Dec 31, 2014

தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாமா?

மென்பொருள் துறை ஊழியர்களுக்கும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமென்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியெலலம் சங்கம் வந்துவிட்டால் போனஸ் கேட்கலாம். வேலையை விட்டு நீக்கினால் சங்கத்து மூலமாக கேள்வி கேட்கலாம். பிரச்சினை செய்யும் மேனேஜரைச் சட்டையப் பிடிக்கலாம். இன்னும் என்னனென்னவோ செய்யலாம். நல்ல விஷயம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதுதான் கேள்வி. 

பெருமுதலாளித்துவத்தின் நீட்சிதான் இந்த கார்போரேட் உலகமும், ஐடி நிறுவனங்களும். அவர்களிடம் சென்று ‘நாங்கள் சங்கம் ஆரம்பிக்கிறோம்’ என்று சொன்னால் அடித்தெல்லாம் துரத்த மாட்டார்கள். சிரித்துக் கொண்டே ‘அப்படியா ரொம்ப சந்தோஷம்..நல்லபடியா ஆரம்பிங்க’ என்று சொல்வார்கள். அந்தக் கட்டிடத்தை தாண்டுவதற்குள் எல்லாவிதமான நசுக்குதலையும் ஆரம்பித்திருப்பார்கள். அதில் வெற்றியும் அடைந்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். விஷப்பாம்புகள்.

எத்தனை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சொந்தக்கட்டிடத்தில் இயங்குகின்றன என்று கணக்கெடுத்துப் பார்த்தால் போதும். நிலைமை தெரிந்துவிடும். அவர்களிடம் இல்லாத பணமா? அவர்கள் நினைத்தால் இடம் வாங்கி சர்வ சாதாரணமாக சொந்தக் கட்டிடம் கட்ட முடியும். ஏன் கட்டுவதில்லை? எவ்வளவோ காரணங்களை வெளியில் சொல்வார்கள். ஆனால் சிம்பிளான காரணம் ஒன்றிருக்கிறது. எப்பொழுது ஒத்து வரவில்லையோ அப்பொழுது பெட்டியைக் கட்டிவிடலாம் என்பதுதான். அவர்களுக்குத் தேவையெல்லாம் Cheap Resource. பிரச்சினை செய்யாத அரசாங்கங்கள். சுமூகமான சூழல். இதில் எதில் சிரமம் வந்தாலும் அவர்களின் கொடுக்குகள் தயாராகிவிடும். 

சங்கம் ஆரம்பிக்க விரும்புபவர்களின் விருப்பம் போலவே ஒரு நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் போராட்டத்தில் இறங்குவதாகவே வைத்துக் கொள்வோம். நிறுவனத்தின் உயர்மட்டம் செவி சாய்க்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது? அரசு ஊழியர்களின் போராட்டங்களையே இங்கு சர்வசாதாரணமாக முறிக்கிறார்கள். தற்காலிக ஊழியர்கள் தேவை என்று கேட்டால் மூன்றாயிரம் ரூபாய்க்கு வேலை செய்ய மூன்று லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகம் ஸ்தம்பித்துப் போய்விட்டதா என்ன?

அரசாங்கங்களே கருணையைக் காலால் மிதித்துவிட்டு முதலாளிகளைப் போல நடந்து கொள்ளும் போது பெரு முதலாளிகளை பணிய வைத்துவிட முடியும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலும் பகல் கனவுதான். இந்த நிறுவனத்தைப் பகைத்துக் கொண்டு நான் வெளியே போனால் இதே வேலையைச் செய்ய நிறுவனத்திற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள். ஆனால் என் குடும்பத்திற்கு நான் மட்டும்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலைமையில் எப்படித் துணிவேன்? நல்ல சம்பளம் தருகிறார்கள். மகனும் மகளும் படிக்கும் பள்ளிக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. மாதாமாதம் தேய்க்கும் கிரெடிட் கார்டுக்கு பணம் தேவைப்படுகிறது. வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கிறது. அடிமையோ, கொத்தடிமையோ- பணம் வந்து கொண்டிருக்கிறது. குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொடிபிடித்து வேலை போய்விட்டால்? 

நீதிமன்றங்களின் வழியாகவோ அல்லது பாராளுமன்றத்தின் வழியாகவோ தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வர வைப்பார்களா? அதற்காக ஆட்களைத் திரட்டி தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவார்களா? எழுதுவதற்கும் பேசுவதற்கும்தான் நன்றாக இருக்கும். உண்மையில் கஷ்டம். நமது மனநிலை மரத்துப் போன மனநிலை. போராட்டம், புரட்சி என்றெல்லாம் எந்தவிதத்திலும் ஆட்களைத் திரட்டிவிட முடியாது. எவ்வளவுதான் உசுப்பேற்றினாலும் அதிகபட்சமாக ஆன்லைனில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி எனது ஆதரவைத் தெரிவிப்பேன். அதுவும் கூட என்னைப் பற்றிய எந்த அடையாளமும் என்னுடைய நிறுவனத்திற்குத் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். இப்படியானதொரு மத்தியவர்க்க மனநிலைதான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு தொழிற்சங்கம், போராட்டம், பிரதமருக்குக் கடிதம் என்பதெல்லாம் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பது மாதிரிதான். வறண்டு போன கிணறு. உயிரும் போகாது. மேலேயும் வர முடியாது.

சரி நல்லதாகவே நினைப்போம். சங்கங்கள் வலுவாகி, அரசாங்கம் அடிபணிகிறது என்று வைத்துக் கொள்வோம். ‘போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்’ என்று சொல்லிவிட்டு போக அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? யாருமே செய்ய முடியாத வேலை என்றெல்லாம் இங்கு எதுவும் இல்லை. இதே வேலையை இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்ஸிலும் வைத்து சர்வசாதாரணமாக முடித்துவிட முடியும். எங்களைவிட்டால் இந்த வேலையை எவனாலும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதைப் போன்றதொரு மடத்தனம் எதுவும் இருக்க முடியாது. 

‘சங்கம் ஆரம்பிப்போம்; அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்களின் குரலுக்கு அடிபணியச் செய்வோம்’ என்பதும் கூட உயரப் பறக்கும் கற்பனைதான். கார்போரேட்களால்தான் இங்கு ஒவ்வொரு கட்சியும் நடக்கின்றன. அரசாங்கங்களை நடத்துவதே அவர்கள்தான். Special Economic Zone என்பதிலிருந்து தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு வரை ஏகப்பட்ட சலுகைகளைக் கொடுத்து அரசாங்கங்களும் அவர்களை தாஜா செய்து வைத்திருக்கின்றன. அதிகாரவர்க்கமும் முதலாளிகளும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தச் சூழலில் தொழிற்சங்கங்களால் எப்படி செயல்பட முடியும் என்று புரியவில்லை.

இதையெல்லாம் மீறி தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அதன் நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதிலிருந்து குழுவிற்குள்ளே குழப்பம் விளைவிப்பது வரைக்கும் அத்தனை காரியங்களையும் முதலாளிகளால் செய்ய முடியும். இதையெல்லாம் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கான மனநிலையில் இருப்பவர்களை சீண்டும் விதத்தில் சொல்லவில்லை. அவர்களுடைய நோக்கம் உன்னதமானது. ஆனால் எல்லாவற்றிலும் Practicality என்று இருக்கிறது அல்லவா? 

மரத்துப் போய்க் கிடக்கும் பெருவாரியானவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்; கோடிக்கணக்கான ரூபாய் பணமும் அதிகார வர்க்கத்தின் அருகாமையும் உள்ள முதலாளிகளை எதிர்த்து நிற்க வேண்டும். அவர்களின் உறுமலுக்கு சலனமடையாத படையாக உங்களின் பின்னால் நிற்பவர்களை மாற்ற வேண்டும். இன்னும் எவ்வளவோ. 

அப்படியென்றால் நிலைமை அப்படியேதான் இருக்குமா? 

ஓசோனில் ஓட்டை விழுந்துவிட்டது. இனி அடைக்கவா முடியும்? இப்படி நம்மைச் சுற்றிலும் எவ்வளவோ Irreversible actions நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஒருவேளை வெகுகாலம் கழித்து சூழல் மாறக்கூடும். அப்பொழுது நமது எள்ளுப்பேரனின் கொள்ளுப் பேரன் பிறந்திருப்பான்.

ஒரு அறிவிப்பு

‘மசால் தோசை 38 ரூபாய்’ புத்தகம் வேண்டும் என்று நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அறக்கட்டளையின் கணக்கை புத்தக வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை. அது சரியான செயலும் இல்லை. இதுவரை பணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு புத்தகத்தை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். இனிமேல் தயவு செய்து புத்தகம் கேட்டு நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம். 

முன்பு எதற்காக அறக்கட்டளையின் கணக்கு விபரங்களைத் தந்திருந்தேன் என்றால் புத்தகத்தின் விலையை விடக் கூடுதலாகத் தரப்படும் பணத்தை கோவை ஞானி அவர்களுக்கான உதவியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில்தான். 

நிறையப் பேர் புத்தகத்திற்கான தொகையை மட்டும் அனுப்பியிருந்தார்கள். அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வது வெறும் விற்பனை சார்ந்த செயல் ஆகிவிடுமல்லவா? அறக்கட்டளையின் வழியாக எனக்கு மறைமுகமாக உதவி செய்து கொள்வதைப் போன்ற அர்த்தம் வந்துவிடும். அதனால்தான் வேண்டாம் என்கிறேன். 

தயவு செய்து இதனைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

புத்தகத்தின் ஆன்லைன் விற்பனைக்கான இணைப்பை விரைவில் தருகிறேன். 

ஆதரவுக்கும் புரிதலுக்கும் மனப்பூர்வமான நன்றி.

Dec 30, 2014

என்ன சமாதானம் சொல்வது?

நேற்று மாலை ஏழு மணி இருக்கும். கோரமங்களா வழியாகச் சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். தேசிய விளையாட்டு கிராமம்- National Games Village க்கு அருகாமையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதரை ஒரு கார் இழுத்துச் சென்று வீசியிருந்தது. சற்றேறக்குறைய நாற்பது வயது இருக்கும். உடல்வாகு அப்படித்தான் இருந்தது. தொலைபேசியை ஹெல்மெட்டுக்குள் செருகியபடி வந்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் அவர் மீது மட்டும் தவறு என்று சொல்ல முடியாது என்றார்கள். ஸ்போர்ட்ஸ் பைக்கில் வந்த எவனோ ஒருவன் வளைத்து நெளித்து ஓட்டியிருக்கிறான். இவருக்கு முன்பாக கட் அடித்தானாம். தடுமாறியவர் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் விழுந்திருக்கிறார். பைக் காரோடு சிக்கிக் கொண்டது. நூறு மீட்டர் கூட இழுத்திருக்காது. ஆனால் அவருடைய கெட்ட நேரமோ என்னவோ முகம் தரையில் உரசியிருக்கிறது. அநேகமாக அவரால் சுதாகரித்திருக்கக் கூட முடியாது. முடிந்துவிட்டது. முகம் தேய்ந்து விட்டதாம். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு கதறியிருக்கிறார். உச்சஸ்தாயியில் உயர்ந்த கதறல் கதறல் அப்படியே அடங்கியிருக்கிறது. உயிர் போனதை உறுதி செய்த அடுத்த சில வினாடிகளில் ஒரு துணியை முகத்தின் மீது போட்டுவிட்டார்கள். துணியைத் தாண்டி வெகு தூரத்திற்கு ரத்தம் ஓடியிருந்தது.

முந்தின நாள்தான் குண்டுவெடிப்பில் இறந்து போன சென்னைப் பெண் பவானி என்பவரின் கடைசி நேர கதறல்களைப் பற்றி ஒரு ஆட்டோ டிரைவர் கன்னட சானல்களில் பேசிக் கொண்டிருந்தார். அரைகுறையாகப் புரிந்தது. குண்டு வெடித்த போது அவரது ஆட்டோ அதே சர்ச் சாலையில்தான் இருந்திருக்கிறது. ஏதோ பட்டாசு வெடித்திருக்கிறது என்றுதான் நினைத்தாராம். ஆட்கள் குறுக்கும்மறுக்குமாக ஓடிய போதுதான் புரிந்திருக்கிறது. ஆறேழு பேர் பவானியைத் தூக்கி வந்து வண்டியில் ஏற்றிக் விட்டு பின் ஸீட்டில் இரண்டு மூன்று பேரும் டிரைவருக்கு அருகில் பக்கத்துக்கு இரண்டு பேராகவும் அமர்ந்திருக்கிறார்கள். பெங்களூரில் மட்டுமில்லை எந்த ஊரிலுமே ஆட்டோக்காரனுக்கு வழி கொடுக்க மாட்டார்கள். அதுவும் ஏழெட்டு பேரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தால் தருவார்களா? ஆளாளுக்குத் திட்டியிருக்கிறார்கள். உள்ளே இருந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பெண் கதறிக் கொண்டிருந்தது தெரியும் என்றார். வாஸ்தவம்தான். முகம் கை கால்கள் என சகல இடத்திலும் ஆணிகளும் இரும்புத்துண்டுகளும் ஏறியிருக்கிறது. மனதுக்குள் தான் விட்டுவிட்டுச் செல்லப் போகிற குடும்பத்தின் நினைவு வந்திருக்கும். கணவனின் முகம் வந்துவிட்டு போயிருக்கும். எல்லாமும் சேர்ந்து கொஞ்சமாகவா வலித்திருக்கும்?

இந்த மனிதரின் சடலத்தைப் பார்த்த போது பவானியின் ஞாபகமும் வந்துவிட்டது.

இப்பொழுதெல்லாம் சாலை விபத்து சாதாரணச் செய்தி. பேருந்து பாலத்திலிருந்து விழுந்தது என்பதும் கார் குப்புற கவிழ்ந்தது என்பதும் அதிர்ச்சியே தருவதில்லை. ஊர் உலகத்தில் நடக்காத செய்தியா என்று தாண்டிவிடுகிறோம். இந்த ஊரில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் குறைந்தது ஒருவரிடமாவது திட்டு வாங்க வேண்டியிருக்கும். மூன்று வழிப்பாதையாக இருந்தாலும் இருந்தாலும் பறக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் வந்து ஹார்ன் அடித்துக் கதறுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதும் நாமும் வண்டியில் இருந்தால் மற்ற வண்டிகளின் வேகம் தெரியாது. இறங்கி நின்று பார்க்க வேண்டும். உர்ர், உர்ர் என்கிற சத்தம் மட்டும்தான் கேட்கும். அவ்வளவு வேகம்.

ஜெட்சன் என்றொரு நண்பர் இருக்கிறார். மலையாளி. எப்பொழுதும் கேரளாவுக்கு தனது காரிலேயே சென்றுவிடுவார். அம்மா, அப்பா, குழந்தை, மனைவி என ஐந்து பேரும் பயணிப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாக கரூர் தாண்டி வந்த போது ஒரு பைக்காரன் போக்குக் காட்டிவிட்டான். தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு கீழே உருண்டிருக்கிறது. தனது செல்போனில் காரின் படத்தைக் காட்டினார். நசுங்கிய டப்பா பரவாயில்லை என்று சொல்லலாம். ஐந்து பேரில் யாரோ ஒருவருக்கு அற்புதமான நேரம். ஒரு சேதாரம் இல்லை. குழந்தையை ஜெட்சனின் அம்மா கட்டிக் கொண்டு குனிந்துவிட்டார். அதனால் அவருக்கு மட்டும் முதுகில் ஒரு சிறு அடி. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றார். தம்பிரானோ வெறும் பூரானோ- காரோடு போனது.

மாவட்டச் செய்திகளில் ஒரு விபத்து செய்தியையாவது பார்க்கவில்லை என்றால் காதை வட்டம் போட்டு அறுத்துக் கொள்கிறேன் என்று சவால் விடலாம். அத்தனை விபத்துகள். நமக்கு வேண்டுமானால் அது யாரோ ஒருவரின் இறப்பு. ஒரு நிமிட செய்தி. ஒரு ‘ப்ச்’ உடன் முடித்துக் கொள்ளலாம். இறந்து போனவனின் குடும்பத்திற்கு? நிர்கதியாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் நகரங்களில் நடக்கும் விபத்துக்களையெல்லாம் பார்க்கும் போது கைகால் சிலிர்த்துவிடுகிறது. யாராவது இறந்து போனவரின் செல்போனை எடுத்து குடும்பத்துக்குத் தகவல் கொடுக்கிறார்கள்தான். ஆனால் அந்தக் குடும்பம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்று நினைக்கும் போதே கால்கள் நடுங்கத் தொடங்கிவிடுகிறது. 

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் யாரைப் போய் துணைக்கு அழைப்பது?  தனியாகத்தான் ஓடி வர வேண்டியிருக்கும். சோடியம் விளக்குகளின் சோகம் தோய்ந்த வெளிச்சத்தில் பதறியடித்துக் கொண்டு அல்லவா ஓடிவருவார்கள்? கால்கள் நிலத்திலேயே படாது. இங்கு பெரும்பாலானவர்கள் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்று தனிக்குடும்பமாகத்தான் வசிக்கிறார்கள். கணவன் இறந்து கிடப்பதைக் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண் குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு ஓடிவருவாள்? ஒருவேளை குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தால் அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வாள்? எண்ணங்கள் எப்படியெல்லாம் அலைவுறும்? இறந்து கிடப்பது வேறு யாராவதாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதானே வருவாள்? அந்த ஒரு நிமிடமாவது துன்பத்தை எங்கேயாவது தள்ளிவிட முடியாதா என்று தவிக்கிற மனதை எப்படி சமாளிப்பாள்?

இந்த மனிதர் குறித்தும் தகவல் சொல்லிவிட்டார்கள் என்றார்கள். அவருடைய மனைவிதான் எடுத்துப் பேசினாராம். அவள் வந்து சேர்வதற்குள் 108 வந்திருந்தது. அவரை- அந்தப் பிணத்தை எடுத்து வண்டியில் ஏற்றினார்கள். செல்போன், பர்ஸையெல்லாம் எடுத்து 108 ஓட்டுநரிடம் கொடுத்தார்கள். ட்ராபிக் போலீஸார் கூட்டமாக இருந்தவர்களை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். காருடன் ஒட்டியிருந்த பைக் பிரிக்கப்படாமலே கிடந்தது.  இறந்து போனவருக்கு குழந்தைகள் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் வேண்டிக் கொண்டேன். ஆனால் எல்லா வேண்டுதல்களுக்கும் செவி சாய்க்கப்படுவதில்லை என்று பைக்கைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த ஆப்பிள்கள்களும், ஒரு கேக் பெட்டியும், பெரிய கோலா பாட்டிலும், ஒரு குழந்தைக்கான கைக்கடிகாரமும் சொல்லிக் கொண்டிருந்தன.

Dec 29, 2014

சொல்லட்டுமா?

மன்னார்குடியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறாராம். இப்பொழுது அடுத்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பதிப்பாளர் காசு கேட்கிறார் என்றார். பாவமாகத்தான் இருந்தது. என்னிடம் எதற்கு சொல்கிறார் என்று குழப்பமாக இருந்தது. ‘நிசப்தம் மூலமாக ஏதாச்சும் ஹெல்ப் செய்ய முடியுமா?’ என்றார். கவிதைகளைப் பற்றி ஏதாவது எழுதச் சொல்கிறார் என்றுதான் ஒரு வினாடி நினைத்தேன். இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ‘என்ன மாதிரியான உதவி?’ என்று கேட்டேன்.  ‘அறக்கட்டளையின் மூலமாக பணம் சேர்த்துக் கொடுங்கள்’ என்றார்.  ஒரு பெரிய உருண்டையொன்று வயிற்றுக்குள் உருளத் தொடங்கியது. அவரை நக்கலடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. இப்படி அப்பாவித்தனமான வேண்டுகோள்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஏமாற்றும் நோக்கிலும் முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒட்டன்சத்திரத்திலிருந்து பேசுவதாகச் சொன்னார். நண்பர்களைப் பிடித்து விசாரித்துப் பார்த்தால் அப்படியொரு விடுதியே அந்த ஊரில் இல்லை. நல்லவேளையாக அவரே திரும்பவும் அழைத்தார்.  ‘தெளிவான முகவரியைக் கொடுங்கள் நானே வருகிறேன்’ என்றேன். ‘இதோ இப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்’ என்றவர்தான், அதன் பிறகு சத்தமே இல்லை.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இல்லை. இப்படியான காய்ச்சல்கள் வரும் என்று தெரிந்த விஷயம்தான்.  ஆனால் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கிவிட வேண்டும் போலிருக்கிறது.

மருத்துவம், கல்வி- இந்த இரண்டிலும்தான் கவனம் செலுத்துவதாகத் திட்டமிருக்கிறது.  இதைத் தவிர வேறு உதவிகளையும் செய்யலாம்.  ஆனால் அந்த உதவியினால் உதவி பெறுபவரைத் தாண்டி மற்றவர்களுக்கு என்ன நன்மை விளையும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. 

இன்னொரு விஷயம்- ஒட்டன்சத்திரம் மாதிரியான விவகாரங்கள். விசாரிக்காமல் ஒரு பைசாவைக் கூட அனுப்பி வைக்க முடியாது என்பதால் தயவு செய்து மகளுக்கு மருத்துவச் செலவு, அநாதை விடுதிக்கு உதவி, மகனுக்குத் திருமணச் செலவு என்று பொய் சொல்லி உதவி கேட்க வேண்டாம்.  இந்தக் காலத்தில் விசாரிப்பது பெரிய காரியமாகவே தெரியவில்லை. எந்தக் குக்கிராமமாக இருந்தாலும் தகவலைச் சேர்த்துவிட முடிகிறது- கொஞ்சம் நேரத்தை வீணடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

போகட்டும். 

இன்றைய தேதிக்கு நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.4,22,353 இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஏழெட்டு நண்பர்கள் சேர்ந்து ரூ.1,15,000 அனுப்பி வைத்திருந்தார்கள். அது போக நிறையப் பேர் அனுப்பியிருந்தார்கள். டிசம்பர் நான்காம் தேதி வரை பணம் அனுப்பியவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் ரசீதுகளை அனுப்பி வைத்துவிடுகிறேன். ஏற்கனவே சிலருக்கு அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களுக்கு வரிசையாக அனுப்ப வேண்டும்.

பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் செயலில் கோவை நண்பர்கள் இரண்டு பேர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி யாராவது முன்வருவது நல்லதுதான். திருப்பூர் மாவட்டம் துலுக்கமுத்தூர் பள்ளியிலிருந்து முதலில் ஆரம்பிக்கலாம். இந்த வாரம் அவர்கள் இரண்டு பேரும் அங்கு செல்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு பள்ளியாக ஜனவரி மாதத்திற்குள் நான்கு அல்லது ஐந்து பள்ளிகளுக்கு கொடுத்துவிடுவதாகத் திட்டம். இதுவே தாமதம்தான். ஆனால் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது. வரவு செலவுக் கணக்கை பார்ப்பதிலிருந்து பள்ளிகளை விசாரிப்பது. அவர்களிடமிருந்து பட்டியலை வாங்கி விளையாட்டுச்சாமான கடையுடன் தொடர்பு கொள்வது என கொஞ்சம் மண்டை காய்கிறது. ஆனால் சோர்ந்துவிடவில்லை. 

இதையெல்லாம் தாண்டி புது நிறுவனத்தில் ஒவ்வொருநாளும்  ஒன்பது மணிநேரமாவது அலுவலகத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக எழுதுவதை நிறுத்திவிட முடியுமா?  எல்லாவற்றையும் விட முக்கியமாக வீட்டையும் பார்த்தாக வேண்டும். மனைவியும் மகனும் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இதை எழுத ஆரம்பிக்கும் போது அழைத்திருந்தாள்.  ‘ஒரு போஸ்ட் எழுதிட்டு இருக்கேன்...அரை மணி நேரம் கழித்து அழைக்கட்டுமா’ என்று சாந்தமாகத்தான் கேட்டேன். அரை மணி நேரம் கழித்து அழைத்து திட்டிவிட்டு வைத்துவிட்டாள்.  மதுரை மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொண்ட போது  ‘மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்...இவளை மட்டும் நீ பார்த்துக்க’ என்றுதான் கேட்டிருந்தேன். மீனாட்சி சதிகாரி.

கடைசியாக ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்-

இன்று அலுவலகத்தில் சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து முடித்தபிறகு மேலாளரிடம் சென்றேன். தமிழர்தான்.  ‘வாங்க எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என்றவர் நிறுத்தி ‘எழுத்தாளர்ன்னு சொல்லட்டுமா?’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. ‘அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்?’ என்றேன். என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை யூகித்துவிடலாம். இனிமேல் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாம் வல்ல கருப்பராயன்தான் காக்க வேண்டும்.

Dec 28, 2014

பிசாசுகள் ஒளிந்திருக்கும் ஆசிரமங்கள்

தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் கூட ஒரு செய்தி கடந்த சில நாட்களாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது அரவிந்தர் ஆசிரமத்தின் பிரச்சினைகள். 1926 ஆம் ஆண்டு அரவிந்தரால் பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட ஆசிரமம் இப்பொழுதுதான் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குகிறது. இப்பொழுது என்றால் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து. வெகுகாலமாக ஆசிரமத்தில் தங்கியிருந்த பீஹாரைச் சேர்ந்தவொரு குடும்பத்தின் இளைய பெண்ணான ஹேமலதா கர்ப்பம் அடைந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி என்று ஆசிரம நிர்வாகிகள் சொல்கிறார்கள். அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த கிருஷ்ண பெல்லியப்பா என்பவருடன் ஹேமலதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், இது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். 

ஆனால் எல்லா செய்திகளுக்கும் இன்னொரு தரப்பு இருப்பதைப் போல ஹேமலதாவின் குடும்பத்தினருக்கும் ஒரு தரப்பு இருக்கிறது. அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். நிர்வாகிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் உள்ளூர் அரசாங்கத்திலிருந்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெண்கள் கமிஷன் என்ற எந்த இடத்திலும் அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் முறையிட்ட ஒவ்வொரு இடமும் ‘நீங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிடுகிறார்கள். அப்பொழுதும் வெளியேறாமல் மறுக்கிறார்கள். இறுதியில் போலீஸாருடன் உதவியுடன் ஆசிரமம் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற ஒரு பெண் உயரமான கட்டிடத்தின் மீது ஏறி நின்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறாள். அதற்கெல்லாம் மயங்காத ஆசிரமும் போலீஸாரும் துரத்தியடிக்க குடும்பத்தோடு கடலில் குதித்துவிட்டார்கள்.

தவறு அந்தக் குடும்பத்தின் மீதாகவே இருக்கட்டும். ஆனால் வேறு துணை எதுவுமில்லாத ஒரு குடும்பத்தை வெளியேற்றும் போது அதற்கேற்ப அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டுமல்லவா? அந்தப் பெண்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் தற்கொலைக்கு முயற்சித்த போதே அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ‘இவ்வளவு காலமாக தங்கியிருந்த ஒரு இடத்தை விட்டு வெளியேறச் சொன்னால் எங்கே போவது?’என்கிற எமோஷனலான மனநிலையில்தான் இந்தத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. திரு. என்.ரங்கசாமியின் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதுதான் கேள்வி. பாண்டிச்சேரியின் மிக முக்கியமான கலாச்சார மையமான அரவிந்தர் ஆசிரமத்தில் பிரச்சினை என்னும் போதே யாரேனும் ஒரு சிறப்பு அதிகாரி அல்லது அமைச்சரின் வழியாக சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். பதினான்கு ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இறுதிக்கட்டத்திற்கு வரும் போது சிறப்பு கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். இரு தரப்புக்கும் என்ன பிரச்சினை என்பதை சற்றேனும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

அநியாயமாக மூன்று பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். அதிலும் ஒரு கொடுமை நடந்திருக்கிறது. அதிகாலையில் கடலோரத்தில் அலங்கோலமாகக் கிடந்த ஒரு பெண்ணை இரண்டு பேர் வன்புணர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண் மயக்கத்தில் கிடந்திருப்பாள் போலிருக்கிறது. அந்த நேரத்தில் குடிபோதையில் வந்த இரண்டு பேர் அவளைத் தூக்கிச் சென்று நாசமாக்கியிருக்கிறார்கள். ஆக, ஒரு குடும்பத்தையே கந்தல்துணியாக்கி வீசியிருக்கிறது இந்தச் சமூகம். 

பாண்டிச்சேரியின் காவல்துறையில் பணியாற்றும் ஒரு நண்பரிடம் பேசினேன் ‘இவர்கள் பதினைந்து வருடங்களாக ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்..அதனால் இதுவும் அப்படியான ஸ்டண்ட் என நினைத்துவிட்டோம்’ என்று அவர் சொன்ன போதுதான் அதிர்ச்சியாக இருந்தது. நமது அரசாங்கமும் அதிகாரமட்டமும் இப்படித்தான் இருக்கின்றன. எல்லாவற்றிலும் முன்முடிவுகளோடுதான் செயல்படுகிறார்கள். ‘இவர்கள் இப்படித்தான்’ என்று முடிவு செய்துவிட்டுத்தான் பிரச்சினையை அணுகுகிறார்கள். அந்தக் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம் அப்படி கொடுக்காவிட்டிருந்தாலும் கூட பரவாயில்லை. நிர்கதியான அந்தக் குடும்பத்தை அரசு காப்பகத்தில் ஓரிரண்டு வாரங்கள் தங்க வைத்திருக்கலாம். எதையுமே செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இனி காலத்திற்கும் இங்கேயே தங்கிவிடலாம் என்று குடும்பத்தோடு தங்கியிருந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அரசாங்கத்தின் யாராவது ஒருவராவது சற்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா?

நம் நாட்டில் பட்டப்பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஓடும் ரயிலிலும், பேருந்திலும், சாலையிலும் சிதறடிக்கிறார்கள். பட்டப்பகலில் பட்டாக்கத்தியைக் காட்டில் கழுத்திலும் காதிலும் இருக்கும் நகையை பறித்துச் செல்கிறார்கள். மத்தியான நேரத்தில் ஏ.டி.எம்முக்குள் புகுந்து பெண்ணிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஐந்து பெண்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை எப்படி கருணையே இல்லாமல் வெளியேற்றினார்கள்? ஆசிரம நிர்வாகிகளுக்கும் அந்த குடும்பத்துக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கட்டும். அரசு ஏன் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது? நிர்வாகிகளுக்கு ஜால்ரா தட்டுகிறார்களா? நிர்வாகிகள் சொல்வதுதான் சரி என்று தலையை ஆட்டுகிறார்களா?

‘அந்தக் குடும்பத்தின் மீது பரிதாபப்பட வேண்டாம். பதினான்கு ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்று கேஸ் நடத்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? அந்தக் குடும்பத்திடம் பணமும் இருக்கிறது; ஆள்பலமும் இருக்கிறது’ என்று ஆசிரமத்தின் ஒரு தரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கிறது. இப்படி ஒரே கோணத்தில் இருந்து பார்ப்பதுதான் சிக்கல். அரசாங்கமும் கூட இப்படியேதான் நினைத்திருக்கக் கூடும். வழக்கை இந்தக் குடும்பத்தினர்தான் நடத்தினார்கள் என்று பெருமொத்தமாகச் சொல்ல முடியாது. ஆசிரமத்தின் தற்போதைய நிர்வாகத்திற்கான எதிர்தரப்பு இவர்களைப் பகடைக் காயாக பயன்படுத்தியிருக்கலாம். வழக்கின் செலவுக்கு தேவையான பணத்தை தாங்கள் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கலாம் அல்லது இந்தக் குடும்பம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்- பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட- உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டுகளை வெளிக் கொண்டுவருவதற்கு யாராவது பின்னணியிலிருந்து உதவியிருக்கலாம். 

அட என்னவோ இருந்துவிட்டு போகட்டும். அரசு நினைத்திருந்தால் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றியிருக்க முடியுமே என்பதுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது. இந்த நாட்டின் அரசாங்கங்கள் வலியவர்களுக்கான அரசாங்கமாகவேதான் இருக்கின்றன. இங்கு எப்பொழுதுமே அதிகாரமும் பணமும் மிக்கவன் சொல்வதைத்தான் அரசாங்கமும் கேட்கும்; மக்களும் நம்புவார்கள். பாண்டிச்சேரியின் இந்தச் சம்பவத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆசிரமத்திற்குள் அதிகாரப்போட்டி நடப்பதாகச் சொல்கிறார்கள். ஆசிரமத்தைக் கைப்பற்ற இரண்டு தரப்புகள் தீவிரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதில் ஒரு தரப்பு ஆசிரம நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டைச் சுமத்தச் சொல்லி இந்தக் குடும்பத்தைத் தூண்டிவிடுவதாக இன்னொரு தரப்பு புகார் தெரிவிக்கிறது. இப்படி இரண்டு மலைகள் மோதிக்கொள்ளும் இடத்தில் ஒரு குடும்பம் நாசமாகிவிட்டது. இந்தப் பெருந்தலைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பாண்டிச்சேரியின் அரசாங்கமும் காவல்துறையும் சேற்றை தங்களின் கைகளில் பூசியிருக்கிறார்கள்.

ஆன்மிகத்தின் பெயரால் மூன்று பெண்களின் உயிரை எடுத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியிருக்கிறார்கள் ஒரு குடும்பத்தை நிர்கதியாக்கியிருக்கிறார்கள். . இனி என்னதான் நடவடிக்கை எடுத்தாலும்- அது ஆசிரம நிர்வாகிகள் மீதாக இருக்கட்டும், வன்புணர்ந்தவர்களின் மீதாக இருக்கட்டும்- நூற்றாண்டு காணவிருக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரமத்தின் வரலாற்றில் மிகப் பெரிய கறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை இது.

Dec 27, 2014

புத்தகக் கண்காட்சியின் சூப்பர்ஸ்டார்

மாதொருபாகன் பெருமாள் முருகனின் மிக முக்கியமான நாவல். அதை எதிர்த்து பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.  நாவலை  தீ வைத்துக் கொளுத்திவிட்டு பெருமாள் முருகனையும் கைது செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.  ‘எழுத்தாளரைக் கைது செய்யக் கோரி போராட்டம்’ என்ற செய்தியைப் பார்த்தவுடன் எந்த எழுத்தாளராக இருக்கும் என்று யூகிக்கத் துவங்கினேன்.  ஜெயமோகன், சாருநிவேதிதா என்றெல்லாம் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன ஆனால் அந்தப் பட்டியலில் பெருமாள் முருகனின் பெயரே வரவில்லை.  அப்படியான எழுத்தாளர் அவர். சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் சாந்தமான மனிதர். அவரது நிழற்படத்தைத்தான் செருப்பால் அடித்து தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் கூட சுரணையே கிடையாது என்பதற்கு இது இன்னுமொரு ஆதாரமான சம்பவம்.  அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் செய்திருக்கிறார்கள்.  புரிதல் உள்ள பா.ஜ.க அபிமானிகள் இது மோசமான புத்தகம் என்று னுமானித்துக் கொள்ள வேண்டியதில்லை. புத்தகத்தை வாசித்துவிட்டு முடிவு செய்யலாம். ஒருவேளை இந்த அமைப்புகளின் சார்பாக ‘இந்தப் புத்தகம் இந்துப் பெண்களை இழிவுபடுத்துகிறது’ என்று தர்க்கரீதியாக நிரூபிக்க முடியுமானால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதான் சரியான செயல். பெருமாள் முருகன் ஒன்றும் விவாதத்திற்கு பயந்து ஒளிந்து கொள்ளும் மனிதர் இல்லை. அந்த விவாதம் எழுத்து வழியாகவோ அல்லது பேச்சு வழியாகவோ நடக்கட்டும். பிறகு முடிவு செய்யட்டும். 

ஒரு படைப்பை விமர்சிக்க வேண்டுமானால் இன்னொரு படைப்பின் வழியாகத்தான் செய்ய முடியும்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். விவாதத்திற்கு அழைத்திருக்கலாம்.  தவறு இருக்கிறது என்றால் அதை விவாதத்தின் மூலமாகத்தான் நிரூபித்திருக்கலாம். அந்த விவாதங்களின் வழியாகவே நமது புரிதல்கள்  வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கும். அதுதான் ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அதைவிடுத்து தடை செய், கைது செய் என்கிற ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது அறிவிலித்தனம் ஆகிவிடாதா? முரட்டுத்தனமான எதிர்ப்பு என்பது நம்மை இருண்ட பாதைக்குத்தான் இழுத்துச் செல்லும். அதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களோ என்று பயமாக இருக்கிறது.

சல்மான் ருஷ்டியை நாடு கடத்த வைத்தவர்களுக்கும், லஜ்ஜாவை எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்வோம் என்றவர்களுக்கும், இன்று பெருமாள் முருகனின் நாவலை தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரே குட்டை. ஒரே மட்டை.

நூற்றைம்பது பேர் கலந்து கொண்ட போராட்டத்தில் மூன்று பேர் கூட அந்த நாவலை முழுமையாக வாசித்திருக்க மாட்டார்கள் என்று சத்தியமே செய்யலாம். எவனோ ஒரு அரை மண்டையன் படித்துவிட்டு எதையாவது உளறினால் இதுதான் சாக்கு என்று போராட்டம் நடத்த களமிறங்கியிருப்பார்கள். ஹிந்து நாளிதழில் செய்தி வந்துவிட்டதல்லவா? அவ்வளவுதான்.  இதற்குத்தான் இவ்வளவு அட்டகாசங்களும்.

கொங்கு நாட்டின் வரலாற்றையும் அதன் இண்டு இடுக்குகளையும் அதன் சாதியக் கட்டமைப்புகளையும் தனது எழுத்துக்களின் வழியாக எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல் பதிவு செய்து வருபவர் பெருமாள் முருகன். கொங்கு வட்டாரச் சொல்லகராதியை முழுமையாக்கியவர். கொங்குவட்டார வழக்கை தொடர்ந்து இலக்கியத்தில் உலவச் செய்பவர் என எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். இந்தப் போராட்டம் நடத்துபவர்கள் நாமெல்லாம் இந்த வரலாறுகளுக்காகவும் வட்டார இலக்கியத்திற்காகவும் துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறோமா என்று யோசிக்க வேண்டும். அதுசரி. யோசித்திருந்தால் எதற்கு போராட்டம் நடத்தப் போகிறார்கள்?

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்   நாவலை தீயில் இடுவதும், கைது செய்யக் கோருவதும் ஆகாவழித்தனம். இதை பாசிசம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? 

பெருமாள் முருகன் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஃபேஸ்புக், வலைப்பதிவு, ஃபோன்கால்கள் என்று எதையும் தொடாமல் அமைதியாக இருந்தாலே அடங்கிவிடும். இப்படி மணிகண்டன் மாதிரியான ஆட்கள் எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது என்று "I Support Perumal Murugan" என்று எழுதி பிரச்சினை என்னமோ பூதாகரமாக மாறிவிட்டது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் “பெருமாள் முருகனை கைது செய்யப் போகிறார்களாமே?” என்று தீ அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். தீயை வைத்துக் கொளுத்தியவனையும் திருத்த முடியாது. அந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்பவர்களையும் திருத்த முடியாது என்பதால் “ஏதாவது கோர்ட் கேஸ் வந்தால் நீங்க பார்த்துக்குங்க” என்று பதிப்பகத்தாரிடம் சொல்லிவிட்டு அடுத்த புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிடுவது உசிதம்.

மாதொருபாகனின் தொடர்ச்சியாகத்தான் பெருமாள் முருகனின் அடுத்த இரண்டு நாவல்கள் வருகின்றன என்பதால் அவற்றையும் தடை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 

தமிழக பா.ஜ.கவில் சில முட்டாள்கள் இருந்தாலும்  அறிவாளிகளும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மட்டத்துக்குச் செல்லும் போது இந்தப் பிரச்சினை அடங்கிவிடும். அவர்கள் மட்டத்திற்குச் கொண்டு செல்லாமல் விடுவோமோ? அடுத்த ஒரு நல்ல சப்ஜெக்ட் கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களில் பெருமாள் முருகனை புரட்டி எடுத்துவிடுவோம் அல்லவா?

உண்மையிலேயே இந்தப் பிரச்சினையினால் புத்தகத்தின் விற்பனை தூள் கிளப்பும். சென்ற வருடத்தில் அதிகம் விற்பனையான புத்தகங்களுள் பெருமாள் முருகனின் ‘சாதியும் நானும்’ ஒன்று. இந்த வருடமும் பெருமாள் முருகன்தான் டாப் செல்லராக இருப்பார் என்று அந்த திருச்செங்கோட்டு மாதொருபாகன் மீது சத்தியமாகச் சொல்லலாம்.

மாதொருபாகன் ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Dec 26, 2014

வேறு என்ன வேலை?

எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் பள்ளி வண்டிக்காக நிற்குமிடத்தில் ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதில் தினமும் ஒரு ரஜினி படம் வாங்கிக் கொடுத்தால்தான் வண்டியேறுவேன். ஒரு படம் இருபத்தைந்து பைசா. மிரட்டியும் பார்த்தார்கள். அடித்தும் பார்த்தார்கள். ம்ஹூம். நான் திருந்தவேயில்லை. காலையில் வாங்கிக் கொடுக்கும் படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேனோ அல்லது தொலைத்துவிடுகிறேனோ என்பது இரண்டாம்பட்சம். ஆனால் என்னைத் தவிர வேறு யாரையும் தொடவிடமாட்டேன். இதை ரஜினியுடனான பிணைப்பு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ரஜினி படம் என்ற பொருளின் (object) மீதான பிணைப்பு. இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நமக்கு ஏதாவதொரு பொருள் மீதுடன் மிகுந்த பிணைப்பு ஏற்பட்டிருக்கும். யோசித்துப் பார்த்தால் ஜியோமெட்ரி பாக்ஸிலிருந்து, சைக்கிள், டிபன் பாக்ஸ் என்று ஏதாவதொன்றின் மீது பாசம் வைத்திருப்போம். அதெல்லாம் கையில் இருக்கும் வரை தெரியவே தெரியாது. பிரிந்துவிடுகிற சமயத்தில் ஒரு ஃபீல் வரும் பாருங்கள். ப்ச்.

திடீரென்று எதற்கு  செண்டிமெண்ட்?

இந்தப் பிணைப்பு பொருளின் மீது மட்டும்தான் என்றில்லை. ஒரு நிறுவனத்தின் மீதாகக் கூட இருக்கலாம் அல்லவா?. இன்று அப்படியான நாள். இந்த நிறுவனத்தில் கடைசி நாள். டெல் கம்ப்யூட்டர்ஸ். ஆறரை வருடங்களாக இந்த நிறுவனம்தான். எவ்வளவோ பிடிக்காத விஷயங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு ஒட்டுதலான நிறுவனம். இங்கு சேர்ந்த பிறகுதான் திருமணம் நடந்தது, குழந்தை பிறந்தது என்று ஒரு பக்கம், ஆறரை வருடங்களில் நான்கு பதவி உயர்வுகள், நூற்றைம்பது சதவீத சம்பள உயர்வு என்று இன்னொருபக்கம், கிட்டத்தட்ட பதினைந்து நாடுகள் பயணம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்கள் என்பது மற்றொரு பக்கம். இதையெல்லாம் பெருமையடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. இதுநாள் வரையிலும் இந்நிறுவனத்தை பாராட்டி எழுதியதைவிடவும் கண்டபடி விமர்சித்து எழுதியதுதான் அதிகம்- பெயர் குறிப்பிட்டதில்லை என்றாலும் கூட நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவையும் அனுபவித்துவிட்டு இந்த ஒரு சிறு நன்றியையாவது பாராட்டவில்லையென்றால் தின்ற உப்பு உடம்பில் ஒட்டாது.

இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது நிறைய எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கிடைத்த வாய்ப்பு. அது இங்குதான் கிடைத்தது. அலுவலகத்தைப் பொறுத்தவரையிலும் Flexible timing. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்ற நாட்கள் இருக்கின்றன. யாருமே கேட்டதில்லை. அதற்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லையென்றால் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து என்னுடைய வேலையை முடித்துவிட்டு அந்த தினம் முழுவதும் வெட்டியாகத் திரிந்திருக்கிறேன். அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிறுவனத்தைவிட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று கேள்வி கேட்கலாம்தான். 

‘Love your job; but don't love your company. because you may not know when your company stops loving you' என்று சொல்வார்கள். அதைத்தான் அடிப்படையான கொள்கையாக வைத்திருக்கிறேன். என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் இது மற்றொரு பன்னாட்டு நிறுவனம்தான். எல்லா பன்னாட்டு நிறுவனங்களிடமும் கொடுக்கு இருக்கும். எப்பொழுது கொட்டும் என்று தெரியாது. அதனால் நாம் செளகரியமாக இருக்கும் போதே வெளியேறிச் சென்றுவிடுவதுதான் உசிதம் என்று நம்புகிறேன். புதிதாகச் சேருமிடத்தில் நல்ல பெயரை எடுப்பதற்கு இரண்டு வருடங்களாவது தேவைப்படும். அதற்காக பயம் இருந்து கொண்டே இருக்கும். நுணுக்கமாக வேலை செய்யத் தொடங்குவோம். சப்ஜெக்ட் மீதான பிடிப்பு இருந்து கொண்டேயிருக்கும். சப்ஜெக்ட் மீதான பிடிப்பு இருந்தால் போதும்; யார் நம்மை வெளியேறச் சொன்னாலும் வேலை வாங்கிவிடலாம் என்கிற தைரியம் ஒட்டிக் கொள்ளும். கார்போரேட் உலகில் இந்த தைரியம்தான் அவசியம். இந்த தைரியம் இல்லையென்றால் அது மட்டும்தான் பூதாகரமான பிரச்சினையாகத் தெரியும். ‘அய்யோ வெளியே அனுப்பினா எப்படி வேலை வாங்குவது?’ என்று நம்மையுமறியாமல் புலம்ப வேண்டியிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலையை விட்டுத் தூக்குகிறார்கள் என்பதை எழுதியதன் அடிநாதமான விஷயம் இதுதான். எட்டு, பத்து வருடங்களாக ஒரே நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான செளகரியத்தன்மை வந்திருக்கும். comfort zone. யாரை எப்படி ஏய்த்து வேலை வாங்குவது என்ற சூட்சமம் தெரிந்திருக்கும். அதனால் தங்கள் வேலையை அடுத்தவர்களின் தலையில் கட்டியே சமாளித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியிருப்பதால் சப்ஜெக்ட்டில் எவ்வளவு பிடிப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியானவர்களை வெளியே அனுப்பும் போதுதான் சிக்கலாகிவிடுகிறது. சம்பளமும் அதிகமாக இருக்கும். தங்களது சப்ஜெக்ட்டும் மறந்து போயிருக்கும். 

இத்தனை ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் எப்படி ஏய்ப்பது என்பதைப் பழகியிருக்கிறேன். சப்ஜெக்ட் மறந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சம்பளமும் அதிகரித்துவிட்டது. ஆழ்மனத்தில் மணியடித்தது. இலக்கியப்பூர்வமாகச் சொன்னால் பிரக்ஞை விழித்துக் கொண்டது. வேலையை விட்டுவிட்டேன். புதிய நிறுவனம் எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நல்லதாக இருந்தால் இன்னுமொரு ஆறேழு வருடங்களுக்கு இருக்கலாம். இல்லையென்றால் இரண்டாவது வருடம் இன்னொரு நிறுவனத்தைத் தேடிக் கொள்ளலாம். நக்குகிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? நக்கிப் பிழைக்கும் கார்போரெட் பிழைப்பு.

வேலை, நிறுவனம் என எல்லாவற்றையும் கூட விட்டுவிடலாம். இந்த லேப்டாப் இருக்கிறதே- நான்கு வருடங்களுக்கு முன்பாகக் கொடுத்தார்கள். அன்றிலிருந்து கங்காரு தனது குட்டியைச் சுமப்பதைப் போல தூக்கிக் கொண்டு சுற்றுவேன். இதை விட்டுவிட்டு எந்த ஊருக்கும் போனதாக ஞாபகம் இல்லை. பயன்படுகிறதோ இல்லையோ- தூக்கிச் சென்றுவிடுவது வாடிக்கையாகியிருந்தது. இது கையில் கிடைத்த நான்கு ஆண்டுகளில்தான் நிறைய தட்டச்சிக் குவிக்க முடிந்தது. சமீபத்தில் தாராசுரம் கோவிலின் பின்புறமாக அமர்ந்து கூட இரண்டு மூன்று பத்தி தட்டச்சு செய்து வைத்திருந்தேன்.  அம்மா, மனைவி என்று எல்லோரும் திட்டிக் கொண்டிருப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாக ‘உங்க லேப்டாப்தானே உங்களுக்கு முதல் பெண்டாட்டி?’ என்று வேணி சண்டை பிடித்தபிறகு அவள் கண்முன்னால் நல்லபிள்ளையாக நடித்துவிட்டு திருட்டுத்தனமாக பயன்படுத்தத் துவங்கியிருந்தேன். அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான். அதன்பிறகு ‘இவனைத் திருத்த முடியாது’ என்று விட்டுவிட்டாள்.

எங்கள் பக்கத்து ஊரில் ஒரு கார்க்காரர் இருந்தார். வாடைக்கார் ஓட்டுவதுதான் ஜீவாதாரம். அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று பெரிய குடும்பம். தனது திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் போன போது எந்த வசதியும் இல்லை. வாடகை வீட்டில் குடியேறிருக்கிறார்கள். அந்தக் காரை ஓட்டிய வருமானத்திலேயே வீடு கட்டி, பெண்ணையும், பையனையும் படிக்க வைத்து நல்லபடியாக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து எவ்வளவோ செய்துவிட்டார். கடைசி காலத்தில் ஏதோ சில பிரச்சினைகளால் அந்த அம்பாஸிடர் காரை விற்றும்விட்டார். வெகு நாட்களுக்குப் பிறகாக பையன் ‘உங்களுக்கு என்னப்பா வேணும்?’ எனக் கேட்டிருக்கிறார். ‘அந்தக் காரை மட்டும் வாங்கிக் கொடுத்துடுப்பா’ என்று கேட்டாராம். இன்னமும் அவர்களது வீட்டு முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருக்கிறது.

அவர் உழைத்தார்; அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமைந்தன; அவருக்கு நல்ல நேரம் - இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் தனது முன்னேற்றத்திற்கு அந்தக் கார்தான் மூலகர்த்தா என்று அவர் நம்புகிறார். அப்படித்தான் நானும். இந்த மடிக்கணினியைத்தான் நினைக்கிறேன். நல்ல எழுத்து; மோசமான எழுத்து என்பதையெல்லாம் காலம் முடிவு செய்யட்டும். முதலில் எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து எதையெல்லாம் எழுத்தாக்க முடியுமோ அதையெல்லாம் இதை வைத்துதான் எழுதத் துவங்கியிருந்தேன். ஒன்றும் மோசமாகிவிடவில்லை. தகுதிக்கு மீறியதான கவனம் கிடைக்கத் துவங்கியது. சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஐந்தாறு வருடங்களை எப்படிப் பார்த்தாலும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த லேப்டாப்பை மூடி அலுவலகத்தில் ஒப்படைப்பதன் வழியாக இந்த வருடங்களை நிறைவு செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பதாகத் தோன்றுகிறது. மூடுவதற்கு முன்பாக இந்தக் கட்டுரையை போஸ்ட் செய்துவிட்டேன். அதைத் தவிர எனக்கு வேறென்ன தெரியும்?

Dec 24, 2014

யார் தூக்கிட்டுக் கொண்டது?

பத்து நாள் இருக்கும். பெங்களூரில் முருகேஷ்பாளையாவில் வசிக்கும் நண்பரொருவர் தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கிவிட்டதாகச் சொன்னார். முருகேஷ்பாளையா எங்கள் அலுவலகம் இருக்கும் டொம்ளூருக்கு மிக அருகில்தான் இருக்கிறது. ஆனால் யாரோ முகம் தெரியாத மனிதன் தூக்கில் தொங்கியதற்கெல்லாம் செல்ல முடியுமா? அந்த நண்பர் வடக்கத்திக்காரர். ஆஷிஷ் சர்மா. அடுத்த நாள் வந்தவர் இறந்து போனவனின் அக்கா ஒரு நடிகை என்றும் தமிழில் கூட அவள் நடித்திருப்பதாக பேசிக் கொள்கிறார்கள் என்றார். அவர் சொன்ன விவரங்களையெல்லாம் வைத்து யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த நாள் மாலையில் அவரே கண்டுபிடித்துவிட்டார். கேத்தரின். ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்றார். தெரியாது. ஆனால் விசாரிப்பதில் பெரிய சிரமம் இல்லை. கேத்தரின் தெரசா. மெட்ராஸ் பட நாயகி. இறுதிச்சடங்குகளுக்கு பெங்களூர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. பிறகு செய்தித்தாள்களில் துழாவிய போது ‘மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதாக’ குறிப்பு எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறானாம். 

கிறிஸ்டோபரின் தற்கொலையைப் பற்றி எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை. பெங்களூரில் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வாரத்தில் ஒன்றிரண்டு செய்திகளாவது கண்ணில்பட்டுவிடுகின்றன. நாமாகத் தேடினால் எண்ணிக்கை நிறைய இருக்கக் கூடும். ஏதேதோ பிரச்சினைகள். காதல், பெற்றவர்களுடன் சண்டை, தேர்வுகளில் தோல்வி என்று ஏதாவதொரு காரணம் சொல்கிறார்கள். ஆனால் முடிவெடுப்பதற்கான தூண்டுதல் ஒன்றுதான் - மன அழுத்தம். 

இதை வெறும் பெங்களூரின் பிரச்சினை என்று சுருக்கிவிட முடியாது. உலகம் முழுவதிற்குமான பிரச்சினை. நம் மனதை நாமே சிதைத்துக் கொண்டிருக்கும் நவீனத்தின் பிரச்சினை. உடல் ஆரோக்கியம் சிதைவதைவிடவும் பன்மடங்கு வேகத்தில் மன ஆரோக்கியம் சிதைந்து கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியம் சிதையும் போது ஏதாவதொரு விதத்தில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். சர்க்கரை அளவு அதிகம் என்றோ, ரத்த அழுத்தம் உயர்கிறது என்றோ அடையாளப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனநலம் பாதிக்கப்படும் போது எளிதில் கண்டறிய முடிவதில்லை. கொலைகளும், கொள்ளைகளும், வன்புணர்ச்சிகளும் மிக அதிகமான செய்திகளாக இடம் பெறுவதை எதன் அடையாளமாக எடுத்துக் கொள்வது?

கேத்தரினின் சகோதரன் கிறிஸ்டோபருக்கு மட்டும் மன அழுத்தம் இல்லை. இங்கு எல்லோருக்குமே அந்தப் பிரச்சினை இருக்கிறது. நம்மால் அதை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிற அளவில் நாம் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது? மனதை திசை திருப்புவதற்கும் கூட பயிற்சி அவசியம். ஆனால் இந்தத் தலைமுறை அதற்கு நேரெதிரான மனப்பயிற்சியைச் செய்து கொண்டிருக்கிறது - அதாவது ஒன்றிலேயே நம் கவனத்தை இருப்பத்து நான்கு மணி நேரம் வைத்துக் கொண்டிருப்பது.

உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன். தூங்கும் வரைக்கும் அதையே நோண்டிக் கொண்டிருப்பது. எழுந்தவுடன் அதன் திரையில்தான் விழிக்கிறார்கள். இடையில் சிறுநீர் கழிக்க எழுந்தாலும் கூட அதுதான் கதி. மனம் பழகிவிடுகிறது. ஒன்றைப் பற்றியே சிந்த்தித்துக் கொண்டு அதற்கேற்றபடி பயிற்சி செய்து கொள்கிறது. பிறகு பிரச்சினை என்று ஏதாவது வந்தால் அதிலிருந்து எப்படி கவனத்தைத் திருப்புவது என்று தெரிவதில்லை. ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பயிற்சிக்கேற்ப பிரச்சினையை மட்டுமே நினைத்து நொந்து போகிறது.

அதுவும் பள்ளி, கல்லூரி வயதில் இருக்கும் மனம் முதிராத பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இதுதான் சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை இந்த மின்னணு சாதனங்கள் அடித்து நொறுக்கிவிடுகின்றன. Electronic drench என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். எந்நேரமும் மின்னனு சாதனங்களுடனே குடும்பம் நடத்துவதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். நனைந்து நமுத்துப் போய்விடுகிறது மனம்.

மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான வரையறை. அதற்கு மேலாக மின்னணு சாதனங்களைத் தொடவே கூடாது. முதலில் கஷ்டம்தான். ஆனால் போகப் போக பழகிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை எவ்வளவு வீணடிக்கிறோம் தெரியுமா? பேருந்து, ரயில், அலுவலகம், வகுப்பறை என்று எந்த இடத்திலும் பிற மனிதர்களின் முகங்களைக் கூட பார்ப்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொபைலிலேயே இருக்கிறார்கள். இணையம், ஃபேஸ்புக், வாட்ஸப் என்று ஏதாவதொரு காரணத்துக்காக தங்களது சிந்தனை முழுவதையும் அதிலேயே செலுத்துகிறார்கள். இப்படியே வெர்ச்சுவலாகிக் கொண்டிருக்கிறது நம் உலகம். முகம் தெரியாத யாரோ ஒரு மனிதரிடம் லைக் வாங்குவதற்கும் பேசுவதற்கும் ஏங்கும் மனம் நம்மோடு பயணிக்கும் சக பயணியிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவிதமான அனுபவங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நம் தலைமுறையின் சிக்கல்கள் வேறு எந்தத் தலைமுறை சந்தித்த சிக்கல்களைவிடவும் வித்தியாசமானது. குரூரமானது. நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை உதாசீனப்படுத்திவிட்டு ஏதோ ஒரு மயக்கமூட்டும் உறவைத் தேடித் திரியும் விநோதமான மனம் நமக்கு வாய்த்திருக்கிறது. இப்படி நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அதீத ஆபத்தானது என்பது மட்டும் நிதர்சனம். மனிதத்தன்மை, இரக்கம், அன்பு என மனித குலத்தின் எல்லா மதிப்பீடுகளையும் கருணையேயில்லாமல் அடித்து சிதைக்கும் வல்லமை நிறைந்த பாதை இது. சற்றேனும் விழித்துக் கொள்வது நல்லது. சமூகத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் நம்மையும் நம் குடும்பத்தையுமாவது காக்கலாம்.

அந்தக் கொலை வழக்கு என்னாச்சு?

பிரேமானந்தா வாயிலிருந்து லிங்கம் எடுத்தார் என்று தெரியும். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது என்பதும் தெரியும். ஆனால் என்ன குற்றச்சாட்டு, என்ன தீர்ப்பு என்று ஞாபகம் இருக்கிறதா? சரி பிரேமானந்தா வேண்டாம். வைஜெயந்தி மாலாவை எடுத்துக் கொள்ளலாம். 

அந்தக் காலத்தில் குழந்தை பெற்றவர்களும், திருமணமானவர்களும்தான் கதாநாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்களாம். பேரிளம் பெண்கள். இப்பொழுது மட்டும் என்ன? அனுஷ்காவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்கிறார்கள். யார் சொன்னது என்று கேட்பீர்களே! சினிமா வாழ்க்கையில் தோல்வியடைந்த இரண்டு நடிகைகளிடம் பேசிய போது சொன்னார்கள். இரண்டு பேரிடமும் தனித்தனியாகத்தான் பேசினேன். ‘அவளைப் பாரு ஒரு குழந்தை பெத்துட்டு கூட ஹீரோயின் ஆகிட்டா’ என்கிற ரீதியில் பேசினார்கள். ‘அவளுக்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றன; எங்களுக்கு இல்லை’ என்று இரண்டு பேரிடமிருந்தும் ஒரே மாதிரியான புலம்பல்தான். நாம் என்ன செய்ய முடியும்? கொண்டை இருப்பவள் அள்ளி முடிகிறாள். 

அது போகட்டும். 

வைஜெயந்தி மாலாதான் தமிழைப் பொறுத்தவரையில் மிக இளம் வயதிலேயே கதாநாயகி வேஷம் கட்டிய இளம் சிட்டு. அதனால்தானோ என்னவோ தாத்தாமார்கள் உருகிக் கிடந்திருக்கிறார்கள். அப்பொழுது வைஜெயந்தி மாலாவுக்கு பதினெட்டு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. அவரது அம்மாவும் அப்பொழுது கதாநாயகிதான். வசுந்தரா என்று பெயர். அவர் சொந்தப்படம் எடுப்பதாகச் சொல்லிவிட்டு பம்பாய்க்குச் சென்றிருக்கிறார். மாலாவின் அப்பாவும், பாட்டியும்(அம்மாவின் அம்மா) வைஜெயந்தி மாலாவை தனியாக அழைத்துச் சென்றுவிட்டார்கள். பம்பாயிலிருந்து ஓடி வந்த மாலாவின் அம்மா ‘இவளோட அப்பனுக்கு அவளை பார்த்துக் கொள்ளும் தகுதியே இல்லை’ என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்குக்கு ‘வைஜெயந்திமாலா கார்டியன் வழக்கு’ என்று பெயர்.

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லிவிடுகிறேன். ஒரு புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். “கொலை கொலையாம் காரணமாம்” என்பதுதான் டைட்டில். கோமல். அன்பரசன் எழுதிய புத்தகம். விகடன் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். விகடன் பதிப்பகத்தைப் பற்றி முன்பொரு முறை நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. சில சுவாரசியமான சமையல் குறிப்புகள் கிடைத்தாலும் கூட “வெண்டைக்காய் சாம்பாரில் முப்பது வகைகள்” என்று டைட்டில் வைத்து வழுவழுப்பான காகிதத்தில் புத்தகமாக்கி அட்டகாசம் செய்துவிடுவார்கள் என்றார். இப்படி ஒரு கலக்கலான சப்ஜெக்டில் இருபத்தைந்து கட்டுரைகள் கிடைத்தால் விடுவார்கள்? 

எல்லாமே பிரபலமான வழக்குகள்தான். புத்தகத்தின் டைட்டிலில்தான் கொலை இருக்கிறதே தவிர அனைத்துமே கொலை வழக்குகள் என்று சொல்ல முடியாது. ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்ற வழக்கிலிருந்து டாக்டர் பிரகாஷ் ப்ளூ பிலிம் எடுத்துச் சிக்கிக் கொண்டது வரை பரவலான வழக்குகள். பிரேமானந்தா வழக்கு, தா.கிருட்டிணன் கொலை வழக்கு போன்ற வழக்குகளும் உண்டு. எல்லாமே ‘சுருக்’ ஊறுகாய்கள்.

கோமல் அன்பரசன் சிறுவயதிலேயே பத்திரிக்கையாளர் ஆகிவிட்டவராம். எழுத்து நடையிலேயே தெரிகிறது. பரபரவென்று படிக்க வைத்துவிடுகிறார். 

தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அம்மா இறந்தவுடன் அவரது அப்பா ஜே.கேவையும் அவரது அப்பாவையும் வளர்க்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஜே.கே அப்பொழுதே அறிவாளி. அன்னிபெசண்ட் அம்மையார் ஜே.கேவையும் அவரது தம்பியையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் ஜே.கேவின் தந்தையார் வழக்கு தொடர்ந்துவிட்டார். பிரம்மஞானசபையின் நிர்வாகியான லெட் பீட்டர் தனது மகன்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் சகோதரர்கள் அன்னிபெசண்ட்டிடமே வளர்வதாகச் சொல்லி இங்கிலாந்து சென்று படித்துவிட்டு ‘உலகின் ஆசானாக’ இந்தியா திரும்பினார் என்பது வரலாறு. 

அதே போல சிங்கம்பட்டி ஜமீன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மற்ற விவரங்கள் தெரியாது. அந்த ஜமீன் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு ஜமீன் நண்பனோடு தனது பள்ளியின் தலைமையாசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டார். அந்த தலைமையாசிரியரின் மனைவிக்கும் இந்த ஜமீன்களுக்கும் கசமுசா இருந்தது என்று பேசிக் கொண்டார்களாம். அப்போதைய ஜாம்பவான் வக்கீல்களை எல்லாம் வைத்துத்தான் வழக்கு நடத்தியிருக்கிறார்கள். வழக்கில் தப்பித்துவிட்டாலும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு பெரும் கடன் சுமை ஏறிவிட்டது. தங்களிடமிருந்து கிட்டத்தட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலங்களை ஆங்கிலேயருக்கு விற்று சமாளித்தார்களாம். அப்படியென்றால் வழக்கை நடத்துவதற்காக எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அப்படி விற்கப்பட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட எஸ்டேட்தான் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்.

இப்படி ஏகப்பட்ட சுவாரசியங்களால் இந்தப் புத்தகம் நிரம்பியிருக்கிறது. 

அருமையான புத்தகம்தான். ஆனால் இதை முழுமையான புத்தகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் வைத்து ஒரு முழுப் புத்தகமே எழுத முடியும். நாவரசு கொலையாகட்டும், இமானுவேல் சேகரன் கொலையாகட்டும்- மிகப்பெரிய பின்னணியுடைய சம்பவங்கள். இந்தப் புத்தகத்தில் ஏழெட்டு பக்கங்களில் முடிந்திருக்கின்றன என்பது குறைதான். ஆனால் அதைக் குறை என்று எப்படிச் சொல்ல முடியும்? மிகப் பிரபலமான இந்த வழக்குகளை குறுக்குவெட்டாக விளக்கிவிடுகிறார் அன்பரசன். வெண்மணி வழக்கு பற்றியோ அல்லது வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றியோ அறிந்து கொள்வதற்கான நுழைவாயிலாக இந்தப் புத்தகத்தை வைத்துக் கொள்ளலாம். ஆஷ் துரை பற்றியும் வாஞ்சிநாதன் பற்றியுமான நம் தேடலை இந்தப் புத்தகத்திலிருந்து நீட்சி செய்து கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் மிக சுவாரஸியமான வழக்கு என்றால் ஆளவந்தார் கொலை வழக்கைச் சொல்வேன். ஆளவந்தார் பெண்கள் விஷயத்தில் படு வீக். சென்னை பாரீஸ் கார்னரில் ஜெம் & கோ என்ற கடை நடத்தி வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருக்கு தேவகி என்ற மலையாளப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் லாட்ஜில் அறையெடுத்து தங்கி வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள். இதெல்லாம் நடந்தது 1950களில். அப்பவே அப்படி. தேவகிக்கு திருமணமான பிறகும் இந்த ஆள் வால் அல்லது வேறு எதையோ அவளது வீட்டிற்குள் நீட்டிக் கொண்டிருந்திருக்கிறார். தனது கடைக்கு வந்த தேவகியின் கணவரிடம் ‘சரியான பெண்ணைத்தான் கட்டியிருக்கிறீர்கள்’ என்று சொல்லி கண்ணில் தேவகியைப் பார்த்து ஏதோ சில்மிஷம் செய்திருக்கிறார். தேவகியின் கணவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டிற்குச் சென்றவுடன் அவள் நடந்ததை எல்லாம் ஒத்துக் கொண்டாள். விடுவானா? தேவகியிடம் பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பிய அவளது கணவர், ஆளவந்தாரை வீட்டிற்கு வரவழைத்து அடித்தே கொன்று தலையைத் தனியாக வெட்டியெடுத்து கடலில் வீசிவிட்டு நிர்வாணமான உடலை ஒரு ட்ரங்க் பெட்டியில் வைத்து தென் தமிழ்நாட்டுக்கு ரயிலில் அனுப்பி வைத்துவிட்டார். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் வழக்கு. கொலையாளியிலிருந்து பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் வரை எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். படித்துவிட்டு வெகுநேரம் ஆளவந்தார், தேவகி மற்றும் அவளது கணவரின் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

புத்தகம் வந்து சேர்ந்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக வாசித்துவிட முடிந்தது என்பதே இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம் என்று நினைக்கிறேன். அன்பரசனிடம் அவ்வளவு இலகுவான மொழி இருக்கிறது. வெண்ணையில் கீறிச் செல்லும் கதுமையான கத்தி போன்ற நடை அது. 

புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது.

Dec 23, 2014

காவிக் கொடி

ஆக்ராவிலும் அலிகாரிலும் பிற மதத்தினரை இந்துக்களாக மாற்றம் செய்யத் தொடங்கியபோது ‘இது இந்துத்துவத்தின் ஆட்டம்’ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. பாராளுமன்றம் முடங்கிய போதும் கூட பெரும்பாலானவர்களுக்கு இந்த மதமாற்றத்தின் பின்னணி தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த நரேந்திரமோடியும் பட்டும்படாமலும் பதில் சொன்னாரே தவிர அழுத்தமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. பிரதமர் ஏன் பாராளுமன்றத்தில் பேசுவதேயில்லை எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது காவியணிந்த எம்.பிக்கள் மிகக் காட்டமாக பதில் சொன்னார்கள். மோடிக்கு ட்விட்டரில் பதில் சொல்லத்தான் நேரமிருக்கிறது என்ற கிண்டல்களும் எழுந்தன.

எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? குஜராத், டெல்லி என பெரும்பாலான இடங்களில் காவிக் கொடியைப் பறக்கவிடுகிறார்கள். இதுவரை மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். எம்பிக்கள் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார். ஆனாலும் அவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில் பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர இந்துக்கள் எந்தப்பலனையும் அனுபவிக்கவில்லை என்று எதிர்த்துப் பேசுபவர்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.

இந்த தேசம் முழுவதிலும் இருக்கும் இசுலாமியர்களையும் கிறித்துவர்களையும் மத மாற்றம் செய்துவிட முடியுமா என்ன? அதற்கு வாய்ப்பே இல்லையென்று அவர்களுக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.

வேறு என்ன காரணம்? 

இப்பொழுது அமித்ஷா உள்ளிட்டவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பூனைக்குட்டி வெளியே வருகிறது. ‘அப்படின்னா சட்டம் கொண்டு வந்துடலாம்’ என்கிறார்கள். இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல ‘நீங்களும் மாற்ற வேண்டாம் நாங்களும் மாற்ற வேண்டாம்’ என்கிறார்கள். கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் இந்துக்களாக மாற்றம் செய்வதைவிடவும் பிற மதத்தினர் இந்துக்களை மதம்மாற்றுவதை தடுப்பதற்காக பெரிய பாறாங்கல்லைப் தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். Anti conversion Law. ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட இன்னபிற இந்துத்துவ அமைப்புகள் வெகு காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த சட்டம் இது. ஆனால் காங்கிரஸூம் இடதுசாரிகளும் வலுவாக இருந்த காலத்தில் அவர்களால் சாத்தியப்படுத்தவே முடியவில்லை. இப்பொழுது துள்ளுகிறார்கள். பா.ஜ.க பெரும்பான்மையுடனான ஆட்சியை அமைந்திருக்கிறது. தங்களின் கொள்கைகளுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகும் பிரதமர் அமைந்திருக்கிறார். தங்களின் செயல்களை இதழோரம் மென்புன்னகையுடன் ஆசிர்வதிக்கும் மத்திய அரசு அமைந்திருக்கிறது. வேறென்ன வேண்டும்? 

இனியும் இந்துத்துவ தலைகள் தொடர்ந்து மதமாற்ற ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள். அப்படித்தான் தினந்தோறும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களை நிறுத்தச் சொன்னால் ‘அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துகிறேன்’ என்பார்கள். அவர்களுக்கு இப்போதைய தேவை அதுதான். இனி பாராளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கினால் ‘சரி மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடலாம்’ என்று பா.ஜ. அரசு சொன்னால் கற்களோடு சேர்த்து அரிசியை அள்ளி வாய்க்குள் போட்ட கதிதான் எதிர்கட்சிகளுக்கு ஏற்படும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது.

ஆட்சியும் அதிகாரமும் தங்களின் கைக்கு வரும் போது தமது கொள்கைகளை அமல்படுத்துவது நடக்கத்தான் செய்யும். ஆனால் காலங்காலமாக இதையெல்லாம் சற்று நிதானமாகச் செய்தார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கேட்டால் நேரு, காந்தியைத்தான் சொல்வோமே தவிர நிறையப்பேர்களை மறந்துவிட்டோம். அதை மறந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. மறக்கடிப்பட்டோம் அல்லது மறைக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட எழுபதாண்டு கால சுதந்திர வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆளும்வர்கத்திற்கு தேவையான படி ட்யூன் செய்யப்பட்டது என்பதுதான் நிதர்சனம். அப்படி எழுபதாண்டு காலமாக சிறுகச் சிறுக செய்யப்பட்ட ட்யூனிங்கை பா.ஜ.க அரசு ஆறே மாதத்தில் தனக்கு வாகாக புரட்டிப் போடும் வேகத்தில் செயல்படுவதைப் பார்ப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது. 

பாடங்களில் இந்துத்துவ கருத்துக்களை புகுத்துவதிலிருந்து கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினம் என்று அறிவிப்பது வரை இந்த வேகம் ஆபத்தானதாகத் தெரிகிறது. இனிமேல் ஆசிரியர் தினம் குரு உத்சவ் என்று அழைக்கப்படும் என அவசர அவசரமாக என அறிவித்தார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்களால் ‘இது ஒன்றும் கட்டாயமில்லை’ என்று ஸ்மிரிதி இரானி பின் வாங்கினார். 

அதேபோல துரதிர்ஷ்டவசமாக சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமும் இந்திராகாந்தியின் மறைவு தினமும் ஒரே நாளில் வந்து தொலைகிறது. காலங்காலமாக பட்டேல் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்று சொல்லி இந்த வருடம் அவரது பிறந்த நாளன்று ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை’ கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் இந்திராவின் மறைந்த தினம் என்பதை டீலிங்கில் விட்டுவிட்டார். காங்கிரஸார் கதறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கதறல் அடங்குவதற்குள்ளாகவே ஏசு பிறந்தநாளிலேயே வாஜ்பாய் பிறந்த தினம் வந்துவிட்டது. 

காலங்காலமாக கிறிஸ்துமஸ் என்று கொண்டாடப்பட்ட தினத்தை ‘நல்லாட்சி’ தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறந்திருக்கும் என்று செய்திகள் கசிந்தன. எதிர்ப்பு பலமாக இருக்கிறது என்பதால் ‘சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா’ என்கிற ரீதியில் ‘அப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க எம்.பிக்கள் அன்றைய தினம் தங்களது தொகுதிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்களாம். அதனால் உள்ளூர் அதிகாரிகள் அவர்களோடு இருப்பார்கள். மந்திரிகள் நல்லாட்சி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களைவிடவும் நல்லாட்சி தினக் கொண்டாட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறும். காந்தி பிறந்த தினத்தன்று மோடியும் இன்னபிற அமைச்சர்களும் விளக்குமாறைப் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட நிழற்படங்கள் செய்தித்தாள்களை ஆக்கிரமித்த மாதிரி.

இதுவரையிலும் அரசியல் அல்லது மத ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த தினங்கள் ஒவ்வொன்றிலும் வரிசையாக வேறொரு அஜெண்டாவைப் புகுத்திக் கொண்டிருப்பது நிச்சயமாக தற்செயலானது இல்லை. இதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. தங்களின் கொள்கைகளையும் விருப்பங்களையும் வரலாறாக மாற்றும் ஆழமான ஆசை இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

சுதந்திரத்திற்குப் பிறகான ஒவ்வொரு காலத்தையும் ஏதாவதொரு புரட்சியை வைத்து அடையாளப்படுத்துவார்கள். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி மாதிரி இப்பொழுது காவிப்புரட்சி நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் என எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு காவி அரசியலை அடையாளப்படுத்திவிட முடிகிறது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் நிறைவுற்றிருக்கின்றன. அதற்குள் எவ்வளவு நுண்ணரசியல்? எவ்வளவு மாறுதல்கள்? இன்னமும் நான்கரை ஆண்டுகாலம் இருக்கிறது. எவ்வளவோ நடக்கக் கூடும். 

எதற்காக இவ்வளவு வேகமும் வெறியும்? மத ரீதியிலான அரசியலை கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதும் குற்றம்தான்; அதே மதத்தை வைத்து அரசியலை நடத்துவதும் குற்றம்தான். இதுவரையிலான காங்கிரஸ் அரசுகள் முன்னால் சொன்ன குற்றத்தைச் செய்தன என்றால் இரண்டாவது குற்றத்தை பா.ஜ.கவும் வெட்கமேயில்லாமல் முன்னெடுக்கிறது. 

மத ரீதியிலான அஜெண்டாக்களில் நீங்கள் வென்றுவிடுவிடக் கூடும். ஆனால் அதற்காக இலட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களையும் கொண்டாட்டங்களையும் குழி தோண்டி புதைக்க வேண்டியிருக்கும். எளிய மனிதர்களின் பிஞ்சு இதயங்களை எந்தவிதக் கருணையுமில்லாமல் காலடியில் போட்டு மிதிக்க வேண்டியிருக்கும். அவர்களின் எதிர்ப்புக் குரல் கசியாதபடிக்கு குரல்வளை மீது கத்தியை இறக்க வேண்டியிருக்கும். வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். வரலாறு என்னும் ஈவு இரக்கமற்ற காட்டாற்று வெள்ளத்தின் போக்கை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் சாமானியர்களிடம் எதுவும் இல்லை. அவர்களின் இரத்தத்தையும் எலும்பையும் பயன்படுத்தி காட்டாறின் மீது அணை கட்டத் தொடங்கியிருப்பதாகவே புரிந்து கொள்கிறேன்.

Dec 22, 2014

ஒரே போடு...சத்!

இப்பொழுது டிசிஎஸ் நிறுவனம் கைகளில் கோடாரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பணியாளர்களை வெட்டப் போகிறது. ரத்தச் சகதி. மிகச் சமீபத்தில் யாஹூ இதைச் செய்தது. அதற்கு முன்பாக ஐபிஎம். அப்புறம் ஆரக்கிள். இப்படி பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டிசிஎஸ் இதுவரைக்கும் தங்களைப் புனித நிறுவனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக டிசிஎஸ்ஸில் சேர்ந்தால் ‘அது கவர்ன்மெண்ட் வேலை மாதிரி’ என்பார்கள். சம்பளத்திலும் பதவி உயர்விலும் தாறுமாறான வளர்ச்சி இருக்காது என்றாலும் கூட முரட்டுத்தனமாக வெளியே தள்ளிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அது. முதல் சில வருடங்களுக்கு இந்தியாவில் இருப்பார்கள். பிறகு ஒன்றிரண்டு வருடங்களாவது வெளிநாட்டு வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். கையில் பணம் புழங்கத் தொடங்கும். இன்னும் கொஞ்சம் பணத்தை வங்கியில் கடனாக வாங்கி வீடு ஒன்றைத் தயார் செய்து கொள்வார்கள்.

அதே சமயத்தில் திருமணம், குழந்தை என்று வாழ்க்கை ஒரு வகையில் அமைதியாகச் சென்று கொண்டிருக்கும். வாங்குகிற சம்பளத்தில் வீட்டுக்கடன், குழந்தைகளுக்கான கல்விச் செலவு போன்ற தேவைகள் இருந்தாலும் வேலை நிரந்தரம் என்கிற comfort zone அது. இப்பொழுது அந்தப் பருவத்தில் இருப்பவர்களின் கழுத்தைக் குறி வைத்துதான் கோடாரியை வீசவிருக்கிறார்கள். செய்திகளிலிருந்து யூகித்தால் எட்டிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரையிலான அனுபவமுடைய மிடில்-மேனேஜ்மெண்ட் ஆட்கள்தான் இலக்கு. அநேகமாக முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயது வரையில் இருப்பார்கள். சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கலாம்; ரத்த அழுத்தம் மீட்டரில் உயரத் தொடங்கியிருக்கக் கூடும்; இருதயத்தின் குழாய்களில் கொழுப்பு திரண்டு கொண்டிருக்கலாம். அவர்கள்தான் இந்த விளையாட்டின் பகடைக்காய்கள்.

அமெரிக்கச் சம்பளம் வேண்டும். அமெரிக்கரிகர்களின் வாழ்க்கை முறை வேண்டும். ஆனால் அமெரிக்க நிறுவனங்களைப் போல வேலையிலிருந்து தூக்கினால் மட்டும் ஆகாதா என்று கேட்கலாம்தான். வேலை நீக்கமே இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படி பெருமொத்தமாகத் நீக்க வேண்டியதில்லை அல்லவா? ஒவ்வொரு வருடமும் மதிப்பாராய்தல் (appraisal) நடக்கிறது. தகுதியில்லாத பணியாளர்கள் என்று கருதக் கூடியவர்களுக்கு பயிற்சி அளித்துப் பார்க்கலாம். அப்படியும் தேறாதவர்களை வேலையை விட்டு அனுப்பலாம். அது வருடத்திற்கு இரண்டு சதவீதம் கூட ஆகாது. அப்படி சொற்பமான ஆட்களை வேலையை விட்டு நீக்கும் போது வேலையை இழந்தவர்களும் வெளியில் வேலை தேடுவதில் சிரமம் இருக்காது. 

‘நாங்கள் நல்லவர்கள்’ என்று சொல்லிச் சொல்லியே சேர்த்து வைத்துக் கொண்டு திடீரென்று இப்படி பெருமொத்தமாக வேலையை விட்டுத் துரத்தும் போது வேலைச் சந்தையில் ஆட்கள் நிரம்பி வழிவார்கள். அடுத்த நிறுவனத்திற்கு தெரியாதா என்ன? இந்த நிறுவனத்தில் இருந்து வந்திருக்கிறான் என்றாலே அவனுக்கு புரிந்துவிடும். ஆடு மாடுகளை விலை பேசுவது போல பேசுவார்கள். ‘இவ்வளவுதான் சம்பளம். வர முடிந்தால் வா’ என்கிற மாதிரி. வேறு வழி? கிடைக்கிற வேலையில் சேர வேண்டியதுதான். அப்படி அரைச் சம்பளத்திலாவது வேலை கிடைத்தால் பாக்கியசாலி. அதுவும் கிடைக்காதவன் என்ன செய்வான்? பல வருடங்களாக தனது நிறுவனத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை இப்படியொரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்துவதைத்தான் வெளிப்படையாகச் செய்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக தொடர்ந்து 'under performance' செய்த ஆட்களைத்தான் தூக்குகிறோம் என்பது போன்றதான சாக்குப் போக்குகளைச் சொல்வார்கள். தாராளமாகச் செய்யட்டும். ஆனால் எதற்காக இருபத்தைந்தாயிரம் பேரை நீக்குகிறோம், ஐம்பதாயிரம் தலைகளை வெட்டுகிறோம் என்றெல்லாம் பரபரப்பூட்டி தங்களது பணியாளர்களை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. 

பெரும்பாலான நிறுவனங்களில் இந்த வேலை நீக்கம் உண்டுதான். ஆனால் இத்தனை ஆயிரம் பேரை வெட்டுகிறேன் என்று அறிவித்துவிட்டு ரத்த வேட்டை நடத்துவதில்லை. இப்பொழுது நான் பணியாற்றும் நிறுவனத்தில் கூட சில மாதங்களுக்கு முன்பு ஆட்களை வேலையை விட்டு நீக்கினார்கள். ஆனால் அதை மரியாதையாகச் செய்தார்கள். நீக்கப்பட்ட எல்லோருக்குமே இரண்டு மாதச் சம்பளம் உறுதி. அது போக அந்தப் பணியாளர் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு மாதச் சம்பளம் கொடுத்தார்கள். அதாவது மூன்று வருடங்கள் பணியாற்றியிருந்தால் {(3x2=6)+இரண்டு} ஆக எட்டு மாதச் சம்பளம். நான்கு வருடங்கள் பணியாற்றியிருந்தால் {(4x2=8)+இரண்டு} ஆக, பத்து மாதச் சம்பளம். இது தவிர பயன்படுத்தாத விடுமுறை தினங்கள், இதுவரையிலுமான போனஸ் என பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதைவிட முக்கியம் சத்தம் வெளியில் வரவில்லை. விடுப்புக் கடிதத்தில் (Relieving Letter)இரண்டு மாதம் தள்ளி தேதி போட்டுக் கொடுத்தார்கள். அதாவது இன்றைய தினம் வேலையைவிட்டு அனுப்புவதாக இருந்தால் பிப்ரவரி 22 என்பதுதான் அவரது கடைசி வேலை நாள் என்று குறித்துக் கொடுப்பார்கள்.

இன்னொரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தான் இன்னமும் வேலையில் இருப்பதாகச் சொல்லி பேசலாம். ‘தன்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள்’என்று சொன்னால் எந்த நிறுவனமும் அடிமாட்டை போலத்தான் பார்ப்பார்கள். அதைத் தவிர்ப்பதற்காக தங்களது பணியாளர்களுக்கு நிறுவனம் செய்து கொடுத்த சகாயம் அது. கெட்டதிலும் ஒரு நல்லது.

அப்பொழுது எங்கள் நிறுவனத்தைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்தச் செய்தியைப் படித்தால் அதெல்லாம் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. 

இப்படி திடீரென்று பணியாளர்களைக் குறைத்தால் வெளியிலிருந்து பார்க்கிறவர்கள் ‘அடடா இந்த நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறதே’ என்று நினைத்துவிடக் கூடாதல்லவா? பங்கு விலை அடி வாங்கிவிடும்.  அதனால் ‘நாங்கள் மூத்த ஆட்களைத்தான் அனுப்புகிறோம் ஆனால் புதியவர்கள் ஐம்பத்தைந்தாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். அதாவது முதலீட்டாளர்களிடம் ‘தங்களிடம் திறமைக்குத்தான் மரியாதை’ என்று அறிவிக்கிறார்களாம்.

அதெல்லாம் இல்லை. எளிமையான கணக்குத்தான்.

‘உனக்கு ஐம்பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக புதிதாக வருபவர்கள் இரண்டு பேருக்கு ஆளுக்கு இருபதாயிரம் கொடுத்தால் போதும். செக்கு மாடு மாதிரி இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பாடுபடட்டும். பிறகு அவன் சம்பளம் அதிகமாகக் கேட்கும் போது அவனையும் தூக்கிவிடலாம்’ என்பதுதான் சூத்திரம். 

இதைத்தான் எல்லா நிறுவனங்களும் அச்சுபிசகாமல் செய்துவருகின்றன. ஐடி நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் அனுபவித்து வருகின்றன. இந்தியாவுக்குள் இந்த நிறுவனங்கள் வரும் போது தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களிலும் என்ன சலுகைகளை அறிவித்தார்களோ அவற்றில் பெரும்பாலானவற்றை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்போரேட்க்காரர்கள் ஆட்சியாளர்களைக் அவ்வப்போது குளிப்பாட்டிவிடுகிறார்கள். அதனால் எந்த அரசாங்கமும் சலுகைகளை குறைப்பது பற்றி வாயே திறப்பதில்லை. 

கடைசியில் யார் சிக்குகிறார்கள்?

பொறியியல் மற்றும் எம்.சி.ஏ என்கிற பெருங்குட்டையில் எல்லோரும் குதிக்கிறார்கள் என்று தானும் குதித்து, ஏதாவதொரு கணினிப்படிப்பை படித்துவிட்டு, காலையில் மடிப்புக்கலையாத சட்டையும் பேண்ட்டுமாகச் சென்று,  மாலையில் பேயறைந்த மாதிரி வீடு திரும்பி, மாதச் சம்பளத்தை மிச்சம் பிடித்து, சிறுகச் சிறுகக் கடனில் வீடு சேர்த்து இனி குழந்தைகளைப் படிக்க வைத்து வீட்டுக்கடனை அடைத்தால் போதும் என நினைக்கத் துவங்கும் அரைச் சொட்டை இளங்கிழவர்கள்தான். 

ஒரே போடு...சத்!

கார்பொரேட்டில் புனிதன் என்ன? புல்லுருவி என்ன? எல்லோருமே காசேதான் கடவுளடா எனக் கும்பிடும் களவாணிகள்தான். அவர்கள் கோடாரியை வீசிக் கொண்டேதானிருப்பார்கள். குனிந்து தப்பிக்கிறவன் இன்னும் கொஞ்ச நாளைக்கு தனது உயிரை காப்பாற்றிக் கொள்கிறான். தெரியாத்தனமாக அப்படியே நிற்பவனின் ரத்தச் சகதி அந்தப் பெரு முதலாளிகளின் கால்களை வெதுவெதுப்பாக நனைத்துக் கொண்டேயிருக்கும்.

மதுரை வீரன்

“தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருந்திருக்கின்றன ஆனால் பெரும்பாலானவற்றை சுவடியிலிருந்து புத்தகங்களாகவே மாற்றவில்லை..அவையெல்லாம் அழிந்து போய்விட்டன” என்று நாஞ்சில் நாடன் ஒரு முறை பேசினார். அப்பொழுதிலிருந்து இத்தகைய புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாசிக்கிறேனோ இல்லையோ- அம்மானை, பள்ளு, தூது என்று எந்த வகையறாவில் கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ஏதாவதொரு காலத்தில் பயன்படும் அல்லவா?

அப்படி கிடைத்த ஒரு புத்தகம் மதுரை வீரன் அம்மானை. 

காசி மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. கழுத்தில் மாலை இருக்கிறது என்று வேதியர் சொல்கிறார். மாலை வடிவிலான அடையாளம் அது. இது மன்னனுக்கு ஆகாது என்று வனத்தில் விட்டுவிடுகிறார்கள். நாகபாம்பு காப்பாற்றி வந்த அந்தக் குழந்தையைச் சக்கிலியர் இனப் பெண் எடுத்து வீரையன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தைரியமானவவனாக வளர்கிறான். அவன் இளம்பருவத்தை அடையும் சமயத்தில் பட்டிணத்தை ஆளும் பொம்மண நாய்க்கன் என்பவனின் மகளான பொம்மி என்பவள் ருதுவாகிறாள். அவளது குடிசைக்கு பாதுக்காப்பளிக்க வீரையனின் தந்தை செல்கிறான். ஒரு நாள் மழை பெய்கிறது. தந்தைக்கு  பதிலாக வீரையனே செல்கிறான். பொம்மி மீது காமம் பொங்குகிறது.  ‘சக்கிலியப்பயலுக்கு தலைப்புழுவு ஆட்டுதோடா’ என்று முதலில் அவள் மறுக்கிறாள். பிறகு வீரையனின் தோள் அழகு, மார்பழகைப் பார்த்து மயங்கிவிடுகிறாள். கசமுசா  ஆகிவிடுகிறது.

தனது மகளை இன்னொருவன் கவர்ந்துவிட்டானே என்று நாய்க்கன் துள்ளுகிறான். நாய்க்கனின் ஆட்களோடு சண்டையிட்டு வென்ற வீரையன் பொம்மியைத் தூக்கிக் கொண்டு திருச்சிக்கு ஓடி வருகிறான். அங்கே அரசனிடம்  வேலைக்குச் சேர்கிறான். இந்தச் சமயத்தில்தான் மதுரையில் திருமலைநாய்க்கனுக்கு கள்ளர்களால் பிரச்சினை வருகிறது. நாய்க்கருக்கு உதவும் பொருட்டு திருச்சி மன்னன் வீரையனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே வீரையன் கள்ளர்களை அடக்குகிறான். பராக்கிரமனாகத் திரும்பு வீரைய்யன் திருமலைநாய்க்கருக்கு ஆலத்தி எடுக்கும் வெள்ளையம்மாள் என்கிற பெண்ணைப் பார்க்கிறான். அதிலிருந்து அவள் மீதும் வீரையனுக்கு ஆசை. அடைந்துவிடுகிறான். மன்னரின் ஆட்கள் வீரையனை மாறுகால் மாறுகை வாங்குகிறார்கள். அவன் இறந்த பிறகு திருமலைநாய்க்கர் மனம் வெதும்பி மீனாட்சியம்மனை வேண்டுகிறார். மதுரை வீரனும், பொம்மியும், வெள்ளையம்மாளும் கடவுளாகிறார்கள். 

மதுரை மீனாட்சியம்மனின் கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் மதுரை வீரனுக்கு தனியானதொரு சிறு சந்நிதி இருக்கிறது. பார்த்திருக்கலாம்.

மதுரை வீரன் அம்மானையை புரிந்து கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை. சாதாரணச் சொற்கள்தான். அதைப் பாடல் வடிவில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

பொம்மியரும் வீரையனும் புரவி தனியேறி
திருச்சினாப்பள்ளிக்குச் சீக்கிரமாய் போகையிலே
கோட்டைக் குறிகாரர் கொத்தளத்துச் சேவுகரும்
எந்த ஊர் என்று இதமாகத் தான் கேட்டார்

இப்படித்தான் வரிகள் இருக்கின்றன. நூற்றியாறு பக்கங்களில் இரண்டாயிரத்து இருநூறு பாடல்கள். ஒரே முசுவில் வாசித்தால் நான்கு மணி நேரத்திற்குள்ளாக முடித்துவிடலாம். 

இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு எம்.ஜி.ஆர் நடித்திருந்த மதுரைவீரன் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. 1956 ஆம் ஆண்டிலேயே வந்த படம் அது. யூடியூப்பில் இருக்கிறது. மூன்று  மணி நேரம் ஓடுகிறது. இந்த அம்மானைக்கும் படத்திற்கும் நிறைய இடங்களில் வித்தியாசங்களிருக்கின்றன. அம்மானையில் இரண்டு பெண்களின் மீதும் வீரையன்தான் காமுறுகிறான்.  ஆனால் படத்தில் எம்.ஜி.ஆர் பெண்கள் பின்னால் சுற்ற மாட்டார் அல்லவா? அதனால் பொம்மியும் வெள்ளையம்மாளும்தான் வீரையன் பின்னால் சுற்றுகிறார்கள். அம்மானையில்  வெள்ளையம்மாள் என்பவள் திருமலை நாய்க்கருக்கு ஆலத்தி சுற்றும் பெண்தான். ஆனால் படத்தில் நாய்க்கர் வெள்ளையம்மாளைக் காதலிக்கிறார். இப்படி சிறு சிறு வேறுபாடுகள் உண்டு.

மதுரைவீரனை ஏன் காசி மன்னனின் மகனாக சித்தரித்து கதை ஆரம்பிக்கிறது? அவனைக் கொன்றுவிட்டு ஏன் கடவுளாக மாற்றினார்கள்? மேல்சாதிப் பெண்ணை விரும்பினால் மதுரை வீரனின் முடிவுதான் உனக்கும் கிடைக்கும் என்பதை பின்வரும் தலைமுறைகளுக்குச் சொல்லாமல் சொல்கிறார்களா? என்பதிலிருந்து பல நூறாண்டுகளாக இருந்துவரும் சாதியக் கட்டமைப்புகள், காலங்காலமாக ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது செலுத்தும் ஒடுக்குமுறை வரை விவாதிக்கலாம். அவ்வளவு நுண்ணரசியல் மிகுந்த கதை இது.

முன்பொரு முறை எஸ்.வி.ராமகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘மதுரை வீரன் என்ற ஒரே படம் எம்.ஜி.ஆரை அருந்ததியர்களின் அசைக்க முடியாத தெய்வமாக்கிவிட்டது’  என்றார். உண்மைதான். அப்படியான ஹீரோயிஸமும், எமோஷனலும் கலந்த கதைதான் அது. காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இனம் தனது இனத்திலிருந்து ஒருவன் ஹீரோவோக மேலேறுவதை கைகொட்டி ரசிக்கிறது. பிறகு தங்களால் செய்ய முடியாததைச் செய்த தங்களின் இனநாயகனுக்கு எம்.ஜி.ஆரின் முகத்தை பொருத்தி அவரையே தங்களின் கடவுளாக மாற்றிக் கொள்கிறது. எம்.ஜி.ஆர் சதிலீலாவதியில் அறிமுகமானபோது அவரது வயது பத்தொன்பது. ராஜகுமாரியில் முதன்முதலில் கதாநாயனானபோது முப்பது வயது. இந்த பதினோரு வருடங்கள்தான் அநேகமாக அவருக்கு சிரமமான வருடங்களாக இருந்திருக்கக் கூடும். அதற்கு பிறகு அவரின் கதைத் தேர்வுகளும், பாத்திர அமைப்புகளும் அவரை தொடர்ந்து தலைவராக்கிக் கொண்டேயிருந்திருக்கிறது. இத்தகைய விஷயங்களில் எம்.ஜி.ஆரை அடித்துக் கொள்ளவே முடியாது.  இதெல்லாம் இனி வேறு எந்த நடிகருக்கும் அமைவதற்கும் வாய்ப்பேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் எப்படி தன்னை நடிகனிலிருந்து தலைவராக மாற்றிக் கொண்டார் என்பதை நுணுக்கமாக புரிந்து கொள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய “The Imgage Trap: M G  Ramachandran in Films and Politics" என்ற புத்தகத்தை வாசிக்கச் சொல்லி அவரது நண்பரொருவர் பரிந்துரைத்தார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை இந்தப் புத்தகம் வெளிவராமல் பார்த்துக் கொண்டார் என்று சொன்னார். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவரது வாரிசான ஜெயலலிதா தன்னைப் பற்றிய ஒரு புத்தகத்தை நிறுத்தி வைத்தார். அது வாஸந்தி எழுதிய “Jayalalitha: A portrait” என்ற புத்தகம். புத்தகம் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பாக புத்தகம் பற்றிய சிறு குறிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனடியாக நீதிமன்றத்தில் ஆணை பெற்று புத்தகத்தை தடை செய்துவிட்டார்கள். பதிப்பாளர்களும் இனி கோர்ட், கேஸ் என்று அலைமுடியாது என்று விட்டுவிட்டார்கள். அதோடு சரி. அந்தப் புத்தகம் இனி வெளி வரவே வராது என்றுதான் நினைக்கிறேன்.

Dec 21, 2014

ஏன் இப்படி?

மூன்று நாட்களாகத் தஞ்சாவூரில் சுற்றிக் கொண்டிருந்தேன். சுற்றிக் கொண்டிருந்தேன் என்றால் நாய் மாதிரி. வெள்ளிக்கிழமையன்று எப்படிச் சுற்றினேன் என்பதை மட்டும் சொன்னால் போதும். புரிந்துவிடும். ‘தாராசுரம் போய் பார்த்துட்டு வந்துடுங்க’ என்று கதிர்பாரதி சொல்லியிருந்தார். சோழர்களின் கட்டடக்கலைக்கு உதாரணமான மிகச் சிறந்த நான்கு கோவில்களில் அதுவும் ஒன்று. மிச்ச மூன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தஞ்சை பிரகதீஸ்வரர், திருபுவனம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள். தாராசுரம் கும்பகோணம் பக்கத்தில் இருக்கிறது. காலை ஆறரை மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தேன். மழை தூறிக் கொண்டேயிருந்தது. தூங்கினால் சுகமாகத்தான் இருக்கும். ஆனால் இது போன்ற வாய்ப்புகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. ஐந்து மணிக்கு குளித்துவிட்டு நனைந்தபடியே பேருந்து பிடித்திருந்தேன். தாராசுரத்தில் பெரும்பாலும் பட்டு நெசவு செய்யும் செளராஷ்டிர மக்கள். ஒன்றரை மணி நேரங்கள் அந்தத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐராவதேசுவரர் கோவிலுக்கு பின்புறமாகவே வீரபத்திரேஸ்வரர் கோவில் இருக்கிறது. ஆனால் அதைக் கோவில் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு சாதாரண ஒண்டிக்குடித்தன வீடு கூட சற்று மரியாதையாக இருக்கும். நாசக்கேடாகிக் கிடந்தது.

வீரபத்திரேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் தெப்பம் போல தண்ணீர் நின்றிருந்தது. மழை நீர். கொசுக்கள் முட்டை வைத்திருந்தன. புழுக்கள் நெண்டிக் கொண்டிருந்தன. அந்தக் கோவிலில்தான் ஒட்டக்கூத்தரின் சமாதி இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஒன்றையும் காணவில்லை. அந்தக் கோவிலில் ஒரு ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தார்கள். அதில் இருந்த எண்ணுக்கு அழைத்துக் கேட்டேன். ‘கோவிலின் பின்புறம் ஒரு கட்டிடம் இருக்கும் பாருங்கள்’. கட்டிடமெல்லாம் இல்லை. அது ஒரு செவ்வக வடிவிலான மேடை. அதுதான் சமாதி. அதன் அருகில் செல்ல வேண்டுமானால் முழங்கால் வரைக்குமான தண்ணீரில் நடக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? 

பேருந்துக்கு திரும்பும் போது ஜீன்ஸ் மீது நெண்டிக் கொண்டிருந்த சில புழுக்களைத் தட்டிவிட வேண்டியிருந்தது.

காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. மழையின் காரணமாகவோ என்னவோ பசி கண்களைத் திருகச் செய்தது. வரும் வழியில் ஒவ்வொரு ஊராக இறங்கி ஏறினேன். பாபநாசம், அய்யம்பேட்டை, சுந்தரபெருமாள் கோவில் என்று நான்கைந்து ஊர்கள். சுந்தரப்பெருமாள் கோவிலில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் மூப்பனாரின் வீட்டைப் பார்க்கலாம் என்பதுதான். அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் வீடு அது. முகப்பிலேயே கருப்பைய மூப்பனாரின் படத்தை வைத்து மாலையிட்டிருந்தார்கள். உள்ளே செல்லவில்லை. சுந்தரப்பெருமாளை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். அய்யம்பேட்டை என்ற பெயரைக் கேட்டவுடன் ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’ என்ற பெயர்தான் ஞாபகத்துக்கு வந்தது. இறங்கிவிட்டேன். பாபநாசத்தில் கை கால் முறிந்தால் கட்டுப் போடுவார்களாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊரிலும் கொஞ்ச நேரம். 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜீவன் இருக்கிறது. இல்லையா? ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆன்மா. 

இந்த வாகனங்களும் நான்குவழிச் சாலைகளும் வந்த பிறகுதான் இதைப் பற்றியெல்லாம் நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. சென்ற தலைமுறை ஆட்களிடம் பேசினால் இந்த வித்தியாசத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஏதாவதொரு குக்கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் நம்மிடம் சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும். எதையாவது சொல்வார்கள். ஆனால் நமக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. ஒரு இடத்தில் ஏறி இன்னொரு இடத்தில் இறங்குகிறோம். அவ்வளவுதான். இந்த நான்கு வழிச் சாலைகள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கிருஷ்ணகிரியில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாகர்கோவிலில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஊரில் தூங்கினால் கண் விழிக்கும் போது நாம் இறங்க வேண்டிய ஊர் வந்துவிடுகிறது. பிறகு எதற்கு மற்ற ஊர்களைப் பற்றி யோசிக்கிறோம்?

நாம் இந்தத் தலைமுறையில் எவ்வளவோ இழந்து கொண்டிருக்கிறோம். அதில் இதுவும் ஒன்று- ஊர்களின் ஆன்மாவைச் சொல்கிறேன்.

ஒட்டக்கூத்தரின் சமாதியைத் தொடும் போது ஒரு வினாடி மயிர்க்கூச்செறிந்தது என்று சொன்னால் அதில் எந்த பில்ட்-அப்பும் இல்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நாலாயிரக் கோவையும், மூவர் உலாவும் எழுதிய புலவனின் உடல் புதைக்கப்பட்ட இடம் அது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவனது பெயர் நமக்குத் தெரிகிறது என்றால் தான் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு பெரிய புலவனாக அந்த ஊரில் நடந்திருப்பான்? மூன்று சோழப்பேரரசர்களின் காலத்தில் வாழ்ந்த புலவன். விக்கிரம சோழன் அவனது மகன் இரண்டாம் குலோத்துங்கன் அவனது மகன் இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று பேருடனும் பழகியிருக்கிறார். மூன்று பேரைப் பற்றியும்தான் மூவர் உலாவைப் பாடியிருக்கிறார்.  கம்பனைப் பற்றி பாடியிருக்கிறார்.  எவ்வளவோ சொல்லலாம். அந்த பெரும்புலவனின் சமாதிதான் புழு அண்டிக் கிடக்கிறது. 

இன்னும் எத்தனை வருடங்களுக்கு சமாதி இருக்கும் என்று தெரியாது. அவனது பாதங்களைத் தொட்டு வணங்கியாகிவிட்டது. வேறு என்னென்னவோ யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. இந்த யோசனைகளுக்காகத்தான் பயணங்களை விரும்புகிறேன். ரிசர்வேஷன் செய்யப்படாத பேருந்துகளில் நினைத்த இடத்தில் ஏறி இறங்கும் பயணங்களினால்தான் நிரம்பிக் கொண்டிருக்கிறேன். எத்தனை மனிதர்கள்? எத்தனை அனுபவங்கள்?

இந்தப் பசியும், உடல் வலியும், தூக்கம் தொலைத்த கண்களும், நடந்து நடந்து நடுங்கும் கால்களும் எவ்வளவு சுகமானது என்பதை வெகுசிலரால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். 

இலக்கில்லாமல் அலையும் பயணங்களை பெரும்பாலனவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. ‘அதனால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்கள். நேற்றுக் கூட பேருந்தில் திரும்பி வரும் போது ‘உடம்பைக் கெடுத்துட்டு இப்படி அலையறதால என்ன கிடைக்குது?’ என்றார் ஒருவர். அவரிடம் என்ன பதிலைச் சொல்வது? சொல்லியெல்லாம் புரிய வைக்க முடியாது. சொன்னாலும் புரிந்து கொள்கிற மனநிலை பாதிப்பேருக்குக் கிடையாது. ‘ஃபேனைப் போட்டுட்டு டிவி பார்த்துட்டு காலை நீட்டி சொகமா படுத்துட்டிருக்கேன்’ என்றார். வாழ்க வளமுடன் என்று நினைத்துக் கொண்டேன். 

அப்பொழுது ஒட்டக் கூத்தர் எழுதிய தக்கயாகப் பரணியின் பிரதிகளை மடியில் வைத்திருந்தேன். அந்தப்பாடலின் பாட்டுடைத்தலைவன் வீரபத்திரன். ஒட்டக்கூத்தரின் சமாதிக்கு முன்பாக ஒரு சிறு கோவில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் வீரபத்திரரேதான். அந்தப் பாடலும் இருக்கிறது. பாட்டுடைத் தலைவனையும் பார்த்துவிட்டு பாடியவரையும் வணங்கிவிட்டு வருகிறேன். எவ்வளவு திருப்தியாக இருந்தது தெரியுமா? 

Dec 16, 2014

தமிழ் படித்தால் வாத்தியார்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைத்திருந்தார்கள். இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடக்கிறது. அதில் பேசுவதற்கான அழைப்பு அது. சரி என்று சொல்லிவிட்டேன். வழக்கமாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேசும் நிகழ்வுகளில் நூறு மாணவர்களுக்குள்தான் இருப்பார்கள். பெரிய சிரமம் இருக்காது. சமாளித்துவிடலாம். ஆனால் ஒரு வாரம் கழித்து அழைத்தவர்கள் ‘நீங்க எப்படியும் இரண்டு மணி நேரம் பேச வேண்டியிருக்கும்’ என்றும் கிட்டதட்ட ஐந்நூறு மாணவர்களுக்கு மேல் ஆடிட்டோரியத்தில் இருப்பார்கள் என்றார்கள். இது சங்கடமான விஷயம்தான். அத்தனை மாணவர்களுக்கு முன்பாக வேலை வாய்ப்பு பற்றி பேசுவதென்றால் சிரமம். அதுவும் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள். கஷ்டம்தான். அவ்வப்போது வேலைகளைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பதால் என்னை நம்பி ஏமாந்திருப்பார்கள் போலிருக்கிறது.

மாணவர்களிடையே பேசும் போது புள்ளி விவரங்களையும் தகவல்களையும் கொட்டுவதை விட அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வைப்பதுதான் முக்கியமான விஷயம். அதற்காக கடந்த பதினைந்து இருபது நாட்களாகவே தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் தகவல்களைப் புரட்டினால் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் படித்த மாணவர்களுக்கு வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும் என்றெல்லாம் இல்லை. ஐடியில் கூட வேலை இருக்கிறது. மொபைல் நிறுவனங்களில் வேலை இருக்கிறது. பன்னாட்டு விளம்பர நிறுவனங்களில் வேலை இருக்கிறது. 

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆரக்கிள்(Oracle) நிறுவனத்தில் தமிழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வேலைக்குக் கேட்டிருக்கிறார்கள். computational Linguist என்ற வேலை. ஹிந்தி, ஸ்பானிஷ் உள்ளிட்ட சில மொழிகள் தெரிந்தவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். தமிழும் அதில் ஒன்று. எவ்வளவு தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழ் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்களிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. கணினி சார்ந்த அறிவை அவர்கள் வளர்த்துக் கொள்வதில்லை என்பதுதான் அது. கணினி பாடங்களை சொல்லித் தரும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள் வகுப்புகளை முடித்தால் கூட போதும். அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். Python, Ruby போன்ற மென்பொருட்களைத் தெரிந்து வைத்திருந்தால் இன்னமும் உசிதம். 

தமிழ் பேராசிரியர்களிடம் பேசினால் ‘பவர்பாய்ண்ட் தெரியாது’ என்று சொல்வதைக் கேட்க முடியும். 

‘இது கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா?’ என்று கேட்கலாம்தான்.

‘உனக்கு கட்டளைக் கலித்துறை தெரியுமா?’ என்று கேட்டுவிடுவார்களோ என்று பம்மிக் கொள்வேன்.

எனக்கு உயிரெழுத்து பன்னிரெண்டு, மெய்யெழுத்து பதினெட்டு என்கிற அளவில் தமிழ் தெரியும். அந்த அளவுக்கு தமிழ் மாணவர்கள் கணினியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறேன். ஒரு Programming Language போதும். கனவேலை செய்யும்.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தேசத்தில் கால் வைக்காதவரையிலும் ‘தமிழ் படித்தால் வாத்தியார்தான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது சரிதான். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேடுவதில்தான் வெற்றி இருக்கிறது. இந்தக் கருத்தரங்கத்துக்காக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். முனைவர். அண்ணாகண்ணன் அப்படியானவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். யாஹூ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தமிழ்ப் பிரிவுகளில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பெங்களூரில் இருந்த போது நிறையப் பேசியிருக்கிறோம். இப்பொழுது மும்பை சென்றுவிட்டார். என்ன வேலை என்று கேட்டால் ஸ்மார்ட் ஃபோன்களில் தமிழ் மொழியை நிறுவும் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணி. 

இப்படிக் கூட ஒரு வேலை இருக்கிறதா என்று யோசித்தால் எப்படியெல்லாமோ வேலைகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. பேச்சறிதல் (Speech Recognition) என்பதைக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஒலியை பிரதியாக மாற்றுவது. Speech to text. இப்பொழுது நிறைய நிறுவனங்கள் இதைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்குமளவிற்கு தமிழில் நிறைய மென்பொருட்கள் இல்லை என்கிறார்கள். காரணம் இந்தத் துறையில் பணியாற்றும் தகுதியான ஆட்கள் இல்லை என்பதைக் காரணமாகச் சொல்கிறார்கள். ஒரு நிறுவனம் ஸ்பானிஷ் மொழியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அடுத்து எந்த மொழியில் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன் சில கணிப்புகளை மேற்கொள்கிறார்கள். அந்த மொழியில் பேச்சறிதல் மென்பொருளுக்கான சந்தைத் தேவை என்ன, எவ்வளவு மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள் என்று நிறைய ஆராய்ச்சிகளைச் செய்வார்கள். அதே சமயத்தில் Skilled worker கிடைக்கிறார்களா என்பதையும் பார்ப்பார்கள். அப்படி ஏதாவதொரு அம்சத்தில் அடிபடும் போது இந்த மொழியை விட்டு இன்னொரு மொழிக்குச் சென்றுவிடுகிறார்கள்.

பேச்சறிதல் மட்டுமில்லை- Natural Language Processing, Interpretation என்று ஏகப்பட்ட வேலைகளைச் சொல்ல முடியும். 

இன்னொரு உதாரணத்தைச் சொல்லலாம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் சில தேர்வுகளை எழுத வேண்டும். கட்டாயத் தேர்வுகள். அதுவும் ஆன்லைன் தேர்வுகள். அதற்கு தேவையான பாடங்களையும் கணினி வழியாகவே படித்துக் கொள்ளலாம். பாடங்களை நமக்கு விருப்பமான மொழியில் படிக்க முடியும். ஏகப்பட்ட மொழிகளில் இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டுமில்லை. விசாரித்தால் தமிழ் பாடத்தை உருவாக்குவதற்கான சரியான ஆட்கள் இல்லை என்று சம்பந்தப்பட்ட துறையில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

ஆசிரியர் பணி பொருத்தமானதுதான். அரசாங்கச் சம்பளம், பெரிய ரிஸ்க் இல்லை என்று எவ்வளவோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் தமிழில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆசிரியராகாவே சேர்ந்தாலும் கூட சில காரியங்களைத் தமிழ் தெரிந்தவர்களால்தான் செய்ய முடியும். தமிழ் மாணவர்கள் தங்கள் கூடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதுதான் தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பயனைத் தரும்.

இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு தயாரித்து வைத்திருக்கிறேன். எப்படியும் பாக்யராஜ் ஸ்டைலில் பேசிவிடுவேன் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

ஆனால் ஒன்று- இப்படியெல்லாம் யாராவது நம்மையும் நம்பி ஒரு அழைப்பிதழை அச்சடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தால்தான் வீட்டிலிருக்கிறவர்கள் நம்புகிறார்கள். நல்லவேளையாக இவர்கள் முன்னதாகவே அனுப்பி வைத்துவிட்டார்கள். இல்லையென்றால் நிகழ்ச்சிக்குச் செல்லும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லி ஒரு அழைப்பிதழை பத்திரமாக வாங்கி வைக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் ‘அய்யய்யோ..தீர்ந்துடுச்சே’ என்பார்கள். அப்பொழுது என் மனம் எப்படி வெதும்பும் என்று எனக்குத்தான் தெரியும். சரி, இதையெல்லாமா வெளியில் சொல்லிக் கொண்டிருப்பது?

தமிழகமே திரண்டு வா..குலுங்கட்டும் சோழனின் தலைநகரம்..தரணியே திரும்பிப்பார்க்கட்டும் தஞ்சையை! ஆங்! 

Dec 15, 2014

வாழையடி வாழை

வாழை என்ற தன்னார்வ அமைப்பு பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கக் கூடும். பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்தான். சென்னையில் செயல்படும் குழுவுடன் அதிகம் பழகியதில்லை. பெங்களூர் ஆர்வலர்களை எங்கேயாவது அவ்வப்போது சந்தித்துவிட முடிகிறது. இந்த பெங்களூர் குழுவினர் தர்மபுரிக்கு பக்கத்தில் ஏரியூர் என்ற ஊரில் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். குவாரித் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப்பள்ளி. ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தக் குழுவிலிருந்து ஒருவர் Mentor ஆக நியமிக்கப்படுகிறார். அவர் அந்த வருடம் முழுவதும் அந்தக் குழந்தைக்கான முழுமையான வழிகாட்டியாகச் செயல்படுவார்.

எப்படி?

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள். சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் அந்த ஊரிலேயே ஒரு திருமண மண்டபத்தில் தங்கி அந்தக் குழந்தைகளுடன் விளையாடி, பாடம் சொல்லித் தந்து, ஓவியம் வரைதல் போன்ற ஏதேனும் திறமைகள் குழந்தைகளிடம் ஒளிந்திருந்தால் அதை வெளிக்கொண்டு வந்து - இப்படி அந்த வருடத்தில் அவர்களுக்கு எல்லாவிதமான exposure கிடைப்பதற்கும் பாடுபடுகிறார்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் இவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். தங்களைப் பற்றி எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை. எங்குமே விளம்பரம் செய்வதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளை மேலே கொண்டு வருவதற்காக அவ்வளவு உண்மையாகச் சிரமப்படுகிறார்கள். இவர்களால் அந்த ஊரில் குழந்தைத் திருமணம் தடுக்கப்பட்டிருக்கிறது, பள்ளியை விட்டே நின்றுவிடப் போவதாக இருந்த மாணவி கல்லூரி வரை வந்திருக்கிறாள், எழுத்தே தெரியாத மாணவியொருத்தி மிகச் சிறப்பாக படிக்கத் துவங்கியிருக்கிறாள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். 

இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கலாம்தான். அந்தக் குழந்தைகளின் பின்னணி தெரிந்தால் பெரிய விஷயம்தான் என்று தோன்றும். குவாரியைத் தவிர வெளியுலகமே தெரியாத பெற்றவர்கள், பெற்றவர்கள் வெளியூரில் இருக்க தாங்களே சோறாக்கித் தின்னும் குழந்தைகள், பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் யாருமே கேட்காத சூழல், தலைக்கு தேங்காய் எண்ணேய் வைப்பது பற்றிய கவலை கூட இல்லாமல் ஐந்தாம் வகுப்பைத் தாண்டிச் செல்லும் பெண்பிள்ளைகள், அகரம் கூட தெரியாமல் பள்ளியை விட்டு நிற்பதற்கான எத்தனிப்புகளில் இருப்பவர்கள் என விளிம்பு நிலைக் குழந்தைகள் அவர்கள். அவர்களுக்குத்தான் கை கொடுக்கிறார்கள். கையைக் கொடுத்து தூக்கிவிடுகிறார்கள்.

எவ்வளவு பெரிய மகத்தான பணி இது? 

இன்னொரு தலைமுறையும் குவாரியின் கல் உடைப்பில் சிக்கிக் கொள்வதிலிருந்து தடுத்து நிறுத்துகிறார்கள். எழுத்து வாசமே இல்லாத அந்த வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். அந்த அப்பாவிக் குழந்தைகளின் அக இருளைத் தங்களின் உழைப்பின் மூலமாக அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

வாழை அமைப்பினர் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூரில் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். வாழை அறிமுகக் கூட்டம் என்று பெயர். தங்களின் அமைப்பு பற்றிய அறிமுகம் மட்டுமில்லாது அடுத்த ஆண்டு Mentor ஆகச் செயல்பட விரும்புவர்களை தங்களோடு இணைத்துக் கொள்ளும் கூட்டமாகவும் இருக்கும். எவ்வளவோ இளைஞர்கள் இது போன்று சமூகத்துக்காக தங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்புபவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத் தங்கள் பாதைக்கு அழைக்கும் கூட்டம் இது. 

கோயமுத்தூர்க்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். சுந்தர் என்று பெயர். டிசிஎஸ்ஸில் இருக்கிறார். துறுதுறுவென்றிருப்பார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நிறுவனத்திலிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு கிராமப்புற பள்ளி ஒன்றில் பாடம் சொல்லித் தரப் போகிறாராம். என்னைவிட ஜூனியர்.  ப்ரோமோஷன் கிடைக்காது. சம்பள உயர்வு வராது. ‘சுந்தர் இந்த சமயத்தில் போனீங்கன்னா வேலையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி தடைபடாதா?’ என்றால் ‘பரவாயில்லை சார்..செய்யலாம்’ என்கிறார். இப்படியெல்லாம் கூட இந்தத் தலைமுறையில் ஆட்கள் இருக்கிறார்கள். 

இப்படியான எண்ணமுடையவர்களுக்கு வாழை சரியான அமைப்பு. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வார விடுமுறையை இந்த ஏழைக் குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டும். அவ்வளவுதான். மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் வாழையே பார்த்துக் கொள்ளும். Mentor ஆக வேண்டும் என்றில்லை. வாழையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள இயலாதவர்கள் சமூக ஆர்வமுடைய பெங்களூர் வாழ் நண்பர்களுக்குத் தெரியப்படுத்திவிடுங்கள். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த புண்ணியம் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிச்சயம் வந்து சேர்ந்துவிடும்.

இடம்: YWCA, Koramangala 6th Block (Near Koramangala Police Station)
நேரம்: டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை(மதியம் 2.00 மணியிலிருந்து 5.00 வரை)
தொடர்பு எண்: 95386 43411/96631 11993

இது எப்படியிருக்கு?

மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்திற்கான வேலை முடிந்துவிட்டது. அதாவது பிழை திருத்தம் பார்த்துக் கொடுத்துவிட்டேன். இனி அச்சுக்கு அனுப்புவது பதிப்பாளரின் வேலை. புதிய  பதிப்பகம். தனது பதிப்பகத்தின் வழியாக ஐந்து புத்தகங்களை வெளியிடுகிறார். அதில் ஒன்று சினிமா உலகின் பெருந்தலையின் புத்தகம். அதனால் திரைத் துறை பிரபலம் ஒருவரை வைத்து  ஐந்து புத்தகங்களுக்குமான வெளியீட்டு நிகழ்ச்சியை பதிப்பாளர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். 

சென்ற ஆண்டு புத்தக வெளியீடு போலவே இந்த ஆண்டும் சிலவற்றை பின்பற்ற வேண்டும் என்றிருக்கிறேன்.  புத்தகத்தின் விலை நூறு ரூபாயைத் தாண்டக் கூடாது என்பது முதல்  விஷயம். மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு பக்கங்கள் வந்திருந்தன. இவ்வளவு பக்கங்களுடைய புத்தகத்தை நூறு ரூபாய்க்குக் கொடுத்தால் பதிப்பாளருக்குக் கஷ்டமாகிவிடும் என்பதால் சுமார் இருபது பக்கத்தைக் குறைத்துக் கொடுத்திருக்கிறேன்.

இரண்டாவதும் முக்கியமானதும் ஒன்றிருக்கிறது. அது வெளியீட்டு விழாவில் எந்த பிரபலம் கலந்து கொண்டாலும் சரி. புத்தகத்தை வெளியிடுவதும் வாங்கிக் கொள்வதும் நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் யாராவது இரண்டு பேர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறேன். நிசப்தம் இல்லையென்றால் இந்த சிறு வெளிச்சம் கூட என் மீது விழுந்திருக்காது என்று தெரியும். அதனால்தான்.

அட்டைப்படம் எப்படி இருக்கிறது? சசிக்குமாரின் நிழற்படத்தைக் கொண்டு சந்தோஷ் நாராயணன் வடிமைத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி. 


அது இருக்கட்டும்.

கடந்த ஆண்டு லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்  புத்தக விற்பனையில் ராயல்டியாகக் கிடைத்த பணத்தோடு எனது பணமும் கொஞ்ச சேர்த்து பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்கும் திட்டத்திற்கு பயன்படுத்திக்  கொள்ளப்பட்டது. இப்படி பத்தாயிரம் ரூபாய் என் பங்கு. இன்னும் சில நண்பர்களின் நிதியுதவியோடு ஏழு கிராமப்புற பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது நினைவில் இருக்கக் கூடும்.

இந்த வருடமும் மசால் தோசை  புத்தகத்தின் வழியாக அப்படியான ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால் புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே Fund raising ஆக செய்துவிடலாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை முழுமையாக மூத்த எழுத்தாளருக்கு ஒதுக்கிவிடலாம் என்பதுதான் திட்டம்.

புத்தகத்தின் விலை நூறு ரூபாய். நூறு ரூபாய்க்கு மேலாக நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி. அது இந்தத் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படும். ஐந்தாயிரமாகவும் இருக்கலாம்,  ஐம்பதாயிரமாகவும் இருக்கலாம் அல்லது ஐம்பது ரூபாயாகவும் இருக்கலாம். உதாரணமாக நூறு பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால் நூறு புத்தகங்களுக்கான பணத்தை பதிப்பாளரிடம் கொடுத்துவிட்டு நூறு புத்தகங்களையும் வாங்கி நானே அனுப்பி வைத்துவிடுகிறேன். தபால் செலவு என்னுடையது. வெளிநாட்டு முகவரியாக இருந்தால் பாக்கெட்டில் பெரிய  பொத்தல் விழுந்துவிடும் என நினைக்கிறேன். அதற்கு மட்டும் ஏதாவது வழி காட்டிவிடுங்கள். உள்நாட்டு முகவரி கொடுத்தால் கோடி புண்ணியம்.

இப்படி திரட்டப்படும் நிதியை ஜனவரி முதல் வாரத்தில் கோவை ஞானி அவர்களுக்கு கொடுத்துவிடலாம். 

கோவை ஞானிக்கு எண்பது வயதாகிறது. நீரிழிவு நோயின் காரணமாக முழுமையாக கண்பார்வை இல்லை. அது பல ஆண்டுகளாவே இல்லைதான். ஆனாலும் எந்தக் காலத்திலும் அந்த மனிதர்  ஓய்ந்ததில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாகவே உதவியாளரின் உதவியோடு எழுதியும் வாசித்தும் வருகிறார். 

அவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம்.

பல்லாயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். தனது சேகரிப்பில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னால் இந்தப் புத்தகங்கள் கைவிடப்பட்ட அநாதைகளாகிவிடக் கூடாது என பயப்படுகிறார் போலிருக்கிறது. புத்தகங்களை எடுப்பதற்கு முன்பாக எந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டோம் என்று அவரிடம் சொல்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றிய விவரமும் அவருக்கு அத்துப்படியாகியிருக்கிறது- விலை உட்பட. 

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக கண் பார்வையற்றவர். ஆனால் இவ்வளவு புத்தகங்கள் பற்றிய இத்தனை விவரங்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக  இருந்தது. இப்படியானதொரு உடல்நிலையிலும் இவ்வளவு தீவிரமான வாசகராகவும், சிந்தனையாளராகவும் இருப்பவரை இனி வாழ்நாளில் எப்பொழுதாவது பார்க்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. மிகைப்படுத்தி எதுவும் சொல்லவில்லை. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் இப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். எழுத்துக்களின் நேசன் அவர். இருபத்தெட்டு திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட நாற்பத்தியெட்டு நூல்களை எழுதியிருக்கிறார். எழுத்துக்களால் மட்டுமே தன்னை நிரப்பிக் கொண்ட அந்த மனிதர் முதுமையின் விளிம்பில் நிற்கிறார்.

மருத்துவச் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அவருக்கு ஏதாவதொரு விதத்தில் உதவிட வேண்டும் எனத் தோன்றுகிறது. தனது உழைப்பையும் எழுத்தையும்  எந்தவிதத்திலும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத நல்ல மனிதர் அவர். இப்படி வெளிப்படையாக அறிவித்து பணம் திரட்டுவதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை. அதனால்தான்  பிற காரியங்களுக்குக் கேட்பது போல நேரடியாகக் கேட்காமல் புத்தகத்தின் வழியாக Fund Raising. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இதனால் ஏதோ ஒரு பெரிய  காரியத்தைச் செய்வதான எந்த நினைப்பும் இல்லை. பல்லாண்டு காலமாக தமிழின் சிந்தனைத் தளத்துக்கு ஓய்வில்லாமல் பணியாற்றிவிட்டு இன்று தள்ளாடும் ஒரு மரியாதைக்குரிய  மனிதருக்கு சிறு மரியாதையைச் செய்கிறோம். அவ்வளவுதான். அர்ப்பணிப்புணர்வோடு காலம் முழுவதும் எழுதியும் வாசித்தும் விமர்சித்தபடியும் இருந்தவரை எப்பொழுதும் திரும்பிப்  பார்ப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற திருப்தியை அவருக்கு உருவாக்க முடியுமானால் அதுவே பெரிய சந்தோஷம்தான். 

கோவை ஞானி பற்றி முழுமையாக கோவைஞானி என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகங்கள் வாங்க விரும்புவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டு மின்னஞ்சலில் முகவரியைத் தெரியப்படுத்தினால் ஜனவரி முதல் வாரத்தில்  புத்தகங்களை அனுப்பி வைத்துவிடுகிறேன். 

நன்றி.

vaamanikandan@gmail.com