Nov 17, 2014

முத்தப் போராட்டம்

ஊர் ஊருக்கு முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தங்களை அறிவுஜீவி சமூகம் என்று நம்பிக் கொள்பவர்கள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் போராட்டத்தின் ஒரு வடிவம் என்றும் தங்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் இன்னொரு வழிமுறை என்று அறிவிக்கிறார்கள்.

வருத்தமாகத்தான் இருக்கிறது. 

இந்த நாட்டின் எண்பது சதவீத மக்களின் மனநிலை ஒரே மாதிரியாகத்தானிருக்கிறது. என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என்கிற பொதுப்புத்தி அது. அந்த பொதுப்புத்தி ஒரே மாதிரிதான் சிந்திக்கும். ஒரே மாதிரிதான் செயல்படும். மகளுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் இருட்டாவதற்குள் அவள் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பும். மகனுக்கு எவ்வளவுதான் செலவுக்கு காசு கொடுத்திருந்தாலும் அதை அவன் ஏதாவதொரு பெண்ணுக்காக செலவு செய்து திரியக் கூடாது என நினைக்கும். அந்த புத்திதான் மனைவிக்கென்று ஒரு வரையறையை உருவாக்குகிறது. கணவனுக்கென்று எல்லையிருக்கிறது என்ற முடிவினை உருவாக்குகிறது. இப்படியிருக்கையில் கணவனும், மனைவியும், மகனும், மகளும் சுதந்திரம் என்ற பெயரில் தெருவில் உதட்டை நனைப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத பொதுப்புத்தி அது. 

அந்தப் பொதுப்புத்தியிலிருந்து இம்மியளவும் பிசகாதவனாகத்தான் நானும் இருக்கிறேன். இதைச் சொல்லிக் கொள்வதில் வெட்கம் எதுவும் இல்லை. முற்போக்கு என்பதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. சுதந்திரம் என்பதற்கும் ஒரு வடிவமிருக்கிறது. நூற்றியிருபத்தாறு கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் நூற்றிப்பத்து கோடி மக்கள் எப்படி நினைக்கிறார்களோ எப்படி வாழ்கிறார்களோ அப்படித்தான் வாழ விரும்புகிறேன். ‘அப்படியானால் உனக்கு ஆசாபாசங்கள் இல்லையா?’ என்று யாராவது குரல் எழுப்பினால் ‘இருக்கிறது’ என்றுதான் பதில் வரும். ஆனால் அதை நான்கு சுவர்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்ளவே மனம் விரும்புகிறது.

அம்மாவும் அப்பாவும் கொஞ்சிக் கொள்வதைக் கூட பார்த்திராத தலைமுறை நாம். தங்களின் எந்த ரொமாண்டிசத்தையும் நம் முன்னால் காட்டியிருக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வளர்ந்திருப்போம். அவர்களை விட ஒரு படி நகர்ந்திருக்கிறோம் என்பதே போதுமானதாக இருக்கிறது. மகனுக்கு முன்னால் மனைவியை செல்லப்பெயர் வைத்து அழைக்குமளவுக்கு முன்னேறியிருந்தால் அதுவே பெரிய விஷயம் என்கிற மனநிலைதான் எனக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. நிம்மதியாகத்தானே இருக்கிறேன்?

விரும்பினால் முத்தமிட்டுக் கொள்வோம் என்று சொல்பவர்களைத் தடுக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் மகனின் கண்களை மூடும் கடமையாவது எனக்கிருப்பதாக உணர்கிறேன். அதற்கு கலாச்சாரக்காவல் என்ற பெயர் சூட்டி மட்டம் தட்டினால் அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை.

தனது முப்பத்தைந்து வயது வரைக்கும் எதிர் பாலினத்தின் வாசமே படாத மனிதர்களால் இந்தச் சமூகம் நிரம்பியிருக்கிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் விருப்பமில்லாமல் வாசம் படாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வாய்ப்பில்லாமல் அப்படியிருக்கிறார்கள். அவர்களைச் சலனப்படுத்தும் அநியாயத்தையும் பாவத்தையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஊடகங்களும் சினிமாக்களும் நம்மை சைக்கலாஜிக்கலாக கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருக்கின்றன. பாலியல் வறட்சி என்பதன் விளைவுகளை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிர்கொள்கிறோம். இதில் இவர்கள் வேறு கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள்.

எல்லாவற்றிலும் நம்மால் மேற்கத்திய சமூகத்தோடு ஒத்துப் போய்விட முடியாது என்பதுதான் நிதர்சனம். பதினாறு வயதில் மகனை வீட்டை விட்டு துரத்திவிடுகிற தைரியம் இல்லை. பதினான்கு வயதில் மகள் இன்னொருவனுடன் காதல் என்று அறிவிப்பதை புரிந்து கொள்கிற பக்குவம் இல்லை. இந்த தைரியமின்மையும் பக்குவமின்மையும் நம்மை எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்திவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. தாத்தா இப்படித்தான் இருந்தார். அப்பா கொஞ்சம் முன்னேறியிருந்தார். அவரைவிட துளி மட்டும் முன்னால் நகர்ந்தால் போதாதா என்ன?

சமூகத்தின் அடிப்படையான மனநிலையில் மாறுதல் உருவாக வேண்டும். ஆனால் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாற்றிவிட முடியாது என உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது. இங்கு எல்லாவற்றிலும் ‘Cultural Shift' நடந்து கொண்டுதானிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். தடுக்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்காக இதுதான் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஒரே நாளில் அடித்து நொறுக்குவது சாத்தியமேயில்லாதது. காலங்காலமாக மண்டைக்குள் ஊறிக்கிடக்கும் விஷயங்களை ஒரே ராத்திரியில் அரை ட்ரவுசரைப் போட்டுத் திரிந்து நம்மால் மாற்றிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சுதந்திரங்களை குடும்ப அமைப்பின் சிதைவுக்கான முதல்படியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் அங்கு போய்த்தான் இது நிற்கும். ஏற்கனவே நாம் அந்தப் பாதையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான போராட்டங்கள் அந்தச் சிதைவின் வேகத்திற்கு பெட்ரோல் ஊற்றக் கூடும். 

குடும்பம் என்ற அமைப்பின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவுதான் சிக்கல்கள், பிரச்சினைகள், சச்சரவுகள் இருந்தாலும் உள்ளூர அதன் மீது இருக்கும் பிடிப்பே எனக்கான வரையறைகளை உருவாக்குகிறது. எங்கு சுற்றினாலும் இரவில் மனைவியும் மகனும் நமக்காக காத்திருப்பார்கள் என்கிற பத்தாம்பசலித்தனமான எண்ணமும் ஒருவிதத்தில் நிம்மதியானதாகவே இருக்கிறது. இதே நம்பிக்கையையும் நிம்மதியையும் என் மகனுக்கும் கடத்த விரும்புகிறேன். அவன் அதைச் சிதைக்கிறேன் என்று கிளம்பினால் என்னால் எதுவும் செய்ய முடியாதுதான். ஆனால் 'நீ சுதந்திரம் என்ற பெயரில் தேடிச் செல்வது உண்மையான சுதந்திரம் இல்லை' என்று அவனுக்காக உள்ளூர வருத்தப்படுவேன்.