பத்து வருடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் என்றெல்லாம் இல்லாத சமயத்தில் தமிழ் மின்னஞ்சல் குழுக்களில் ஒரு பெயர் மிகப் பிரபலமாகியிருந்தது. நிலாரசிகன். அட்டகாசமான நிழற்படங்களின் மீது காதல் ரஸம் சொட்டும் கவிதைகள் எழுதப்பட்டு அது ஏகப்பட்ட பேரால் ஃபார்வேர்ட் செய்யப்படும். அதை நிலாரசிகன் கிட்டத்தட்ட ஒரு ட்ரெண்டாக மாற்றியிருந்தார். நிறையப் பேர் அவரைப் போலவே ஆவதற்கு முயன்று கொண்டிருந்தார்கள். அவரது புகழைப் பார்த்து எனக்கெல்லாம் பொறாமையாக இருக்கும். அவ்வளவு விசிறிகள் அவருக்கு- குறிப்பாக அவரது பெண் ரசிகைகள்தான் பொறாமைக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என்கிற ரேஞ்சில் நவீன கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்தார். கோணங்கி பற்றியும் தேவதச்சன் பற்றியும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் மனநிலைக்கு வந்திருந்தார். கேட்டால் ‘இதுதான் நல்லா இருக்கு பாஸ்’ என்பார். உண்மையில் அவர் ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்தது கவிதைகள் இல்லை. விடலைகளின் மனநிலையைச் சீண்டுகிற வித்தை அது. மயங்கிக் கிடந்தார்கள்.
பொழுதுபோக்காக நிலாரசிகன், நரன், வெய்யில், கதிர்பாரதி என்று கவிஞர்களின் பெயரை கூகிளில் தேடிக் கொண்டிருந்தேன். நிலாரசிகனின் பழைய கவிதைகள் வந்து கொட்டுகின்றன.
நவீன கவிதைகள் எழுதத் தொடங்கிய பிறகு நிலாரசிகனின் போக்கு முற்றாக மாறிவிட்டது. மென்மையான கவிதைகளில் மிக அழுத்தமான விஷயங்களை எழுதுவது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘கவிதைகளின் மொழியிலும் கூட திருகலும் அழுத்தமும் இருக்க வேண்டும்’ என்கிற கட்சியினரும் உண்டு. ஆனால் அது அவசியமில்லை. கவிதை அழுத்தமானதாக இருக்கட்டும். ஆனால் கவிதையின் மொழி மிக எளிமையாக இருக்கலாம். ஒரே வாசிப்பில் புரிந்துவிடும்படி இருந்தால் இன்னமும் நல்லது.
நிலாரசிகனின் இந்தக் கவிதை அப்படித்தான் -
இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்,
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர் சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.
இரண்டே அறைகள்தான் இருக்கின்றன. இவர் ஒரு அறையில் படுத்திருக்கிறார். இன்னொரு அறையிலிருந்து குழாயில் நீர் சொட்டுகிறது. அது விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையில் இரவு, தனிமை, பயம், ஓலம் என அத்தனையையும் கொண்டு வந்துவிடுகிறார். எல்லோருக்குமே இத்தகைய ஒரு அனுபவம் இருக்கும். யாருமில்லாத சமயத்தில் வீட்டில் தனித்திருக்கும் போது ஒருவிதமான பதற்றம் உருவாகும் அல்லவா? அதுவும் இரவில் உருவாகும் பதற்றம். அதை பயம் என்று கூடச் சொல்ல முடியும். அதை இந்தக் கவிதை நேர்த்தியாக சித்திரப்படுத்துகிறது.
இந்தக் கவிதையை எளிதாக visualize செய்துவிட முடியும். மனதுக்குள் சினிமா ஓட்டுவது போல. இரவு முழுவதும் பயந்து கொண்டேயிருக்கிறான். அதிகாலையில் வாசல் பெருக்கும் சத்தம், பால்காரரின் சத்தம் எல்லாம் நீர் சொட்டு ஓசையை மறைக்கிறது என்பது மாதிரியான காட்சிப்படுத்துதலைச் சொல்கிறேன்.
இன்னொரு கவிதை-
கால்கள் இழந்த கிழவனொருவன்
ஊர்ந்து செல்லும் வழியெங்கும்
கற்களைப் பொறுக்கியபடியே செல்கிறான்.
அவனது கூடையை நிரப்புகின்றன
கருங்கற்கள்.
நதிக்கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு
கற்களாக நீரில் எறிந்து மகிழ்கிறான்
கற்கள் எழுப்பும் அலைகளில்
மெல்ல கால் முளைத்து
பால்யத்திற்குள் நுழைகிறான்
தாய்மையின்
சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.
ஒரு கிழவன். அவனுக்கு கால்கள் இல்லை. கருங்கற்களைப் பொறுக்கிச் சென்றவன் நதியினுள் வீசுகிறான். அந்த அலை அவனது பால்யத்தை நினைவுபடுத்துகிறது. அவனது கற்பனையில் அவனுனுக்கு கால்கள் முளைக்கின்றன. அவனை பால்யத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நதியில் தாய்மையின் சாயல் தெரிகிறது. நதி அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கிழவன் தான் நதியை தன் தாயாக நினைத்துக் கொள்கிறான். அல்லது நாம் அந்த நதியை அவனது தாயாக உருவகப்படுத்திக் கொள்கிறோம்.
இந்தக் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் என்ன சிக்கல்? அவ்வளவுதான் கவிதை.
‘அய்யய்யோ...கவிதை என் ஏரியாவே இல்லை’ என்று யாராவது பேசினால் அவரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்து பத்து நாட்களுக்கு திரும்பத் திரும்ப கவிதைகளையே சொல்லித் தர வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அவ்வளவு பெரிய கஷ்டமா என்ன? கவிதை புரியாது, கவிதை கஷ்டம் என்றெல்லாம் புரளியைக் கிளப்பி நிறையப்பேரை கவிதைப் பக்கமே வராமல் செய்துவிட்டார்கள். ஒரு கோயமுத்தூர்க்காரர் ஃபோன் செய்யும் போதெல்லாம் ‘கவிதைக்கும் எனக்கும் ஆகாதுங்க’ என்கிறார். முதலில் அவரைத்தான் கடத்தி கவிதை சொல்லித் தருவதாகத் திட்டம். ‘ஆபரேஷன் க’. இந்த ‘க’வை கவிதை என்றும் எடுத்துக் கொள்ளலாம். கதறடித்தல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.