இப்பொழுதெல்லாம் க்ரீன் வியூ என்ற மருத்துவமனை வழியாகத்தான் அலுவலகத்திற்கு பயணிக்கிறேன். ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கிறது. பொது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டுமென்றால் முந்நூறு ரூபாய். சிறப்பு நிபுணர்களிடமென்றால் ஐந்நூறு ரூபாய். இப்பொழுது அந்த மருத்துவமனை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்த அந்த மருத்துவமனைக்கு முன்பாக ஒரு காட்சி.
ஒருவன் கையில் பூங்கொத்தோடு நடு சாலையில் மண்டியிட்டு நிற்கிறான். சடாரென ப்ரேக் அடித்து நின்ற வண்டிகள் தாறுமாறாக ஒலியெழுப்புகின்றன. ஒரு கணம்தான். சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான ஓட்டுநர்கள் புன்னைகைத்தபடியே பொறுமை காக்கிறார்கள். சாலையின் இந்த முனையில் பெண்ணொருத்தி நிற்கிறாள். அவளுக்கு முகம் சிவந்துவிட்டது. இவளைக் காட்டிலும் அவன் அழகாக இருந்தான். கருப்புச் சட்டை. நீல ஜீன்ஸ். சிவந்த முகம். அளவான தாடி. ஒரு கூலிங் க்ளாஸ். அந்தப் பெண் எப்படியிருந்தாள் வர்ணிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ரிஸ்க். இப்பொழுதெல்லாம் நான் எழுதுவதை மனைவி வாசிக்கிறாளோ இல்லையோ- அவளது நண்பர்கள் வாசித்துவிட்டு போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அனுஷ்காவோ, ஷ்ரியாவோ- உங்களுக்கு பிடித்த அழகியை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சில வினாடிகள் தயங்கிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவளைப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டவள் ஓடிச் சென்று பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள். காதல் பூத்துவிட்டது. சில பைக்காரர்கள் இறங்கி வந்து அவனுக்கு கை கொடுத்தார்கள். அவன் மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்ட பூரிப்புடன் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தான். இப்பொழுது அவளது கரங்கள் அவனுக்குள் இருந்தன. கிளம்பி வந்துவிட்டேன்.
நேற்றிரவே வேலையை ராஜினாமா செய்திருந்தேன். Notice period. இன்று அலுவலத்தில் அவ்வளவாக வேலை இல்லை. அதனால் இந்தக் காட்சிதான் மூளையின் பின்னணியில் ஓடிக் கொண்டேயிருந்தது. எட்டாம் வகுப்பிலிருந்து காதலிக்கிறேன். ஆனால் ஒருத்திக்குக் கூட நான் அவளைக் காதலித்தேன் என்ற விஷயம் தெரியாது என்பது எவ்வளவு துக்ககரமான விஷயம்? பள்ளி, கல்லூரிகளில்தான் தைரியம் இல்லை. தொலையட்டும். குறைந்தபட்சம் ஹைதராபாத்தில் வேலையில் இருந்த போதாவது ஆசைப்பட்டவளிடம் சொல்லியிருக்கலாம். அதே நிறுவனத்தில்தான் பணியில் இருந்தாள். இருந்தார்கள் என்றால்தான் சரியாக வரும். இரண்டு மூன்று பேர். ஆளாளுக்கு ஒருவன் தயாராக இருந்தான். ஒருத்திக்கு மட்டும் ஆள் இல்லை. தனியள். ரெட்டி வகையறா. சிக்கினால் ரொட்டியாக்கிவிடுவார்கள் என்று உடனிருந்தவர்கள் பயமூட்டிக் கொண்டிருந்தார்கள். நமக்கு நாமே திட்டத்தில் உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று பம்மிக் கொண்டிருந்தேன். 2008 ஆம் ஆண்டின் டிசம்பர் மூன்றாம் தேதி சீக்கிரமாக வந்து சேர்ந்துவிட்டது. அதோடு சரி. இப்பொழுது வரைக்கும் அனுஷ்கா, ஷ்ரியா என்று சாடை பேசுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அது போகட்டும்.
ஒவ்வொரு பருவத்திலும் நாம் அடைந்துவிட வேண்டும் என விரும்பும் கனவு ஒன்று இருந்து கொண்டேயிருக்கிறது. இல்லையா? ஒரு மாதமே ஆன குழந்தை தனக்கு முன்பாகத் தொங்கும் எதையாவது எட்டிப்பிடிக்கத் தொடங்குவதிலிருந்து கடைசியாக கண்களை மூடும் வரைக்கும் ஏதாவதொன்றை மனம் நாடிக் கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒரு தேடல். ஏதோ ஒரு பிடிப்பு. இந்தப் பிடிப்பு மட்டும் இல்லையென்றால் நம் வாழ்க்கையில் என்ன சுவாரஸியமிருக்கிறது?
மதிப்பெண் வாங்கிவிட வேண்டும். நல்ல வேலையாக பிடித்து விட வேண்டும். சம்பாதித்துவிட வேண்டும். காதல், கல்யாணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, எதிர்காலம் இத்யாதி இத்யாதி- இப்படி ஏதேனும் ஒன்றுதான் நம்மை சுற்றிச் சுழலச் செய்கிறது. வெறியெடுத்து அலையச் செய்கிறது. இதெல்லாம் ஒரு சாமானிய மனிதனின் இயல்புதானே? விட்டுவிடலாம்.
ஆனால் எழுத்தாளர் என்றொரு ஜாதி இருக்கிறது பாருங்கள். புகழுக்காகவும் பரபரப்புக்காவும் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.
“சுஜாதாவெல்லாம் எழுத்தாளரா?” “ஆனந்தவிகடனில் இந்த வாரம் ஒரு கதை படித்தேன். அதெல்லாம் ஒரு கதையா?” “தமிழின் உரைநடையை புரட்டிப் போடுவதே நானல்லவா?” “என்னைவிட இங்கு வேறு யாருக்கேனும் இவ்வளவு வாசகத் திரள் இருக்கிறதா?”
எத்தனை அலட்டல்கள்; எத்தனை பீற்றல்கள்?
சுஜாதாதான் தமிழின் ஒரே சிறந்த எழுத்தாளர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்பொழுது இணையத்தில் எழுதி/பீற்றிக் கொண்டிருக்கும் எந்த எழுத்தாளராலும் சீக்கிரமாகத் தொட முடியாத சாதனைகளைச் செய்தவர் என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும். அவரது எழுத்திலும் தற்பெருமை இருந்ததுதான். ஆனால் இன்றைய எழுத்தாளர்களின் பீற்றலோடு ஒப்பிட்டால் அதெல்லாம் தூசி. தன்னைத் தவிர இங்கு எவனுமே இல்லை என்கிற திமிர் வரும் போதே அந்த எழுத்தாளன் தேங்கிவிடுகிறான். saturated. இங்கு பாதிப்பேர் அப்படித்தானே திரிகிறார்கள்?
இன்றைக்கும் சுவாரசியமான எழுத்தை வாசிக்கும் போது ‘சுஜாதா ஸ்டைல்’ என்று சொல்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ‘சுஜாதா ஸ்டைல்’ என்று சொல்வதற்கான ஆட்கள் இருப்பார்களே தவிர இன்றைக்கு இணையத்தில் பீச்சிக் கொண்டிருப்பவர்களின் ஸ்டைல் என்று யாரேனும் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில்லை. சுஜாதாவைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று இதை எழுதவில்லை. ஆனால் நம் தலைமுறையில் மட்டும் ஏன் இப்படி வெட்கமேயில்லாமல் சுயபுராணம் பாடுகிறார்கள் என்ற குழப்பத்தைத் தெளிந்து கொள்ள விரும்புகிறேன்.
தனக்கென ஒரு குழாம். சில ஜால்ராக்கள். சில அல்லக்கைகள். சில துதிபாடிகள். ‘நான் யார் தெர்மா?’ என்கிற வெற்றுப் புலம்பல்கள். எவ்வளவு பெரிய ரவுடியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் இவர்களிடம் தோற்றுவிடுவார்கள். ரவுடியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஏன் சுஜாதாவை மிதித்துவிட்டு மேலே ஏறி நிற்க விரும்புகிறீர்கள்?