அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். ஹரிபிரசாத். அவர் ஹைதராபாத் அலுவலகம். அனுபவம், சம்பளம் என எல்லாவிதத்திலும் நானும் அவரும் ஒரே மட்டம்தான். ஆனால் ஒரு விவகாரத்தில் அவரை நெருங்கக் கூட முடியாது. நிறுவனத்தில் என்ன நடக்கிறது? இந்த வருடம் எவ்வளவு சம்பள உயர்வு வரும்? எப்பொழுது ஆளைத் தூக்குவார்கள் என்கிற விவரங்களை எப்படியோ மோப்பம் பிடித்துவிடுவார். துப்பறியும் புலி. அது ஒன்றும் சாதாரணக்காரியம் இல்லை. வைஸ் பிரெஸிடெண்ட் அளவில் எடுக்கப்படும் முடிவுகளை இவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். அவ்வளவு பெரிய நெட்வொர்க் வைத்திருப்பார்.
ஆனால் நல்ல மனுஷன். கிடைக்கிற தகவல்களை ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று சொல்லிச் சொல்லியே எல்லோரிடமும் சொல்லிவிடுவார்.
‘யோவ் ஹரி...நீயே நூறு பேருகிட்ட சொல்லிட்டியே’ என்றால் ‘நெட்வொர்க் சாலா இம்பார்ட்டண்ட் பாபு’ என்பார். அதாவது நமக்குத் தெரிகிற தகவல்களை அடுத்தவர்களுக்குச் சொன்னால்தான் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை நமக்குச் சொல்வார்களாம்.
ஹைதராபாத்தில் நான் பணியில் இருந்த போது பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம். அவருக்கும் அப்பொழுது திருமணமாகியிருக்கவில்லை. அலுவலகத்திலேயே எந்நேரமும் தவம் கிடப்பார். பெற்றவர்கள் கடப்பாவில் இருந்ததனால் இவரைக் கேட்பதற்கும் யாரும் இல்லை. சில நாட்களில் அலுவலகத்திலேயே தூங்கிவிடுவார். அப்படிப்பட்ட மனுஷன். அவருக்கு போலியோவினால் இரண்டு கால்களுமே பாதிக்கப்பட்டிருந்தன. அதனாலேயே என்னவோ திருமணம் தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பெற்றோர்கள்தான் அழுத்திக் கொண்டிருந்தார்கள். வெகு சிரத்தையாக பெண்ணும் தேடினார்கள். கடைசியில் ஹைதராபாத்திலேயே ஒரு சம்மந்தம் அமைந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணத்திற்கு அழைத்திருந்தார். ஹைதராபாத்தில்தான் திருமணம். ஆனால் என்னால் செல்லமுடியவில்லை. திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாகத்தான் பேசினார். ஆனால் ஆறே மாதங்கள்தான். பிரிந்துவிட்டார்கள். அவரோடு தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தேன். ஆனால் என்ன காரணம் என்றெல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை. அவரும் எதுவும் சொன்னதில்லை. பிரிவுக்குப் பிறகு பெற்றவர்கள்தான் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று சொல்வார். வயதானவர்கள். அதுவும் அவரது அம்மாவுக்கு மிகுந்த துயரம். நல்ல சாப்பாடு எடுத்துக் கொள்வதில்லை; உறக்கம் இல்லை. மகனுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லை என்கிற துக்கம். ஆளை முடித்துவிட்டது. ஏழெட்டு மாதங்களில் போய்ச் சேர்ந்துவிட்டார்.
ஹரியின் அண்ணன் கடப்பாவில் அரசு ஊழியர். தந்தையைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டதால் ஹரி மீண்டும் அலுவலகத்திலேயே தவம் கிடக்கத் தொடங்கியிருந்தார். ஆனால் ஆளே மாறியிருந்தார். பழைய உற்சாகமான மனிதனைத் தொலைத்துவிட்டு எப்பொழுது பேசினாலும் தத்துவார்த்தமாகப் பேசத் தொடங்கியிருந்தார். ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று துல்லியமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்குத் திருமணத்தில் பெரிய விருப்பமே இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த முறிவுக்காக இவ்வளவு சிரமப்படுகிறார் என்றுதான் தோன்றும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக பெங்களூர் வந்திருந்தார். அப்பொழுது விரிவாக பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை என்கிற வகையில்தான் அந்தப் பேச்சு இருந்தது. மனைவி பிரிந்ததைவிடவும் அந்தப் பிரிவு தனது தாயைக் கொன்றுவிட்டது என்பதால் மனம் உடைந்திருந்தார். அடுத்து என்ன செய்வது என்கிற யோசனையே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். வாங்குகிற சம்பளத்தை செலவுக்கு போக மீதத்தை அப்படியே சில ஆதரவற்றோர்களுக்கான இல்லங்களுக்கு கொடுத்து வந்தார். ‘ஏதாவது சேர்த்து வெச்சுக்குங்க...கடைசி சமயத்துல பணம் இல்லைன்னா சிரமம் ஆகிடும்’ என்று சொல்லத் தோன்றியது. ஆனால் அதையெல்லாம் அவர் ஏற்கனவே யோசித்து வைத்திருந்தார். ‘நமக்கு எது நடக்கணும்ன்னு இருக்கோ அது நடக்கும்’ என்று மீண்டும் ஃபிலாசபிதான் பேசினார்.
அவர் பணம் கொடுத்து வந்த ஒரு ஆதரவற்றோருக்கான இல்லம் ஸ்பெயின் நாட்டிலிருந்த சிலரால் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அவர்கள் இங்கே வந்த போது ஹரியைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் வழியாகவே இன்னொரு ஸ்பெயின் நாட்டு என்.ஜி.ஓவுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சில நாட்களுக்குப் பின் அங்கேயே வரும்படி இவரை அழைத்திருக்கிறார்கள். உடனடியாக சரி என்று சொல்லிவிட்டார்.
ஸ்பெயின் சென்று ஒரு மாதம் இருக்கும். நேற்று அழைத்திருந்தார். அவரது அப்பாவுக்குத்தான் இதில் விருப்பமில்லை போலிருக்கிறது. ஆனால் ‘உனக்கு எது சந்தோஷமோ அதைச் செய்’ என்று சொல்லிவிட்டாராம்.
‘என்ன செய்கிறீர்கள்?’ என்றேன்.
சம்பளமில்லாத வேலைதான். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார். கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்கிறார். வேலையாட்களை ஒருங்கிணைக்கிறார். வெகு சீக்கிரமாகவே குழந்தைகள் இவரோடு ஒட்டிக் கொண்டார்களாம். ‘இன்னும் சில மாதங்களில் முழுமையாக ஸ்பானிஷ் பேசிவிடுவேன்’ என்றார்.
‘இதே வேலைகளை இங்கேயே செய்திருக்கலாமே?’
சிரித்தார்.
‘கடைசி காலத்திற்கு தேவைப்படும். சேர்த்து வைங்கன்னு நீங்கதானே சொன்னீங்க?...கடைசி வரைக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதாக இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்’என்றார். இது அறுபது வயதில் பேச வேண்டிய டயலாக் என்று தோன்றியது. இனி சம்பாதிக்கவே முடியாது என்கிற சூழலில் யாராவது நமக்கு பொறுப்பேற்றுக் கொண்டால் அர்த்தமிருக்கிறது. ஹரி நினைத்திருந்தால் இன்னமும் பல லட்ச ரூபாய்களைச் சம்பாதித்திருக்க முடியும். சேமித்து வைத்திருந்தால் கடைசி காலத்தில் ஏகப்பட்ட பணத்தை கைவசம் வைத்திருக்கக் கூடும். ஆனால் அவருக்கு அது பற்றியெல்லாம் கவலை இல்லை. இனி தனது மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யப் போகிறார். பணத்தை விடவும் நிம்மதி முக்கியம் என நினைக்கிறார்.
அவர் ஐடி துறையில் மிகப்பெரிய பதவிகளை அடைவார் என்று எதிர்பார்த்தோம். அவரது அறிவும் உருவாக்கி வைத்திருந்த நெட்வொர்க்கும் அப்படியான பிம்பத்தைத்தான் உருவாக்கியிருந்தன. ஆனால் ‘Uncertainty is certain'. எதிர்பாராத விஷயங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸியமாக்கிக் கொண்டிருக்கின்றன. அவரும் கூட இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டார். திருமணத்திற்காக குடும்பம் கொடுத்த அழுத்தம், மண முறிவு, தாயின் பிரிவு என ஏதோ ஒன்று அவரை சம்மட்டியால் அடித்திருக்கிறது. எந்த அடியுமே இல்லாத போது நாம் துணிச்சலான முடிவுகளை எடுக்க மாட்டோம். ‘நல்லபடியாத்தானே போகுது...இப்படியே போகட்டும்’ என்றுதான் நினைக்கத் தோன்றும். safe zone. இப்படி ஏதாவதொரு அடி விழும் போது எடுக்கக் கூடிய முடிவுகள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடும். ஹரியின் முடிவு அப்படியானதாகத்தான் தோன்றியது. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு நொறுக்கிவிட்டு விமானம் ஏறிவிட்டார். அவரிடம் வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. 'Keep in touch' என்றேன். ‘தொலைபேசி கொஞ்சம் செலவு அதிகம். மின்னஞ்சல் அனுப்புகிறேன்’ என்றார். சிரித்துக் கொண்டேன். பின்னால் குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.