தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைத்திருந்தார்கள். இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடக்கிறது. அதில் பேசுவதற்கான அழைப்பு அது. சரி என்று சொல்லிவிட்டேன். வழக்கமாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேசும் நிகழ்வுகளில் நூறு மாணவர்களுக்குள்தான் இருப்பார்கள். பெரிய சிரமம் இருக்காது. சமாளித்துவிடலாம். ஆனால் ஒரு வாரம் கழித்து அழைத்தவர்கள் ‘நீங்க எப்படியும் இரண்டு மணி நேரம் பேச வேண்டியிருக்கும்’ என்றும் கிட்டதட்ட ஐந்நூறு மாணவர்களுக்கு மேல் ஆடிட்டோரியத்தில் இருப்பார்கள் என்றார்கள். இது சங்கடமான விஷயம்தான். அத்தனை மாணவர்களுக்கு முன்பாக வேலை வாய்ப்பு பற்றி பேசுவதென்றால் சிரமம். அதுவும் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள். கஷ்டம்தான். அவ்வப்போது வேலைகளைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பதால் என்னை நம்பி ஏமாந்திருப்பார்கள் போலிருக்கிறது.
மாணவர்களிடையே பேசும் போது புள்ளி விவரங்களையும் தகவல்களையும் கொட்டுவதை விட அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வைப்பதுதான் முக்கியமான விஷயம். அதற்காக கடந்த பதினைந்து இருபது நாட்களாகவே தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் தகவல்களைப் புரட்டினால் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் படித்த மாணவர்களுக்கு வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும் என்றெல்லாம் இல்லை. ஐடியில் கூட வேலை இருக்கிறது. மொபைல் நிறுவனங்களில் வேலை இருக்கிறது. பன்னாட்டு விளம்பர நிறுவனங்களில் வேலை இருக்கிறது.
ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆரக்கிள்(Oracle) நிறுவனத்தில் தமிழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வேலைக்குக் கேட்டிருக்கிறார்கள். computational Linguist என்ற வேலை. ஹிந்தி, ஸ்பானிஷ் உள்ளிட்ட சில மொழிகள் தெரிந்தவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். தமிழும் அதில் ஒன்று. எவ்வளவு தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழ் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்களிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. கணினி சார்ந்த அறிவை அவர்கள் வளர்த்துக் கொள்வதில்லை என்பதுதான் அது. கணினி பாடங்களை சொல்லித் தரும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள் வகுப்புகளை முடித்தால் கூட போதும். அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். Python, Ruby போன்ற மென்பொருட்களைத் தெரிந்து வைத்திருந்தால் இன்னமும் உசிதம்.
தமிழ் பேராசிரியர்களிடம் பேசினால் ‘பவர்பாய்ண்ட் தெரியாது’ என்று சொல்வதைக் கேட்க முடியும்.
‘இது கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா?’ என்று கேட்கலாம்தான்.
‘உனக்கு கட்டளைக் கலித்துறை தெரியுமா?’ என்று கேட்டுவிடுவார்களோ என்று பம்மிக் கொள்வேன்.
எனக்கு உயிரெழுத்து பன்னிரெண்டு, மெய்யெழுத்து பதினெட்டு என்கிற அளவில் தமிழ் தெரியும். அந்த அளவுக்கு தமிழ் மாணவர்கள் கணினியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறேன். ஒரு Programming Language போதும். கனவேலை செய்யும்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தேசத்தில் கால் வைக்காதவரையிலும் ‘தமிழ் படித்தால் வாத்தியார்தான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது சரிதான். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேடுவதில்தான் வெற்றி இருக்கிறது. இந்தக் கருத்தரங்கத்துக்காக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். முனைவர். அண்ணாகண்ணன் அப்படியானவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். யாஹூ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தமிழ்ப் பிரிவுகளில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பெங்களூரில் இருந்த போது நிறையப் பேசியிருக்கிறோம். இப்பொழுது மும்பை சென்றுவிட்டார். என்ன வேலை என்று கேட்டால் ஸ்மார்ட் ஃபோன்களில் தமிழ் மொழியை நிறுவும் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணி.
இப்படிக் கூட ஒரு வேலை இருக்கிறதா என்று யோசித்தால் எப்படியெல்லாமோ வேலைகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. பேச்சறிதல் (Speech Recognition) என்பதைக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஒலியை பிரதியாக மாற்றுவது. Speech to text. இப்பொழுது நிறைய நிறுவனங்கள் இதைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்குமளவிற்கு தமிழில் நிறைய மென்பொருட்கள் இல்லை என்கிறார்கள். காரணம் இந்தத் துறையில் பணியாற்றும் தகுதியான ஆட்கள் இல்லை என்பதைக் காரணமாகச் சொல்கிறார்கள். ஒரு நிறுவனம் ஸ்பானிஷ் மொழியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அடுத்து எந்த மொழியில் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன் சில கணிப்புகளை மேற்கொள்கிறார்கள். அந்த மொழியில் பேச்சறிதல் மென்பொருளுக்கான சந்தைத் தேவை என்ன, எவ்வளவு மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள் என்று நிறைய ஆராய்ச்சிகளைச் செய்வார்கள். அதே சமயத்தில் Skilled worker கிடைக்கிறார்களா என்பதையும் பார்ப்பார்கள். அப்படி ஏதாவதொரு அம்சத்தில் அடிபடும் போது இந்த மொழியை விட்டு இன்னொரு மொழிக்குச் சென்றுவிடுகிறார்கள்.
பேச்சறிதல் மட்டுமில்லை- Natural Language Processing, Interpretation என்று ஏகப்பட்ட வேலைகளைச் சொல்ல முடியும்.
இன்னொரு உதாரணத்தைச் சொல்லலாம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் சில தேர்வுகளை எழுத வேண்டும். கட்டாயத் தேர்வுகள். அதுவும் ஆன்லைன் தேர்வுகள். அதற்கு தேவையான பாடங்களையும் கணினி வழியாகவே படித்துக் கொள்ளலாம். பாடங்களை நமக்கு விருப்பமான மொழியில் படிக்க முடியும். ஏகப்பட்ட மொழிகளில் இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டுமில்லை. விசாரித்தால் தமிழ் பாடத்தை உருவாக்குவதற்கான சரியான ஆட்கள் இல்லை என்று சம்பந்தப்பட்ட துறையில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
ஆசிரியர் பணி பொருத்தமானதுதான். அரசாங்கச் சம்பளம், பெரிய ரிஸ்க் இல்லை என்று எவ்வளவோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் தமிழில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆசிரியராகாவே சேர்ந்தாலும் கூட சில காரியங்களைத் தமிழ் தெரிந்தவர்களால்தான் செய்ய முடியும். தமிழ் மாணவர்கள் தங்கள் கூடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதுதான் தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பயனைத் தரும்.
இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு தயாரித்து வைத்திருக்கிறேன். எப்படியும் பாக்யராஜ் ஸ்டைலில் பேசிவிடுவேன் என்கிற நம்பிக்கையிருக்கிறது.
ஆனால் ஒன்று- இப்படியெல்லாம் யாராவது நம்மையும் நம்பி ஒரு அழைப்பிதழை அச்சடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தால்தான் வீட்டிலிருக்கிறவர்கள் நம்புகிறார்கள். நல்லவேளையாக இவர்கள் முன்னதாகவே அனுப்பி வைத்துவிட்டார்கள். இல்லையென்றால் நிகழ்ச்சிக்குச் செல்லும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லி ஒரு அழைப்பிதழை பத்திரமாக வாங்கி வைக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் ‘அய்யய்யோ..தீர்ந்துடுச்சே’ என்பார்கள். அப்பொழுது என் மனம் எப்படி வெதும்பும் என்று எனக்குத்தான் தெரியும். சரி, இதையெல்லாமா வெளியில் சொல்லிக் கொண்டிருப்பது?
தமிழகமே திரண்டு வா..குலுங்கட்டும் சோழனின் தலைநகரம்..தரணியே திரும்பிப்பார்க்கட்டும் தஞ்சையை! ஆங்!