்மா. அடுத்த நாள் வந்தவர் இறந்து போனவனின் அக்கா ஒரு நடிகை என்றும் தமிழில் கூட அவள் நடித்திருப்பதாக பேசிக் கொள்கிறார்கள் என்றார். அவர் சொன்ன விவரங்களையெல்லாம் வைத்து யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த நாள் மாலையில் அவரே கண்டுபிடித்துவிட்டார். கேத்தரின். ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்றார். தெரியாது. ஆனால் விசாரிப்பதில் பெரிய சிரமம் இல்லை. கேத்தரின் தெரசா. மெட்ராஸ் பட நாயகி. இறுதிச்சடங்குகளுக்கு பெங்களூர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. பிறகு செய்தித்தாள்களில் துழாவிய போது ‘மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதாக’ குறிப்பு எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறானாம். 

கிறிஸ்டோபரின் தற்கொலையைப் பற்றி எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை. பெங்களூரில் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வாரத்தில் ஒன்றிரண்டு செய்திகளாவது கண்ணில்பட்டுவிடுகின்றன. நாமாகத் தேடினால் எண்ணிக்கை நிறைய இருக்கக் கூடும். ஏதேதோ பிரச்சினைகள். காதல், பெற்றவர்களுடன் சண்டை, தேர்வுகளில் தோல்வி என்று ஏதாவதொரு காரணம் சொல்கிறார்கள். ஆனால் முடிவெடுப்பதற்கான தூண்டுதல் ஒன்றுதான் - மன அழுத்தம். 

இதை வெறும் பெங்களூரின் பிரச்சினை என்று சுருக்கிவிட முடியாது. உலகம் முழுவதிற்குமான பிரச்சினை. நம் மனதை நாமே சிதைத்துக் கொண்டிருக்கும் நவீனத்தின் பிரச்சினை. உடல் ஆரோக்கியம் சிதைவதைவிடவும் பன்மடங்கு வேகத்தில் மன ஆரோக்கியம் சிதைந்து கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியம் சிதையும் போது ஏதாவதொரு விதத்தில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். சர்க்கரை அளவு அதிகம் என்றோ, ரத்த அழுத்தம் உயர்கிறது என்றோ அடையாளப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனநலம் பாதிக்கப்படும் போது எளிதில் கண்டறிய முடிவதில்லை. கொலைகளும், கொள்ளைகளும், வன்புணர்ச்சிகளும் மிக அதிகமான செய்திகளாக இடம் பெறுவதை எதன் அடையாளமாக எடுத்துக் கொள்வது?

கேத்தரினின் சகோதரன் கிறிஸ்டோபருக்கு மட்டும் மன அழுத்தம் இல்லை. இங்கு எல்லோருக்குமே அந்தப் பிரச்சினை இருக்கிறது. நம்மால் அதை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிற அளவில் நாம் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது? மனதை திசை திருப்புவதற்கும் கூட பயிற்சி அவசியம். ஆனால் இந்தத் தலைமுறை அதற்கு நேரெதிரான மனப்பயிற்சியைச் செய்து கொண்டிருக்கிறது - அதாவது ஒன்றிலேயே நம் கவனத்தை இருப்பத்து நான்கு மணி நேரம் வைத்துக் கொண்டிருப்பது.

உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன். தூங்கும் வரைக்கும் அதையே நோண்டிக் கொண்டிருப்பது. எழுந்தவுடன் அதன் திரையில்தான் விழிக்கிறார்கள். இடையில் சிறுநீர் கழிக்க எழுந்தாலும் கூட அதுதான் கதி. மனம் பழகிவிடுகிறது. ஒன்றைப் பற்றியே சிந்த்தித்துக் கொண்டு அதற்கேற்றபடி பயிற்சி செய்து கொள்கிறது. பிறகு பிரச்சினை என்று ஏதாவது வந்தால் அதிலிருந்து எப்படி கவனத்தைத் திருப்புவது என்று தெரிவதில்லை. ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பயிற்சிக்கேற்ப பிரச்சினையை மட்டுமே நினைத்து நொந்து போகிறது.

அதுவும் பள்ளி, கல்லூரி வயதில் இருக்கும் மனம் முதிராத பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இதுதான் சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை இந்த மின்னணு சாதனங்கள் அடித்து நொறுக்கிவிடுகின்றன. Electronic drench என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். எந்நேரமும் மின்னனு சாதனங்களுடனே குடும்பம் நடத்துவதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். நனைந்து நமுத்துப் போய்விடுகிறது மனம்.

மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான வரையறை. அதற்கு மேலாக மின்னணு சாதனங்களைத் தொடவே கூடாது. முதலில் கஷ்டம்தான். ஆனால் போகப் போக பழகிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை எவ்வளவு வீணடிக்கிறோம் தெரியுமா? பேருந்து, ரயில், அலுவலகம், வகுப்பறை என்று எந்த இடத்திலும் பிற மனிதர்களின் முகங்களைக் கூட பார்ப்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொபைலிலேயே இருக்கிறார்கள். இணையம், ஃபேஸ்புக், வாட்ஸப் என்று ஏதாவதொரு காரணத்துக்காக தங்களது சிந்தனை முழுவதையும் அதிலேயே செலுத்துகிறார்கள். இப்படியே வெர்ச்சுவலாகிக் கொண்டிருக்கிறது நம் உலகம். முகம் தெரியாத யாரோ ஒரு மனிதரிடம் லைக் வாங்குவதற்கும் பேசுவதற்கும் ஏங்கும் மனம் நம்மோடு பயணிக்கும் சக பயணியிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவிதமான அனுபவங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நம் தலைமுறையின் சிக்கல்கள் வேறு எந்தத் தலைமுறை சந்தித்த சிக்கல்களைவிடவும் வித்தியாசமானது. குரூரமானது. நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை உதாசீனப்படுத்திவிட்டு ஏதோ ஒரு மயக்கமூட்டும் உறவைத் தேடித் திரியும் விநோதமான மனம் நமக்கு வாய்த்திருக்கிறது. இப்படி நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அதீத ஆபத்தானது என்பது மட்டும் நிதர்சனம். மனிதத்தன்மை, இரக்கம், அன்பு என மனித குலத்தின் எல்லா மதிப்பீடுகளையும் கருணையேயில்லாமல் அடித்து சிதைக்கும் வல்லமை நிறைந்த பாதை இது. சற்றேனும் விழித்துக் கொள்வது நல்லது. சமூகத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் நம்மையும் நம் குடும்பத்தையுமாவது காக்கலாம்.