Dec 1, 2014

நம்பிக்கைதானே எல்லாமும்?

முகேஷின் அறுவை சிகிச்சைக்காக பணம் கொடுப்பது பற்றி அறிவித்தவுடன் நிறைய மின்னஞ்சல்கள் வந்திருந்தன. நிசப்தம் ட்ரஸ்ட் வழியாகவே பணத்தை பெற்று முகேஷின் மனைவியிடம் சேர்ப்பித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்ததால் கேட்டவர்களுக்கெல்லாம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்திருந்தேன். பெரும்பாலான மின்னஞ்சல்கள் ‘நான் உதவ விரும்புகிறேன். எந்தக் கணக்குக்கு பணம் அனுப்புவது’ என்கிற ரீதியில்தான் கேட்டிருந்தார்கள். தாங்கள் அனுப்பவிருக்கும் தொகை குறித்தான தகவலைத் தெரிவிக்கவில்லை. அதைக் கேட்பது நாகரீகம் இல்லை என்பதால் கணக்கு எண்ணை மட்டும் அனுப்பியிருந்தேன். 

இப்பொழுது வரையிலும் அறக்கட்டளையின் கணக்கில் இரண்டு லட்சத்து அறுபத்தோராயிரம்(ரூ.2,61,300) ரூபாய் சேர்ந்திருக்கிறது. பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்கனவே ஐம்பதாயிரம் வரைக்கும் வந்திருந்தது. அதைத் தவிர்த்தாலும் இரண்டு லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பது நிச்சயம். 

இந்த இரண்டு திட்டத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. பள்ளிகளுக்கு உதவுவதற்காக அளிக்கப்பட்ட பணம் அதற்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். முகேஷின் மருத்துவச் செலவுக்காக அளிக்கப்பட்ட பணம் அதற்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவ உதவிக்காக ஐம்பதாயிரம், நாற்பதாயிரம், இருபத்தைந்தாயிரம், பதினைந்தாயிரம் என்று அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். 

யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று உடனடியாகச் சொல்ல முடியவில்லை. இன்னமும் வங்கிக் கணக்குக்கு username/password வந்து சேரவில்லை. தினமும் எஸ்.எம்.எஸ் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. நாற்பதாயிரம் கணக்கில் சேர்ந்திருக்கிறது, ஐந்தாயிரம் சேர்ந்திருக்கிறது, பத்தாயிரம் கணக்கில் சேர்ந்திருக்கிறது என்று- ஆனால் யார் அனுப்பியிருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. இந்த வாரத்திற்குள் விவரங்களைச் சேகரித்து ரசீது அனுப்பும் பணியைத் தொடங்க வேண்டும். பரோடா வங்கியே துணை.

முகேஷின் மனைவி பிரியாவிடம் இன்று பேச முடிந்தது. எதனால் அப்பல்லோ மருத்துவமனை என்கிற கேள்வி எனக்கும் இருந்தது. அதே கேள்வியை சிலர் மின்னஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் முயன்றிருக்கிறார்கள். எதுவும் சாத்தியப்படாது என்கிற சூழலில்தான் அப்பல்லோவுக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் சேர்ந்தால் அதை அப்படியே முகேஷின் குடும்பத்திற்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். தொகை அதிகமானவுடன் ஒருவருக்கே கொடுப்பதற்கு பதிலாக இதே போன்று கஷ்டப்படும் வேறொரு குடும்பத்திற்கு உதவினால் இரண்டு குடும்பங்களுக்கு உதவியது மாதிரி இருக்குமல்லவா என்றும் தோன்றியது. ஒருவரின் பெயரைச் சொல்லி பணத்தை வாங்கிவிட்டு இன்னொருவருக்கு கொடுப்பது நியாயமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் தப்பில்லை. ஒருவருக்கே தேவைக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை. எவ்வளவு தேவைப்படுகிறதோ அவ்வளவு மட்டும் கொடுத்துவிடலாம்.

இன்றே கூட பிரியா எவ்வளவு பணம் புரட்டியிருக்கிறார் என்ற விவரத்தை கேட்டிருக்கலாம்தான். ஆனால் நாளை காலை எட்டு மணிக்கு அறுவை முகேஷூக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. அந்த பதற்றத்தில் பேசினார். அதனால் நாளை கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதை அனுசரித்து இரண்டொரு நாளில் பணம் அவரது கையில் பணத்தைச் சேர்ப்பித்துவிட்டு தகவல் தெரிவிக்கிறேன்.

இன்று கூட முகேஷூக்கு உதவ விரும்புவதாக ஏழெட்டு மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. இன்னமும் யாருக்கும் பதில் அனுப்பவில்லை. முகேஷூக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. இனி அவருக்கென்று பணம் அனுப்ப வேண்டாம். நிசப்தம் அறக்கட்டளைக்கு உதவுவதாக விரும்பினால் அனுப்பி வைக்கவும். அதை உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த அறக்கட்டளை வேலையைத் தொடங்கிய போது ‘பணத்தை வங்கிக் கணக்கு வழியாகப் பெற்று அதைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடலாம்’ என்று அசால்ட்டாக நினைத்திருந்தேன். ஆனால் லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. இந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பது மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பியிருப்பேன். யாருக்கேனும் பதில் அனுப்பாமல் விட்டிருந்தால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதில்லை. இந்த வாரத்தில் அத்தனை பேருக்கும் ரசீது அனுப்பி வைத்துவிடுகிறேன். இனி அமெரிக்காவிலிருந்து எதிர்பார்க்கும் பணம் வந்து சேர்ந்தவுடன் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மரம் நடுதலுக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். அலுவலகம், குடும்பம், எழுத்து அதோடு சேர்த்து இதுவும் சேர்ந்தால் கண்ணாமுழி பிதுங்கிவிடும் போலிருக்கிறது. 

பிதுங்கிவிட்டு போகட்டும். ஒரு திருப்தி இருக்கிறது. முகம் தெரியாத ஒரு குடும்பத்துக்கு இத்தனை பேர்கள் உதவுகிறார்கள். அதற்கு சிறு காரணியாக இருக்கிறோம் என்கிற திருப்தி.

ஃபோனைத் துண்டிக்கும் போது ‘நாளைக்கு ஆபரேஷன்...ப்ரே செஞ்சுக்குங்க சார்’ என்று சொன்ன பிரியாவின் குரல் தழுதழுத்தது. இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த மனிதன் ஐ.சி.யூவில் படுத்திருக்கிறான். எதிர்காலம் பற்றிய எந்த வெளிச்சமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் அழுகை அது. 

‘இத்தனை பேர் இருக்காங்க...தைரியமா இருங்க’ என்று சொல்லியிருக்கிறேன். 

நம்பிக்கையிருக்கிறது. அதுதானே எல்லாமும்?