Nov 1, 2014

கை கொடுக்க முடியுமா?

பெங்களூரில் Say Trees என்றொரு அமைப்பு இருக்கிறது. வெறித்தனமான உழைப்பாளிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகரில் செடிகளை நட்டு வைக்கிறார்கள். எல்லோருமே இளைஞர்கள். வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அவ்வப்போது மண்வெட்டியும், கடப்பாரையுமாக கிளம்பிவிடுகிறார்கள். இந்த வாரம் கூட தெக்குலோடு என்கிற கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நடவிருக்கிறார்கள். சமீபகாலமாக நிறைய ஆர்வலர்கள் இந்த இயக்கத்தில் தோள் சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு உருப்படியான காரியத்தைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. அவர்களை பெங்களூரைத் தாண்டி தமிழ்நாட்டுக்கு அழைத்து வரலாம்.

திட்டம் இதுதான் -

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி. மரங்கள் இல்லாத கிராமமாக இருந்தால் நல்லது. ஏரி, குளம் அல்லது கால்வாய் இருந்தால் இன்னமும் நல்லது. யாராவது செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஒரு கிராமத்தில் ஆயிரம் அல்லது ஐந்நூறு செடிகளை நடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆறு மாதம் கழித்து அந்தச் செடிகள் என்னவாகியிருக்கின்றன என்று சென்று பார்க்கலாம். தோராயமாக ஐம்பது சதவீத மரங்கள் தேறினாலும் கூட வெற்றி என்று அர்த்தம். அடுத்த கட்டமாக இன்னொரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

என் சுண்டைக்காய் மூளைக்குத் தெரிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று முக்கியமான வஸ்துக்கள் தேவை-

1. பணம்
2. ஆள்பலம்
3. சரியான கிராமம்

பணம்:
இரண்டு வகையான செடிகள் இருக்கின்றன. SayTrees அமைப்பினர் நகரங்களில் உயரமான செடிகளை நடுகிறார்கள். 6-8 அடி வரை உயரமான செடிகள் இவை. பெரும்பாலான செடிகள் தம் கட்டி உயிர்பிடித்துவிடும் என்பதால் பராமரிப்பு வேலை இல்லை. ஆனால் செடிகளின் வகையைப் பொறுத்து 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை ஆகும் போலிருக்கிறது. இருநூறு செடிகள் வாங்க வேண்டும் என்றாலும் கூட நாற்பதாயிரம் ரூபாய் தேவைப்படும். குழி தோண்டும் கணக்கு தனி.

நகரங்களுக்குத்தான் பெரிய செடிகள். கிராமப்புறங்களில் சற்று சிறிய செடிகளை வைக்கிறார்கள். இரண்டு முதல் நான்கடி வரையிலான உயரமுள்ள செடிகள். இந்தச் செடிகள் 70லிருந்து 80 ரூபாய் ஆகும் போலிருக்கிறது. ஆனால் இதைப் பராமரிக்க ஆட்கள் தேவை. கிராமத்தில் யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். யாரும் பொறுப்பெடுக்கவில்லையென்றால் யாராவது ஒருவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுத்து பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

இரண்டில் எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுத்தாலும் தேவையான தொகையை புரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு துல்லியமான பணத்தேவை பற்றிய கணக்கு இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஆள் பலம்:
தமிழ்நாட்டின் உட்புற கிராமங்களுக்கு SayTrees அமைப்பின் வாலண்டியர்கள் வருவார்களா என்று தெரியவில்லை. அவர்கள் வராவிட்டாலும் பரவாயில்லை. அருகில் இருக்கும் ஏதாவதொரு கல்லூரி அல்லது பள்ளியில் பேசி தேவையான ஆள்பலத்தை திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கிராமம்:
இதுதான் பிரச்சினை.  சரியான கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரின் ஒத்துழைப்பு இருந்தால் காரியம் சுலபமாகிவிடும். இந்தக் காரியத்தை நல்ல நோக்கத்தோடு பார்க்கும் தலைவராக இருக்க வேண்டும்.

இந்த மூன்றாவது அம்சம்தான் இப்போதைய தேவை. சரியான கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உங்களின் உதவியை கட்டாயம் எதிர்பார்க்கிறேன். மேற்சொன்ன அம்சங்களுடைய கிராமம் ஒன்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் கோடி நன்றி தகும். கிராமத்தை உறுதி செய்த பிறகு ஆள்பலம் மற்றும் பணத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதுவரையிலும் SayTrees அமைப்பினரோடு தொடர்ந்து தொடர்பில் இருப்போம். அவர்களின் அனுபவமும் உதவியும் நிச்சயம் தேவைப்படும்.

இந்தத் திட்டம் பற்றிய கேள்விகள் அல்லது கருத்து இருப்பின் மின்னஞ்சல் அனுப்புங்கள். 

ஆளுக்கு ஒரு கை கொடுத்தால் போதும். தேரை இழுத்துவிடலாம். இந்த பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த அணில்குஞ்சின் உதவிதான் இது. 

இந்தச் செய்தியை தங்களால் முடிந்த அளவுக்கு பரப்பினால் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். வாசிக்கிற யாராவது ஒருவரால் பொருத்தமான கிராமத்தை நிச்சயமாக அடையாளம் காட்டிவிட முடியும்.

 vaamanikandan@gmail.com.