இன்று முகூர்த்த தினம். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. காலை ஆறு மணிக்கு விழா. வீட்டில் என்னை போகச் சொல்லியிருந்தார்கள். குளிர் வாட்டிக் கொண்டிருந்தது. ஆறேகால் மணிக்கு வீட்டிற்கு செல்லும் போது முகத்தை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். ஒரு பெண்மணி வாயில் துணியை புதைத்தபடி அழுது கொண்டிருந்தார். அவரது மனைவியாக இருக்கக் கூடும். பெரிய அளவில் விருந்தினர்களை அழைத்திருக்கவில்லை. அதிகபட்சம் நாற்பது பேர்கள்தான் இருந்தார்கள். அங்கு நிலவிய அமைதியே காட்டிக் கொடுத்துவிட்டது- என்னவோ நடந்திருக்கிறது.
இரண்டே நிமிடத்தில் விளக்கி விட்டார்கள். நிலப் பிரச்சினை. லேண்ட் மாஃபியா. எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் ஏரியாவில் இப்படி சிக்கிக் கொண்ட மூன்றாவது வீடு இது. அந்த மனிதருக்கு ஐம்பது வயது இருக்கும். அரசு ஊழியர். வயிறு முட்டிக் கொண்டிருக்கும். பெரும்பாலான மாலை நேரங்களில் கட்டிட வேலையை பார்வையிட வந்துவிடுவார். அப்பாவுக்கு அவருடன் நல்ல அறிமுகம் உண்டு. எனக்கு இல்லை. எதிர்படும் போது சிரித்துக் கொள்வேன். அவ்வளவுதான். அவருக்கு பள்ளியில் படிக்கும் வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனும்தான் இன்று அழுது கொண்டிருந்தான்.
மாஃபியா என்றால் பெரிய மீசை வைத்துக் கொண்டு கழுத்து நிறைய சங்கிலி அணிந்த ரவுடியெல்லாம் இல்லை. அவனை நானும் பார்த்திருக்கிறேன். மிகச் சாதாரணமாக இருப்பான். இவர் தனது கட்டிடத்தை பார்க்க வந்த போதெல்லாம் அவனும் வந்திருக்கிறான். தனக்கு பக்கத்தில் சொந்தமாக காலி இடம் இருப்பதாக எதையோ கை காட்டியிருக்கிறான். இவரும் நம்பிக் கொண்டு பேசிப் பழகியிருக்கிறார். சென்ற வாரத்தில் கூட வந்திருக்கிறான். புதுமனை புகுவிழாவுக்கான நாள் விவரங்களையெல்லாம் கேட்டுச் சென்றிருக்கிறான். இவரும் வாய் நிறைய விழாவுக்கு அழைத்திருக்கிறார்.
நேற்றிரவு வரையிலும் அவனும் தனது கட்டிடத்தைத்தான் பார்க்க வந்திருக்கிறான் என்று இந்த மனிதருக்குத் தெரியவில்லை. நேற்றிரவு பத்து பன்னிரெண்டு பேரை அழைத்து வந்திருக்கிறான். அவர்கள் வீட்டிற்கு வெளியிலேயே இரண்டு கார்களில் அமர்ந்து கொண்டார்கள். இவர் ஷாமியானா கட்டுபவனையும் பந்தல் போடுபவனையும் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவன் மட்டும் தனியாக இவரிடம் வந்திருக்கிறான். இவர் சிரித்தாராம். அவன் சிரிக்கவில்லை. முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘டாக்குமெண்ட்டெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா?’என்று கேட்டிருக்கிறான். வில்லங்கம் இருப்பது தெரியாமல் ‘பார்த்தாச்சே...நாளைக்கு குடும்பத்தோட வந்துடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
‘இருக்காது ஸ்வாமி...இந்த இடத்துக்கு எங்கப்பாவும் ஒரு வாரிசு...நான் கையெழுத்து போடலையே...எப்படி டாக்குமெண்ட் சரியாக இருக்கும்?’ என்று கேட்ட போதுதான் இவருக்கு மண்டையில் யாரோ ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல ஆகியிருக்கிறது.
‘இப்போ வந்து சொல்லுறீங்க?’ என்று அவர் கேட்ட போது அதற்காக காத்திருந்தவன் போல எதை எதையோ பேசிவிட்டு ‘இருபது லட்சம் கொடுங்க...கையெழுத்து போட்டுத் தர்றேன்’ என்றிருக்கிறான். விளங்கிவிட்டது. வெள்ளம் தலைக்கு மேல் போகிறது. பத்து பேரும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்கள். இனி ஏதாவது உடன்படிக்கைக்கு வந்தால்தான் கிரஹப்பிரவேசத்தை நடத்தவே அனுமதிப்பார்கள்.
இத்தகைய சம்பவங்களை பெங்களூரில் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுக்கு அந்த இடத்தோடு சம்பந்தமில்லாமல் இருக்காது. ஏதாவது ஒரு வகையில் அவனுக்கும் அந்த நிலத்துக்கும் சம்பந்தம் இருக்கும். அது அவனுடைய தாத்தாவின் சொத்தாக இருக்கும். சித்தப்பா பெரியப்பாவெல்லாம் கையெழுத்து போட்டிருப்பார்கள். இவனது அப்பா கையெழுத்து போட்டிருக்கமாட்டார். பத்திரங்கள் கை மாறி இவர் கைக்கு வந்து சேர்ந்திருக்கும். இதற்குத்தான் நல்ல வழக்கறிஞரிடம் கொடுத்து ஒப்பீனியன் வாங்குவார்கள். இவரைப் போல ஓரிருவர் ஏதாவது போனாம்போக்கி வக்கீலிடம் சென்று இப்படி ஏமாந்துவிடுவார்கள். கட்டிடம் முழுமையடையும் வரைக்கும் விட்டுவிடுவார்கள். கடைசிக் கட்டத்தில் வந்து பிரச்சினை செய்வார்கள். அப்பொழுதுதானே தப்பிக்க முடியாது? அவர்கள் காலங்காலமாக இதே ஊரில் இருப்பவர்களாக இருக்கும். இடத்தை வாங்கியவரால் அவ்வளவு சுலபமாக எதுவும் செய்ய முடியாது.
நிலம் வாங்குவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழித்திருப்பார். வீடு கட்ட இவருக்கு நாற்பத்தைந்து லட்சம் ஆகிவிட்டதாம். இரண்டு மூன்று போர்ஷன்களை வாடகைக்கு விடும்படி கட்டியிருக்கிறார். எப்படியும் எழுபத்தைந்து லட்சம் ரூபாயாவது உள்ளே இழுத்திருக்கும். இப்பொழுது இவன் இருபது லட்சம் கேட்கிறான். கொடுக்கவில்லையென்றால் இப்படியே இழுத்துக் கொண்டிருக்கும். கோர்ட், கேஸ் என்று தீர்ப்பை வாங்கி வருவதற்குள் பேரனுக்கு திருமணம் ஆகிவிடும். ஏற்கனவே முதலீடு செய்த எழுபத்தைந்து லட்சத்துக்கு வட்டிக்கணக்கு போட்டால் என்ன ஆவது? நமக்கு தில் இருந்தால் அரசியல்வாதிகளையோ அல்லது ரவுடிகளையோ வைத்து பேசிப் பார்க்கலாம். ஆனால் மிரட்ட வருகிறவன் ‘இவன் யார்..என்ன கணக்கு’ என்பதையெல்லாம் ஏற்கனவே கணித்து வைத்திருப்பான். தினமும் இவரிடம் பேச்சுக் கொடுத்தது கூட அதற்காகத்தான் இருக்கும்.
இருபது லட்சத்தில் ஆரம்பிக்கும் இந்த பேரம் எப்படியும் பதினைந்து லட்சமாவது கொடுத்தால்தான் தீர்வுக்கு வரும். அதற்கு கீழாக இறங்கவே மாட்டார்கள். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பேரம் நடந்த வீடுகளைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கவுன்சிலர்கள். உள்ளூர் தாதாக்கள் எல்லாம் வைத்து பேச வேண்டுமானால் அவர்களுக்கு ‘ப்ரொபஷனல் ஃபீஸ்’ பல லட்சம் ரூபாய் அழ வேண்டியிருக்கும். வகையாக சிக்கிக் கொண்டார்.
இந்த மனிதரின் வாழ்நாள் சம்பாத்தியம் இது. ஒரு சுமாரான அரசு ஊழியர் பெங்களூர் போன்ற பெருநகரத்தில் குடும்பம் நடத்தி பையனை படிக்க வைத்து எழுபத்தைந்து லட்சத்தில் வீடு கட்டுவது பெரும் சாதனை. அவரிடம் இன்னமும் இருபது லட்சம் கேட்டால் தலையைத்தான் அடமானம் வைக்க வேண்டும்.
வீட்டிற்குள் சென்றவுடனேயே ‘இன்னைக்கு கிரஹப்ரவேசம் நடக்காது’ என்று சொல்லிவிட்டார்கள். இழவு வீட்டில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தோம். ‘வக்கீலிடம் பேச வேண்டும். எட்டு மணி ஆவதற்காகக் காத்திருக்கிறேன்’ என்ற போது உடைந்துவிட்டார். பணம் இல்லாமல் காரியம் ஆகாது என்று அவருக்கும் தெரியும். ஆனால் பத்து லட்சம் கொடுப்பதா அல்லது பதினைந்து லட்சம் கொடுப்பதா என்பதில்தான் பிரச்சினை. அதற்குத்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
என்ன உலகமடா சாமி?
மிக நைச்சியமாக பழகுகிறார்கள். நல்லவர்களைப் போலவே பேசுகிறார்கள். தேவையான இடங்களில் வஞ்சகத்தைக் காட்டாமல் சிரிக்கிறார்கள். அப்படியே நம்பிக் கொள்கிறோம். சற்றே அசந்து போகும் போது பின்னங்கழுத்தில் கத்தியை வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களின் அத்தனை வார்த்தைகளுக்கும் நம் தலையை அசைத்தாக வேண்டும். இல்லையென்றால் அந்தக் கத்தி எப்பொழுது வேண்டுமானாலும் இறங்கிவிடும். அப்படியான அற்புத உலகம் இது.
இப்பொழுது அவரின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள். அவரைப் பார்த்தபடியே மனைவியும் மகனும் அழுது கொண்டிருக்கிறார்கள். கரன்சித்தாளால் மட்டும் துடைக்கக் கூடிய அழுகை அது.